Monday, August 24, 2009

வடலி வெளியீடுகள் மற்றும் எழுத்தாளனும் பதிப்பகங்களும்

1


என் முன்னைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போலவே வாசிப்பதற்கு உரிய மன நிலை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது போலவே தோன்றுகின்றது. அதிகம் வாசித்தேன் என்பதைவிட பரந்து பட்ட அளவில் வாசித்தேன் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கின்றது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாக குடிக் கலாச்சாரம், மாற்றுப் பாலினர் தொடர்பான பதிவுகள் முன்வைக்கப்படுகின்றன. காலச்சுவடில் சுகிர்தராணி கவிஞர்கள் சந்திப்பை முன்வைத்து குடிக் கலாச்சாரம் பற்றிய ஒரு கட்டுரையை எழுத அதில் இருக்கும் உள்குத்து, வெளிக்குத்து போன்ற விடயங்கள் பலராலும் ஆராயப்பட்டு, லீனாமணிமேகலை X சுகிர்தராணி என்கிற தனிநபர் பிரச்சனைகள் எல்லாம் (அப்படித்தான் ஆராயப்பட்டடது) கூறப்பட்டு இப்போது லீனா மணிமேகலை இதுபற்றிய தனது கட்டுரை விரைவில் வெளியாக உள்ளதாக உறுதியளித்துள்ளார். இது பற்றி பேசும்போது உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்கள் புலம் பெயர் எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு புத்தகம் வெளியிடுவதாகவும் லீனா குற்றஞ்சாட்டியுள்ளார். (இது போன்ற ஒரு கருத்தை தமிநதியும் கூறியதாக முன்பொருமுறை விகடனில் வெளியான அவரது பேட்டியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தனது பேட்டி திரிக்கப்பட்டிருந்ததாக தமிழ்நதி வெளியிட்ட மறுப்பும் அடுத்த விகடனில் வெளியானது. இது பற்றி முழுமையாக நினைவிருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளவும்). உண்மையில் இது பற்றிய முறைப்பாடுகளை நானும் பல இடத்தில் கேட்டுள்ளேன். எழுத்தாளர்கள் மரியாதையுடன் நடத்தபடவேண்டும் என்கிற சில அடைப்படையான விவாதங்களுடன் பார்க்கும்போது இது நியாயமாக தெரிந்தாலும் இது பற்றிய ஒரு வேறுபட்ட பார்வையும் எனக்குள்ளது.

