Monday, June 29, 2009

அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்

அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே. எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரச கதைகளும் பெருந்துணை செய்தன. அதே நேரம் எமக்கும் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்கள் சண்முகராஜாவும், கோபியும் வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன், பாண்டிமாதேவி, பார்த்திபன் கனவு என்று வாசித்து தள்ளியிருக்கின்றேன். எல்லா விதமான பொழுது போக்குகளும் தடுக்கப்பட்டிருந்த அந்த காலத்தில் சாரத்தை, அல்லது போர்வையை தோளில் கட்டியபடி, மரக் கொப்புகளை வெட்டி செய்த வில்லும், அம்பும், வாளுமாக கையிலேந்தியபடி வீட்டுப் பின் வளவுகளில் நானும் சகோதரர்களும் அலைந்திருக்கின்றோம். வரலாற்று நாயகர்களையும், அவர் வீரப் பிரதாபங்களையும் பேசிப் பேசியே இறுமாந்திருந்த அந்த நாட்களின் பசுமை இப்போதும் அடிமனதில் இருக்கின்றது.

ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கின்றபோது வரலாற்றுப் புதினம் என்பதே தாம் நிலை நிறுத்த விரும்பிய ஒருவனின் புகழை கூறுவதற்காக புனையப்பட்டதொன்றே என்று புலனாகின்றது. வரலாறு என்பது கூட அதுதானே? எந்த நாட்டின் வரலாறு உண்மையை மட்டும் பேசுகின்றது? அப்படி பேசுவது சாத்தியமான ஒன்றுதானா? அமெரிக்க புகழ் பாடும் ஊடகங்களில் “சே” எப்படி சித்திகரிக்கப்பட்டுள்ளார்? இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்ட வி.பி.சிங் இறந்தபோது இந்தியா டுடேயில் அவர் பற்றி வெளியான செய்தி எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்று நினக்கின்றேன். இதே வகையில்தான் ஒரு காலத்தில் என் கனவு நாயகர்களாகவே இருந்த ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கின்றது என்று பின்னாளில் தெளிவாக புரிந்து கொண்டேன். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய திருஞான சம்பந்தர்தான் சமணர்களை தூக்கிலேற்ற தூண்டினார் என்பதை ”சம்பந்தர் செய்த் அற்புதங்கள்” என்று பட்டியலிட்டு எழுதி புள்ளிகளும் பெற்றிருக்கிறோம் என்று நினைக்கும்போதே வெறூப்பாக இருக்கின்றது. ஏனைய மதங்களின் வரலாற்றுப் பக்க்கங்களை திருப்பியபோதும் இது போன்ற அதிர்ச்சிகளே காத்திருக்கின்றன. இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் மன்னர்களின் வரலாறுகளே தவிர மக்களின் வரலாறுகள் இன்னும் எழுதப்படவே இல்லை. மன்னர்களின் வரலாறுகள் கூட வென்றவர்களின் பார்வையில்தான் கதை சொல்கின்றனவே தவிர தோற்றுப்போனவனின் வரலாறும், சிறுபான்மையினரின் வரலாறும் கூட எழுதப்படவில்லை. இந்த வகையில்தான் நான் அண்மையில் வாசித்த தேவகாந்தன் எழுதிய “கதாகாலம்” என்கிற மகாபாரதத்தின் மறு வாசிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.


-2-

மகாபாரதக் கதையை தெரியாதவர்கள் எவரும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அதை முழுதாக தெரிந்தவர்கள் எவரும் இல்லை என்பதும். வேத காலத்தின் இறுதியில் நடந்ததாக சொல்லப்படும் இந்தக் கதை இன்று வரை கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகையில் “தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும்; தர்மம் வெல்லும்” என்ற அறத்தை காக்கும் நோக்கில் அதன் நாயக்ர்களாக சொல்லப்படும் பாண்டவர்களும், கிருஷ்ணனும் அதிகம் புனிதப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தேவகாந்தனின் மீள்வாசிப்பில் கதை சொல்லிகள் கதையை வாழ்வியல் யதார்த்ததுடன் அணுக்கமாக, அதன் கதை மாந்தர்களை எல்லா மனிதர்களைப் போலவே நல்ல, தீய குணங்கள் நிரம்பியவர்களாக சொல்லிச் செல்லுகின்றார். அதைவிட முக்கியமாக, பாரதக் கதை நடப்பதில் முக்கிய பங்கெடுத்த, ஆனால் மற்றைய பிரதிகளில் பெரிதும் பேசப் படாத கதை மாந்தர்களான சத்தியவதி (மச்ச கந்தி), அம்பை (சிகண்டி), காந்தாரி, குந்தி, திரௌபதி, சகாதேவன், சுபத்திரை போன்றவர்களின் உணர்வுகள் பெரிதும் பேசப்படுகின்றன. பாரதக் கதையை கண்ணன் நடத்தினான் என்று கண்ணனை தெய்வமாக்கி இதிகாசங்கள் சொல்ல, பாரதக் கதையை அத்தினாபுரத்துப் பெண்களே நடாத்தினார்கள் என்றும் கண்ணன் தந்திரம் மிகுந்த, அர்ச்சுணனின் நண்பன் மாத்திரமே என்று சொல்லி கதையை கொண்டு செல்கின்றார் தேவகாந்தன்.



-3-

கதையில் பிடித்த சில பக்கங்கள்

காந்தாரி

தன் கணவனுக்கு கண் தெரியாது என்று தன் கட்புலனை இறக்கும்வரை துறந்தவள் காந்தாரி என்று சொல்லி காந்தாரியை “தாம் எதிர்பார்ர்கும்” பெண்மையின் இலக்கணம் என்று சொல்வதை கேட்கும்போதெல்லாம், கணவனுக்காக பார்வை துறந்தாள்; சரி. ஆனால் தானும் பார்வையை மறுத்ததால் தம் பிள்ளைகளை சரியாக வளர்க்காமல் விட்ட பழி அவளுக்குரியதுதானே? என்று யோசித்திருக்கின்றேன். ஆனால் காந்தாரி தான் கண் தெரியாத திருடராஷ்டிரனைத்தான் கல்யாணம் செய்யப்போகிரேன் என்று தெரியாமல் பீஷ்மக் கனவுகளுடன் இருந்தவள் என்றும், அதற்கான எதிர்ப்பாகவே தன் கண்களை மறைத்து துணிகட்டி மணவறை வந்தாள் என்றும் சொல்லும்போது அதிகாரத்துக்கு எதிரான சற்றுப் பலவீனமான எதிர்க்குரலாகவே காந்தாரி தெரிகின்றாள். “இதுபற்றிக் கேட்டபோது “திருடராஷ்டிரன் சாம்பிப் போனான். அவள் தன்னையோர் அபாக்கியவதியாய்ச் சபையில் அடையாளப்படுத்தியதாய் அவன் எண்ணிப் புழுங்கினான். ஆனால் சபையோ அவளின் பதி பக்தியாய் அதைக்கண்டு மெய் மறந்திருந்தது.-பக்.21)”

