Tuesday, December 12, 2006

தாயே உன்னை எப்படி பிரிந்து…..

தமிழ் சினிமா புதிய பாதையில் செல்கின்றது என்பதை அண்மையில் வெளியான இரண்டு படங்கள் சிறப்பாக காட்டியுள்ளன. இதில் ஒன்றின் போக்கு பயமுறுத்தி இருக்கின்ற அதே வேளை மற்றைய திரைப்படம் மனதை மயில் இறகால் தடவியது போல சுகமளித்திருக்கின்றது. ஒன்று “இது காதல் வரும் பருவம்” மற்றையது “வெயில்”. தான் இயக்கிய படங்களில் தனது நாயகனை சராசரிக்கு பெரியவனாக காட்டிய ஷங்கரின் ரசனை இன்னும் அவரது கை கூடாத கனவான “அழகிய குயிலே” ஆக தான் இருக்கின்றது என்பதை நிரூபித்திருக்கும் படம் இது. வெடுக்கென்றால் கோபமும் முணுக்கென்றால் அழுகையுமாக உணர்ச்சி பிராவகமாய் வாழும் கிராமத்து வெள்ளந்தி மனிதனை இரத்தமும் சதையுமாக காட்டியிருக்கின்றார் வசந்த பாலன். இந்த படத்தின் ஏதாவது ஒரு கட்டம் பெரும்பாலானவர்களின் வாழ்பனுபவமாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் அந்த வெயிலோட விளையாடி…. பாடல் விசா, விமானம் ஏதும் இல்லாமலேயெ என்னை அப்படியே தூக்கி யாழ்ப்பாணத்தில் , உயரப்புலத்தில் தூக்கிபோட்டது. உயரப்புலம் கொக்குவில் சந்திக்கும் குளப்பிட்டி சந்திக்கும் இடையில் உள்ள அழகிய கிராமம். அந்த கிராமத்தின் அழகெல்லாம் ஒரு வீட்டில் தான் இருந்தது. ஆனந்தம் விளையாடும் வீடு என்று கூறும்படி ஆனந்தம் மட்டுமே அங்கே ஆட்சி செய்தது. அது எனது நண்பனின் வீடு. என் உயிர்த்தோழனின் வீடு. விசாகனின் வீடு. ஈழப்போராட்டம் எனக்கு செய்த உதவிகளில் ஒன்று காரைநகரில் இருந்த அவனை இடம்பெயர்த்தி அங்கே அமர்த்தியது. நான், விசாகன், தயா, பாலன், பிரதீவன், வாசன், தெய்வீகன், சயந்தன், மயூரன் என்று ரசனையும் ரகளையும் கூடிய அணி எம்முடையது.

அப்போது எமக்கு 15 வயது இருக்கும். ஏதோ ஒரு வேகத்தில் ஒரு ஸ்டைல் என்று நினைத்து எப்போதும் வாயில் பாக்குடன் வலம் வருவது எமது வழக்கம். இதில் முண்ணனி நான், விசாகன், தயா மூவரும் தான். இந்தியாவில் இருந்து வரும் நிஜாம் பாக்கு அப்போது அங்கே பிரபலம். கொக்குவில் பள்ளத்தடியில் இருக்கும் ஒரு கடையில் ஒரு ரோலாக பாக்கை வாங்கி வைத்து கொள்ளுவோம். எமது வாய்க்குள் நாக்குக்கு உடன்பிறவாத சகோதரன் போல பாக்கு ஒட்டிக்கொண்ட காலம் அது. விசாகனின் அம்மாவை பற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும். அவவுக்கு இரண்டு பிள்ளைகள் என்றாலும் எங்கள் எல்லாரையுமே பிள்ளைகளாகத்தான் அவ பார்த்துக்கொண்டா. இப்போதும் அவவை அம்மா என்று தான் நான் அழைப்பது வழக்கம். ஒரு நாள் அவ விசாகனின் புத்தக (B)பாக்குள் இருந்த பாக்கை சாவகாசமாக போட்டிருக்கிறா. அது தலைய சுத்தி மயக்கம் வரப்பண்ணியிருக்கு. அவவுக்கு நாங்கள் ஏதோ போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாகிட்டோம் என்ட பயம். இதுக்கிடையில் அவ போன டொக்டர் வேற இது ஏதோ பாண்டு நோய் என்ற வருத்தத்தை கொண்டு வரும் என்று சொல்லியிருக்கிறார். அன்றேல்ல இருந்த்து ஸ்கூலுக்கு போக முதல் ஒரு கப் பால் குடிக்க வேணும் என்று கட்டாய சட்டம். நானும் அவன் வீட்ட போய் ஸ்கூலுக்கு போற படியால எனக்கும் ஒரு கப் கிடைக்கும். ஏனென்றா நானும் அவவுக்கு மகன் தானே. ஒன்ற இங்கே சொல்லோனும், இதக்கேட்டெல்லாம் நாங்கள் பாக்கை விடேல்ல, அதுக்கு வேற ஒரு வரலாறு இருக்கு. அது பற்றி பிறகொரு பதிவில்.

