Sunday, August 9, 2009

ஈழப் போராட்டம் பற்றிய சில கட்டுரைகளும், சென்ற வாரக் குறிப்புகளும்


பெரும்பாலும் வாரம் ஒன்றில் ஏழு நாட்களும் வேலை என்பதாகவே திணிக்கப்பட்ட வாழ்வில் எப்போதாவது கிடைக்கின்ற ஓய்வு நாட்களும் சலிப்புடனேயே கடந்து செல்லுகின்றன. கொடுக்கப்பட்ட குறுகிய சில மணித்தியால ஓய்வுகளையே கொண்டாடிப் பழகிய மனதிற்கு அரிதாகவே கிடைக்கின்ற முழு ஓய்வு நாட்களை கொண்டாட தெரியவில்லையோ தெரியாது. சுதந்திரம் கிடைக்காதவர்களை விட கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாதவர்களே அதிகம் என்று ஏனோ தோன்றுகின்றது. சில நாட்களாகவே மையம் கொண்டிருக்கும் வெறுமை வலைப்பதிவில் கூட கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு அனுசரிக்கவில்லை. ஏமாற்றாங்களும், வெறுமைகளூமே வாழ்வின் நிரந்தரமோ என்ற எண்ணம் ஏனோ அடிக்கடி தலை தூக்கிவிடுகின்றது.

அதிகம் நேசிக்கப்பட்டவர்களுடன் கடந்த வார இறுதியில் ஒழுங்கு செய்யபட்ட BBQ Party கூட உறவுகளைக் கேள்விக்குள்ளாக்குவதோடு கசப்பானதாக முடிவுற்றது. எல்லாவிதத்திலும் கொண்டாடப்பட்ட நண்பன் தானே முடிவெடுத்த ஒரு கணத்தில், 12 ஆண்டுகளாக நான் பழகிய முறைமை பற்றி கேள்விக்குள்ளாக்கி என்மீது குற்றம் சாற்றப்பட்ட கணத்தில் எமக்கான நட்பினையே தூக்கில் போட்டுவிட்டதாய் உணர்ந்தேன். அதே தினம், அவனே கதைத்த விடயங்களை திடீரென்று அப்படி கதைப்பது பிழை என்று முடிவெடுத்த ஒரு கணத்தில் என்மீது குற்றம் சாற்றப்பட்ட போது ஏமாற்றம் தரும் இயலாமையை மறுபடி ஒரு முறை உணர்ந்து கொண்டேன். காதலையும், நட்பையும் கொண்டாடியவனுக்கு அவை விட்டுச் செல்பவை தீர்க்கவே முடியாத வலிகளே என்றூ தோன்றுகின்றது.



2



எதிலேயும் மனதை ஒட்டவைக்க முடியாமல் அலைக்கழித்த கடந்த சில தினங்களில் எனக்கு எப்பொதும் ஆதரவாய் இருந்தவை புத்தகங்கள் மட்டுமேதான். என் தனிமையைக் கொல்ல நான் எடுக்கும் புத்தக வாள்கள் ஒரு போது என்னைக் கைவிட்டதில்லை. சென்ற வாரம்தான் ஜே. பி. சாணக்யா வின் கனவுப் புத்தகம் என்ற சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்திருந்தேன். அவரது பல கதைகளை தனித் தனியாக வாசித்து இருந்தாலும் ஒரு புத்தகமாக வாசிப்பது இதுவே முதல் முறை. தலித் மக்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் உறவு முறைச்சிக்கல்கள் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட கதைகள் அவருடையவை. உயிர்மை இதழ் ஆரம்பித்த காலங்களில் அதில் வெளியான அமராவதியின் பூனை என்ற கதை இந்தத் தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளது. பத்துக் கதைகள் அடங்கிய இந்தத் தொகுதியில் எனக்கு அதிகம் பிடித்த சிறு கதை “ஆண்களின் படித்துறை “ தான். கோடை வெயில் என்கிற கதை ஒரு கதையாக பிடித்திருந்தபோதும், யோசித்துப் பார்க்கையில் தன் கணவனின் வேலைக்காக தான் அண்ணா என்று அழைத்த உறவு முறைக்காரனுடனேயே வசந்தா உடலுறவு கொள்ளுகின்றாள் என்று வ்ரும் முடிவு தரும் தாக்கம், புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையை நினைவூட்டுகின்றது. (இந்த முடிவை முன்வைத்து வியாகூல சங்கீதம் என்ற கட்டுரையில் சாரு நிவேதிதா புதுமைப்பித்தனை காய்ச்சி எடுத்திருப்பார்) இந்தக் கதைக்கு முடிவாக புரட்சிகரமாக கதையை முடித்து வைக்கிறேன் என்று வேறு விதமாக எழுதியிருந்தால் அங்கே ஒரு நாடகத் தன்மை வந்திருக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், மனதளவில் இந்தக் கதையின் முடிவு அமைதியின்மையை ஏற்படுத்தியது உண்மை. சமீபகாலமாக அவர் பெரிதாக எழுதுவதில்லை என்று அறிந்தேன். சில வேளை அவர் ஈடுபட்டிருக்கும் உதவி இயக்குனர் பணிகள் காரணமாக அவரது எழுத்துப் பணி தடைப்பட்டிருக்கலாம். அதைக் கடந்து அவர் எழுதும்போது இது போன்ற நல்ல கதா அனுபவங்களையும், சமுக அமைப்பு பற்றிய அடிப்படையான சில கேள்விகளையும் நாம் அடையப்பெறலாம் என்றெண்ணுகின்றேன். (அவரின் என் வீட்டின் வரைபடம் புத்தகத்தை நண்பர் ஒருவரிடம் வாசிக்கக் கேட்டுள்ளேன். அதை வாசித்து விட்டு அது பற்றிப் பகிர்ந்து கொள்ளுகின்றேன்)