காலச்சுவடு, உயிர்மை போன்ற நிறுவனங்கள் தற்போது தமது பெயரை ஓரளவு திடப்படுத்தி, தமக்கென ஒரு சந்தையை உருவாக்கி உள்ளன. அது தவிர தீவிரமாக சந்தைப்படுத்தவும் செய்கிறார்கள். இப்படியான நிறுவனங்கள் ஊடாக புத்தகங்கள் வெளிவரும்போது அது நிச்சயம் புதுமுக எழுத்தாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவே அமையும். தவிர ஒரு எழுத்தாளன், அறியப்படாத வரை அவனுடைய படைப்பினை வெளியிடுவதில் செய்யப்படுகின்ற சூதாட்டம் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியது. இது போன்ற புறக்காரணிகளும் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியன. முன்பு ஜெயந்தன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதியபோது அது பற்றிய பலத்த விமர்சனங்கள் எழுந்தபோது வெகுஜனப் பத்திரிகை என்ற குதிரையில் ஏறிப் பயணிக்கும்போது நான் செல்கின்ற வீச்சம் அதிகமாகின்றது என்று ஜெயந்தன் கூறியதாக எங்கோ வாசித்திருக்கின்றேன். அதே கருத்துடனேயே மேற்சொன்ன குற்றச்சாற்றையும் அணுகவேண்டும். தமிழர்கள் உலகெல்லாம் பரவிக் கிடந்தும் வாசிப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்ற ஒரு சூழலில், பெரு நிறுவனங்களூடாக சந்தைப்படுத்தப்படும், முன்னெடுக்கப்படும் படைப்புகளும் படைப்பாளிகளுமே அதிக வீச்சில் அறியப்படுகின்ற ஒரு நிலை இருப்பது கசப்பான உண்மையே.2ஒரு உதாரணத்துக்கு நம் காலத்து ஈழத்துப் படைப்பாளிகள் இருவரை எடுத்துக் கொள்வோம். ஈழத்துப் படைப்பாளிகளுல் இன்று அதிகம் அறியப்பட்டவர் அ.முத்துலிங்கம். இந்தியாவில் அவருக்கு இருக்கும் வாசக வட்டம் பெரியது. அதற்கு காரணமாக அவர் ஈழத்து எழுத்தாளர் என்று பல ஈழத்தவர்கள் கொண்டாடும்போதும், ஈழத்தில் பிறந்தது தவிர அவரது எழுத்துகளில் ஈழத்து எழுத்துகளுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதே நேரம் அவரது எழுத்துக்களும் காலச்சுவடு, உயிர்மை, காலம், திண்ணை, தாய்வீடு, பதிவுகள் உட்பட்ட நிறைய இதழ்களில் தொடர்ச்சியாக வெளியாகின்றன. அவ்வப்போது ஆனந்த விகடனிலும், தீராநதியிலும் கூட வருவதுண்டு. இதுதவிர அவ்வப்போது இவர் பற்றி நாளொன்றுக்கு 2000 சொற்கள் எழுதும் இவரது நண்பர் ஒருவரும் ஏதாவது எழுதிவைப்பார். சென்ற புத்தக சந்தையில் கூட இவரது “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” வெளியான போது அவரும் எழுதிவைக்க சாருவும் கூட எழுதிவைத்து, தனக்கு மட்டுமல்லாமல் ஜெயமோகனுக்கும் பிடிக்கக் கூடிய வகையில் இவரது எழுத்துக்கள் இருப்பதாக சொல்லிவைத்தார். அ.மு. வைப் பொறுத்தவரை அவர் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதையும் கருப்பொருளாக எடுப்பதில்லை. எதையும் அழகியலாக பார்க்கின்ற மகிழ்வூட்டும் பிரதிகள் அவர் எழுத்துக்கள். அதாவது முன்பொருமுறை உயிர்மையில் குடும்பங்களில் நிகழும் பாலியல் துஷ்பிரயோயங்களைப் பற்றி “அகில் ஷர்மா” என்பவர் எழுதிய An Obedient Father” என்ற புத்தகம் பற்றி எழுதும்போது, இவ்வளவு காலம் எடுத்து, உழைத்து எழுத்திய நாவலில் இப்படியான ஒரு விடயத்தைக் கருப்பொருளாக எடுத்துவிட்டாரே என்று கவலைப்பட்டு எழுதும் அளவுக்கு ஒரு gentleman writer இவர்.

இதே நேரம் கிட்டத்தட்ட இவருக்கு சமவயதினரான தேவகாந்தன் கவனிக்கத்தக்க அளவு நல்ல படைப்புகளைக் கொடுத்த போதும் கவனிக்கப்பட்டது மிகக் குறைவு. அவர் எழுதி, தேர்ந்த பல வாசகர்களால் சிலாகிக்கப்பட்ட “விதி”யும் சரி, தமிழின் மிக முக்கியமாக மறுவாசிப்புகளுள் ஒன்றான கதாகாலமும் சரி, இலங்கை பிரச்சனையை ஐந்து பாகங்களாக நாவல் வடிவில் தந்த கனவுச் சிறையும் சரி பெறவேண்டிய கவனிப்பில் சிறுபங்கைத்தன்னும் பெறவில்லை. இதற்கு இவரது நாவல்களைத் தாங்கிவந்த பதிப்பகங்களின் பிரபலமின்மையோ அல்லது மோசமான சந்தைப்படுத்தல்களோ கூட காரணமாக இருக்கலாம்.

அது மட்டுமல்லாமல் அ.முத்துலிங்கம், மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் தமது முதலாவது புத்தகத்தை அறிமுக எழுத்தாளர் புத்தகவெளியீட்டுத் திட்டத்தை பின்பற்றிய மணிமேகலைப் பிரசுரம் மூலமாகத்தான் வெளிக்கொணர்ந்தார்கள். புத்தகத்தின் தரம் பற்றிய எதுவித மரியாதையும் மணிமேகலைப்பிரசுரத்துக்கு இல்லாதபோதும் அவர்களின் சந்தைப்படுத்தல் முறைகளும், உலக நாடுகளில் அவர்கள் ஒழுங்கு செய்யும் கண்காட்சிகளும் குறிப்பிடத்தக்கன. இது போன்ற காரணிகளால் ஒரு எழுத்தாளனுக்கு உருவாகும் கவனிப்பு, அவன் எழுத்துக்களை செழுமையாக்க உதவும்.


