Monday, June 21, 2010

வயிறு வலிக்கச் சிரிக்க சில எழுத்துக்கள்

தமிழருக்கு நகைச்சுவை உணர்ச்சி மிகவும் குறைவு என்று கூறுவார்கள். தமிழர்களிடையே இருதயம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கக் கூட இது ஒரு காரணமாக இருக்கலாம். போதாததற்கு தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் வேறு மிகவும் குறைந்துவிட்டனர். நகைச்சுவை எழுத்து என்று சொன்னாலே ஐம்பது வருடங்களுக்கும் அப்பால் போய் தேவன் என்று தான் தேட வேண்டி இருக்கிறது. அதன் பிறகு பாக்கியம் ராமசாமி எழுதிய அப்புசாமி கதைகள் நிறையப் பேரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.

தவிர நகைச்சுவை எழுத்துக்களில் கூட பலவகை உண்டு. உதாரணத்துக்கு தமிழ்த் திரைப்பட நடிகர்களில் கவுண்டமணி வகை, மணிவண்ணன் வகை, விவேக் வகை, வடிவேல் வகை என்று தொடங்கி வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ் எஸ் சந்திரன் வகை என்று பலவகை நகைச்சுவையினை திரைப்படங்களில் வழங்குபவர்கள் இருக்குகிறார்கள். உதாரணத்துக்கு விவேக் போன்றவர்கள் திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகளில் தம்மை அறிவு ஜீவிகளாகக் காட்டிக் கொண்டு, பிறரைக் கேலி செய்து நடிப்பர். அதே போல வடிவே நகைச்சுவைக் காட்சிகளில் தன்னை முட்டாள்த்தனமானவராகக் காட்டிக் கொண்டு நடிப்பார். விவேக் ஒரு கட்டத்துக்குப் பின்னர் ரசிகர்களின் ஆதரவை இழக்க, வடிவேல் தொடர்ச்சியான ஆதரவை மக்கள் மத்தியில் தக்கவைத்துக் கொள்ள இதுவும் ஒரு முக்கியமான உளவியல் காரணம். பெரும்பான்மை மக்களுக்கு தம்மிடம் ஒருவன் முட்டாளாவது பிடிக்கும், அதே நேரம் தம்மை முட்டள் என்று சொல்லி புத்தி சொல்வது எரிச்சல் மூட்டும். (அதே நேரம் விவேக் புத்தி சொல்கிறேன் என்றா பெயரிலும், பகுத்தறிவுக் கருத்துக்களைச் சொல்கிறேன் என்ற பெயரிலும் சாதாரண மக்களின் நம்பிக்கைகளைக் கேலி செய்துவிட்டு, தன்னளவில் முழுக்க முழுக்க ஆத்திகராக, வாஸ்து போன்ற மூட நம்பிக்கைகளை நம்புபவராக, சாதி வெறி பிடித்தவராக இருந்தார் என்பது வேறு விடயம்.)

இது போல நகைச்சுவை வறட்சி நிலவுகின்ற ஒரு சூழலில் தன் எழுத்துக்களையும், செயல்களையும் முழுக்க முழுகக் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தே தீருவது என்ற ஒரே குறிக்கோள் நோக்கி இயங்க ஆரம்பித்திருப்பது உண்மையில் வரவேற்க வேண்டியது. இந்த எழுத்தாளர் முன்னொரு காலத்தில் தீவிரமான வாசிப்பு உடையவராக இருந்து தொலைத்து விட்ட காரணத்தால் இவர் எழுதும் சில விடயங்களை முதலில் வாசிப்பவர்கள் அவை ஏதே சீரியசான விடயங்கள் என்று நம்பி ஏமாந்துவிடுவதும் உண்டு. ஆனால், தன்து எழுத்துக்கள் வாயிலாக மக்களை சிரிக்க வைத்தே தீருவது என்று இவர் எடுத்திருக்கும் சபதம் இப்போது ஓரளவு வெற்றிகரமாகவே போய்க்கொண்டிருக்கிறது. தனது நகைச்சுவை எழுத்துக்களை படிக்க வருபவர்கள் தான் முன்பு எழுதிய ஒரு சில சீரியசான பதிவுகளை வாசித்து குழம்பிப் போய்விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தன் இணையத் தளத்தில் இருந்த முன்னைய பதிவுகள் அனைத்தையும் அழித்த ஒரே எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும்.