3


சில மாத இடைவெளியின் பின்னர் காலச்சுவடு ஆகஸ்ட் இதழைப் இந்த முறை வாங்கிப் பார்த்தேன். தமிழின் மிக மோசமான வணிக சூழ்நிலைகளூடாக தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு என்கிற இரண்டு இலக்கிய இதழ்கள் தொடர்ந்து ஆறு ஆண்டுகாளாக வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதே (உயிர்மையின் ஆகஸ்ட் இதழுடன் சரியாக 6 ஆண்ஃபுகள் நிறைவுறுகின்றது.) இடைப்பட்ட காலங்களில் காலச்சுவடு அவ்வப்போது செய்யும் சில “அரசியல்” வேலைகளால் மனம் வெறுத்து காலச்சுவடு படிப்பதை நிறுத்தினாலும், பின்னர் மீண்டும் படிக்கத் தொடங்கிவிடுவதற்கு காலச்சுவடில் வெளியாகும் நல்ல ஆக்கங்களும் காரணமாக இருக்கவேண்டும். அநாமதேயன் குறிப்புகள் என்ற பெயரில் கடந்த சில இதழ்களில் யாழ்ப்பாணத்து நிலவரம் பற்றி கட்டுரைகளைத் தொடர்ந்து இந்த மாதக் காலச்சுவடு இதழில் ஈழப் பிரச்சினை பற்றிய கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன. கிட்டத் தட்ட இதழின் 75% ஆன பக்கங்களை இந்தக் கட்டுரைகளே எடுத்துவிடுகின்றன. இதில் ஈழப் போரின் இறுதி நாட்கள் – களத்தில் இருந்து ஒரு அனுபவப் பகிர்வு என்ற கட்டுரையில் நிறைய விடயங்கள் பகிரப்படுகின்றன. ஏற்கனவே தெரிந்தவர்கள் ஊடாக இது போன்ற நிறைய சம்பவங்களைக் கேட்டிருந்தாலும், ஒரு முக்கிய இதழில் வருவது இதுவே முதன் முறை என்று நினைக்கின்றேன். ஈழப் போராட்டம் பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடும் போது “ஒரு ஆதிக்க சக்திக்கு எதிராக போராட தொடங்கியவர்கள் தம்மை இன்னுமொரு ஆதிக்க சக்தியாக நிறுவியபோது முன்னிருந்தவர்களைப் போல / அதைவிட மோசமாக நடந்து கொண்டார்கள் என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். இதை தயவு செய்து புலி எதிர்ப்பு - தியாகம், துரோகம் என்கிற கண்ணோட்டங்களூடாக பார்க்கவேண்டாம். இப்படியான கறுப்பு வெள்ளைப் பார்வைகள் கூட இந்தப் போராட்டத்தின் பின்னடைவிற்கு ஒரு முக்கிய காரணமாகும். களத்தில் இருந்து பாதிக்கப் பட்ட மக்கள் சொல்பவற்றை, அவர்கள் புலிகள் தோற்றுப் போனதால் அப்படிச் சொல்லுகின்றார்கள் என்றோ, ராணுவத்துக்குப் பயந்து அப்படி சொல்லுகின்றார்கள் என்றோ, அவர்கள் எல்லாரும் புலிகளுக்கு ஆதரவளித்திருந்தால் வென்றிருப்பார்கள் என்றோ கூறி நிராகரிப்பது மிகுந்த வக்கிரம் உடையது. அங்கு இருந்த மக்கள் இரண்டு ராணுவத்தாலும் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்ற உண்மையை திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதை விடுத்து இப்படி எழுதும்போது காசு வாங்கி எழுதுகிறார் என்று குற்றஞ்சாட்டுவது முழுக்க முழுக்க தவறான மனப்பான்மையே. இப்படிக் காசு வாங்கி எழுதுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் எத்தனை பொருளாதார நெருக்கடிகளூடாக வாழ்கிறார் என்று நேரில் சென்று பார்த்து வந்த ஒருவர் அண்மையில் கூறிய போது எம்மவர்களை நினைத்து சீ என்று போய்விட்டது. அதுபோல சங்கரன் சித்தாந்தன் என்பவர் எழுதிய இலங்கை ஊடகங்கள் : ஓயாத போர் என்ற தலைப்பில் இலங்கை அரசால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் பற்றியும் இலங்கை அரசின் அச்சுறுத்தல்களால் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. இதே நேரத்தில் உயிர்மையில் தீபச்செல்வன் எழுதிய “ஈழம் இன்று” என்ற கட்டுரை யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் பற்றிப் விரிவாக சொல்லுகின்றது. யுத்தம் அகோரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் ஆளாளுக்கு புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்கிற நிலைகளை எடுத்து அரசியல் கட்டுரைகாள் என்ற பெயரில் ஏதேதோ எழுதித் தள்ளி ஓய்ந்து போயிருக்கும் காலங்களில் யமுனா ராஜேந்திரன் (உயிர்மை, உன்னதம், இனியொரு போன்றவற்றில்) வளர்மதி (கீற்று) போன்றவற்றில் எழுதும் கட்டுரைகள் ஓரளவு நேர்மையுடன் பிரச்ச்னைகளை அணுகுகின்றன. வேறுபட்ட தளங்களிலும், நோக்குகளிலும், பார்வை கொண்டவர்களாலும் எழுதப்படும் இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும்போதுதான் ஓரளவு தெளிவைப் பெறமுடியும் என்று நினைக்கின்றேன். எதிர் எதிர் பார்வை கொண்டவர்கள் இடையே ஒரு பொருள் குறித்த் உரையாடல்கள் நடக்கும் போது அவற்றிற்கு இடையே இருக்கின்ற புள்ளியிலேயே பெரும்பாலும் உண்மை இருக்கின்றது என்பது எனது அனுபவம்.



