Monday, December 29, 2008

அபியும் நானும், ஆனந்த விகடன், விஜயகாந்த் மற்றும் கனேடிய இலக்கியங்கள்

அபியும் நானும் திரைப்படம் இந்தியாவில் வெளியாகி ஓரிரு தினங்களின் பின்னரே கனடாவில் வெளியானது. அண்மைக்காலங்களில் நான் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் இது. வைரமுத்து – வித்யாசாகர் – ராதாமோகன் கூட்டணி ஏற்கனவே மொழியில் ஒரு இனிய இசை அனுபவத்தை தந்த பின்னர் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி என்னை மிகவும் கவர்ந்திருந்தன. அதிலும் பாலா உயிரை தந்து பாடி இருந்த அழகிய அழகிய... பாடலும் சின்னம்மா கல்யாணம்... பாடலும் எப்படியாக படமாக்கப்பட்டிருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். பிரகாஷ்ராஜ் மீது ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல ஒரு ரசனையாளர் என்றளவிலும் ஒரு மரியாதை உண்டு. இந்த நேரத்தில் படத்தை இங்கே திரையிடவில்லை என்றதும் நல்ல படங்களை திரையிடுவதில்லை என்ற தம் வழக்கத்தை மீண்டும் ஒரு முறை செய்துவிட்டார்களோ என்று நினைத்தேன். தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக ஓரளாவு சொல்லத்தக்க சென்னை 600 028, அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் இங்கு திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் பிரகாஷ் ராஜ் பூங்கா ஒன்றில் பிருத்விராஜை சந்தித்து தனது மகளுடனான தன் அனுபவங்களை சொல்வதாக செல்கின்றது. திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நதி போல செல்கின்ற கதையும் அதில் இயல்பாகவே கலந்த்விடப்பட்ட நகைச்சுவை நிகழ்வுகளும் ஒரு இனிய அனுபவத்தை படம் பார்ப்பவருக்கு கொடுக்கின்றன. இயல்பான, தெளிவான காதலர்களாக திரிஷாவும், கணேஷும் காட்டப்படுகிறார்கள். திரைப்படத்தில் போகிற போக்கில் ஒரு சர்தார்ஜி, அவர்களை கேலி செய்து கொண்டிருந்த தமிழர்களிடம் ஒரு ரூபாயை கொடுத்து அதை காண்கின்ற பிச்சை எடுக்கும் சர்தார்ஜியிடம் கொடுக்க சொல்வதாகவும், இன்றுவரை அந்த ஒரு ரூபாய் தமிழனிடமே உள்ளதாயும் சொல்லும் காட்சி “தெருவெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி” என்று எம்மவர்களை பற்றி எங்கோ படித்ததை நினைவூட்டியது. தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று சொல்லிக்கொண்டேயிருக்காமல் இப்படியான படங்களை அரங்கிலே சென்று பார்ப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

2

ஆனந்த விகடனின் தற்போதைய தரம் பற்றிய ஒரு பதிவை கடந்த வாரம் வாசித்திருந்தேன். இதே கருத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். புதிய அளவில் ஆனந்த விகடன் வெளியானபோது மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் உள்ளடக்கம் பெருமளவான வண்ணப்படங்களாலேயே நிறைக்கப்பட்டிருக்கின்றது. அகமும் புறமும் என்று வண்ணதாசன் எழுதிய பிறகு தீதும் நன்றும் என்று நாஞ்சில் நாடன் எழுதிவருகிறார். பத்தி எழுத்துவகையை சேர்ந்த கட்டுரைகள் இவை. இதற்கு முன்னர் இதே விதமாக ஆனந்த விகடனில் எழுதிய சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் உடன் ஒப்பிடும்போது இவர்களின் எழுத்து இறுக்கம் குறைந்ததாகவே தெரிகின்றது. நாஞ்சில்நாடனின் நஞ்சென்றும் அமுதென்றும் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை தொகுதி. எந்த விதமான ஆவேசமும் இல்லாமல் ஒரு மெல்லிய த்வனியில் தனது கருத்துக்களை மிக நெருக்கமான ஒருவருடன் கதைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக சொல்லியிருப்பார். அதேபோல வண்ணதாசனின் சிறுகதைகளும் என்னை கவர்ந்திருக்கின்றன. வண்ணதாசனின் படைப்புகள் அவற்றில் வருகின்ற ரசனை பூர்வமான சொல்லாடல்களுக்கு பேர்பெற்றவை. அதிலும், அவரது கட்டுரைகள். அகமும் புறமும் எழுத தொடங்கு முன்பாக விகடனில் இவரது பேட்டி ஒன்று வெளியாகி அடுத்த இதழிலேயே அவர் எழுதிய கடிதம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால் அவர் எழுதிய அகமும் புறமும் அவரது முன்னைய படைப்புகளுடன் ஒப்பிடும்போது என்னை பாதித்த விதம் சற்று குறைவாகவே இருந்தது. வாரா வாரம் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற அழுத்தம் சிலவேளை இவர்களது படைபாற்றலை பாதித்திருக்கலாம்.

