Wednesday, August 11, 2010

ஞாநியும் கருணாநிதியும் கண்ட ஊடக சுதந்திரம்

ஓ பக்கங்கள் ஞாநி அவரது கட்டுரைகளை பதிப்பிக்க குமுதம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து தனது 'ஓ பக்கங்களை' குமுதத்தில் நிறைவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.  ஞாநியின் எழுத்துக்கள் பற்றி எனக்கு நிறைய விமர்சனங்களும், ஏமாற்றங்களும் இருக்கின்ற அதே வேளை அவரது நிறைய கட்டுரைகளில் அவருடன் முழுமையாக உடன்பட்டும் இருக்கின்றேன்.   பொதுவாக எந்த ஒரு எழுத்தாளர் - வாசகர் உறவிலும் இத்தகைய உடன்பாட்டுகளும், முரண்பாடுகளும் ஆன கலவை இருந்தே தீரும்.  ஆனால், ஞாநி குமுதத்தை விட்டு விலகுவதற்கு அவர் முன்வைத்த வாதங்கள் வீரியமானவை.  அதனை அவர் தனது தளத்திலே விரிவாகவே கூறியதுடன், குமுதத்திற்கு தான் எழுதிய கடிதத்தையும் பிரசுரித்து இருக்கிறார்.

ஆனால் இதன் அடுத்த கட்டமாக ஞாநியின் 'ஓ பக்கங்கள்' கல்கியில் வெளி வர இருக்கின்றது என்ற அறிவிப்பு வருகின்றது.  உண்மையில் இது எனக்கு முழுக்க முழுக்க ஏமாற்றமே.  தமிழகத்தில் பிரபலாமான வெகுஜன இதழ்களான குமுதம், விகடன் போன்ற குழுமங்கள் ஏதோ காரணங்களால் தற்போதைய ஆளும் கட்சியான திமுகவுடன் ஆதரவு/அனுசரனை நிலை எடுத்து அல்லது அப்படி எடுக்க வைக்கப்பட்டிருப்பதாலும், குங்குமம் ஏற்கனவே கருணாநிதி குடும்பத்தவருடையதாக இருப்பதாலும் ஞாநிக்கு இருக்கின்ற வழி கல்கி தான் என்ற வாதத்தை முன்வைக்கலாம்.  தவிர கல்கிக்கும் திமுகவுக்கும் எப்போதுமே இருந்துவரும் எதிர்ப்பு நிலையின் காரணமாக அவர் எந்தத் தடையும் இல்லாமல் திமுகவையும், கருணாநிதி குடும்பத்தையும் இன்னமும் விமர்சிக்கலாம்.  அதே நேரம் கல்கி மற்றும் ஞாநி உடன்படும் இந்திய தேசிய பெருமிதமும் இந்தக் கூட்டணியை இன்னும் சற்று உறுதியாக்கும்.  ஆனால் இந்த இணைப்பானது வாசகர்களுக்கு இன்னும் அதிக ஏமாற்றங்களையே தரப்போகின்றது என்று எதிர்வு கூறுகிறேன்.

இந்த இடைவெளியில் ஞாநி ஏதேனும் சிற்றிதழ்களில் இந்த ஓ பக்கங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.  குறைந்த பட்சம் வேறேதேனும் இணைய இதழ்களில் கூட இந்த ஓபக்கங்களைத் தொடர்ந்திருக்கலாம்.  ஞாநி கூட முன்னர் தீமதரிகிட என்கிற இதழைக் கொண்டு நடத்தியவர்தான்.  பலத்த பொருளாதார நெருக்கடிகளினாலேயே அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதென்று ஞாநியே எழுதி இருக்கையில், மீண்டும் அவர் இன்னொரு சிற்றிதழைக் கொண்டு நடத்தலாம் என்று சொல்வது கூட சற்று நெருடலாகவே உள்ளாது.  தமிழ் வாசிப்புச் சூழலில் "அணு அணுவாகத் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்தபின்னர்; சிற்றிதழ் வெளியிடுவது நல்ல வழிதான்" என்பதாகத்தான் இருக்கின்றது.  சிற்றிதழ் என்கிற வடிவத்தில் ஆரம்பித்த உயிர்மை, காலச்சுவடு போன்றன கூட காலப்போக்கில் தம்மை நிலை நிறுத்த தம் கறார்த் தன்மையை விட்டுக் கொடுத்து நடு நிலை இதழ்களாக மாறி நிலை பெற்றதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.  இது போன்ற சூழ் நிலையில், தேர்வுகள் மட்டுப் படுத்தப்படே இருக்கின்றபோது ஒரு எழுத்தாளன் தொடர்ந்து  தன் அரசியல் சரியாக இயங்குவது என்பது அதிகம் சிரமமானதாகவே இருக்கின்றது.2