3


அண்மையில் வடலி பதிப்பகம் இலங்கைத் தமிழ் எழுத்துகளுக்கு ஒரு களமாக எதிர்காலத்தில் உருவாகும் என்கிற நம்பிக்கையை ஓரளவுக்கு உருவாக்கியுள்ளது. அவர்களிடம் இருந்து அகிலனின் மரணத்தின் வாசனை, கருணாகரனின் பலி ஆடு, கானாபிரபாவின் கம்போடியா என்கிற மூன்று புத்தகங்களை தபால் மூலம் பெற்றிருந்தேன். அகிலனின் மரணத்தின் வாசனை ஒரு கவிதைப் புத்தகம் என்பது போன்று பிரமை சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் த. அகிலனின் மரணத்தின் வாசனை என்று சொல்லப்படும்போது அதுவும் ஒரு கவிதை நூல் என்று கருதப்படும் வாய்ப்பு அதிகம். இது போன்று அவர் படைப்புகளைக் கைதுசெய்யும் தடையீடுகளை (கவிஞர் போன்ற குறியீடுகளை) அகிலன் கடந்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கருணாகரனின் பலி ஆடுகள் புத்தகம் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டதால் வாசிக்க முடியவில்லை. ஏறத்தாழ என் ஒத்த ரசனை கொண்ட நண்பர் நன்றாக இருக்கிறாது என்றூ சிலாகித்ததால் எனக்கும் பிடித்துப்போக அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன. கானா பிரபாவின் கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி நிச்சயமாக நல்ல முயற்சி. இதற்கு முன்னர் இதயம் பேசுகிறது மணியன், லேனாதமிழ்வாணன், சிவசங்கரி, ஜெயகாந்தன் போன்றவர்கள் பயணக்கட்டுரைகளை தமிழில் எழுதினார்கள். சுஜாதாவும், அசோகமித்திரனும் தம் பயண அனுபவங்களை நாவல் வடிவில் (பிரிவோம் சந்திப்போம், மேற்கே ஒரு குற்றம் போன்ற சுஜாதாவின் நூல்களும், அசோகமித்திரனின் ஒற்றன்). நீண்ட கால இடைவெளியின் பின்னர் கானா பிரபாவின் கம்போடியா, இந்தியத் தொன்மங்களை கம்போடியாவில் தேடி காண்பதாய் அமைகின்றது. இது ஒரு அரிய முயற்சியாக இருந்தபோதும், இந்தப் புத்தக வடிவமைப்பு இன்னும் மேன்மைப் பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. தவிர, கானாபிரபா இணையத்தில் மலையாளத் திரைப்படங்கள் பற்றியும், நினைவு மீட்டல்களாகவும், நல்லூர் திருவிழாவை வைத்து எழுதிய பதிவுகளும் இதைவிட அதிகம் செறிவாகவும், சிறப்பாகவும் இருந்தன.

வடலி வெளியீடுகளின் அறிமுகவிழா கனடாவிலும் எதிர்வரும் வெள்ளி மாலை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. கிட்ட தட்ட 6 மாதங்களின் முன்னர் மரணத்தின் வாசனை பற்றிய பரபரப்பு இருந்த காலப்பகுதியில் இந்த வெளியீடுகள் நடந்திருந்தால் இன்னும் பயன் தருவதாக இருந்திருக்கும். எனினும், later always better than never. இனி வரும் காலங்களில் வடலி குழுவினர் இவற்றிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.13 comments:

Anonymous said...

ஈழத்தில் பிறந்தது தவிர அவரது எழுத்துகளில் ஈழத்து எழுத்துகளுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் //

அவர் ஆனந்த விகடன்ல எழுதிய கோட்டைச் சண்டையில் செத்த போராளிப்பெண்ணைப்பற்றிய கதை வாசிக்கல்லையோ..

நல்ல காமடியான எழுத்து அது..:)

சோபாசக்தி மிஸ்டர் முடுலிங்கம் என்றொரு கதையை எம் ஜி ஆர் கொலைவழக்கு புத்தகத்தில் எழுதியிருக்கிறார். வாசியுங்கள்..

அருண்மொழிவர்மன் said...