இவ்வளவு சொல்லிவிட்டு எழுத்தாளர் பெயரைச் சொல்லாவிட்டால் எப்படி? அவர்தான் சாரு நிவேதிதா. சிரிக்காதவர்களைக் கூட சிரிக்க வைக்கும் வல்லமையுடன் நேற்று இவர் எழுதிய சில வரிகள் இதோ "வட இந்திய மற்றும் மேலை நாட்டுப் பார்வையாளர்களுக்காகத்தான் மணி படம் எடுத்து வருகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். மேலும், இது பற்றிய என்னுடைய விமர்சனங்கள் அனைத்தும் தமிழிலும், மலையாத்திலும் மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் மணி ரத்னத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் என் விமர்சனங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்தால் அவருடைய பெயர் நாறி நாற்றம் எடுத்து விடும்"

நகைச்சுவை இரண்டு ;

கார்ப்பொரேட் கம்பெனிகளின் கைக்கூலியாக மாறியிருக்கும் மணி ரத்னத்தின் ராவணனை முதல் காட்சி பார்த்து விட்டு இரண்டே மணி நேரத்தில் அதற்கான விமர்சனம் எழுதி உயிர்மையில் கொடுத்தேன். உயிர்மை அச்சுக்குப் போக வேண்டிய கடைசி நாள் அது. என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும்; ட்யூப் லைட் மாதிரி கொஞ்ச நேரம் ஆனால்தான்எந்தச் செயலுக்கும் என் உணர்வுகள் விழிப்படையும். கோபிநாத் கேட்டார் என்று மன்னிப்பு கேட்டு விட்டு வந்து பத்து நாட்களுக்கு அவர்களைத் திட்டிக் கொண்டிருந்த மாதிரி

இது போல கிம் கி டுக்கின் திரைப்படம் ஒன்றைப் பார்த்து அந்தப் படம் பற்றி சில கட்டுரைகளும் எழுதிவிட்டு, ஒரு வருடம் கழித்து அந்தத் திரைப்படம் பற்றி வாசகர்களிடம் சந்தேகம் கேட்பது போன்ற நகைச்சுவையின் உச்சங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருகின்றன. இந்த வகை நகைச்சுவையின் அதி சிறந்த வெளிப்பாடாக 1975ல் அகிலனின் சித்திரப்பாவை நாவலுக்கு 2010ல் கண்டனம் செலுத்திய நிகழ்வைச் சொல்லலாம்.

வில்லன் வேடங்களில் வெளுத்து வாழ்ங்கிய பிரகாஷ்ராஜ், ரகுவரன், போன்றவர்கள் சில திரைப்படங்களில் குணசித்திர வேடம் ஏற்று நடித்த போது அத் திரைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் அவர்கள் எந்த நேரமும் ஏதாவது வில்லத்தனம் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே பார்த்தார்கள். அது போல சாருவின் எழுத்துக்களைப் படிப்பவர்களும் இவர் சிரிப்பூட்டும் நோக்குடன் எழுதுபவற்றைக் கூட சீரியஸ் ரக கட்டுரைகள் என்று நம்பிவிடுவதுதான் இவரது நகைச்சுவைக் கட்டுரைகளை அணுகுவதில் இருக்கக் கூடிய மிகப்பெரும் சவால். அதைத் தாண்டும் போது தமிழர்கள் தமிழின் ஈடிணையற்ற 'காமெடி ரைட்டரைக்' கண்டுணரலாம்


4 comments:

விஸ்வாமித்திரன் said...

I totally agree with you.
I start my day with comedy strips in house and with charu's blog in office.

அருண்மொழிவர்மன் said...

ஒரு நாளைத் தொடங்கும் போது மகிழ்ச்சியுடன் தொடங்குவது நல்லது தானே

ஜெகதீஷ் குமார் said...

கடைசிப் பாராவில் சொன்னமாதிரிதான் ரொம்ப நாளைக்கு நம்பிக்கையொடு அவர் தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் உண்மையாலுமே உருப்படியாக ஏதாவது எழுதியிருக்கிறாரா. தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

அருண்மொழிவர்மன் said...

@ஜெகதீஸ்குமார்

எழுதி இருக்கிறார். ஆனால் நிறையக் காலத்துக்கு முன்னாலே

Post a Comment