அதுபோல கடந்த சில மாதங்களாக மாறி மாறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க பற்றி மாறி மாறி எக்ஸ்ரே ரிப்போர்ட் என்கிற பெயரில் ரிப்போர்ட்கள் வந்தன. அதுவும் அழகிரி ராஜ்யம் பற்றியும், இரண்டு கட்சிகளினதும் முக்கியஸ்தவர்களதும் விபரங்களுடனும் வந்த கட்டுரைகள் முக்கியமானவை. ஆனால் இதேநேரம் விகடன் கிராமம், கிராமமாக விஜயகாந்துடன் டூர் அடிக்க தொடங்கினான். இது கிட்ட தட்ட இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுத் தீர்வாக மக்கள் விஜயகாந்தை பார்ப்பது போன்ற ஒரு விம்பம் தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றது. ஒரு தனிக்கட்சியாக விஜயகாந்த் பிரமிக்க தக்க அளவு வளர்ந்திருந்தாலும் அவரிடம் இருக்கும் மாற்று தீர்வு என்ன? என்ற அடிப்படை கேள்விக்கு இன்றுவரை எவருமே பதிலளிக்கவில்லை. கறுப்பு எம். ஜி. ஆர் என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், திராவிடக் கட்சிகள் வளர்த்துவிட்ட இலவச பொருட்களை தருவதாக கூறி வாக்குகளை அள்ளும் கலாசாரத்தை இன்னும் வளார்த்துவிடுவாரோ என்றே எண்ண தோன்றுகின்றது. விகடன் மட்டுமில்லாமல் குமுதம் உட்பட பல பத்திரிகைகள் விஜயகாந்தை பெரும் சக்தியாக காட்டிக்கொண்டிருக்கின்றன. இயக்குனர் மகேந்திரன் வன்னி சென்று திரும்பியபின்னர் குமுதத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் விஜயகாந்தை வன்னியில் சின்ன பிரபாகரன் / சின்ன தலைவர் என்று அழைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் தான் அப்படி ச்ரு செய்தியை கூறவேயில்லை என்று மகேந்திரன் மறுப்பு தெரிவிக்க, குமுதமும் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. சன் குழுமம் என்ற பெயரில் பெரும்பான்மை மீடியாக்களை எல்லாம் தி. மு. க வளைத்து போட்டபின்னர், அரசியல் ரீதியான ஒரு பின்புலம் வேண்டும் என்பதாலேயே ஆனந்தவிகடன் இப்படி விஜயகாந்த் புகழ் பாடலாம் என்று அண்மையில் எனக்கு அறிமுகமான நண்பர் ரமணன் சொன்னது சரிபோலதான் தோன்றுகின்றது. விஜய்காந்த் பற்றிய விமர்சனங்களையும் ஆனந்த விகடன் சரியான முறையில் முன்வைக்காத இந்நாட்களில் அதே ஆனந்த விகடனில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றாக விஜயகாந்த் வந்துள்ளாரே என்று கேட்டபோது “கழுதை என்று ஒன்று இருக்கிறது, குதிரை என்று ஒன்று இருக்கிறது இப்போது கோவேறு கழுதை என்று ஒன்று வந்துள்ளது” என்று சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது.