4



எப்போதும் நட்பு, காதல் என்ற உறவுகளை புனிதப்படுத்தி அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே திரைப்படங்களைப் பார்க்கும் தமிழ் திரைப்பட சூழலில் குறுகிய கால இடைவெளியில் சுப்ரமணியபுரம், நாடோடிகள் என்ற இரண்டு திரைப்படங்கள் இந்த இரண்டு உறவுகள் பற்றியும் இன்னுமொரு கோணத்தைக் காட்டி, அதே நேரத்தில் ஜெயித்தும் காட்டியிருக்கின்றன. அதிலும் இத்திரைப்படங்களில் கதை நாயகர்களாக காட்டப்படும் நால்வரும் தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கென எதிர்பார்க்கும் எந்த கல்யாண குணங்களும் இல்லாமல், ரத்தமும் சதையுமாக எம்முடன் வாழும் சக மனிதர்களை நினைவுறுத்துகிறார்கள். இது போன்ற இயல்பான திரைப்படங்கள் 70களின் பிற்பகுதிக்குப் பின்னர் மீண்டும் அதிகம் வெளியாகத் தொடங்கியிருப்பது நிச்சயம் வரவேற்கவேண்டியது. அதே நேரம் சரணின் “மோதி விளையாடு” திரைப்படம் அவ்ருடைய முன்னைய திரைப்படங்களில் இருக்கும், வேகத்திற்கும், சீரான திரைக்கதைக்கும் ரசிகனான எனக்கு பெரும் வெறுப்பையே தந்தது. ஹரிஹரன் – லென்ஸியின் இனிமையான, வித்தியாசமான இசையும், ஹரிஹரன், லென்ஸியுடன் தேவா இணைந்து நடிக்கும் மோதி விளையாடு என்ற பாடலின் படமாக்கலும் மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்தன. சரணின் திரைப்படங்களில் இருக்கும் இயல்பான நகைச்சுவை கூட தொலைந்து சந்தானம் “அறுத்தெடுத்ததை” சகிக்க வேண்டி வந்தது. மற்றொரு புறம் வைகை என்கிற படம் பற்றி அதிகம் சாதகமான விமர்சனங்கள் வெளிவந்திருந்தன; ஆனால் படத்தில் தற்கொலை செய்துகொண்ட காதலனின் நினைவாக காலம் எல்லாம் காத்திருக்கும் முடிவெடுத்த கதாநாயகி என்பதைத் தவிர பெரிதாக எதுவும் புதிதாக சொல்ல முடியவில்லை திரைக்கதையின் வேகமும் மிக மந்தமாகவே உள்ளது. கதாநாயகனின் குடும்பம் பற்றிய பயம் காரணமாக தற்கொலை செய்ய முயன்று, கடைசியில் ஊரைவிட்டு வெளியேறி ஒளித்து வாழும் நாயகி கடைசியில் நாயகி ஊர் திரும்பும் போது, நாயகி இறந்துவிட்டாள் என்றூ நம்பிய நாயகன் தற்கொலை செய்து இறந்து விட, அவனின் நினைவாக நாயகி கடைசிவரை இருக்கின்றாள் என்றூ திரைப்படம் முடிகின்றது. இதுவரை காலமும் திரைப்படங்களில் நாயகி செய்ததை இதில் நாயகன் செய்வதாகவும், நாயகன் செய்ததை நாயகி செய்வதாகவும் காட்டியதைத் தவிர இத்திரைப்படத்தில் பெரிதாக எதையும் ரசிக்க முடியவில்லை அதே நேரம், இப்படிக் காட்டியது கூட மிகப் பெரிய மாற்றம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