குந்தி

பாரதக் கதையை பொறுத்தவரை அதீதமான அமானுஷ்யத் தன்மை வாய்ந்த கதாபாத்திரமாகவே குந்தியின் பாத்திரத்தை பார்க்கமுடிகின்றது. ஆனால் கதாகாலத்தில் வரும் குந்தியோ தொடர்ச்சியாக கட்டுடைக்கப்படுகின்றாள். (ஒரு வாசகனாக பாரதத்தை வாசித்தபோது குந்தி பற்றி என்னுள் உருவாகியிருந்த விம்பம் கதாகாலத்தில் வரும் கட்டுடைக்கப்பட்ட குந்தி பாத்திரமே). முதலில் குந்தி புத்திரர்களை எடுத்துக்கொள்வோம். குந்தி துர்வாச முனிவருக்கு செய்த பணிவிடையால் மகிழ்ந்த அவர் கொடுத்த வரம் மூலமே அவளுக்குப் பிள்ளைகள் பிறந்தன என்பதே இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் கதாகாலத்தில் துர்வாசருக்கு பணிவிடை செய்த நாட்களில் ஏற்பட்ட இயற்கையான உடல் உறவின்மூலமே குந்தி கர்ப்பமாகி கர்ணனை ஈன்றாள் என்றும், அவள் கருவுற்று இருந்ததால்தான் யாககாலம் முடிந்து துர்வாசர் வெளியேறிய பின்னரும் கூட அவள் அங்கேயே தங்கி இருந்து கர்ணனை ஈன்று ஆற்றோடு போகவிட்டாள் என்றும் சொல்லப்படுகின்றது. (தகாப் புணர்ச்சியின் விளைவுகளை தாய் தன் குழந்தையில் சுமத்திவிட்டு தப்பிக்கொண்ட தருணம் அது – பக்.24) இதே வகையில்தான் உறவுகொள்வதற்கான உடற்தகுதி அற்ற பாண்டுவின் மறைமுகமான ஆதரவுடன் வனவுலா சென்று பிறருடன் கூடி பிற மூன்று பிள்ளைகளையும் ஈன்றாள் (அந்நாட்களில் வழக்கத்தில் இருந்த நியோகம் எனும் முறை இது).

குந்தி பற்றிய இன்னுமொரு விபரிப்பு மாத்ரி, பாண்டுவுடன் உடன் கட்டை ஏறியபோது சொல்லப்பட்டுள்ளது. மாத்ரியுடன் உடல் நிலை இடம் தராதபோதும் பாண்டு கூடலில் ஈடுபட்ட்தே அவன் இறப்புக்கு காரணம் என்று சொல்லி குந்தி எழுப்பிய இழிமொழிகள் கேட்க முடியாதே மாத்ரி சிறு குழந்தையாக இருந்த சகாதேவனின் கண் முன்னரே தீயில் வீழ்ந்து இறந்தாள் என்றும் அன்று உணர்ந்த சோகமும் தனிமையுமே சகாதேவனை ஞானத்தேடலில் ஆழ்த்திற்று என்றும் சொல்கிறார். சற்று யோசித்தால், வம்ச விருத்திக்கான உடல்நிலையான தகுதி இல்லாதவன் பாண்டு. இது தெரிந்தும் அத்தினாபுர பெரியோர்கள் குந்தி மேல் பழி போட்டு மறுதாரமாய் மாத்ரியை மணம் செய்துவைக்கின்றனர். இன்று நடப்பதும் இதுதானே? அசுவத்தாமா மட்டுமல்ல, குந்தியும் இன்று வாழ்ந்துகொண்டே இருக்கிறாள்.

கணவனை இழந்து நாடு திரும்பிய குந்தி அங்கு தன் பிள்ளைகள் இரண்டாம் பட்சமாய் நடத்தப்படுவது கண்டும், தன் பிள்ளைகள் பாண்டுவின் புத்திரர்கள் என்ற பொருள்பட ”பாண்டவர்” என்று மட்டும் அழைக்கப்பட காந்தாரியின் புத்திரர்கள் “கௌரவர்கள்” என்று, மரியாதைக்குரியவர்கள் என்று பொருள்பட அழைக்கப்படுவது கண்டு மனம் வேகுகின்றாள். இதற்கு காரணம் பாண்டவர்கள் பாண்டுவுக்குப் பிறக்காமல், தானும் மாத்ரியும் செய்த “வனவுலா”வின் விளைவால் பிறந்தவர்கள் என்பதை சத்தியவதியும், பீஷ்மனும் அறிந்திருப்பார்களோ என்றும், முழுமையான அரச குலப் பெண் இல்லை என்பதால்தான் இப்படி ஓரங்கட்டப்படுகின்றோமோ என்றும் பலவாறாக சந்தேகித்து, முடிவாக இனி தன் பணி பாண்டவர்கள் ஐவரையும் அத்தினாபுர மன்னர்களாக ஆக்குவதொன்றே என்று தீர்க்கமாகின்றாள். தம் வாழ்வின் இன்பங்கள் எல்லாம் தம் மணவாழ்வினால் பறிக்கப்பட்ட இரண்டு பெண்களான காந்தாரியும், குந்தியும் தம் பிள்ளைகள் அத்தினாபுர அரசுக்கட்டேற வேண்டும் என்று காய் நகர்த்தினார்கள். ஒரு நல்ல எச்சம் பாரதக் கதை. மோசமான எச்சம் ஏறத்தாழ குருவம்சம் முழுதுமே அழிந்தது ஒன்று. நல்லது நடக்க வேண்டும் என்று எத்தனை தீயதும் செய்யலாம் என்ற மோசமான நீதி சொல்லப்பட்டது.