3

நவீன இலக்கியம் மீதான எனது ஈடுபாட்டில் “காலம்” இதழாசிரியர் செல்வம் அவர்களின் பங்கு முக்கியமானது. யானையுடன் மோதாதே எலியே என்ற பொருள்பட கருணாநிதி எழுதிய ஒரு கவிதைக்கு (கருணாநிதி ஒரு பிரசார எழுத்தாளரே தவிர அவர் இலக்கியவாதி அல்ல என்று இளையபாரதியின் புத்தக வெளியீட்டை முன்வைத்து ஜெயமோகன் சொன்னதற்காக இக்கவிதை எழுதப்பட்டதாய் நினைவு) எதிர்வினையாக ஜெயமோகனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு விரைவிலேயே பதிலும் வந்தது. அவர் மூலமாகவே செல்வத்தின் அறிமுகமும் கிடைத்தது. அதற்கு முன்பொருமுறை ஒரு கண்காட்சியில் செல்வத்திடம் இருந்து கணையாழியின் தொகுப்பு ஒன்றை பெற்றிருக்கிறேன். சென்ற வாரம் அவரை எதேச்சையாக சந்தித்தபோது காலம் சஞ்சிகையின் 31வது இதழையும் கனவாகிப்போன கச்சதீவு என்ற நூலையும் பெற்றுக்கொண்டேன். கனடாவின் குறுகிய வணிக சாத்தியங்களுக்கு மத்தியில் காலம் சிறப்பாகவே வந்துகொண்டுள்ளது. இம்முறை காலம் இதழில் சினேகிதனை தொலைத்தவன் என்ற பொ. கருணாமூர்த்தியின் கதையும் குட்டான் என்ற டானியல் ஜீவாவின் கதையும் எனக்கு பிடித்துள்ளன. இதழை முற்றாக வாசித்து முடிக்காத நிலையில் மற்ற ஆக்கங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. ஆனால் ஜீவாவின் கதையில் கனடாவில் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் அனுபவித்திருக்க கூடிய ஒரே வீட்டில் பலர் சேர்ந்து குடியிருப்பதும் அதனால் வரும் சிக்கல்களும் காட்டப்படுகின்றன. கதையில் சாந்தா என்ற பாத்திரம் தன் வீட்டில் குடியிருக்கும் குட்டானை பற்றி தன் மாமியார் எல்லை மீறி பேசி வீட்டைவிட்டு வெளியேற சொல்லும்போது அதற்கு தன் எதிர்ப்பை காட்டுகின்றது. இதனை எதிர்கொள்ளாத மாமியார் குட்டானை நீ வச்சிருக்கிறாயா என்று கேட்பதுடன் கதை நிறைவேறுகிறது, எம் மனம் அரட்டப்படுகின்றது. பெண்களின் முதல் எதிரிகள் பெண்கள்தான் என்று அனேகமாய் எல்லா ஆண்களும் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம்.

இதே போல கருணாமூர்த்தியின் கதையில் தன் பால்ய சினேகிதங்களை தேடி அலையும் ஒருவனின் அனுபவம் சொல்லப்படுகின்றது. இலங்கை செல்லும் கதை நாயகன் இறுதியில் பாலசந்திரன் என்ற தன் பால்யசினேகிதனை காண்கிறான். தான் எழுதிய புத்தகத்தை பரிசளித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கின்றான். அந்தரங்கமான பழைய நினைவுகள் எல்லாம் கிளறப்படுகின்றன. தான் திரும்பி செல்ல முன்னர் மறுமுறை வருவதாக வாக்களித்துவிட்டு விடைபெறும்போது நண்பன் (பாலசந்திரன்) இவர் கொடுத்த புத்தகத்தின் பின்புறத்தை பார்த்தவாறு (அதில் அ. முத்துலிங்கம் எழுதிய முன்னுரை இருக்கின்றது) “அ. முத்துலிங்கம் என்று எங்களோட யாரும் படிக்கேல்லையே.....நீ யார் மச்சான்.... உனக்கு என்ன பெயர்?” என்று கேட்கிறான். அத்துடன் கதை முடிகின்றது. ஒரு கதையை சரியான இடத்துடன் நிறுத்திவிடுவதில்தான் அதன் வெற்றி உள்ளது என்பார்கள். அதனை திறம்பட செய்துள்ளார் கருணாமூர்த்தி அவர்கள்.