ஆனால் ஞாநியின் குமுதத்தை விட்டு விலகலையும், அதன் தொடர்ச்சியான கல்கியில் எழுதுவதான அறிவித்தலகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆளும் திமுக அரசின் ஊடகத்துறை மீத அடாவடித்தனம் மற்றும் அத்து மீறல் பற்றி நாங்கள் நிச்சயம் ஆராயவேண்டியுள்ளது.  இந்தியாவின் சுதந்திர காலம் தொட்டு தமிழகத்தை ஆண்ட திமுக தவிர்ந்த பிற கட்சிகளான காங்கிரஸ், மற்றும் அதிமுக செய்யாத ஒன்றை திமுக செய்யவில்லை என்று திமுக ஆதரவாளர்கள் வாதிடலாம்.  ஆனால் ஒரு தவறை இன்னொரு தவறால் ஒரு போதும் நியாயப்படுத்திவிட முடியாது.  அதிமுகவை விட திமுக பரவாயில்லை என்பதாலேயே திமுகவை ஆதரிக்கின்றோம் / ஏற்றுக்கொள்ளுகின்றோம் என்பதே பல்ரைன் நிலைப்பாடாக இருந்துவருகின்றது; நான் கூட அப்படியே எண்ணி இருந்திருக்கின்றேன்.  ஆனால் இதை எழுதும்போது தாமரை ஒரு முறை ஜெயலலிதாவை தமிழகத்தின் அமாவாசை என்றும் கருணாநிதியை அமாவாசைக்கு அடுத்த நாள் என்றும் குறிப்பிட்டதுதான் ஞாபகம் வருகின்றது.

2010 ஆகஸ்ட் 11 கீற்றில் இராசகம்பீரத்தான் மால்கம் X என்பவர் ஊடகங்களின் ஆளுமையில் இனிவரும் நூற்றாண்டுகள் என்ற கட்டுரையில் 20ம் நூற்றாண்டிலே எவர் உலக ஊடகங்களை தனக்குக் கடுப்படுத்திக் கொள்ளுகிறாரோ அவருக்கு உலகம் சொந்தமாகிவிடும் என்று முன்னை நாள் மலேஷியப் பிரதமர் மகாதீர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டி இருக்கின்றார்.  மேற்குறித்த கட்டுரையில் யூதர்கள் எப்படி ஊடகத்துறையில் தம் செல்வாக்கினை உறுதிப்படுத்தியதன் மூலம் உலக ஒழுக்கினைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தார்கள் என்று சொகிறார் ஆசிரியர்.  ஆனால் ஊடகத்துறையின் எல்லா சாத்தியங்களையும் 50களில் இருந்தே பயன்படுத்தத் தொடங்கி படிப் படியாக ஆட்சியைப் பிடித்தவர்கள் திமுகவினர்.  அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, சம்பத், எம்ஜிஆர், கண்ணதாசன் என்று திமுக தலைவர்கள் தத்தம் ஆளுமைக்குட்பட்ட எல்லா ஊடகங்களையும் தம் கட்சிக் கொள்கையைப் பரப்பவும், கட்சிப் பிரசாரம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.  திமுகவின் தாய்க் கட்சியான திராவிடர் கழகக் கொள்கைகள் கூட எம். ஆர். ராதா, கலைவாணர் போன்றவர்களால் வேகமாகப் பரப்பப்பட அவர்களின் ஊடகச் செல்வாக்கே முக்கிய காரணியாக இருந்தது.  இன்று வரை தேர்தல் காலங்களில் திராவிடக் கட்சிகளும் அவற்றின் வழி வந்த கட்சிகளும் தமக்காக பிரசாரம் செய்ய நடிகர்களையும், திரை உலகினரையும் தேடிப் படை எடுப்பது கூட, அவர்களின் பிரபல்யத்தையும், ஊடகங்களில் அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கையும் தேர்தல் வாக்குகளாக உருமாற்றிக் கொள்ளவே.  இதற்கு கருணாநிதியும் எந்த விதத்திலும் விலக்கானவர் அல்ல.  இப்போது ஞாநி மீதும், சவுக்கு வலைப்பக்கம் மீதும் கருணாநிதியின் அரசாங்கம் தன் அடக்குமுறையைப் பிரயோகித்து அவர்கள் வாயை மூட முயல்வது ஒரு ஆட்சி மாற்றத்தில் ஊடகங்கள் எத்தனை தூரம் செல்வாக்கு செலுத்தக் கூடியன என்பதை கருணாநிதி அறிந்திருப்பதையும்  அத்துடன் தன் ஆட்சியை தக்க வைக்க முடியாமல் போய்விடுமோ என்று பதற்றமடைந்திருப்பதையும் தான் காட்டுகின்றது.19 comments:

gnani said...
This comment has been removed by the author.
gnani said...
This comment has been removed by the author.
gnani said...

அன்புள்ள அருண்மொழிவர்மனுக்கு

வணக்கம். தங்கள் ஆதரவான பதிவுக்கு நன்றி.

தமிழ் வெகுஜன பத்திரிகைச் சூழலில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வாசகர் மனங்களில் அவை பற்றிய விவாதங்கள் நிகழவேண்டுமென்பதே என் விருப்பம். எனவே என்னுடன் கருத்து உடன்படுவோராயினும் உடன்படாதவராயினும் என் கருத்துகளைப் பரிசீக்கும் சூழல் இருக்க வேண்டுமென்பதே என் முயற்சி.

ஆனந்த விகடனில் என் ஓ பக்கங்கள் நிறுத்தப்படுவதற்கு சில மாதங்கள் முன்பாக என்னைக் கண்டித்து கனிமொழியின் நண்பர்கள் நடத்திய பொதுக் கூட்டத்தில் ஒருவர் வலியுறுத்திப் பேசிய கருத்து இதுதான்: ”ஞாநி எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதி விட்டுப் போகட்டும். அதெல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் பிரதிகள் விற்கிற பத்திரிகைகளில் வந்தால் எங்களுக்குக் கவலையில்லை. பெருவாரியான வாசகர்கள் படிக்கும் பத்திரிகைகளில் ஞாநியின் கட்டுரைகள் வருவதுதான் ஆபத்தானது. அதை நாம் அனுமதிக்கக்கூடாது.”

விகடன் சுமார் 4 லட்சம் பிரதிகள் விற்கிறது. அதில் என் பகுதி நின்றபிறகு குமுதத்தில் எழுதினேன். அதுவும் சுமார் 4 லட்சம் பிரதிகள் விற்கிறது.அதிலும் சென்சார் வந்தபிறகு வேறெங்கே எழுதுவது ? மீதி இருப்பவை எல்லாம் ஒரு லட்சம் பிரதிகளுக்கும் குறைவாக விற்பவைதான். நான் எழுதுவதை விரும்பாத இதழ்கள் இருப்பது போல இன்று நான் எழுத விரும்பாத இதழ்களும் உள்ளன. அவை துக்ளக்
மற்றும் நக்கீரன். கல்கி இதழ் விகடன், குமுதம் போல நீண்ட காலமாக வரும் இதழ். 68 ஆண்டுகளாக வெளிவருகிறது. இன்று நான் சொந்தமாக பத்திரிகை நடத்தினாலும் 1500 பிரதிகளுக்கு மேல் அச்சடிப்பதற்கு எனக்குப் பண வசதி கிடையாது. அதுவும் இணையத்தில் எழுதுவதும் ஒரே வீச்சு உடையவைதான். விகடன், குமுதம் இதழ்களில் லட்சக்கணக்கான வாசகர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்த போது கடந்த ஐந்தாண்டுகளில் திரும்பவும் நிரூபணமான முக்கியமான விஷயம் என்ன்வென்றால், பெருவாரியான சாதாரண வாசகர்கள் சமூக அரசியல் விமர்சனக் கருத்துகளி எதிர்பார்க்கிறார்கள். அதற்கான தேவை அவர்களுக்கு இருக்கிறது.

கல்கி இதழின் பல பார்வைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. இது அவர்களுக்கும் நன்றாகவே தெரிந்த விஷயம்தான். விகடனின் நான் அறிந்தும் அறியாமலும் எழுதி வந்தபோது அதைக் கண்டித்து கல்கி எழுதியிருக்கிறது. இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளுமே பிரதானமாக மக்களிடையே அம்பலப்படுத்தப்படவேண்டியவை என்று நான் கருதுகிறேன்.கல்கியும் இரு கட்சிகளையும் விமர்சிக்கிறது என்பதே பொது அம்சம்.

பெருவாரியான வாசகர்களிடம் சென்று சேராமல் என்னை முடக்குவதுதான் ஆட்சியாளர்களின், அவர்களுடைய அடிவருடிகளின் விருப்பம். அப்படிச் செய்ய முடியாது என்று நிரூபிக்க நான் தொடர்ந்து முயற்சிக்கிறேன். சிற்றிதழிலோ, இணையத்திலோ மட்டும் இயங்குவது அவர்கள் ஆசையை நிறைவேற்றுவதுதான்.

குறைந்தபட்சம் ஒரு லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிகையை என்னால் நடத்த முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் பெரும் முதலீடு என்னிடம் இல்லை. 25 லட்சம் ரூபாய்களேனும் தேவை. என்றாவது வாசகர்கள் அதைத்திரட்டி அப்படிப்பட்ட ஒரு பத்திரிகையை உருவாக்குவார்கள் என்பது இப்போதைக்கு என் இனிய கனவுகளில் ஒன்று.

அன்புடன்

ஞாநி

Anonymous said...

/அதே நேரம் கல்கி மற்றும் ஞாநி உடன்படும் இந்திய தேசிய பெருமிதமும் இந்தக் கூட்டணியை இன்னும் சற்று உறுதியாக்கும். ஆனால் இந்த இணைப்பானது வாசகர்களுக்கு இன்னும் அதிக ஏமாற்றங்களையே தரப்போகின்றது என்று எதிர்வு கூறுகிறேன்./

கல்கி ராஜேந்தரனுடன் சேர்ந்து ஞாநி எழுதும்போது, படிப்பறிவற்ற ஈழத்தமிழர்களுக்கு மனுசனாக வாழ்வதெப்படி என்று இன்னமும் விளக்கமாக எழுதலாம் அல்லவா? உங்களுக்குத் தெரியாததா, ஞாநி, ஜெமோவுக்கு அமெரிக்க டூர் தரும் வாசகர்கள் love to hate eelam tamils

Anonymous said...

dropped into your site after a long time. good analysis

-Theepan

ராம்ஜி_யாஹூ said...

பணத்திற்காக தனது கொள்கையை விட்டு கொடுக்காதா ஞானி போற்றுதலுக்கு உரியவர்.

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் ஞாநி

உங்கள் பதிலிற்கு நன்றி

உங்களுடன் சில விடயங்களை விரிவாக எழுதவேண்டி உள்ளது, என்னால் இயன்றவரை உடனே எழுதுகின்றேன்

அருண்மொழிவர்மன் said...