11 comments:

lavanyan said...

//ஒரு ஆதிக்க சக்திக்கு எதிராக போராட தொடங்கியவர்கள் தம்மை இன்னுமொரு ஆதிக்க சக்தியாக நிறுவியபோது முன்னிருந்தவர்களைப் போல / அதைவிட மோசமாக நடந்து கொண்டார்கள் என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம்.// உங்களின் இந்தக் கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். மக்கள் இரண்டு இராணுவத்தாலும் கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தொடர்ந்து எழுதுங்கள் இப்படியாகிலும் உண்மைகள் எல்லோருக்கும் சேரட்டும்

தமிழ் விரும்பி said...

மனதை பிழிந்த நினைவுக்காலங்கள் அவை. சரி பிழைகளை மட்டுமே நாம் இன்னமும் கதைத்து கொண்டு இருக்கிறோம். இப்பொழுதும் கதைக்காமல் விட்டு அல்லது இப்பொழுதும் திருந்தாமல் விட்டால் எப்பொழுதும் முடியாது என்பதையெல்லாம் விடுத்து, தமிழர்களுக்கு என்றொரு உரிமைப் பிரச்சினை இருக்கிறது.அதை முதலில் ஏற்றுக் கொண்டு, அது இப்பொழுது சர்வதேச மயப்படுத்தப்பட்டு ஓரளவு இலகுவாக்கப் பட்டு விட்டது. எனவே அதனை வென்றெடுக்க அனைவரும் ஒன்றினைவோம். உரிமையை வெல்வோம். களத்தில் மக்கள் களைப்படைந்து விட்டனர். புலத்தில் தான் இனி போராட்டம். பொறுப்புடன் சிந்தித்து செயற்படுவோம். தாயகம் மீட்போம்.

துர்க்கா-தீபன் said...

உங்களுக்குடைய மனநிலைக்கு சமாந்தரமாக இருப்பதும் சூழ்நிலை பொதுவாக இருப்பதுவும் பல கருத்துக்களுடன் ஒத்துப் போக வைக்கிறது. மிகத் தரமாக இருக்கிறது பதிவு. வாசிப்புக்கான மனநிலை கடந்த சில ஆண்டுகளில் இப்போது மிகவும் விரிந்திருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது.தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு என்று பத்தி எழுத்தில் ஒரு நடை உருவாகிக்கொண்டு இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி keep it up.

துர்க்கா-தீபன் said...