4.

கடந்த சில நாட்களாக இணையத்தில் பெண்புலிகளின் இறந்த உடல்களை சிங்கள ராணுவத்தினர் புணர்ந்து அதை வீடியோவில் எடுத்ததாக வந்த வீடியா துண்டுகள் பெரும்பாலானவர்களின் மனதை பாதித்தன. ஈழப்போராட்டத்தில் எத்தனையோ பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். இவற்றை பற்றி சரியான முறையில் வந்த பதிவுகள் குறைவென்பது எனது கருத்து. அண்மையில் டிசே தமிழன் எழுதிய ஒரு சிறுகதை சரியான முறையில் வாசகன் மனதிலும் இந்த பாதிப்பை கொண்டுசென்றிருக்கின்றது என்று நினைக்கிறேன். ஒரு கவிஞராக பரவலாக அறியப்பட்ட இவர் என்னை ஒரு கட்டுரையாளராக, ஒரு புனைவு எழுத்தாளராகதான் பெருமளவு கவர்ந்திருக்கிறார். இனி நீண்ட காலத்துக்கு, உங்களை பாத்தித்த சிறுகதை எது என்று கேட்டால் எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த கதையை கூறலாம்

Monday, December 22, 2008

கிரிக்கெட்: மாறிவரும் கோலங்கள்

பொதுவாக எந்த ஒரு விடயத்திலும் ஏகப் பிரதிநிதித்துவம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அதிலும் கலைகள், விளையாட்டுத்துறைகளில் ஏற்படுகின்ற ஏகப்பிரதிநிதித்துவம் அந்த துறைகளின் வளர்ச்சியை முற்றாக ஸ்தம்பிக்க செய்துவிடும் என்பது என் நம்பிக்கை. மேலும், ஏகப்பிரதிநிதித்துவம் எல்லா மாற்று முயற்சிகளையும் தன் ராட்சச கரங்களால் நசுக்கி விடுகின்றது என்பதும், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற நளவெண்பா காலத்து சொல்லாடலுடன் அந்த துறைகளை நிறுத்தி விடும் என்பதும் எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். ஒரு துறை இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்று அந்த துறையில் பலர் உச்ச கட்ட புகழுடன் / வெற்றிகளுடன் பயணித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது எனது கருத்து.