திரௌபதி

பாரதக் கதையை வாசிக்கும்போது திரௌபதிக்கு இழைக்கபட்ட அநியாயத்தை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருக்கின்றோம். சுயம்வரத்தின்போது தகப்பன் அவளை தான் வைத்த வீர விளையாட்டிற்கான பரிசுப் பொருளாக்கினான். சூதட்டத்தின்போது தர்மன் அவளை தன் உடமைப் பொருளாக்கினான். திரௌபதி என்ற பெண்ணை பெண்ணாக யார் பார்த்தார்கள்?. ஐவீரும் ஒருவீராய் .... என்று அன்னை சொன்னதின் வழியொழுகினார்கள் என்று உரை எழுதுவதை விடுத்து, அன்னை சொன்னால் கூட ஏற்க முடியாத அறம் இதென்றல்லவா பாண்டவ புத்திரர்கள் மறுத்திருக்கவேண்டும். பாடசாலையில் பரிசாக பெற்றுவரும் விளையாட்டுக் காரை “எல்லாரும் சேர்ந்து விளையாடவேண்டும்” என்று அம்மா சொல்வதுபோல அல்லவா குந்தியும் சொல்கின்றாள். ஒவ்வோராண்டும் ஒவ்வொருவருக்கு அவள் உடமை என்று முறை வைத்துக் கொண்டார்களாம். இதனால், ஒருவனின் கருவை தாங்கிய நிலையில் இன்னொருவனின் உடமையாக போகின்றாள் திரௌபதி. எவ்வளவு கொடுமை இது. திரௌபதி சிரித்ததற்கான பழிவாங்கலே சூதாட்டம் என்றால், ஒரு கேலிச் சிரிப்பும் ஒரு துகிலுரிவும் நேர் சமமா?. சூதாட்ட அவையிலே அதிகம் அவமானப் பட்டவள் திரௌபதி. தீர்க்கமுடியாத அவமானம் அது. அதனால்தான் அவள் பாண்டவர்களுக்குள் இருக்கும் பழிவாங்கும் நெருப்பு வனவாசம், அஞ்ஞாத வாசம் என்று அணைந்துவிடக்கூடாது என்று அவர்கள் கூடவே சென்று, சூதாட்ட சபையிலே செய்த சபதங்களை தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தாள் என்று கதாகாலத்தில் கதை சொல்லி சொல்வது யதார்த்தமானதாகவே இருக்கின்றது. விராட நாட்டில் போரில் அர்ச்சுணன் வெளிப்படுகிறான். அஞ்ஞாதவாச காலம் முடியமுன்னரே அர்ச்சுணன் வெளிப்பட்டான் என்ற சலசலப்பு எழுகின்றது. தர்க்கரீதியாக அந்தக் குற்றச்சாற்று சரியானதே என்று சகாதேவனும் உணர்கின்றான். இதை அறிந்த திரௌபதி சகாதேவனிடம் சென்று பேசிவிட்டு பின் கிருஷ்ணனிடமும் பேசுகின்றாள். அப்போதெல்லாம் அவளுக்கு எந்த சமரசமும் ஏற்பட்டுவிடாமல் நிச்சயம் போர் நடைபெறவேண்டும் என்ற முனைப்பே இருக்கும். இதை தேவகாந்தன் “கூந்தல் அவளைச் சிறைப் பிடித்துள்ளதாய்க் கண்டுகொண்டிருந்தான் கிருஷ்ணன்” என்பார். அதாவது பழிவாங்கும் உணர்ச்சி அவளுக்குள் இருக்கவில்லை. பழிவாங்கும் உணர்ச்சிக்குள் அவள் மூழ்கிப் போய் இருந்தாள் என்கிறார். இறுதியில் சத்தியவதியிடமிருந்து காந்தாரிக்கும், குந்திக்கும், பின் திரௌபதிக்கும் தாரைவார்க்கப்பட்ட அத்தினாபுரத்து சோகங்கள் எல்லாம் திரௌபதியிடமிருந்து உப பாண்டவர்களின் மனைவியருக்கும், அபிமன்யு மனைவி உத்தரைக்கும் தாரைவார்க்கப்படுகின்றன.

..........................................மீதி அடுத்த பதிவில்

Monday, June 15, 2009

32 கேள்விகளும் திணறிப்போன நிமிடங்களும்

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தமிழன் – கறுப்பிக்கு நன்றிகள்


01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தொடக்க காலத்தில் எனது கிறுக்கல்களுக்கெல்லாம் சூரிய புத்திரன் என்ற பெயரைத்தான் பயன்படுத்திவந்தேன். அப்போதைய கல்லூரிக் கால நட்பொன்றை மறக்கும் பொருட்டும், சூரிய என்று தொடங்கும் வானம்பாடித் தனமான கவிதைகள் மேல் ஏற்பட்ட ஒரு வெறுப்பினாலும் அந்த பெயரை விட்டொழித்தேன். அதன் பின்னர் ராஜ ராஜ சோழன் மேல் அந்நாட்களில் கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக அருண்மொழிவர்மன் என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்கினேன். இப்போது இதையும் தொலைத்து இன்னொரு பெயர் பூணலாம் என்ற எண்ணம் பலமாக உண்டு.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போதெல்லாம் பெரிதாக அழுகை வருவதில்லை. எல்லாம் ஒரு நாள் தொலைந்துபோகும் என்பது எப்போதும் ஒரு சாரமாக மனதில் ஓடிக்கொண்டிருப்பதால் உணர்ச்சிகளின் உச்சவடிவங்களுல் ஒன்றான அழுகை வருவதில்லையோ தெரியாது. அழுவதற்கேற்ற வெள்ளந்தி மனநிலை முன்பிருந்தாற்போல இப்போதில்லாமல் போனதுகூட காரணமாயிருக்கலாம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

நிறைய பிடிக்கும், அது எனது நண்பனின் கையெழுத்தைப் போலவே இருப்பதால். எனது கையெழுத்து உண்மையில் மிக அழகாக இருக்கும். ஆனால் அது நகல். பிரசன்னா என்ற எனது முதல் நண்பனின் கையெழுத்தின் நகலாகத்தான் எனது கையெழுத்தை வடிவமைத்துக் கொண்டேன். பின்னர் சில சில எழுத்துக்களை இன்ன உருவில்தான் எழுத்துவது என்று இருவரும் கதைத்து தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். இணைபிரியாத நண்பர்கள் என்று பாடசாலை முழுவதும் அறியப்பட்ட நாம் பிரிந்தும் 14 வருடங்களாக இன்னும் உயிர்வாழ்வது எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும் விடயம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

எனது சாப்பாட்டு ரசனைகள் மிக நுணுக்கமானவை. பொதுவாக எனக்கு கடல் உணவுகள் பிடிக்கும். அதிலும் கணவாய் என்றால் சொல்லவே வேண்டாம். அது போல மாசிக் கருவாடு சேர்த்த சம்பலுடன் பாண். புட்டுடன் கருவாட்டுக் குழம்பு. ஒடியல் கூழ். தயிர்ச் சாதம் அல்லது புளிச் சாதமுடன் உருளைக்கிழங்கு பொரியல். இட்டலியுடன் மிளகாய்ப் பொடி மற்றும் நல்லெண்ணெய். நாட்டுக் கோழிக் குழம்புடன் நல்லெண்ணெய். கத்தரிக்காய் பொரித்த குழம்புடன் நல்லெண்ணெய். புரியாணிடன் ஈரல் கறி. ரொட்டியுடன் பீஃப் றோஸ், இப்படி பட்டியலிட்டபடியே போகலாம்.

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது சும்மா டீ ரூம் என்ற ஆணைக்கோட்டையில் இருந்த சாப்பாட்டுக் கடையின் அசைவ உணவுகளும், ஆனைக்கோட்டை மூத்த நாயணார் கோயில் முன்பாக இருந்த ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையின் சைவ உணவுகளும், கனடாவில் “மாப்பாணி” என்ற அடிக்கடி கடைமாறும் ஒரு சமையல் கலைஞரின் கைப்பக்குவ உணவுகளும் அதிகம் பிடிக்கும். அதேபோல வீட்டுச் சாப்பாடென்றால் அமமாவின் கைப்பக்குவமும், அக்கா ஒருவரின் கைப்பக்குவமும், ஜீவா என்ற நண்பரின் மீன் குழம்பும் அதிகம் பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நிச்சயமாக. நான் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு கொடுக்கிறேன். எனவே என் மீது நட்புக் கொள்வது இலகுவான ஒன்று.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளியல் ஒரு தியானம் என்று பலர் சொல்வதை நான் உணர்ந்ததில்லை. குளியலை ஒரு தினசரிக் கடமையாக செய்வதே வழக்கம். மேலும், கடலில் குளிக்க நீச்சல் தெரியாது. அருவியில் குளிக்க அருவிகளின் அருகில் நான் வசித்தது கிடையாது. எனவே நான் அனுபவித்த குளியல்களில் எனக்குப் பிடித்தது கிணற்றுக் குளியல். அதிலும் மழைகாலத்தில் கிணறுகள் நிரம்பியிருக்கும் பொழுதுகளிலான குளியல்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவாக ஆண்களிடன் சிகையலங்காரம், தாடி, மீசையை அவர்கள் அமைத்திருக்கும் பாங்கு. பெண்களிடம் கண்கள்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது வாசிப்பு பழக்கம், ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றுவது.
பிடிக்காதது முற்கோபம், சோம்பல், எதையும் பிற்போடுவது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடித்தது அக்கறை, எதையும் ஒழுங்குடன் செய்வது.
பிடிக்காதது கோபம்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
குடும்பத்தினரும், ஈழத்தில் இருந்த நண்பர்களும் நான் இணைய அளவில் எழுதுவதைக் கூட பாராமல் செத்துப்போன பெரியம்மா-பெரியப்பாவும். ம்ம்.... எப்படியோ தொலைந்துபோன கல்லூரிக்கால நட்பொன்றும்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
நீல நிற ஷேட்டும், சாரமும்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

தமிழ் பாடல்களை சேகரிப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கொன்று. காலவரிசைப்படி பாடியவர் பெயர், படம்/தொகுப்பு, இசையமைப்பாளார் என்று தொகுக்கும் வழக்கம் இருக்கிறது. கேட்கும் பாடல் தெரிவு அடிக்கடி மாறும். கடந்த சில நாட்களாக கேட்கும் பாடல்கள்
மாங்கல்யம் ------------- முத்திரை
பேரூந்தில் நீயெனக்கு---------பொறி
உன்னையும் என்னையும்--------கண்ணும் கண்ணும்
தென்றல் காற்றும்--------முடிவல்ல ஆரம்பம்
அன்பே அன்பேதான் -----------------கண்ணும் கண்ணும்
குத்தாலம் குத்தாலம் ------------- கண்ணும் கண்ணும்
தவமின்றி-----------அன்பு
வண்ணம் கலைந்து கிடக்கிறதே -----------------அன்பு
பூங்காத்து திரும்புமா ------------- முதல் மரியாதை

மேலும் தொடர்ச்சியான தெரிவுகளில் நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலணி), ஆனந்தம் ஆனந்தம் (பூவே உனக்காக), வெண்ணிலவே வெண்ணிலவே (காலமெல்லாம் காதல் வாழ்க), அச்சம் அச்சமில்லை (இந்திரா), சொல்லிவிடு வெள்ளி (அமைதிப்படை) போன்ற பாடல்கள் நிச்சயமாக உண்டு.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நானும் நண்பன் பிரசன்னாவும் முன்பு ஹீரோ இன்க் இல் அரைப்பங்கு கறுப்பு மை, கால் பங்கு நீலமை, கால்ப் பங்கு சிவப்பு மை என்று கலந்து ஒரு நிறம் உருவாக்குவோம். எமக்கேயான தனித்துவமான நிறம் அது. வேறு யாருக்கும் இரவலாக கூட அந்த மை நிரப்பிய பேனாவைத் தரமாட்டோம். அந்த மையாக மாறத்தான் விரும்புவேன்.

14.பிடித்த மணம்?

வீட்டில் நறுமணத்துக்காக பூக்களின், பழங்களின் மணம் தரும் “ஏர் ஃப்ரெஷ்ணர்களை” பயன்படுத்துவதுண்டு.
மேலும், சுதுமலை அம்மன் கோயிலை கடக்கும்போது வரும் “மாப்பியன் மில்லின்” நெல் அவித்த மணமும், மழை பெய்த புழுதித் தரையிலெழும் மணமும் பிடிக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

காதல் பற்றிய பதிவுகள். பேரின்பநாயகி பற்றிய பதிவு. அய்யனாரின் உரையாடலினியை நினைவு படுத்திய நல்ல பதிவு அது.


17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?
கிட்ட தட்ட 10 ஆண்டுகளாக என்னை விட்டு நீங்காத நண்பன் என் கண்ணாடி. இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால் எனக்கும் என் நெருங்கிய நண்பன் தீபனுக்கும் 11 ஆண்டுகளாக ஒரே கண்ணாடி அளவீடுகளே உள்ளன. அடிக்கடி கண்ணாடியை தொலைத்துவிடும் நான் அவனது கண்ணாடியையே அப்பப்போது உரிமையாக்கிவிடுவதுண்டு. இப்போது அணிந்துள்ள கண்ணாடியும் அஃதே.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எல்லா வகைப்படங்களையும் அந்தந்த படங்களை பார்க்கும் மன நிலையுடன் அணுகுவதே வழக்கம். சரவணா பவனில் போட்டு ஆட்டுக்கால் சூப் கேட்பதில்லை. விஜய் படத்தில் விஜய் படத்துக்கான தகமைகளையும், அமீர், செல்வராகவன் படங்களில் அவர்களுக்கான தகமைகளையுமே எதிர்பார்ப்பது வழக்கம்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
DEV –D, காதல் கொண்டேன்.

21.பிடித்த பருவ காலம் எது?
கனடாவில் கோடை. இலங்கையில் மழைக்காலம். மழையில் நனைவது எப்போதும் பிடிக்கும். கொட்டும் மழையில் நண்பர்களுடன் தெய்வீகன் (அவுஸ்திரேலியா) பாடும் பாடல்களை கேட்டபடி தெருத் தெருவாக அலைந்திருக்கிறோம். ஒரு மழை நாளில் நானும் தெய்வீகனும், நண்பன் குணாளனும் தாவடி வெளியில் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது” என்று நெடுநேரமாக கத்தியபடி நின்றிருக்கின்றோம். அந்த புனிதமான மூன்று காதல்களும் கைகூடவில்லை. எல்லாப் புனிதங்களையும் உடைப்போம் என்ற என் எண்ணத்தின் முதலடி அது தானோ தெரியாது.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
எழுத்தாளர் தேவகாந்தன் அன்புப் பரிசாக தந்த அவரது கதாகாலத்தை இன்று தான் வாசிக்கத் தொடங்கினேன். அதே நேரம் அண்மையில் புத்தக கண்காட்சியில் வாங்கிய சந்திராவின் “பூனைகள் இல்லாத வீடு”, மனுஷ்ய புத்திரனின் “கடவுளுடன் பிரார்தித்தல், Roland Barthes “The Pleasure of the text” என்று பல புத்தகங்களை ஒன்றாக படித்தபடி உள்ளேன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
சர்வகாலமும் நண்பர்களுடனேயே திரிந்த நாட்களில் சற்றே திமிருடன் நண்பர்களாக எடுத்த ஒரு குழுப் படத்தை “No More Peace Talk” என்ற rappers இடையே east side, west side மோதல்களின்போது பாவிக்கப்பட்ட சொற்களுடன் வடிவமைத்து பாவித்திருந்தேன். அதன் பின்னர் நட்புக் குழுக்கள் கால ஓட்டத்தில் gang களாக மாறுவது கண்டும், நண்பன் ஒருவனின் மரணம் தந்த வேதனையிலும் அந்த் படத்தை அழித்தபின் இன்றுவரை எந்தப் படத்தையும் போடவில்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் - பிடித்த இசை, நள்ளிரவு மழையோசை.
பிடிக்காதவை – நிறைய. உரத்த குரலில் உரையாடும் மனிதர்கள் முதன்மையாக. தேவையில்லாமல் போலியாக எழுப்பப்படும் பாராட்டல்கள், சிரிப்பொலிகள் போன்றவை.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கனடாவில் இருந்து இலங்கை. இலங்கையில் இருந்து கனடா.