ம்ம். அந்தக் கதையை நானும் வாசித்து இருக்கின்றேன் “பொற்கொடியும் பார்ப்பாள்” என்ற கதை. நான் திண்ணையில் படித்தேன். இது போன்ற காமெடிகளின் ஒப்பிடும்போது அவர் ஈழப் பிரச்சனை பற்றி எழுதாமலேயே இருக்கலாம் என்றூ கூட நினைப்பேன். கனடாவில் வெளியாகும் காலம் இதழில் “பிணங்களை வெளியில் கொண்டு வாருங்கள்” என்ற ஒரு கட்டுரை - வன்னி மக்களின் இறுதி நேர அவலம் பற்றி எழுதினார். அது நன்றாக இருந்தது.

அருண்மொழிவர்மன் said...

Anonymous said...
சோபாசக்தி மிஸ்டர் முடுலிங்கம் என்றொரு கதையை எம் ஜி ஆர் கொலைவழக்கு புத்தகத்தில் எழுதியிருக்கிறார். வாசியுங்கள்
//

வாசித்து இருக்கின்றேன் முத்துலிங்கம் எழுதின கதையில் சொல்லப்படும் ஒரு கதாபாத்திரம் முத்துலிங்கம் பற்றி சொல்வதாக எழுதப்பட்ட கதை. புதிய வடிவம். நன்றாக இருந்தது.

ARULKUMARAN said...

அது மட்டுமல்லாமல் அ.முத்துலிங்கம், மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் தமது முதலாவது புத்தகத்தை அறிமுக எழுத்தாளர் புத்தகவெளியீட்டுத் திட்டத்தை பின்பற்றிய மணிமேகலைப் பிரசுரம் மூலமாகத்தான் வெளிக்கொணர்ந்தார்கள் :-
i think German Karunakaramoorthy too

கதியால் said...

நீங்கள் குறிப்பிட்ட அனைவரைப் பற்றியும் அறிந்திருக்கிறேன். ஆனால் வாசிப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை. அல்லது உருவாக்கவில்லை. நல்ல அலசல்.வாசிக்க தூண்டியிருக்கின்றன. வாசித்ததும் உங்கள் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்கிறேன். உங்கள் எழுத்து நடை சிறப்பானதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

வணக்கம் அருண்மொழி வர்மன்

இன்றுதான் பதிவை வாசிக்கக் கிடைத்தது. பலவிதமான விஷயங்களை உங்கள் பார்வையில் தந்திருந்தீர்கள்.

கம்போடியா நூல் எனது ஆரம்ப முயற்சியே. இந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தொன்மங்களை இப்படிப் படம் கலந்து தமிழில் எந்த நூலும் நான் அறிய வராததால் வெளிக்கொணர்ந்தேன். முழுமையாக 2000 வரை படங்களை எடுத்திருந்தாலும் கலர் படங்களை தரமான அச்சில் அடிப்பதற்கு செலவு எகிறி விடும். பின்னர் 50 டொலர் வரை தான் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் அதனால் தான் வடிவமைப்பில் சமரசங்கள் செய்யப்பட்டன. உங்களின் விமர்சனத்தை ஏற்கின்றேன்.

வாசுகி said...

//அ.மு. வைப் பொறுத்தவரை அவர் ............................. எதையும் அழகியலாக பார்க்கின்ற மகிழ்வூட்டும் பிரதிகள் அவர் எழுத்துக்கள்.//
இதனால் தான் எனக்கு அவரது எழுத்துக்கள் பிடித்துள்ளன.
அவர் இலகுவாக கையாளும் நகைச்சுவை உணர்வு பிரமிப்பாக இருக்கும்.அவரது எழுத்துக்கள் கடினமற்றதாக, இலகுவாக அனைத்து தரப்பினராலும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

//நாளொன்றுக்கு 2000 சொற்கள் எழுதும் இவரது நண்பர் ஒருவரும் ஏதாவது எழுதிவைப்பார்//
)):

சுஜாதாவும் அ.மு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு அ.மு வில் ஏதாவது கோவமா? ))):

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் அருள்குமரன்.

i think German Karunakaramoorthy too//
எனக்கு அரியாகத் தெர்ரியவில்லை. உறுதிப்படுத்திக் கொள்ளுகிறேன்.

அருண்மொழிவர்மன் said...

//கதியால் said...

நீங்கள் குறிப்பிட்ட அனைவரைப் பற்றியும் அறிந்திருக்கிறேன். ஆனால் வாசிப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை. அல்லது உருவாக்கவில்லை.//

இவர்கள் அனைவரும் நிச்சயமாக படிக்கப்படவேண்டிய ஈழத்து எழுத்தாளர்கள்.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் கானா பிரபா...