கிரிகெட்டில் முடிசூடா மன்னர்களாக கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மாறி மாறி திகழ்ந்த மேற்கிந்திய, அவுஸ்திரேலிய அணிகள் அடிக்கடி (முன்பு மேற்கிந்தியா இருந்தது, இப்போது அவுஸ்திரேலேயா மட்டுமே) எதிர் அணிகளால் சோதனைக்குள்ளாக்கப்படுவது கிரிக்கெட் ஆரோக்கியமான வளார்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதையே காட்டுகின்றது. இந்தியாவுடன் டெஸ்ட் தொடரிலும், சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மும்முனை தொடரிலும், தற்போது தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்விகள் அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட மற்ற அணிகளின் எழுச்சி என்பதாகவே கருதப்படவேண்டும். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற அளவில் இருந்த அணி அவுஸ்திரேலிய அணி. இதற்கு சரியான உதாரணம் 1994-95ல் நடைபெற்ற ஒரு ஒரு நாள் தொடர். ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டி தொடர் ஒன்று நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 3 / 4 போட்டிகளில் ஆடி இறுதி போட்டியில் நுழையும். 94-95ல் அவுஸ்திரேலியா இந்த தொடரில் இங்கிலாந்து, ஸிம்பாப்வே அணிகளுடன் நான்காவது அணியாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணியையும் (Australia – A) நுழைத்தது. இதில் எல்லார் புருவங்களும் உயரும்படி இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியாவுடன் மோத அவுஸ்திரேலிய இரண்டாவது அணி தெரிவானது. அதாவது, ஏற்கனவே டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இரண்டு அணிகளைவிட வலிமையாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணி இருந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலிய அணியின் தூண்களாக இருந்த மத்யூ ஹைடன், க்ரேக் ப்ளீவட், ரிக்கி பொண்டிங், மைக்கேள் பவான் போன்றவர்கள் அதன் இரண்டாவது அணியில் ஆடினார்கள். இந்த இறுதி போட்டி ஐ சி சி யால் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் பின்னர் அவுஸ்திரேலியா இப்படியான முயற்சியையும் செய்யவில்லை. 1992ல் மேற்கிந்திய அணியின் மாபெரும் வீரர்களான ரிச்சர்ட்ஸ், மார்ஷல், க்ரீனிட்ஜ், டுஜோன் போன்றவர்கள் ஒரேயடியாக ஓய்வுபெற, அவுஸ்திரேலியா மெல்ல மெல்ல ஆதிக்கம் பெற்றது. அதே நேரம் ஷான் வார்ணின் வருகையும் அமைய, ஏற்கனவே வேகப்பந்து வீச்சில் புகழ்பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி ஒரு முழுமையான அணியாக உருவெடுத்தது. ஒரு அணியில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ஒரு சுழல் பந்து வீச்சாளார் தன்னும் இருக்க வேண்டும் என்பது ஒரு பொது விதி. உலகில் அசைக்க முடியாத அணியாக மேற்கிந்தியா உருவெடுத்த 70களில் அவ்வணி தலைவர் க்ளைவ் லோயிட் “சந்திரசேகர் போன்ற ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டும் இருந்தால் எம்மை எவராலும் வெல்ல முடியாது” என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. ஷான் வார்ணின் மாய விரல்களில் சிக்கி தவித்த பாட்ஸ்மன்களை பற்றி கதை கதையாக சொல்லலாம். ஒரு சுழல் பந்து வீச்சாளனின் எல்லா சாத்தியங்களையும் செய்து காட்டியவர் அவர். விக்கெட்களின் எண்ணிக்கையில் முரளி அவரை தாண்டி போனாலும், அரைவாசிக்கும் மேற்பட்ட போட்டிகளில் சுழல் பந்து கைகொடுக்காத மைதானங்களில் ஷான் வார்ண் பந்து வீசினார் என்பதை கவனித்து கொள்ளவேண்டும். அந்த நாட்களில் எல்லாம் பந்து எகிறும் அவுஸ்திரேலிய பிட்ச் என்றாலே பாட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனம்தான். மைதானத்தில் கரணமடித்தும், வழுக்கி சென்றும் அவர்கள் செய்யும் களத்தடுப்பை ஒரு அதிசயம் போலதான் மற்ற அணிகள் பார்த்துக்கொண்டிருந்தன.