அப்ப எங்களுக்கு கிரிக்கட் என்றால் பைத்தியம். BBC தமிழோசையில் ஞாயிறு தோறும் விளையாட்டரங்கம் என்ற ஒரு பகுதி வரும். அதைக்கேட்க என்றே அதை எமது இரவு உணவுக்கான நேரமாக மாற்றிக்கொண்டோம். அப்போது தூத்துக்குடி வானொலியில் இரவு 8:45 முதல் 9:00 வரை மூன்று பாட்டு ஒலிபரப்புவார்கள் பிறகு 9 முதல் 9:15 வரை ஆல் இந்தியா ரேடியோவின் ஆங்கில செய்திகள் பிறகு 9 :15 முதல் 9:45 வரை BBC. இது தவிர இந்திய மற்றும் இலங்கை வானொலிகளில் அப்பப்போ நேரடி வர்ணணை செய்வார்கள். இதை விட்டால் இந்தியாவில் இருந்து வரும் SPORTSTAR சஞ்சிகை. இவை தான் எமது கிரிக்கெட் அறிவை வளார்த்துக்கொண்டிருந்தன. இப்படியான சமயத்தில் எமக்கு ஆபத்பாந்தவனாக அறிமுகமானவன் தான் சுஜீவன். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ஈழநாதம் பத்திரிகையில் தொடர்ந்து கிரிக்கட் விமர்சனங்களை எழுதிவந்த நண்பர் இவர். ஒரு 8 Band ரேடியோவை கையில் பிடித்தபடி சைக்கிளில் போய்வரும்போதும் வர்ணனைகளை கேட்கும் அளவு தீவிர கிரிக்கட் ரசிகன் இவர். போராட்ட பிரச்சாரங்களும் ஆட்சேர்ப்பும் முழுவேகத்தில் நடந்த 95 ன் மத்திய பகுதிகளில் எனது வீடு தேடி வந்து எனக்கு கிரிக்கட் ஸ்கோர்களை சொல்லும் இனிய நண்பர் இவர். ஒரு முறை நானும் அவரும் நானும் சாவக்காடு ஊடாக எனது வீடு நோக்கி போய்க்கொண்டிருந்தோம். அப்போது இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் அடையே டெஸ்ட் போட்டிகள் நடந்துகொண்டிருந்தன. தொடர் 1-1 என்றளவில் இருக்கையில் மூன்றாவது டெஸ்ட்டில் இலங்கையின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகி இருந்த நிலையில் வெற்றிக்கு தேவையான இறுதி இலக்கை விழுத்தி அரவிந்த டீ சில்வா வெற்றியை உறுதி செய்தார். அதை வர்ணணையில் சொன்னது தான் தாமதம், சுஜீவன் சைக்கிளை விட்டு இறங்கி “he is out, he is out, srilanka won” என்று கத்தியது இப்போதும் ஞாபகம் இருக்கின்றது. இந்திய அணி மீதான எனது ஈடுபாடும் இலங்கை அணி மீதான அவரது ஈடுபாடும் அடிக்கடி எம்மை சர்ச்சைகளில் ஈடுபடுத்தினாலும், எனது வாழ்வின் அழிக்கமுடியாத ஞாபக பக்கங்களில் அவருக்கும் ஓரிடம் உண்டு.

