Saturday, September 9, 2006

அது ஒரு அழகிய நிலாக்காலம்

சங்க காலம், சங்கமருவிய காலம் என்று சொல்வதுபோல ட்யூஷன் காலம் என்று அழைக்கப்படும் அளவுக்கு 90 களில் யாழ்ப்பாணம் எங்கும் ட்யூஷன் வகுப்புகள் ஆக்கிரமித்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே படத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்களும், சினிமாக்களும் தடை செய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமை இந்த ட்யூஷன்களுக்கே உண்டு.

வேலாயுதம் அவர்களால் நடத்தப்பட்ட மணி கல்வி நிறுவனம், பாஸ்கரன் அவர்களின் எடிசன் அக்கடமி, கோண்டாவிலில் இயங்கிய நிரு ட்யூஷன் சென்ரர் (இதனை தொடக்கியவர் இப்போதும் கனடாவில் இதே பெயரில் ட்யூஷன் வகுப்புகளை எடுக்கிறார், இவரது மகன் எனது நண்பன்) day claasses க்கு பெயர் பெற்ற விக்னா என்பவை இதில் முக்கியமானவை.

இதில் எடிசன் அக்கடமி யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகிலும், கொக்கு இந்துக் கல்லூரிக்கு அருகிலுமாக இரண்டு இடங்களில் இயங்கி வந்தது. இப்போது திரும்பி பார்க்கும் பொழுது 10 வருடங்கள் ஆன பின்னும் அந்த காலம் தான் எமது வசந்தகாலம் என்று தோன்றுகிறது.

திரைப்படங்களுக்கு விளம்பரம் தருவது போல இளஞர்களால் இளைஞர்களுக்காக நடந்த ட்யூஷன் இது. பாஸ்கரன், அரவிந்தன், கோபி, கொலின்ஸ், சந்திரமோகன் என்று பெரும்பாலும் இளைஞர்களே வகுப்பெடுத்தார்கள். அங்கு ஆங்கில ஆசிரியராக இருந்த சத்தியமூர்த்தி அவர்கள் இப்போது கனேடிய வானொலிகளில் ஆலய உற்சவங்களை வர்ணனை செய்கிறார். அவரது வகுப்பு மத்தியான நேரங்களில் நடப்பதாலும், அந்நேரம் அருகிலிருந்த கொக்குவில் இந்து மைதானத்தில் க்ரிக்கெட் மாட்ச் நடப்பதாலும் அவரது வகுப்பை விட்டு நாம் ஓடுவதும் அப்படி ஓடுபவர்களை துரத்திபிடிப்பதும் இப்போது நினைத்தாலும் சிரிப்புதான். தயா, விசாகன், பாலன், பிரதீவன், வாசன் என்று எமது கூட்டணி இப்படி ஓடுவதில் முண்ணனி வகித்தது குறிப்பிடத்தக்கது. இதில் நானும் பிரதீவனும் ஒரே மாதம், திகதிகளில் பிறந்தவர்கள். ஒருமுறை ஒரு பரீட்சையில் அவனும் நானும் date of birth ஒன்றாகப் போட்டதை நாம் copy பண்ணியதாக எண்ணி டோஸ் விட்டதும் நாம் எவ்வளவு சொல்லியும் நம்ப மறுத்ததும் தனிக்கதை.