இதன் பின்னர் தென்னாபிரிக்காவின் வருகையுடன் எல்லா அணியினரும் களத்தடுப்பிலும், பல்துறை ஆட்டக்காரர்களை அணியில் அதிகம் இணைப்பதிலும் கவனம் செலுத்த தொடங்க கிரிக்கெட் நவீனப்படுத்தப்பட்டது. பாட்ஸ்மன், பந்து வீச்சாளார் என்றில்லாமல் களத்தடுப்பு என்ற வகையிலும் வீரர்கள் ரசிக்கப்பட்டனர். பாட்டிங்கை பொறுத்தவரை ஒரு சராசரி வீரரான ரோட்ஸ் ஒரு நட்சத்திர வீரராக மதிக்கப்பட்டார். இந்திய அணி பல ஆட்டங்களில் ரொபின் சிங்கை சேர்த்துக்கொண்டது. தனது மெதுவான துடுப்பாட்டத்தை தாண்டியும் ரொஷன் மகனாம ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். சித்து, லக்‌ஷ்மண் போன்ற இந்திய வீரர்கள் அணியை விட்டு ஓரங்கட்டப்பட அவர்களின் மோசமான களத்தடுப்பும் உடல் தகுதியும் காரணாங்களாக காட்டப்பட்டன இதே சமயம் அணிகள் வேற்று நாட்டவரை சேர்ந்தவரை பயிற்றுவிப்பாளாராக கொண்டுவர தொடங்க, ஆசிய அணிவீரர்களுக்கு மற்ற அணிவீரர்களின் மனநிலை கற்றுத்தரப்பட்டது. இதே காலப்பகுதியில் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் உலகம் முழுவதும் ஏற்பட்ட ஆர்வம் இந்திய, இலங்கை அணி வீரர்களிலும் பிரதிபலித்தது. அவ்ஸ்திரேலிய, தென்னாபிரிக்க வீரர்கள் போல இவர்களும் வேகமான உடல் இயக்கங்கள் மூலம் களத்தடுப்பில் சில ஆச்சரியங்களை ஏற்படுத்தினர். முக்கியமாக டில்ஷான், முரளிதரன், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரய்னா, கைஃப் போன்றாவர்கள். உலகமயமாக்கல் என்கிற பலத்த கேள்விகளுக்குள்ளான ஒரு இயல்பினால் வந்த ஒரு சாதகமான நிலை எல்லா நாட்டு இளைஞர்களும் கிட்ட தட்ட ஒரே மனநிலைக்கு கொண்டுவரப்பட்டனர். எல்லாவற்றுடன் சமரசம் செய்துகொள்வது என்ற தென்னாசிய மனநிலையை விட்டு இளைஞர்கள் வெளிவந்து எதையும் ஒரு சவாலாக, போராட்ட மனப்பாங்குடன் எதிர்கொள்ள தொடங்க கிரிக்கெட்டின் தீர்மானிக்கப்பட்ட கூறுகள் அனைத்தும் ஒரே நாளில் தகர்ந்து போயின. ஃப்ளிண்டொஃப் உடன் சூடாக விவாதித்த பின்னர் யுவ்ராஜ் அடித்த ஆறு 6களும், அவுஸ்திரேலியாவில் வைத்து அவர்களுக்கு ஈடாக இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதும், ஆண்ட்ரே நெல்லை சுற்றி ஸ்ரீ சாந்த் ஆடிய ஆட்டமும், தன் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களையும் தன் பந்து வீச்சால் மட்டும் எதிர்கொண்ட முரளியும், தமக்கு எதிராக செய்யப்பட்டது அநீதி என்றவுடன் உடனே இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இருந்து விலகிக் கொண்ட இன்ஸமாமும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.


அத்துடன் நேரடி ஒளிபரப்பும், பலகோண காமரா வசதியும் ஒவ்வொரு ஆட்டக்காரரதும் பலவீனங்களை அறிந்துகொள்ள பேருதவி செய்தன. இவற்றை செய்வதற்காகவே சிலர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு பாட்ஸ்மன் வரும்போதும் அவனுக்கு எப்படியான வியூகம் அமைக்கப்படும் / அமைக்கப்படவேண்டும் என்பதை கடைக்கோடி ரசிகன் வரை தெரிந்துகொள்ளகூடியதான வாய்ப்புகளை தொழில்நுட்பம் செய்து தந்தது. இதனால் அணிகளுக்கிடையில் குறைந்தளவு தீர்மானிக்கப்பட்ட வித்தியாசங்களே அமைய பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் அந்த நாள் மோதல்களிலேயே தீர்மாணிக்கப்பட்டன.

அவுஸ்திரேலிய அணியில் கூட தற்போது கில்க்றைஸ்ட், ஷான் வார்ண், மக்ராத் என்ற மும்மூர்த்திகளின் ஓவை காரணம் காட்டலாம். ஆனால் மக் டேர்மட், மேர்வ் ஹ்யூஜ், அலன் போடர், மார்க் டெய்லர், மார்க் வா, ஸ்டீவ் வா போன்றாவர்களின் ஓய்வு அந்த அணியில் இந்தளாவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும், முன்னர் சொன்ன மூவரின் இடங்களில் ஷான் வார்ண் தவிர மற்ற இடங்களில் வந்தவர்கள் ஏற்கனவே திறமை நிரூபிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு உண்மையான கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக ரசிப்பதற்கு அருமையான காலம் கனிந்துள்ளது.