இதற்கு பின் ராணுவக் கட்டுபாட்டில் யாழ்ப்பாணம் வந்து அங்கே திரைப்படங்கள் பார்க்க சனம் தொடங்கிய நேரம். அப்போ நாங்கள் பார்த்த இரண்டரை மணி நேர படங்களை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்வோம். எமது சந்திப்புகளை மையப்படுத்தி நாமே அமைத்த ஓலைக்குடிலும் வாசலோரமாக இருந்த பெருமரமும் தான் நாம் அவை கூடும் இடங்கள். அப்போது இந்தியன் திரைப்படம் வெளியாகி யாழ்ப்பாணத்தில் படமும் அதன் பாடல்களுல் ஏகப்பிரபலமாகி இருந்தன. ஒருநாள் நண்பன் ஒருவன் டெலிபோன் மணிபோல்… பாடலை பாடும்போது “காத்திருக்கும் கமலா இவள்தானா” என்று பாடினான். உண்மையில் “ஸாகிர் ஹுசய்ன் தபேலா இவள்தானா” (படத்தில் வரும் இக்காட்சி ஏகப்பிரபலம்??) என்பது தான் சரியான வரிகள். இதைப்பற்றி நாம் கூறியதும் அவன் இல்லை என்று கூறி தான் சொன்ன வரிகளுக்கு விளக்கம் சொன்னான். நேருவின் மனைவியின் பெயர் கமலாவாம் (அது உண்மையும் கூட). சுதந்திரப்போராட்ட காலங்களில் நேரு சிறை சென்ற பொழுதுகளில் எல்லாம் எப்படி கமலா காத்திருந்தாரோ அது போல தனது கடமையில் கண்ணாக திரியும் காதலனை எண்ணி இவளும் காத்திருக்கிறாள் என்பதே அதற்கு அர்த்தமாம் உண்மையில் வைரமுத்துவுக்கு கூட தோன்றாத அற்புதமான கற்பனை இது. இக்காலங்களில் நாம் அடிக்கடி பாடசாலைக்கு மட்டம் போட்டு யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் சந்திரன் என்பவர் நடத்திய மினி சினிமாவில் படம் பார்ப்பது வழக்கம். நாயுடு ஹால் என்பது நாம் அதற்கு வைத்த செல்லப்பெயர். அங்கே மீண்டும் மீண்டும் பார்த்த இருவர், மின்சாரக்கனவு, காலமெல்லாம் காத்திருப்பேன், காலமெல்லம் காதல் வாழ்க, தர்ம சக்கரம், பூவே உனக்காக, உள்ளத்தை அள்ளித்தா பாடல்கள் இப்பொது பார்த்தாலும் அந்நாள் நினைவுகளை மீட்பதாலேயெ நன்றாக இருக்கின்றன. அப்படி ஒருநாள் வேறு ஒரு சினிமாவில் ட்யூசனை மட்டம் போட்டுவிட்டு தளபதி படம் பார்த்தோம். நாம் வெளியில் திரிவதை என் அப்பா கண்டிருக்கிறார். ஆனால் அது எனக்கு தெரியாது. நான் வீடு வந்ததும் அப்பா எப்படி இண்டைக்கு வகுப்பு என்று கேட்டார். நான் உண்மைய சொன்னேன். அவருக்கு அது நல்ல சந்தோசம். பிறகுதான் தான் என்னை கண்டதாகவும், அதற்காகதான் கேட்டதாயும் நான் உண்மைய சொன்னது தனக்கு சந்தோசம் என்றும் கூறினார். வெயில் திரைப்படம் பார்த்தபோது எனது தந்தையின் நிதானமும் பெருந்தன்மையும் தான் நினைவு வந்தது,