அங்கு படிப்பித்த கோபி அப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு குட்டி கதாநாயகன், சற்று தடித்த குரலில் சாதுவான “கொன்னை”யுடன் கைகளை வேகமாக அசைத்துக்கொண்டும், shirt sleeve களை அடிக்கடி இழுத்திவிட்டபடி அவர் பேசும் ஸ்டைலுக்கு ரசிகர் கூட்டமே இருந்தது. அது மட்டுமல்ல சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் படிப்பிப்பதால் அரங்கம் நிறைந்த வகுப்புகளாகவே அவரது வகுப்புகள் போகும். “நீர் எங்கேருந்து வாறனீர்”, “நீர் ஏன் ரம்புட்டான் பழ வியாபாரி போல துரத்தி துரத்தி கதைக்கிறீர்”, போன்ற அவரது காமெண்டிகள் அந்நாளில் யாழ்ப்பாணத்தில் படு பிரபல்யமானவை. ஒருமுறை பலமாக கொட்டாவி விட்ட ஒரு மாணவனை பார்த்து “தம்பி வாய மூடும், நேற்று சாப்பிட்ட இடியப்பம் சாம்பாரில மிதக்கிது” என்றபோது கடலலை போல சிரிப்பலை தொடர்ந்தது. ஒரு முறை “சத்யா” கட் உடன் வந்த தயாவ பார்த்து “நீர் என்ன மிச்ச காசுக்கும் தலமயிர் வெட்டினீரா” என்று கெட்டது இப்பொதும் எம்மிடையே பிரபலமான காமென்ட்.

கொலின்ஸ் மாஸ்ரர் அதே நேரம் விப்ஜியோர் என்ற ட்யூசனை சொந்தமாக வைத்திருந்ததுடன் இங்கு விஞ்ஞானம் படிப்பித்து வந்தார். அவர் ஒரே தம்மில் நாய், எருமை, பண்டி, மூதெவி, வேதாளம் என்று திட்டுவதும் எம்மிடையே ஒரு பாஷன்.

எடிசனில் வகுப்பறைகளைவிட எமக்கு பிடித்த ஒரு இடம் என்றால் அது தெருவோரமாக இருக்கும் மதகுகள் தான். அருகில் உள்ள கடையில் வாங்கிய பீடாவை மென்றபடி அதில் ரோட்டோர ரோமியோக்களாக நாம் கொலு இருப்போம். சக மாணவர்களிடம் பிச்சை எடுத்து பக்கத்தில் இருந்த கடையில் பாணும், வாழைப்பழமும், அஸ்ரா மாஜரின் பக்கட்டும் வாங்கி உண்போம். அதைவிட ட்யூஷனில் இருந்து ஒரு படையாக புறப்பட்டு ஆனைக்கோட்டை மண்பிட்டிகளில் ஏறி நின்று பாடி ஆடி மகிழ்வோம். அந்நேரங்களில் எம்முடன் இருந்த பிரதீஸ் என்ற நண்பன் பின்னர் நவாலி தேவாலயம் மீதான குண்டுத் தாக்குதல்களில் பலியானான். அவனுடன் கிராம சேவகராக இருந்த அவனது ஒன்று விட்ட சகோதரியும் பலியானது பெருங்கொடுமை.


பீடா, நிஜாம் பாக்கு, அருகில் இருந்த வள்ளிநாயகி கடையில் குடிக்கும் டீ, பின்பு எனது நண்பன் விசாகன் வீட்டில் விளையாடும் கிரிக்கெட் என்று போன வாழ்வை குலைத்தது 95 ஒக்டோபரில் நடந்த பாரிய இடப்பெயர்வு. இடம்பெயர்ந்து கால்நடையாக போகையில் எடிசனை கடக்கும்போது வடிந்த கண்ணீர் இப்போதும் கரிக்கிறது. இதன் பின் 98 ஏப்ரலில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து சில நாட்களால் எடிசனுக்கு போனேன். ஓலைக் கூரைகள் சிதைந்து போய் இருந்தன. உள்ளே நுழைந்து வழமையாக நாம் அமரும் 7ம் வாங்கில் சில நொடிகள் அமர்ந்து பார்த்தேன். மேசையில் இருந்த தூசியை தட்டியபோது எனது பெயருடன் எனது 4 நண்பர்களின் பெயரை எழுதி இருந்ததை கண்டதும் கண்ணில் நீர் கட்டியது. அதற்கு கீழாக சற்று மெல்லிய எழுத்துகளில் ஆனால் பிரகாசமாக அந்த தேவதையின் பெயர். காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை.