Wednesday, August 11, 2010

ஞாநியும் கருணாநிதியும் கண்ட ஊடக சுதந்திரம்

ஓ பக்கங்கள் ஞாநி அவரது கட்டுரைகளை பதிப்பிக்க குமுதம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து தனது 'ஓ பக்கங்களை' குமுதத்தில் நிறைவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.  ஞாநியின் எழுத்துக்கள் பற்றி எனக்கு நிறைய விமர்சனங்களும், ஏமாற்றங்களும் இருக்கின்ற அதே வேளை அவரது நிறைய கட்டுரைகளில் அவருடன் முழுமையாக உடன்பட்டும் இருக்கின்றேன்.   பொதுவாக எந்த ஒரு எழுத்தாளர் - வாசகர் உறவிலும் இத்தகைய உடன்பாட்டுகளும், முரண்பாடுகளும் ஆன கலவை இருந்தே தீரும்.  ஆனால், ஞாநி குமுதத்தை விட்டு விலகுவதற்கு அவர் முன்வைத்த வாதங்கள் வீரியமானவை.  அதனை அவர் தனது தளத்திலே விரிவாகவே கூறியதுடன், குமுதத்திற்கு தான் எழுதிய கடிதத்தையும் பிரசுரித்து இருக்கிறார்.

ஆனால் இதன் அடுத்த கட்டமாக ஞாநியின் 'ஓ பக்கங்கள்' கல்கியில் வெளி வர இருக்கின்றது என்ற அறிவிப்பு வருகின்றது.  உண்மையில் இது எனக்கு முழுக்க முழுக்க ஏமாற்றமே.  தமிழகத்தில் பிரபலாமான வெகுஜன இதழ்களான குமுதம், விகடன் போன்ற குழுமங்கள் ஏதோ காரணங்களால் தற்போதைய ஆளும் கட்சியான திமுகவுடன் ஆதரவு/அனுசரனை நிலை எடுத்து அல்லது அப்படி எடுக்க வைக்கப்பட்டிருப்பதாலும், குங்குமம் ஏற்கனவே கருணாநிதி குடும்பத்தவருடையதாக இருப்பதாலும் ஞாநிக்கு இருக்கின்ற வழி கல்கி தான் என்ற வாதத்தை முன்வைக்கலாம்.  தவிர கல்கிக்கும் திமுகவுக்கும் எப்போதுமே இருந்துவரும் எதிர்ப்பு நிலையின் காரணமாக அவர் எந்தத் தடையும் இல்லாமல் திமுகவையும், கருணாநிதி குடும்பத்தையும் இன்னமும் விமர்சிக்கலாம்.  அதே நேரம் கல்கி மற்றும் ஞாநி உடன்படும் இந்திய தேசிய பெருமிதமும் இந்தக் கூட்டணியை இன்னும் சற்று உறுதியாக்கும்.  ஆனால் இந்த இணைப்பானது வாசகர்களுக்கு இன்னும் அதிக ஏமாற்றங்களையே தரப்போகின்றது என்று எதிர்வு கூறுகிறேன்.

இந்த இடைவெளியில் ஞாநி ஏதேனும் சிற்றிதழ்களில் இந்த ஓ பக்கங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.  குறைந்த பட்சம் வேறேதேனும் இணைய இதழ்களில் கூட இந்த ஓபக்கங்களைத் தொடர்ந்திருக்கலாம்.  ஞாநி கூட முன்னர் தீமதரிகிட என்கிற இதழைக் கொண்டு நடத்தியவர்தான்.  பலத்த பொருளாதார நெருக்கடிகளினாலேயே அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதென்று ஞாநியே எழுதி இருக்கையில், மீண்டும் அவர் இன்னொரு சிற்றிதழைக் கொண்டு நடத்தலாம் என்று சொல்வது கூட சற்று நெருடலாகவே உள்ளாது.  தமிழ் வாசிப்புச் சூழலில் "அணு அணுவாகத் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்தபின்னர்; சிற்றிதழ் வெளியிடுவது நல்ல வழிதான்" என்பதாகத்தான் இருக்கின்றது.  சிற்றிதழ் என்கிற வடிவத்தில் ஆரம்பித்த உயிர்மை, காலச்சுவடு போன்றன கூட காலப்போக்கில் தம்மை நிலை நிறுத்த தம் கறார்த் தன்மையை விட்டுக் கொடுத்து நடு நிலை இதழ்களாக மாறி நிலை பெற்றதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.  இது போன்ற சூழ் நிலையில், தேர்வுகள் மட்டுப் படுத்தப்படே இருக்கின்றபோது ஒரு எழுத்தாளன் தொடர்ந்து  தன் அரசியல் சரியாக இயங்குவது என்பது அதிகம் சிரமமானதாகவே இருக்கின்றது.