26.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
நடந்த சம்பவங்களை அச்சொட்டாக நினைவில் வைத்திருத்தல்

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மற்றவர் கருத்தை மதியாமை, பெண்கள் மீது செய்யப்படும் அடக்கல்கள். சிறு பான்மையினர் மீது செய்யப்படும் அடக்குமுறைகள். மற்றவர்களின் இருப்பை மதியாமல் செய்யப்படும் எல்லாம். கடவுளின் பெயரால் பரப்பப்படும் மூட நம்பிக்கைகள். புத்தகங்களின் ஒரங்களை மடக்குதல்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம். சோம்பல்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

வாழ்ந்த இடமென்பதில் யாழ்ப்பாணம். கனடாவில் thousand island

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்போதும் நான் நானாக.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
மன்னிக்கவும். இன்னும் திருமணமாகவில்லை.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
எப்போதும் தொடரும் ஏமாற்றங்களும், எப்போதாவது நிறைவேறும் எதிர்ப்பார்ப்புகளும்.

Wednesday, June 10, 2009

இருள்-யாழி : திருமாவளவனுடன் ஒரு இலக்கிய சந்திப்பு


கவிஞர் திருமாவளவனுடனான எனது அறிமுகம் சென்ற ஆண்டு நடந்த குறுந்திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் நடந்தது. வழமை போல காலம் செல்வம் அறிமுகம் செய்து வைத்தார். அப்
போது அவரைப் பற்றி எனக்கு பெரிதாக தெரிந்திருக்கவில்லை. அதன் பின்னர் அவர் நடத்திய வலைத்தளத்திலும் இணையத்திலுமாக அவரது சில கவிதைகளை ரசித்திருக்கின்றேன். பின்னர் நண்பர்களுடனான உரையாடலின்போது அவர் “உயிர் நிழல்” கலைச்செல்வனின் சகோதரர் என்று அறிந்தேன். புலம் பெயர் சூழலில் கலைச்செல்வன் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு தந்தவர் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இதே நேரம் திருமாவளவன் ஏற்கனவே எழுதிய “பனி வயல் உழவு”, ”அதே இரவு, அதே பகல்” தொகுதிகளும் ஓரளவு கவனிப்பை பெற்றிருக்கின்றன. பொதுவாக ஈழத்து எழுத்தாளர்கள் புலம் பெயர்ந்து எழுதும் கவிதைகளில் தத்தமது அரசியல் நிலைப்படுகள் பற்றிய தொனிகளோ அல்லது ஈழம் பற்றிய நனவிடை தோய்தல்களோ கருப்பொருள்களாக இருப்பது வழக்கம். ஆனால் திருமாவளவனின் எழுத்துக்களில் புலம் பெயர் வாழ்வென்பதே பெரிதும் கருப்பொருளாக இருக்கின்றது. நமக்கான கதையை நாமே எழுதுவோம் என்ற வாதம் வலுப்பெற்றுவரும் இந்நாட்களில், புலம்பெயர்ந்தவர்களின் கதைகளை, வாழ்வை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, சாதனைகளையும் அவர்களே எழுதவேண்டும் என்றே நினைக்கின்றேன். அந்த வகையில் திருமாவளாவன் ஒரு முக்கியமான படைப்பாளி என்றே சொல்வேன்.

சென்ற ஆண்டிறுதியில் அவரது மூன்றாவது தொகுப்பாக “இருள் - யாழி” என்ற க
விதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது. இதில் பெரும்பாலும் 2004 முதல் 2008 வரை அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான இந்நூல் குறித்த ஒரு சந்திப்பு மே 30ம் திகதி அவரது வீட்டிலேயே இடம்பெற்றது. ஏற்கனவே இயல் விருது நிகழ்வுகளுக்காக வந்திருந்த மௌனகுரு, சித்ரலேகா, அம்பை போன்றவர்களும் கனடா வாழ் முக்கியமான இலக்கிய நண்பர்களும் சந்தித்துக்கொண்டனர்.

நிகழ்வின் சில துளிகள்


  • விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்குமே அவரது “இருள் -யாழி” புத்தகப் பிரதி வழங்கப்பட்டது. அதன் பின்னரே புத்தகம் குறித்த விவாதங்கள் ஆரம்பித்தன. எல்லா விழாக்களிலும் முன் மாதிரியாய செய்யவேண்டிய ஒரு விடயம் இது. இதனால் கவிதைகள் வாசிக்கப்படும்போது அந்த வாசிப்பில் எல்லாரும் கலந்து கொள்ளுவது சாத்தியமாகின்றது.

  • கவிஞர் சேரன் பேசும்போது, இருள் யாழி என்று வைக்கப்பட்ட பெயர் எமது இன்றைய சூழலுக்கு பொருத்தமாக உள்ளது என்று சொன்னார். யாழி என்பது சீனாவின் சின்னமான ட்ராகனுக்குரிய தமிழ்ப் பெயர். இலங்கையில் நடந்த இன அழிப்பில் சீனா பெரிதளவு பங்கேற்றது தெரிந்ததே.

  • மே 17, 18ல் நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக மாற்றுக்கருத்தாளர்கள், தீவிர புலி ஆதரவாளார்கள், நடு நிலையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், அப்படி தம்மை சொல்லிக் கொண்டிருந்தோர் என்று எல்லாத் தரப்பிலும் கனத்த மௌனமே வெளிப்படுவதை குறிப்பிட்ட அவர், இரண்டாம் உலகப் போர் நடைபெற்று முடிவுற்ற காலத்திலும் இப்படியான ஒரு நிலை நடைபெற்றதாயும், அந்நாளைய பெரும் கவிஞர் ஒருவர் ”இனி கவிதைழுதப் படக்கூடிய மனநிலை ஒருவருக்கும் கிடைக்கப் போவதில்லை” என்று சொன்னதையும் சுட்டிக்காட்டினார். இதை ஒட்டிப் பேசிய சக்கரவர்த்தி 20 பேர், 30 பேர் சாகும் போதெல்லாம் தான் கவிதை வந்தது, 20,இரு000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள் என்ற போது கவிதை வராது. அழுகைதான் வரும் என்றார். அதே நேரம் சுமதி ரூபன், இது ஒரு அதிர்ச்சி தரும் மௌனமே என்றும், இனி வரும் நாட்களில் இது பற்றி நிறைய எழுத்துக்கள் உருவாகும் என்றும் கூறினார்.

  • சேரன் என்ற ஆளுமை மீது எனக்கு நீண்ட காலமாகவே பெரு மதிப்பிருந்தது. அவர் பற்றி இங்கிருக்கும் இன்னொரு இலக்கியப் பிரபலமிடம் கேட்டபோது சேரன் பழகுவதற்கு மிகக் கடினமான கோபக்காரன் என்று சொல்லியிருந்தார். அவர் எழுதிய “உயிர் கொல்லும் வார்த்தைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பில் கோபம் தெறிக்கும் அந்த தொனி எனக்கும் மிகப் பிடித்திருந்தது. அந்நாட்களில் கனடாவில் தமிழ் குழுக்களிடையே தொடர்ந்து நிகழ்ந்த மோதல்கள் பற்றி கோபமாக அவர் எழுதிய “கையில் பியர் போத்தலும், பேஸ் போல் பட்டுமாய் கொடிகட்டிப் பறக்கிறது மறத்தமிழ் வீரம்” என்ற வரிகள் எனது உணர்வுகளாகவே இருந்தன. இந்த நிகழ்வில் கூட பல இடங்களில் அவர் பட்ட கோபங்களுடன் உடன்பட முடியாவிட்டாலும் ரசிக்கவே செய்தேன்.
  • இது போல அன்று நான அதிகம் ரசித்த இன்னொருவர் சக்கரவர்த்தி. இவர் மிகப் பெரும் கலகக்காரர் என்ற விம்பம் எனக்கு நெடு நாளாக இருந்தாலும் அவருடன் முதன் முதலில் அறிமுகமானது அன்றுதான். முன்பொருமுறை முரசொலிக்கு எழுதிய கடிதத்திலும், பின்னர் வைரமுத்து கனடா வந்த போது கவியரங்கில் இவர் வாசித்த கவிதையாலும் பெரும் சலனத்தை ஏற்படுத்தியவர் இவர். அது போல வைகறையில் இவர் எழுதிய கட்டுரைகளும் என்னை கவர்ந்திருந்தன. அன்று நடந்த விவாதங்களிலும் அவரது கலகக் குரல் ஓங்கியே ஒலித்தது. சேரன் சொன்ன இருள்-யாழிக்கான பெயர் விளக்கத்தை தவிர்த்து இவர் சொன்ன விளக்கமும், யாழ்ப்பாண மையவாதம் பற்றிய கருத்தும் என்னைப் பொறுத்தவரை கசப்பான நிஜங்களே. கசப்பை விரும்புபவர்கள் குறைவென்பதாலோ என்னவோ அந்த விவாதம் கூட இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. புத்தகமாக வந்திருக்கும் அவரது ஆக்கங்களை இன்னும் வாசிக்கவில்லை என்றாலும் வாசிக்கும் ஆர்வம் அதிகம் உயர்ந்திருக்கின்றதே என்றே சொல்ல வேண்டும்.
  • அம்பை பேசியபோது தான் சிறு வயதில் கவிதை எழுத முயன்று தோற்றதாயும் அதனால் தனக்கு மோசமான கவிதைகள் எப்படி இருக்கும் என்று தெரியும் என்று அடக்கத்துடன் தொடங்கியவர் பெண் கவிஞர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை பற்றி அதிகம் பேசினார். அது போல ஈழத்துக் கவிஞர்கள் , அரசியல்கள், தற்போதைய நிலை என்பன பற்றிய பேச்சுகள் எழுத்தபோது ஆர்வமாகவும் பொறுமையாகவும் கேட்டறிந்துகொண்டார். தனக்கு எல்லாம் தெரியும் என்று முட்டாள்த்தனமாக உளறிக்கொட்டாமல் அவர் ந்டந்து கொண்ட விதம் அவர் மீதான மதிப்பை அதிகரிக்க செய்தது.

  • காலம் - ஜூன் 2009 இதழ் பற்றிய தன்னுடைய வருத்தத்தை திருமாவளவன் பகிர்ந்து கொண்டபோது, மீண்டும் காலம் பற்றி வழமையாக முன் வைக்கப்படும் விமர்சனங்கள் எழுந்தன. உண்மையில் முன்னைய காலம் இதழ்களுடன் ஒப்பிடும்போது இம்முறை மிக அதிகமான அளவு இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வந்திருந்தும் அது பற்றி யாரும் குறிப்பிடாமல் தொடர்ச்சியான குற்றச் சாட்டுகளையே சொன்னது சரியாகப்படவில்லை. அது மட்டுமல்லாமல் கனடா போன்ற ஒரு வறண்ட இலக்கிய வாசகர்கள் உள்ள (200, 000க்கு அதிகமான ஈழத்தமிழர்கள் வசிக்கும் டொரண்டோவில் நட்க்கும் எந்த இலக்கிய நிகழ்வுக்கும் 100 பேர் கூட வருவது கிடையாது.) மோசமான சூழலில் ஒரு இலக்கிய இதழை தொடர்ந்து கொண்டு வருவதிலும் சந்தைப்படுத்துவதிலும் உள்ள சிக்கல்களை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கனவே இலக்கிய விடயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வெளியான வைகறை வார இதழ் கூட நின்று விட்ட நிலையில் எமக்கிருக்கும் ஒரே ஆறுதல் காலம்தான் என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  • நிகழ்வு முடிந்து திரும்பும் போது அதிகம் பாராட்டிக் கொண்ட விடயம் திருமாவளாவனினதும், அவரது குடும்பத்தாரதும் விருந்தோம்பல்தான். தொடர்ச்சியாக எல்லாரையும் அக்கறையுடன் உபசரித்த அவரது மனைவி, மகன், மகளுக்கும், புறப்பட்ட எம்மை தடுத்து இரவு உணவு தந்து உபசரித்த திருமாவளவனும் குடும்பத்தாரும் நிச்சயமாக நன்றிக்குரியவர்கள்.

Monday, June 8, 2009

பொ. கருணாகரமூர்த்தி | அ. முத்துலிங்கம்: இரண்டு நிகழ்வுகள், சில விமர்சனங்கள்


கனடாவில் பிடித்த காலம் எது என்ன என்று கேட்டால் கோடைகாலம் என்று உடனடியாகவே சொல்லிவிடுவேன். கோடை காலம் தொடங்கிவிட்டாலே பல் கலாசார நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டத் தொடங்கிவிடும். இந்த முறையும், வழமையைவிட சற்று அதிகமாகவே இலக்கிய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. மே மாதம் 16ம் திகதி முதல் இன்றுவரை 5 ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக அறிமுகங்கள் நடைபெற்று இருக்கின்றன


பொ. கருணாகரமூர்த்தி

80களின் தொடக்கத்திலேயே போரினால் இடம்பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளார் கருணாகரமூர்த்தி அண்மையில் வெளியிட்ட பெர்லின் இரவுகள் என்ற புத்தகம் மூலம் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டவர். இவர் எழுதிய அகதி உருவாகும் நேரம், அவர்களுக்கென்று ஒரு குடில், பெர்லின் இரவுகள், கூடு கலைதல், போன்ற நூல்கள் பற்றிய விமர்சனமாக ஸ்கார்பரோவில் நடைபெற்ற நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றது. தேவகாந்தன், குரு அரவிந்தன், நவம், என். கே. மகாலிங்கம், இளங்கோ ஆகியோர் நூல்கள் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க பொ. கருணாகரமூர்த்தி ஏற்புரையாற்றினார். பொ. கனகசபாபதி நேர்த்தியான முறையில் நிகழ்ச்சி தொகுப்பை வழங்கினார்.

நிகழ்வில் பலரும் பேசும்போதும் அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி என்ற வரிசையை முன்வைத்து பேசினர். நவம் சொன்னது போல, அ.முவின் எழுத்துகளை படிக்கும்போது கொடுப்புக்குள் சிரிப்பு வரும். பொ. கருணாகரமூர்த்தியின் எழுத்துகளை படிக்கும்போது கொல்லென்று சிரிப்புவரும் என்ற கருத்தை எல்லா வாசகர்களுமே உணர்ந்திருப்பர். இருவரும் கதை சொல்லும் பாங்கில் கூட நிறைய ஒற்றுமைகளை காணலாம். (இதே போல சுவையாக கதை சொல்லக்கூடிய இன்னொரு ஈழத்துக் கதை சொல்லி சுகிர்தராஜா).

நிகழ்வில் எனக்கு அதிகம் நெருடலாகப் பட்ட விடயம் ஏறத்தாழ பேசிய எல்லாருமே பொ. கருணாக்ரமூர்த்தியை ஜெயமோகன் பாராட்டியிருக்கின்றார், ஜெயமோகன் இவரைப் பற்றி இப்படி சொல்லியிருக்கின்றார் என்கிற ரீதியில் பேசியதும், தாம் சொல்வதற்கெல்லாம் ஜெயமோகனை மேற்கோள் காட்டியதும். ஒரு கட்டத்தில் இது என்ன ஜெயமோகன் குருகுலப் பள்ளியின் விழாவா அல்லது ”ஜெயமோகன் பார்வையில் பொ.கருணாகரமூர்த்தி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கமா என்ற சந்தேகமே எனக்கு தோன்றிவிட்டது. ஜெய்மோகன் பல விடயங்களை பார்க்கும் விதத்தில் இருக்கின்ற கோளாறை நான் சொல்லி அறியவேண்டியதில்லை. அண்மையில் கமலாதாஸ் சூரையா பற்றிய பதிவில் அவர் தெரிவித்த கண்டுபிடிப்புகள் அவரது தீவிர ரசிகர்களை கூட மௌனமாக்கியிருப்பதை அவதானித்து இருக்கின்றேன். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை என்ற தேய்ந்துபோன தட்டையே திரும்ப திரும்ப எனக்கு தெரிந்து 10 வருடமாக சொல்லிவரும் இவரது அங்கீகாரத்தை இவ்வளவு முக்கியத்துவப்படுத்த வேண்டியதில்லை. அ.முத்துலிங்கம் தவிர்ந்த வேறு ஈழத்து எழுத்துகளை இவர் தொடர்ந்து படிக்கின்றாரா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. இதையொற்றி எதிர்வினையாற்றின இளங்கோ “திசேரா, மலர்ச்செல்வன், இராகவன், மைக்கேல், சித்தார்த்த சேகுவேரா, நிருபா” போன்றவர்களின் எழுத்துகளை ஜெயமோகன் வாசித்திருப்பாரா என்பதே தெரியாது என்று சொன்னார். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை, ஒற்றைத்தன்மையானவை என்று தொடர்ந்து அறிக்கைவிடும் ஜெயமோகனின் எழுத்துகள் பல சமயங்களில் எவ்வளாவு அலுப்பூட்டும் பிரதிகளாக இருக்கின்றன என்பதை கனடாவில் இருக்கும் அவரது நண்பர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி மாடன் மோட்சம், பல்லக்கு போன்ற நல்ல சிறுகதைகளை எழுதிய ஜெயமோகன் மீள உதவலாம் என்பது என் வேண்டுகோள். மேலும் தொடர்ந்து தலையணை அளவு புத்தகங்களை எழுதுவதை சற்றுக் குறைத்து, கூறியது கூறாமல் தன் கருத்துகளையும், பார்வையையும் மீள்பரிசீலனை செய்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

இறுதியில் ஏற்புரையாற்றிய பொ.கருணாகரமூர்த்தி தனக்கேயுரிய மென்மையுடன் தன் உரையை படித்தார். இஸங்கள் பற்றிய கருத்துகளோடு அவர் மீது முன்வைக்கபட்ட விமர்சனங்களை “எனக்கு எந்த இசங்கள் பற்றியும் தெரியாது, அதனால் தான் அப்படியான குறைகள் வந்திருக்கும்” என்று ஏற்றுக்கொண்டது என்னைக் கவர்ந்திருந்தது. பொதுவாக எழுத்தாளார்கள் என்றால் எல்லாவிடயங்கள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும் என்ற கருதுகோள் எம்மவர்களிடையே உள்ளது. சில எழுத்தாளர்களும் இப்படியே உள்மனதில் நினைப்பதால்தான் தமக்கு தெரியாத விடயங்கள் பற்றியெல்லாம் ஏதோ உளறித்தள்ளி விடுகின்றனர் (சரியான உதாரணம் காலச்சுவடில் கருணா பற்றிய கட்டுரை). அதே நேரம் ஒரு அகதி உருவாகும் நேரம் தொகுப்பில் சொல்லப்பட்ட கற்பு, சோரம் போதல் போன்ற கற்பிதங்கள் பற்றிய விமர்சனத்துக்கு அவர் எந்த எதிர்வினையுமே ஆற்றாமல்விட்டது ஏமாற்றத்தையே தந்தது. ஏற்கனவே கருணாகரமூர்த்தியை நண்பர்களுடன் ஒருமுறை சந்தித்திருந்திருக்கின்றேன். இந்த இரண்டு சந்தரிப்பத்திலும் கருணாகரமூர்த்தி எந்த ஒளிவட்டத்தையும் தனக்கு அணிவித்துக் கொள்ளாத, பழகுவதற்கு இனிய மனிதராக, மனதுக்கு மிக நெருக்கமாக எனக்கு தோன்றினார். அதன் பிறகு அவரது பெர்லின் இரவுகளை வாசித்தபோது அவரே முன்னல் இருந்து கதை சொல்வதுபோன்ற ஒரு அனுபவத்தையே உணர்ந்தேன்.


================================================================


அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள் – அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கத்தின் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணியை முன்வைத்து ஒரு விமர்சன நிகழ்வினை காலம் குழுவினர் மே 23 அன்று ஏற்பாடு செய்திருந்தனர். தற்கால தமிழ் இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத இடத்துக்குச் சொந்தக்காரர் அ. முத்துலிங்கம். அவரது எழுத்தில் அவர் மௌனம் சாதிக்கும் தளங்களும் களங்களும் பற்றி எனக்கு நிறைய விசனங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் அவரது எழுத்து தருகின்ற வாசிப்பனுபவம் அருமையானது. சுஜாதா, அசோகமித்திரன், கோபிகிருஷ்ணன், சாரு போன்றவர்களிடம் நான் அனுபவித்த அதே கட்டுமானத்தை இவரிடமும் உணர்ந்திருக்கின்றேன். நிகழ்வுக்கு முன்னதாக “காலம்” குழுவினரின் “வாழும் தமிழ்” புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பேச்சுக்களாக நுஹ்மானின் பேச்சும், பொ. கருணாகரமூர்த்தியின் பேச்சும் இடம்பெற்றன.