Tuesday, December 16, 2008

“இடாகினி பேய்களும்”...:ஒரு அறிமுகம்

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பற்றி சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்ததில் இருந்து நெடுநாட்களாக அவரது புத்தகங்களை தேட தொடங்கியிருந்தேன். எனக்கு அமைந்த ஒரு குறை, எனது நண்பர்கள் வட்டத்தில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மிக குறைவாக இருப்பது. அதுவும் கனடாவில் இல்லை என்றே சொல்லி விடலாம். அதனால் நான் தேடும் புத்தகங்களோ, திரைப்படங்களோ நேரடியாக எனக்கு கிடைத்தாலே அன்றி, மற்றவர்கள் ஊடாக எனக்கு கிடைப்பது குறைவு. ஒரு கண்காட்சி ஒன்றில் காலம் சிற்றிதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தத்தின் அறிமுகம் கிடைத்தது, பின்னர் அவர் ஊடாக, அவர் நடத்தும் புத்தக கண்காட்சிகளில் அவர் சிபாரிசு செய்து சில நல்ல புத்தகங்களை வாசித்துள்ளேன். அண்மையில் அப்படியான ஒரு கண்காட்சியில் கோபிகிருஷ்ணன் எழுதிய “இடாகினி பேய்களும்” என்கிற நாவலை அவர் அறிமுகம் செய்ய, பல நாட்களாக வாசிக்க ஆசைப்பட்ட கோபிகிருஷ்ணனின் நடை தரும் அனுபவத்தை முதன் முதலாக அனுபவித்தேன். நகர்ப்புற வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்படும் வாழ்வு மீதான ஆழமான சலிப்பும், மன உளைச்சலும் பற்றி வீர்யமாக, அதே நேரம் காதோரமாய் ஒரு தோழன் கதை சொல்வதுபோல சொல்லும் நடை இவருக்கு கைவந்திருக்கின்றது.

எனது புரிதலில், நாவல் self fiction வடிவில் கொண்டு செல்லப்படுகின்றது. அதாவது, சேவை மையம் ஒன்றில் அவர் பணியாற்றிய போது அவர் பெற்ற அனுபவங்களை அவர் வாசகரிடம் சொல்வதாக கதை போகின்றது. அந்த மூலக்கதையில் வரும் சில சம்பவங்களை மையம் கொண்ட 9 சிறுகதைகளும் ஒரு கவிதையும் பிண்ணினைப்பாக தொடர்கின்றது. அதாவது, மூலக்கதையைவிட, கிளைக்கதைகள் அளவில் பெரியனவாக உள்ளது. சாருவின் ராஸலீலாவில் சில அத்தியாயங்கள் இப்படி அமைந்தது. தொடர்ச்சியான மன உளைச்சல்களாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டே அவர் இறந்தார் என்று அறிந்திருக்கிறேன். கதையில், சமூகத்தின் போலியான மனிதர்கள் மீதான அவரது வெறுப்பு தெளிவாக காட்டப்படுகிறது. அவரது அலுவலகத்தில் உயர் நிலை அதிகாரிகள் மட்டும் பாவிக்க என்று ஒரு கழிவறையும், சாதாரண ஊழியர்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் தட்டச்சு பணியாளார்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் பேணாப்படுகிறது. உயர் அதிகாரிகள் ஒவ்வொருமுறை கழிவறை போய்வந்த பின்னரும் அதற்கென இருக்கும் ஒரு தொழிலாளியால் கழிவறை சுத்திகரிக்கப்படும் வழமை கொண்டுவரப்படுகிறது. இதைப்பற்றி சுத்திகரிப்பு தொழிலாளி கோபியிடம் “என்ன சார் மேடம்கள் மூத்திரம் பெய்றது இல்லைபோல, பன்னீர்தான் பெய்றாங்களா?” என்று கேட்கிறான். அதுபோல வாகனத் தரிப்பிடத்திலும் சில வரைமுறைகள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி, சாதாரண நிலை ஊழியர்கள் தம் டூ வீலர்களை தாழ்வான இடத்தில்தான் நிறுத்தவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இதனால் இரண்டு படிகளில் டூவீலர்களை ஒவ்வொரு நாளும் ஏற்றி இறக்கவேண்டிய கட்டாயம் வருகின்றது. இதில் உள்ள சிரமங்களை விளக்கி, அந்த படிகளை மறைத்து நீண்ட சாய்வான மரமொன்றை வைக்குமாறு தொழிலாளர் சார்பாக கோபி வைக்கும் வேண்டுகோள் மிக மோசமாக நிராகரிக்கப்படுகின்றது. உன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று தலைமை அதிகாரி கூறுகிறார். இப்படியான சம்பவங்களால், ஆறு மாதங்களின் பின்னர் வேலையை விட்டு விலகுகிறார்.
அதுபோல நாவலில் எனக்கு பிடித்த இன்னொரு பகுதி, சமாதானம் என்ற பெண் ஊழியருடன் கோபிக்கு ஏற்பட்ட உறவு பற்றிய பகுதி. ஏற்கனவே கோபிக்கு திருமணமான நிலையில் அது ஒரு வரம்பு மீறிய உறவேயானாலும் மிகுந்த காதல் ரசத்துடன் அந்த உறவு கூறப்படுகின்றது. காதல் மனச மட்டும் தான் பார்க்கும் அது இதென்ற பிதற்றல்கள் இல்லாமல் காதலும் காமமும் கலந்து அந்த உறவை மறக்க முடியாத அளவுக்கு மனதில் பதிக்க வைத்துள்ளார். ஒரு முறை காரில் கேளாம்பாக்கம் நோக்கி தொலைதூர பயணம் செல்கையில் சமாதானத்தின் உடல் மீதான ஸ்பரிசிப்பில் இருவரும் காமவசப்படுகிறார்கள். “it’s very soothing” என்கிறாள் சமாதானம், அப்போது “நான் வரம்புகள் அற்றவன், ஆனால் நீங்களாக என்னை நாடும்போது உங்களை நான் பரத்தையாக உணரவைக்க மாட்டேன்” என்கிறார் கோபி. சுதந்திரம் என்பது மற்றவரின் இருப்பையும் அங்கீகரித்தல் என்ற தொனிவரும் இடம் இது.