தீபன்;

நன்றிகள்

அருண்மொழிவர்மன் said...

@ராம்கி யஹூ

இங்கே ஞாநியின் கருத்துச் சுதந்திரம் பற்றிய போராட்டம் மிக முக்கியமானது, தவிர, தன்னையே ஒரு பத்திரிகையாளன் என்று அடிக்கடி அழைத்துக்கொள்ளும் கருணாநிதி பத்திரிகையாளர் விடயத்தில் எவ்வளவு அடாவடித்தனமாக நடந்து கொள்ளுகிறார் என்பதும் கவனிக்கத் தக்கது

அருண்மொழிவர்மன் said...

அனாமி,
//கல்கி ராஜேந்தரனுடன் சேர்ந்து ஞாநி எழுதும்போது, படிப்பறிவற்ற ஈழத்தமிழர்களுக்கு மனுசனாக வாழ்வதெப்படி என்று இன்னமும் விளக்கமாக எழுதலாம் அல்லவா? உங்களுக்குத் தெரியாததா, ஞாநி, ஜெமோவுக்கு அமெரிக்க டூர் தரும் வாசகர்கள் love to hate eelam tamil//

ஞாநியின் ஈழப் போராட்டம் சம்பந்தப்பட்ட பார்வையில் எனக்கும் முரண்பாடு உண்டு. அது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருக்கின்றேன். ஆனால் ஞாநியே இங்கு சொன்னபடி ' என்னுடன் கருத்து உடன்படுவோராயினும் உடன்படாதவராயினும் என் கருத்துகளைப் பரிசீக்கும் சூழல் இருக்க வேண்டுமென்பதே என் முயற்சி.
'

ஆனால் கருணாநிதி செய்திருப்பது அப்பட்டமான அத்துமீறல்.
இந்த விடயத்தில் நாம் ஞாநியை ஆதரித்தே ஆகவேண்டும்

துர்க்கா-தீபன் said...

அதிகாரங்கள் கருத்துச் சுதந்திரத்துக்கான கதவினை மூடினாலும் ஒவ்வொரு முறையும் தன முயற்சியால் இன்னொரு வாசலை திறக்கின்ற ஞாநி போன்றவர்களை ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஞாநி எப்போதும் தன் தரப்பை கூர்மையான விவாதத்தூடாக முன்வைத்துக்கொண்டிருப்பவர் அந்த கருத்துகளில் இருக்கும் சரி தவறு என்கின்ற இருமைகளுக்கு எழுத்தின் குரல்வளையை நசிப்பது தீர்வாகாது. ஞாநியின் புதிய எழுத்துப் பகுதியை வரவேற்கிறேன்.

அருண்மொழிவர்மன் said...

@துர்க்கா-தீபன்

//அந்த கருத்துகளில் இருக்கும் சரி தவறு என்கின்ற இருமைகளுக்கு எழுத்தின் குரல்வளையை நசிப்பது தீர்வாகாது//

உண்மைதான். மேலும் சரி - பிழை என்கிற இருமை நிலையில் வைத்து தீர்ப்பிட்டு எழுத்துக்களை இப்படி மட்டும்தான் எழுத வேண்டும் என்பதை அரச கட்டளையாகத் தீர்மாணிப்பதில் ஒரு பாசிசத்தன்மை வந்து விடுகின்றது

இளங்கோ said...

ஞாநி அவர்கள் விருப்பு வெறுப்பின்றி அனைவரைப் பற்றியும் விமர்சனம் செய்தால் பரவாயில்லை.ஆனால் அவரோ குறிப்பாக கருணாநிதியை மட்டும் காழ்ப்புணர்ச்சி (இருவரும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்று கேள்வி)காரணமாக அளவுக்கு மீறி எழுதுகிறார்.இதற்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் சமாதானம் சொல்லலாம்.

அருண்மொழிவர்மன் said...