உண்மைதான். நிச்சயமாக பயண இலக்கியம் ஒன்றை புத்தகமாக வெளியிடும்போது அதற்கு ஆகும் செலவை எமது மக்கள் யோசிக்கத்தான் செய்வார்கள். அதை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

மற்றது, புத்தகத்தின் உள்ளடக்கம் தரமாக உள்ளது. நிறைய விடயங்களை அழகாக தொகுத்து உள்ளீர்கள். ஆனால் புத்தக கட்டமைப்பில் எனக்கு சில குறைபாடுகள் இருப்பது போல தெரிகின்றது. உதாரணமாக வார்த்தைகளிடையே இடைவெளிகள் அதிகமாக உள்ளது போல தெரிகின்றது. புத்தக அச்சமைப்பு பற்றிய தொழினுட்ப விடயங்கள் எனக்கு தெரியாது . ஆனால் நான் நினைக்கின்றேன் “tab function" ல் ஏதோ பிழை என்று. அதுபோலவே, ஒரு பக்கத்தை வாசிக்கும்போது அதன் பின் பக்கத்தில் உள்ளவையும் ஊடுருவி (transparent) ஆக தெரிகின்றன.

விரைவில் உங்கள் அடுத்தடுத்த தொகுப்புகளையும் புத்தகமாக எதிர்பார்க்கின்றேன்.
நன்றி கலந்த வாழ்த்துக்கள்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் வாசுகி

//வாசுகி said...

அவர் இலகுவாக கையாளும் நகைச்சுவை உணர்வு பிரமிப்பாக இருக்கும்.அவரது எழுத்துக்கள் கடினமற்றதாக, இலகுவாக அனைத்து தரப்பினராலும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.//


இதை நானும் ஏற்றுக் கொள்ளுகிறேன். அவரது எழுத்துக்களை நான் குறை கூறவும் மாட்டேன். சம்பவங்களை அழகியலாக்கி மெல்லிய நகைச்சுவையுடன் தருவது அவர் பாணி. ஆனால் சில விடயங்களில் இவர் எதையுமே பேசாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. உண்மை கலந்த நாட்குறிப்புகள் எழுதும்போது அதை சுயசரிதைத் தன்மை வாய்ந்த நாவல் என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் அதில் சிறு வயதில் கொக்குவிலில் இருந்தபோது அங்கே இருந்த சமூக ரீதியான பிரச்சனைகளையோ, அல்லது இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சனை பற்றியோ எதையுமே குறிப்பிடவில்லை. அப்படி இவர் கடந்து செல்வது, அதுவும் சுய சரிதைத் தன்மை வாய்ந்த நாவலில் பிழைதானே.

இந்த நூலின் வெளியீட்டின் பின்னர் கனடாவில் இவருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதிலிவர் நாவல் மீது வைக்கப்பட்ட எந்த விமர்சனன்ங்களையும் எதிர்கொள்ளாமல், “அம்மாஅ மணித்தியாலக் கணக்காக கஸ்டப்பட்டு சமைக்கும் உணவினை அப்பா ஒரு வாய் சாப்பிட்டவுடனேயே அது குறை , இது பிழை என்றூ சொல்வது போல என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

தவிர, இவர் இளைய தலைமுறை தமிழ் எழுத்தாளார்கள் எவரையும் ஊக்குவித்து அறிமுகப்படுத்தியதாக நான் அறீயவில்லை. நாளொன்றுக்கு 2000 சொற்கள் எழுதும் இவர் நன்பருக்கு ஈழத்து எழுத்தாளர் என்றால் இவர் மட்டுமே தெரிவது போல, இவருக்கும் தமிழ் எழுத்தாளர் என்றால் அவர் மட்டுமேஎ தெரிகிறாரோ தெரியாது.//நாளொன்றுக்கு 2000 சொற்கள் எழுதும் இவரது நண்பர் ஒருவரும் ஏதாவது எழுதிவைப்பார்//
)):

சுஜாதாவும் அ.மு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு அ.மு வில் ஏதாவது கோவமா? ))):

சுஜாதாவில் எனக்கு அதிகம் பிடித்த விடயமே அவர் தொடர்ச்சியாக ஒரு கடமை போல புதிய எழுத்தாளர்களையும், இதர தமிழ், பிறமொழி படைப்புகளாஇயும் குறிப்பிட்டு வந்தது தான். தொடர்ந்து சுஜாதாவை வாசித்தது மூலமாகவே எனக்கு நவீன எழுத்தாளர்கள் பலரும் அறிமுகம் ஆனார்கள்

வேறென்ன வாசுகி. தொடர்ச்சியான வாசிப்புக்கு நன்றிகள். மீன்உம் கதைப்போம்

வாசுகி said...