அனேகமாக பேசியவர்கள் எல்லாம் அ.முத்துலிங்கம் இந்தியாவிலும் பிரபலமான ஈழத்து எழுத்தாளர், இந்தியாவில் அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின்றன என்று தவறாமல் குறிப்பிட்டனர். இது பற்றிய எனது பார்வை வித்தியாசமானது. அ.முவைப் பொறுத்தவரை அவர் ஈழத்தில் பிறந்த எழுத்தாளரே தவிர அவர் எழுதுபவை ஈழத்தவரின் இலக்கியம் அல்ல. ஒரு பயணியாக தனக்கு கிடைத்த அனுபவங்களை சுவைபட கதை சொல்பதே அவரது பாணி. அப்படிப் பார்க்கும்போது அவரது எழுத்துக்கள் ஒரு பொதுவான தளத்தில் அமைந்த எழுத்துக்கள். அதாவது ஒரு ஈழத்து வாசகன் அவரது எழுத்துக்களை வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் இந்திய வாசகன் வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஏனென்றால் அவர் கதைகள் ஒரு பொதுவான தளாத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியவையே. மேலும், நண்பர் ஒருவர் குறிப்பிட்டபடி தான் ஒரு கணவான் எழுத்தாளர் என்பதை அவர் தொடர்ந்து பேணிவருகின்றார். இதுவரை எந்த ஒரு சமுதாய கோபங்களோ அல்லது, காட்டமான விமர்சனங்களோ அவர் எழுத்துக்க்ளில் இருந்தது கிடையாது. இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்கள் இந்தியாவில் அமோகமாக விற்பனையாகின்றன என்று மகிழும் அதேவேளை, அவரை ஈழத்து எழுத்தாளர் என்று முழுமையாக உரிமை கொண்டாடமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு. அது மட்டுமல்ல அண்மையில் அவர் உயிர்மையில் ஜெயமோகனுடன் நடத்திய உரையாடலிலும், இந்த நிகழ்விலும் எழுத்துக்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசியதில் எல்லாமே மேற்கத்திய இலக்கியத்தின் ஆதிக்கமாகவே இருந்தன. தமிழ் பெயரை தேடித்தான் பார்க்கவேண்டியிருந்தது. அ. முத்த்லிங்கம் எம்மை விட்டு அந்நியமாகிக்கொண்டு போகின்றர் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கின்றது.

சில காரணங்களால் சற்று தாமதமாக சென்றதால் நுஹ்மானின் உரையை என்னால் கேட்கமுடியவில்லை. ஆனால் ஜயகரன், வெங்கட்ரமணன், மகாலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி போன்றவர்கள் தாம் எப்படி எப்படியெல்லாம் அ.முவை ரசித்தோம் என்று கூறினர்.

இதற்கு ஒருவாரம் முன்பாகத்தான் தனது புத்தக அறிமுக நிகழ்வில் கருணாகரமூர்த்தி என்னை வெகுவாக கவர்ந்திருந்தார். அதே எதிர்ப்பார்ப்புடன் அவரது பேச்சை எதிர்பாத்திருந்த எனக்கு அன்றைய அவரது பேச்சு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. கிட்ட தட்ட 30 நிமிடம் பேசிய கருணாகரமூர்த்தி அ.முவின் ஒரு கதையை அரைவாசியும் இன்னுமொரு கதையை முக்கால்வாசியும் வாசித்துக்காட்டினார். அதைவிட ஏமாற்றமாக “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” ஒரு நாவலா என்ற விமர்சனத்தை எடுத்துக்கொண்ட அவர், இனிமேல் இதையும் நாவல் வடிவமாக எடுத்துக்கொள்வோம் என்றார். எனக்கு 91ம் ஆண்டு தளபதி திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வரும் என்றூ ஜீவி அறிவித்தபின் படப்பிடிப்பு தாமதமாக ஒரு ஒரு பத்திரிகையாளர் “தளபதி தமிழ் புத்தாண்டுக்கு வந்துவிடுமா என்று கேட்டபோது; ஜீவி தளபதி என்று வருகுதோ அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்றூ சொன்னது ஞாபகம் வந்தது. உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் இல்லை என்பவர்கள் சொல்லும் கருத்து, நாவலுக்குரிய இயல்புகளான சம்பவங்களின் தொடர்ச்சி, பாத்திரங்களின் தொடர்ச்சி, நிலத்தின் தொடர்ச்சி என்பன இதில் இல்லை என்பது. இதற்கு பொ. கருணாகரமூர்த்தி கிராவின் கோபல்லபுரத்து மக்களிலும் இந்ததொடர்ச்சிகள் இல்லை என்றார். ஆனால் அதில் நிலத்தின் தொடர்ச்சி, சம்பவங்களின் தொடர்ச்சி இருந்தன. மேலும் ஒரு வாதத்துக்கு உண்மை கலந்த நாட்குறிப்புகள் ஒரு நாவல் என்று எடுத்தால் 80 கள் முதல் 2008வரை சுஜாதா அவ்வப்போது எழுதிய ஸ்ரீரங்கத்து கதைகளை தொகுத்து உயிர்மை பதிப்பகம் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று ஒரு புத்தகமாக வெளியிட்டதே அதுவும் நாவலா?

இறுதியில் முத்துலிங்கம் வழங்கிய உரைகூட மிகுந்த ஏமாற்றமாகவே அமைந்தது. பல மணி நேரம் சமைத்த உணவை ஒரே விள்ளலியே உப்பு சரியில்லை அது இதென்று குறை சொல்வதுபோல கஷ்டப்பட்டு எழுதிய நாவலை குறை சொல்கின்றர்கள் என்று அங்கலாய்த்தார். மேலும்தான் எழுதவில்லை என்று குறை சொல்பவர்கள் தாமே எழுதலாம் என்ற புத்திசாலித்தனமான ஒரு கருத்தையும் சொன்னார். ஒரு முறை ஒரு நடன போட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடனமாடிய சோடிக்கு 0 புள்ளிகள் இட்டபோது அவர்கள் தாம் கஸ்டப்பட்டு பழகியதுக்குத் தன்னும் தமக்கு புள்ளிகள் தந்திருக்கலாம் என்று சொன்னபோது சூர்யா, தான் ஒரு திரைபடத்தில் கஸ்டப்பட்டு நடித்தேன் அதனால் நீங்கள் அதனை வெற்றிப்படமாக்கவேண்டும் என்றூ எதிர்ப்பார்ப்பது, அது போலதான் உங்கள் மன நிலையும் என்று சொன்னார். அ.முவைப் பொறுத்தவரை அவரது படைப்புகள் முற்று முழுதாக நிராகரிக்கவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாக அதில் கண்ட குறைகள் பற்றிக் கூறுவதற்கான வெளியை அவர் முற்றாக மறுத்தார் என்றே சொல்ல வேண்டும்.