சமூகப்பணிகளுக்கென வரும் பணம் தேவையில்லாமல் விரயம் செய்யப்படுகின்றது. வெளிநாடொன்றில் இருந்து ஒருவர் செய்யும் நன்கொடை பற்றிய விபரங்களை பார்க்க மூவர் பணியாற்றுகிறார்கள். இப்படியான நிகழ்வுகள் கதை ஓட்டத்தில் சொல்லப்படுகின்றன. இவற்றின் மீதான அவரது வெறுப்பும் அது சார்ந்து அவருக்கு அதிகாரிகள் மீதெழும் கோபமும் பல இடங்களில் தெளிவாக தெரிகின்றது. (கனடாவில் சேகரிக்கப்படும் charitable trust நிதிகள் எவ்வாறெல்லாம் வீண் விரயம் செய்யப்படுகின்றது என்று சில ஆண்டுகளின் முன்னர் தொடர்ச்சியாக சில நாட்கள் புள்ளிவிபரங்களுடன் Toronto star பத்திரிகை நிறுவியது ஞாபகம் வருகின்றது) அவருக்கு மேலதிகாரியாக பணியாற்றிய ஒரு பெண் response என்பதை responce என்று எழுதுகிறாள். இப்படியான தவறுகளை சுட்டிக்காட்டும்போது இன்னொரு அதிகாரியால் “Gopikrishnan is not an authority in English” என்று திட்டப்படுகிறார். ஆற்றலும், அறிவும், சரியான உழைப்பும் இருந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வலி சுட்டிக்காட்டப்படுகின்றது. இது அப்பட்டமாக அவரது சொந்த வாழ்வின் நிலையே தான். அவர் இறந்தபோது இறுதி சடங்குகள் செய்யக்கூட காசு இருக்கவில்லை என்று வாசித்திருக்கிறேன். இது பற்றி எஸ். ராமகிருஷ்ணன் ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியவர்களைவிட பெருமளவு பாதிப்பை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தின. எந்த இலக்கிய அரசியலிலும் ஈடுபடாது தன் எழுத்து நடை போல அமைதியாக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் இவர். இவரது பிற படைப்புகளையும் வாசிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன்.

வலைப்பூக்களில் இவர் பற்றிய இரண்டு பதிவுகள்
லேகாவின் பதிவு
எஸ். ராமகிருஷ்ணனின் உயிர்மை பதிவு
எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்