//.....இப்படிக் காசு வாங்கி எழுதுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் எத்தனை பொருளாதார நெருக்கடிகளூடாக வாழ்கிறார்...//

உண்மை அவர்கள் மிகவும் சிரமத்துடனே தான் சீவியப்பட்டு தமது எழுத்தை தொடர்கிறார்கள் ஆனால் ஒருசிலர் மிக எளிதாக சேறு பூசிவிட்டு போகிறார்கள். ஒரு தடவை மல்லிகையின் அடுத்த ஆசிரியராக வவுனியா திலீபனை அறிவித்தமை தொடர்பில் வாரிசு அரசியல் என்று கேலிபேசி மல்லிகை பந்தலில் வெளியான கேள்விக்கு சிற்றிலக்கிய ஏடு நடத்தி பயன்பெறுவதை விட வெற்றிலைக்கடை வைக்கலாம் என்று கூறியிருந்தார் ஜீவா.

அது போலத்தான் இதுவும் :(

நீங்கள் யார் குறித்து எழுதியிருக்கிறீர்கள் என்பது உகிக்ககூடியதே, ஆனால் அவரும் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையா இல்லையா என்பது குறித்து மயிர்பிளக்கும் விவாதம் நிகழ்வதாக எழுதியிருந்தார். உண்மையில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை இல்லை(அந்த நேரம்) என்றும் இனப் படுகொலை என்றால் அது வன்னியில் மட்டுமன்றி எல்லா இடங்களிலும் நிகழ வேண்டும் என்றும் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும் நேர்காணல் ஒன்றில் பொதுத்தளத்தில் கூறியிருந்தார். அதையே அவர் மயிர் பிளக்கும் விவாதம் என்று கூறினார். (இதுபோலவே இந்தியா குறித்தும்....). வன்னியில் நிகழ்ந்தது என்ன என்பதை யாரும் யாருக்கும் புரிய வைக்க தேவை இல்லைதானே.இவைகளே புதிய எஜமானர்களுக்கு எதிரான நடுநிலமையாளர்களின் நேர்மை குறித்து சிந்திக்க வைப்பவை. ..

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் லாவன்யன்

//தொடர்ந்து எழுதுங்கள் இப்படியாகிலும் உண்மைகள் எல்லோருக்கும் சேரட்டும்//

நிறைய உண்மைகளை மறைத்து அல்லது மறந்து தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு தரப்பு நியாயங்களை மட்டுமே தொடர்ந்த் பேசிக்கொண்டிருப்பதால் ஒரு வித தீர்வும் கிடைக்கப் போவதில்லை

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் தமிழ் விரும்பி

//சரி பிழைகளை மட்டுமே நாம் இன்னமும் கதைத்து கொண்டு இருக்கிறோம். இப்பொழுதும் கதைக்காமல் விட்டு அல்லது இப்பொழுதும் திருந்தாமல் விட்டால் எப்பொழுதும் முடியாது என்பதையெல்லாம் விடுத்து, தமிழர்களுக்கு என்றொரு உரிமைப் பிரச்சினை இருக்கிறது.அதை முதலில் ஏற்றுக் கொண்டு, அது இப்பொழுது சர்வதேச மயப்படுத்தப்பட்டு ஓரளவு இலகுவாக்கப் பட்டு விட்டது//

தமிழ் விரும்பி. பிழை கூறுவதில் எந்த விருப்பத்துடனும் இந்தப்ப் பிழைகள் கூறப்படவில்லை. அப்படிக் கூறுவதால் எதுவிதமான லாபமும் கிடைக்கப் போவதும் இல்லை. ஆனால், அந்தப் பிழைகள் தான் இத்தனைப் பெரும் வீழ்ச்சியை வரப் பண்ணியவை என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். விடுதலைப் புலிகளுக்கும், அவர்கள் ஆதரவாளார்களுக்கும் இருந்த பொதுவான ஒரு பிரச்சனை மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களாஇ பரிசீலனை செய்யாமையாகும். மேலும், பிழைகள் பற்றி சொல்லும் போது தொடக்கத்தில், அப்படி செய்வதால் தான் அவர்கள் வெலூகிறார்கள் அதனால் கேள்வி கேளாஅதே என்பதும், பின்னர் போர் நடந்து கொண்டுள்ளது அதனால் கேள்வி கேளாதே என்பதும், தோத்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் கேள்வி கேளாதே என்பதும், இப்போ, எல்லாம் முடிந்து விட்டது அதனால் கேள்வி கேளாதே என்பதும் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியன அல்ல.