2


ஆனால் ஞாநியின் குமுதத்தை விட்டு விலகலையும், அதன் தொடர்ச்சியான கல்கியில் எழுதுவதான அறிவித்தலகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆளும் திமுக அரசின் ஊடகத்துறை மீத அடாவடித்தனம் மற்றும் அத்து மீறல் பற்றி நாங்கள் நிச்சயம் ஆராயவேண்டியுள்ளது.  இந்தியாவின் சுதந்திர காலம் தொட்டு தமிழகத்தை ஆண்ட திமுக தவிர்ந்த பிற கட்சிகளான காங்கிரஸ், மற்றும் அதிமுக செய்யாத ஒன்றை திமுக செய்யவில்லை என்று திமுக ஆதரவாளர்கள் வாதிடலாம்.  ஆனால் ஒரு தவறை இன்னொரு தவறால் ஒரு போதும் நியாயப்படுத்திவிட முடியாது.  அதிமுகவை விட திமுக பரவாயில்லை என்பதாலேயே திமுகவை ஆதரிக்கின்றோம் / ஏற்றுக்கொள்ளுகின்றோம் என்பதே பல்ரைன் நிலைப்பாடாக இருந்துவருகின்றது; நான் கூட அப்படியே எண்ணி இருந்திருக்கின்றேன்.  ஆனால் இதை எழுதும்போது தாமரை ஒரு முறை ஜெயலலிதாவை தமிழகத்தின் அமாவாசை என்றும் கருணாநிதியை அமாவாசைக்கு அடுத்த நாள் என்றும் குறிப்பிட்டதுதான் ஞாபகம் வருகின்றது.

2010 ஆகஸ்ட் 11 கீற்றில் இராசகம்பீரத்தான் மால்கம் X என்பவர் ஊடகங்களின் ஆளுமையில் இனிவரும் நூற்றாண்டுகள் என்ற கட்டுரையில் 20ம் நூற்றாண்டிலே எவர் உலக ஊடகங்களை தனக்குக் கடுப்படுத்திக் கொள்ளுகிறாரோ அவருக்கு உலகம் சொந்தமாகிவிடும் என்று முன்னை நாள் மலேஷியப் பிரதமர் மகாதீர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டி இருக்கின்றார்.  மேற்குறித்த கட்டுரையில் யூதர்கள் எப்படி ஊடகத்துறையில் தம் செல்வாக்கினை உறுதிப்படுத்தியதன் மூலம் உலக ஒழுக்கினைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தார்கள் என்று சொகிறார் ஆசிரியர்.  ஆனால் ஊடகத்துறையின் எல்லா சாத்தியங்களையும் 50களில் இருந்தே பயன்படுத்தத் தொடங்கி படிப் படியாக ஆட்சியைப் பிடித்தவர்கள் திமுகவினர்.  அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, சம்பத், எம்ஜிஆர், கண்ணதாசன் என்று திமுக தலைவர்கள் தத்தம் ஆளுமைக்குட்பட்ட எல்லா ஊடகங்களையும் தம் கட்சிக் கொள்கையைப் பரப்பவும், கட்சிப் பிரசாரம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.  திமுகவின் தாய்க் கட்சியான திராவிடர் கழகக் கொள்கைகள் கூட எம். ஆர். ராதா, கலைவாணர் போன்றவர்களால் வேகமாகப் பரப்பப்பட அவர்களின் ஊடகச் செல்வாக்கே முக்கிய காரணியாக இருந்தது.  இன்று வரை தேர்தல் காலங்களில் திராவிடக் கட்சிகளும் அவற்றின் வழி வந்த கட்சிகளும் தமக்காக பிரசாரம் செய்ய நடிகர்களையும், திரை உலகினரையும் தேடிப் படை எடுப்பது கூட, அவர்களின் பிரபல்யத்தையும், ஊடகங்களில் அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கையும் தேர்தல் வாக்குகளாக உருமாற்றிக் கொள்ளவே.  இதற்கு கருணாநிதியும் எந்த விதத்திலும் விலக்கானவர் அல்ல.  இப்போது ஞாநி மீதும், சவுக்கு வலைப்பக்கம் மீதும் கருணாநிதியின் அரசாங்கம் தன் அடக்குமுறையைப் பிரயோகித்து அவர்கள் வாயை மூட முயல்வது ஒரு ஆட்சி மாற்றத்தில் ஊடகங்கள் எத்தனை தூரம் செல்வாக்கு செலுத்தக் கூடியன என்பதை கருணாநிதி அறிந்திருப்பதையும்  அத்துடன் தன் ஆட்சியை தக்க வைக்க முடியாமல் போய்விடுமோ என்று பதற்றமடைந்திருப்பதையும் தான் காட்டுகின்றது.