ஞாநியின் விமர்சனங்களில் கருணாநிதி பற்றிய விமர்சனங்களில் அதிகம் இருந்தன என்பது உண்மையே, அதே நேரம் அவற்றில் மிக மிகப் பெரும்பாலானவை உண்மையானவை என்பதும் உண்மையே.

இப்படி இருக்கையில் அவர்கள் ஊர் பற்றியெல்லாம் இழுப்பது (அதுபற்றி எனக்குத் தெரியவும் மாட்டாது) தேவையில்லாதது + இந்த விடயத்தை அதன் மையத்தில் இருந்து மிக விலத்தி எடுத்துச் செல்வது என்றே நினைக்கின்றேன்)

gnani said...

அன்புடையீர்

தகவல் 1: நானும் கலைஞர் கருணாநிதியும் பக்கத்து ஊர்க்காரர்கள் அல்ல. நான் சென்னைக்கருகே உள்ள செங்கற்பட்டைச் சேர்ந்தவன். என் மூதாதையர் ஆற்காடு மாவட்டத்தினர். அவர் தஞ்சாவூர் திருக்குவளைக்காரர்.

தகவல் 2: இதுவரை ஓ பக்கக்க் கட்டுரைகள் சுமார் 300 எழுதியிருக்கிறேன். அவற்றில் கலைஞர், அவரது ஆட்சி, செயல்பாடுகள், அவர் குடும்பத்தினர் தொடர்பான பொது விஷயங்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் 50க்கும் குறைவு.

ஞாநி

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் ஞாநி,

எனக்கும் அந்தத் தகவல் தெரியவில்லை, மற்றது கருணாநிதி பற்றிய உங்கள் கட்டுரைகளில் உண்மைகள் இருந்தபோது ஊர் பற்றிய விபரங்கள் இந்த விடயத்தை அதன் மையத்தில் இருந்து மிக விலத்தி எடுத்துச் செல்வது என்றே நினைககிறேன்.

நான் இலங்கயைச் சேர்ந்தவன் என்றாலும் என் பெரியப்பா ஊடாக நானும் திமுக ஆதரவாளனாகத்தான் வளர்க்கப்பட்டேன். கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அன்று என் அண்ணனின் திருமண நாளாக இருந்தபோதும் உண்மையாகவே அழுதேன்.

ஆனால், கருணாநிதி இன்று செய்வது என்ன/

ஒரு காலத்தில் அவரை மதித்தேன் என்று சொல்வதற்கே வெட்கப்படும் அளவு நவீன நீரோ மன்னனாக கருணாநிதி இருக்கின்றார். நீரோ மன்னனுக்கு Histrionic Personality Disorder என்கிற உளாவியல் பிரச்சனை இருந்ததாம். இப்போது கருணாநிதிக்குப் பீடித்து இருப்பதும் அதேதான்

அருண்மொழிவர்மன் said...

Histrionic Personality Disorder ; Histrionic personality disorder (HPD) is defined by the American Psychiatric Association as a personality disorder characterized by a pattern of excessive emotionality and attention-seeking, including an excessive need for approval and inappropriate seductiveness, usually beginning in early adulthood. These individuals are lively, dramatic, enthusiastic, and flirtatious.

KANTHANAAR said...

////gnani said...
This post has been removed by the author.
August 11, 2010 11:47 PM
gnani said...
This post has been removed by the author.
August 11, 2010 11:47 PM ...//////
நண்பர் அருள் அவர்களே ஞாநியின் முதல் சில கமெண்டுகள் ஏன் மறுக்கப் பட்டுள்ளது அவர் என்ன தகாத வார்த்தைகளா பயன் படுத்தியுள்ளார் என்பதை தெரிவிக்கவும் இதுவும் ஒரு RTI தான்
கந்தசாமி

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் கந்தனார்,
ஞாநியின் அழிக்கப்பட்ட பின்னூட்டங்களின் கீழே This post has been removed by the author. என்றே இருக்கின்றது. அதாவது அந்த இரண்டு பின்னூட்டங்களையும் அவரே அழித்திருக்கிறார்.

Post a Comment