Wednesday, May 27, 2009

காலம் – 2009: சில எண்ணங்கள்


கனடாவில் நல்ல படைப்பாளிகள் இருக்கின்ற அளவுக்கு இலக்கிய அமைப்புகளோ, இலக்கிய இதழ்களோ வெளிவருவதில்லை என்றிருக்கின்ற பொதுக் கருத்தை அவ்வப்போது வெளிவந்தாலும் “காலம்” தழ் அடிக்கடி தகர்த்து வருவது வழக்கம். இந்த வகையில் ஜூன் – ஆகஸ்ட் 2009 ற்கான 32வது காலம் இதழ் இதுவரை வெளிவந்த காலம் இதழ்களில் என்னளவில் அதிக நிறைவை தந்ததாக இருக்கின்றது.


கடந்த காலம் இதழ்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு சிறு கதைகளையும், கவிதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அகோரமான யுத்தத்தில் அகப்பட்டிருக்கின்ற ஒரு காலத்தின் சாட்சியாக போர்க் கொடுமைகள் பற்றிய ஆக்கங்களே அதிகளவில் இடம்பெற்றிருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இரண்டாவது சார்ள்ஸ் மன்னனின் காலத்தில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியபோது மக்கள் நூற்றுக்கணக்கில் செத்துவிழுந்தார்களாம். இந்த நாட்களில் அரச சேவகர்கள் “பிணங்களை வெளியில் கொண்டுவாருங்கள்” என்றூ கூவியபடி கை வண்டியுடன் தெருத் தெருவாக வருவார்களாம். இந்த நிகழ்வை தற்போதைய வன்னிக் கொடுமைகளுடன் ஒப்பிட்டு அ. முத்துலிங்கம் “பிணங்களை வெளியே கொண்டுவாருங்கள்” என்ற அருமையான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் கூறிய படி முற்றான இன அழிப்பு முடிவடைந்த பின்னர் “இலங்கை அரசு ஆறுதலான ஒரு பெரிய பெரு மூச்சை விடலாம். என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக வேடிக்கை பார்த்து வந்த உலக நாடுகளும் பெரு மூச்சு விடும். இந்தியாவின் பெரு முச்சு மிக நீண்டதாக இருக்கும்” போலத்தான் இருக்கின்றது. எனக்குத் தெரிந்து இது இலங்கைப் பிரச்சனை பற்றி இவர் எழுதிய மிகச் சொற்பமான ஆக்கங்களுல் (கிட்டுமாமாவின் குரங்கு ?????, பொற்கொடியும் பார்ப்பாள், மற்றும் 83 கலவரம் பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கதை) இதுவே சிறப்பானதாக இருக்கின்றது. இதே இதழில் பத்து நாட்கள் என்ற இவர் எழுதிய இன்னுமொரு சிறு கதையும் இருக்கின்றது. அண்மையில் இவர் எழுதிய “உண்மை கலந்த நாட் குறிப்புகள்” என்ற நாவலில் (?) எந்த ஒரு அத்தியாயத்துக்கு இடையிலும் இதை தூக்கிப் போட்டுவிடலாம். அ. முத்துலிங்கத்தைப் பொறுத்தவரை அவரது எழுத்துக்களின் உச்சத்தில் இருக்கின்றார். அண்மைக்காலமாக அவர் எழுதுபவை எல்லாம் நல்ல “மகிழ்வூட்டும் பிரதிகளாக” இருக்கின்றன.



ஒரு கவிஞராகவும், புனைவு எழுத்தாளாராகவும் பரவலாக அறியப்பட்ட டிசே தமிழனின் “ஹேமாக்கா” என்ற சிறு கதை இந்த இதழில் வெளிவந்திருக்கின்றது. அண்மையில் நான் வாசித்த ஆகச் சிறந்த கதை என்று இன்னும் சில காலத்துக்கு நான் சொல்லிக் கொண்டிருக்கப்போகும் கதை இது. போர்க்கால வன் முறைகளால் பாதிக்கப்பட்ட ஒருவன் அந்த அந்த வயதுக்குரிய ஆச்சரியங்களுடன் கதை சொல்வதாக அமைகின்றது. யுத்தம் நடந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் பலர் அந்தந்த இடங்களை நீங்கி பலகாலம் பிற தேசங்களில் வாழ்ந்தாலும் வன்முறையின் தாக்கம் அவர்கள் மனதில் பலத்த தாக்கமாக தங்கியிருப்பதை பல தடவைகள் அவதானித்து இருக்கின்றேன். தொடர்ச்சியான கசப்புகளும், ஏமாற்றங்களும் வடுக்களுமே நிலையாகிப்போன எம் மனதில் ஹேமாக்காவும் நெடுங்காலம் வாழ்வார் என்பதற்குரிய எல்லா சாத்தியங்களும் கதையில் தெரிகின்றன. இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் ஒரு சொல்ல முடியாத பாரத்தை மனதில் உணர்வார்கள். ஹேமாக்காவின் கண்ணீரை எல்லார் மனதிலும் ஏற்றி வைத்துவிட்டார்போலும்.


ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து செழியன் எழுதிய “தோற்றோடிப்போன குதிரை வீரன்” என்ற கதை ராணுவ ரோந்துகள் என்ற அட்டூழியங்களை கண் முன்னர் நிறுத்துகின்றது. அதே நேரம் உரையாடல்களில் அடிக்கடி பாவிக்கப்படும் “தோழர்” என்ற சொல் வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றுகின்றது. இக்கதையில் பாவிக்கப்படும் அளவுக்கு தோழர் என்ற சொல் ஈழத்தில் விடுதலை இயக்கங்களிடையே பாவனையில் இருந்ததா என்று அக்காலத்தில் இருந்த யாராவதுதான் தெளிவு படுத்த வேண்டும். அதேநேரம் யுத்த காலக் கொடுமைகளை உக்கிரமாகப் பதிவு செய்யும் இன்னொரு சிறுகதையாக பா. அ. ஜயகரன் எழுதிய அடேலின் கைக்குட்டை என்ற சிறு கதை சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. யுத்த காலக்கொடுமைகள் பற்றி சொல்லும்போது எந்தவிதமான பிரச்சாரத் தொனியும் விழுந்துவிடாமல் கதைசொல்லி சொல்லிச் செல்ல எல்லா உணர்ச்சிகளும் படிப்பவர் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் “ஹேமாக்கா”, மற்றும் “அடேலின் கைக்குட்டை” என்ற இரண்டு கதைகளும் அமைந்திருப்பது வெகு சிறப்பு.


எப்போதும் கனவுகள் பற்றியே ரசனையாக பேசும் மெலிஞ்சி முத்தன் இந்த இதழில் எழுதியுள்ள கதைகூட கனவுடன் தான் ஆரம்பிக்கின்றது. தனக்கேயுரிய கவிதைத் தன்மை வாய்ந்த நடையில் அவர் கதையும் அமைந்துள்ளது. பெரியதொரு இலக்கிய முயற்சியில் ஈடுபடிருக்கும் மெலிஞ்சி முத்தன் அதன் பின்னர் மிகப்பரவலான கவனத்தை பெறவேண்டும் என்பது என் விருப்பம். யுத்தகால அவலம் பேசும் இன்னுமொரு கதையாக சிங்களத்தில் தயாசேன குணசிங்ஹ எழுதி தமிழில் மொஹம்மட் ராசூக் மொழி மாற்றம் செய்த பிசாசுகளின் இரவு, 83 கலவரத்தின் இன்னுமொரு கோணமாக அமைகின்றது.


இந்த இதழில் “உறவுகள் ஊமையானால்” என்ற ரஞ்சனி எழுதிய கதையில் பெண்களின் பிரச்சனைகள் பற்றி பேசப்படுகின்றது. பெண்களின் எழுத்துக்களும், பெண்ணியம் சார்ந்த செயல்களும் பெரு வீச்சுடன் வளர்ந்துவரும் இந்நாட்களில் இக்கதை சொல்லும் கருத்துகள் யாவும் மிக ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட பெண்களுக்கான பிரச்சனைகளாகும். அந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற போதிலும், அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக கதை சொல்லி கதையின் கடைசிப் பகுதியை கொண்டு செல்லும் பாங்கு நாடகத் தன்மையானதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல கதையில் அதிகளவு ஆங்கிலச் சொற்கள் Englishலேயே வருகின்றன. அதிலும் நடைமுறை வாழ்வில் கூட நாம் தமிழுடன் கலந்து பேச்சுவாக்கில் அதிகம் பாவிக்காத Perhaps என்ற சொல் கூட கதையின் கடைசிப் பகுதியில் வருகின்றது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இந்த முறை இதழை எடுத்தவுடனேயே நான் முதலில் படித்தது பொ. கருணாகரமூர்த்தி எழுதிய “நல்லாய்க் கேட்டுதான் என்ன செய்யப் போகின்றேன்” என்ற சிறுகதையை. அண்மையில் அவரது சில சிறு கதைகளையும், பெர்லின் இரவுகளையும் படித்து அவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு உருவாகியிருந்தது. இந்த கதையை பொறுத்தவரை, இதைவிட சிறந்த கதைகளை மிக இலகுவாகவே எழுதும் வல்லமை பொ. கருணாகரமூர்த்திக்கு உள்ளது என்பது எனது கருத்து. இது தவிர திருமாவளாவன், நிவேதா, உமா வரதராஜன், மலரா, விமலா போன்றோர் எழுதிய கவிதைகளும் புத்தக விமர்சனங்களும் வந்திருக்கின்றன. கவிதைகள் ஆழ்ந்த வாசிப்புக்கும், விமர்சனத்துக்கும் உரியவை. இயன்றவரை எல்லாரும் இந்தக் கவிதைகளை வாசிக்கவேண்டும்.

புலம்பெயர்ந்த நாடொன்றில், அதிலும் கனடா போன்ற இலவச பத்திரிகைகளையும், தென்னிந்திய சின்னத்திரை நாடகங்களையுமே பொழுது போக்கு முயற்சிகளாக கொண்ட பெரும்பான்மை தமிழ் சமுக்கத்தின் மத்தியில் இருந்து, வணிக ரீதியில் எழும் கடுமையான சிக்கல்களையும் தாண்டி இதழை வெளியிடும் காலம் செல்வமும் மற்றும் காலம் குழுவினரும் படைப்பாளிகளும் மரியாதைக்குரியவர்கள்