வணக்கம்,

சுஜாதாவுக்கு கற்றதும் பெற்றதும், கணையாழியின் கடைசிப்பக்கம் போன்றவை புதியவர்களை
அறிமுகப்படுத்த உதவியது. ஈழ சஞ்சிகை சிரித்திரன், செங்கையாழியான் பற்றி சுஜாதாவின்
கற்றதும் பெற்றதும் இல் வாசித்ததாக நினைவு. ஈழ எழுத்தாளர்களில் மதிப்பு வைத்திருந்த அதே சமயம்
ஈழ இலக்கியம் பரவலாக அறியப்படவில்லை என்ற வருத்தமும் அவரது எழுத்துக்களில் இருந்தது.
"ஒரு ல‌ட்சம் புத்தகங்கள்" கதை ஈழத்தில் அக்கறை கொண்டிருந்தார் என்பதையே நினைக்க வைக்கிறது.
நானும் சுஜாதா மூலமே பல புதிய எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன்.


அ.மு தனது புத்தகங்களினூடாக தான் வாசித்து பிரமித்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
கணையாழியின் கடைசிப்பக்கம் போன்ற சந்தர்ப்பம் அ.முவுக்கு கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

//அம்மாஅ மணித்தியாலக் கணக்காக கஸ்டப்பட்டு சமைக்கும் உணவினை அப்பா ஒரு வாய் சாப்பிட்டவுடனேயே அது குறை , இது பிழை என்றூ சொல்வது போல என்று சொல்லிச் சென்றுவிட்டார்.//
பொதுவில் வந்துவிட்டவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற
கருத்து சரியானதாக இருந்தாலும் அ.மு சொன்னதிலும் பிழை இல்லை. அவர் 'ஒரு வாய்
சாப்பிட்டவுடனேயே ' என்று தானே சொல்கிறார். முழுவதும் வாசிக்காமல் விமர்சிப்பவர்களை தானே பிழை கூறுகிறார். இன்று அப்படியானவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.


'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' நான் மிகவும் ருசித்து படித்த புத்தகங்களில் முக்கியமானது.
உங்களுக்கும் அதே அனுபவம் தான் கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
அதை விட 75 சிறுகதைகள் கொண்ட‌ "முத்துலிங்கம் சிறுகதைகள்" தொகுப்பு பிடித்திருந்தது.
வாசித்திருக்கிறீர்களா? ( திகட சக்கரம், வடக்கு வாசல், மகாராஜாவின் ரயில் வண்டி போன்ற‌
புத்தகங்களில் உள்ள கதைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.)

"பூமியின் பாதி வயது" இது வரை வாசிக்கவில்லை என்றால் கட்டாயம் வாசிக்கவும்.
நிறைய விடயங்களை சுவையாக கூறியுள்ளார். தீராநதி, காலம்........ போன்ற இதழ்களில்
வந்த கட்டுரைகளின் தொகுப்பு.

வாசுகி said...

"ஊமைச் செந்நாய்" சிறுகதை வாசித்திருக்கிறீர்களா? அந்த கதை பற்றி உங்கள் கருத்து என்ன?
அருவருப்பான வசனங்களாகவும் உவமைகளாகவும் இருந்ததால் 2 பந்திக்கு மேல வாசிக்கவே முடிமால் நிறுத்திவிட்டேன். ஆனால் பலரும் சமூக அக்கறை கொண்ட சிறந்த இலக்கியம் என்றார்கள்.
இலக்கியமா? இலக்கிய முலாம் போடப்பட்டதா?
அ.மு கூட சிலாகித்திருந்தார். ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் அந்த 2000 சொற்கள்..............

[[ இந்த விடயத்தில் எஸ்.ராவை எனக்கு மிகவும் பிடிக்கும். "நடந்து செல்லும் நீரூற்றில்" வரும் சில கதைகள், உதாரணம் விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள், வாசகன் உணரும் விதத்தில் அருவருப்பில்லாமல் சொல்வது நன்றாக இருக்கும்.]]

நன்றி

Post a Comment