பழைய பிழைகளை மேலும் விமர்சிப்பதன் மூலமே, அது போன்ற பிழைகள் இனியும் வராமல் உறுதிப் படுத்தலாம்.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் துர்க்கா தீபன்

//வாசிப்புக்கான மனநிலை கடந்த சில ஆண்டுகளில் இப்போது மிகவும் விரிந்திருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது.தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு என்று பத்தி எழுத்தில் ஒரு நடை உருவாகிக்கொண்டு இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி keep it up.//

நன்றிகள்

அதே தான் நானும் உணருகின்றேன். மேலும் தொடர்ந்து எழுத உங்களைப் போன்ற சிலரின் தொடர்ச்சியான ஆதரவும் காரணம். நன்றிகள்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் துர்க்கா-தீபன்

//..). வன்னியில் நிகழ்ந்தது என்ன என்பதை யாரும் யாருக்கும் புரிய வைக்க தேவை இல்லைதானே.இவைகளே புதிய எஜமானர்களுக்கு எதிரான நடுநிலமையாளர்களின் நேர்மை குறித்து சிந்திக்க வைப்பவை. ..//

மேற் சொன்னவர்களின் அரசியல்கள் பற்றி விமர்சனங்கள் நிச்சயமாக இருக்கின்றன ஆனால் அந்த நிலைப் பாடை அவர்கள் காசு வாங்கித் தான் செய்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது.

சிலர் புலிகளின் ஆதரவாளார்கள் என்ற நிலைப்பாட்டல், சில எழுத்தாளார்களின் புத்தகங்களைப் படிப்பதே இல்லை. கேட்டபோது அவர்கள் துரோகிகள் என்பதை ஒத்த ஒரு காரணம் சொல்லப்படும். இது போன்ற முன் கூட்டியே செய்யப் படும் தீர்மாணங்கள்தான் ஆபத்தானவை.

சிவா, கனடா said...

அனுபவம், அரசியல், சினிமா என்று மூன்றையும் சேர்ந்து மிக்சர் ஆக்காமல் தனித் தனிப் பதிவாய் போட்டிருக்கலாம். எல்லாத்தையும் கலந்து விட்டதில் செறிவு காணாமல் போய்விட்டது

பாரதி.சு said...

வணக்கம்!! சுதன் அண்ணா,
காலச்சுவடில் வந்த கட்டுரை தொடர்பான உங்கள் பதிவை நான் ஆமோதிக்கிறேன்.
"இறுதி நாட்களை ஒட்டிய" அநுபவப்பகிர்வுக் கதைகள் என்னையும் இப்போது வந்தடைகிறன.
அவை எல்லாம் "அவர்களின் விமர்சனபூர்வ ஆதரவாளனான என்னை நோக்கி "ஏன் அவர்கள் இப்படிச் செய்தார்கள்??" என்ற பதில் தெரியாக் கேள்வியை வீசி என்னைச் சங்கடப்படுத்துகிறன.
உண்மைகள் சுடுகின்றன என்பதற்காக அவற்றைப் புறந்தள்ளவா முடியும்??
இது பற்றி நண்பரொருவரிடம் கதைத்தபோது...அவர் "முந்திய சொன்னான்...உவங்கள் அரசியல் தெரியாதவங்கள்...நீ கேட்டியா??" என பொரிந்து தள்ளினார்.
கறுப்பு - வெள்ளை, சாம்பல் எல்லாமே "மனித உரிமைகள்" விடயத்தில் கண்களைக் கட்டி இருந்துவிட்டன.
பரவாயில்லை....பீனிக்ஸ் கூட "சாம்பலில்" இருந்துதான் உயிர்பெறுமாமே??? பொறுத்திருந்து பாப்பம்.

"நம்ப.. நட. நம்பி நடவாதே." என்று கூட சொன்னார்..நாங்க தான் சரியாய் புரிஞ்சு கொள்ளேல்லையோ??

தமிழ்நதி said...

உங்கள் பல கருத்துக்களோடு என்னால் இப்போது உடன்பட முடிகிறது. எல்லாவற்றையும் ஒற்றைப்பார்வை பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது. நான் கனடாவுக்கு வந்துவிட்டேன். ‘புது விளக்குமாறு’நன்றாகக் கூட்டுகிறது. இன்னமும் வாரவிடுமுறைச் சலிப்புகளுக்கு ஆளாகவில்லை.

Post a Comment