இப்படி வெயிலோட விளையாடி ஷெல் அடியோட உறவாடிய எத்தனையோ நினைவுகள் எம் அனைவர் நெஞ்சிலும். அத்தனைக்கும் அச்சாரமாய் விசாகன் இருந்த அந்த அழகிய உயரப்புல வீடு. இவற்றில் இருந்து விலக்கி காலத்தின் கோலம் என்னை கனடாவுக்கு அனுப்பியது. கனடா வந்த நாள் முதல் என் மனதில் இருந்த பெரும் ஆசை எப்படியும் அந்த உயரப்புல வீட்டை எமக்கு உரிமையாக்கி எமது முதுமையை அங்கே கொண்டாடவேண்டும் என்பது. ஆனால் நான் கனடா வர தயாராகி கொழும்பில் இருந்த நேரம் விசாகன் உயரப்புல வாடகை வீட்டை காலி செய்து யாழ்ப்பாணம், கஸ்தூரியார் தெருவுக்கு இடம்பெயர அந்த வீட்டை மேற்பார்வை செய்த அருணகிரி என்பவர் அதை யாருக்கோ விற்று விட்டாராம். அந்த வீட்டை நான் வாங்க நான் தயார், உரிய ஏற்பாடுகளை செய் என்று கூறியும் ஏனோ என் உயிர்த்தோழன் விசாகன் அதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அந்த அழகிய பெரு மரம் கூட தறிக்கப்பட்டு விட்டதாம். எமக்கு வாழ்வின் ஆட்டோகிராப் ஆக இருந்த அம்மரத்தையும் எவனோ ஒரு முட்டாள் மரம் என்று மட்டும் பார்த்திருக்கிறான். (இதை கேட்டவுடனேயே நினைவுகளின் பதிவெடாய் மரம் காட்டப்படும் ஏப்ரல் மாதத்தில் படத்தை வாங்கி சேமித்துவைத்துள்ளேன்.) ராமன் பிறந்து இறந்த பின்பும் கொண்டாடப்படும் அயோத்திபோல அந்த மரம் போன பின்பும் அந்த வீட்டை நான் கொண்டாடுகிறேன். அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும், மண்ணும், கல்லும், புல்லும், புழுவும், பூண்டும் கூட எம் வரலாறு சொல்லும். அதற்காகவேனும் அதனை யார் உரிமைப்படுத்தி இருந்தாலும் எம்மிடம் கொடுத்துவிடுங்கள். எனது உயிரின் ஒரு பாதி அந்த மண்ணில் தான் பரவிக்கிடக்கிறது.

7 comments:

கானா பிரபா said...

வணக்கம் அருண்மொழி

நீங்கள் சொன்ன பெரும்பாலான நினைவுகளும் , இடங்களும் என் கூடவும் வாழ்ந்தவை, வலியான வார்த்தைப் பதிவு மீண்டும் ஊருக்குக் கை பிடித்து அழைத்துப் போய் விட்டது.

ஒரு சிறு வேண்டுகோள்

எழுத்துருவின் அளவைப் பெரிதாக்கி, முடிந்தால் பொருத்தமான படம் ஒன்றும் போட்டால் நல்லது.

அருண்மொழிவர்மன் said...

நன்றி....கான பிரபா.. எனது ஆரம்ப பதிவான அது ஒரு அழகிய நிலாக்காலத்ஹ்டுக்கும் நீங்கள் தான் ஆரம்பத்தில் ஆதரவு தந்தீர்கள்.... அது போல இதற்கும்....வெயிலோட விளையாடி பாடலை பார்த்தபோது அடக்கமுடியாமல் வந்த கண்ணீரை தவிர்க்க நான் ஆதரவு தேடி எழுதியது தான் இந்த பதிவு.... இப்பொது தான் தெரிகிறது..... சோகங்களில் பெரிய சோகம் ஊரைவிட்டு பிரிவது தான் என்று.......

நீங்கள் சொன்னபடி எழுத்துருவை பெரிதாக்கி உள்ளேன்... படங்கள் நிறைய உள்ளன... ஆனால் போடத்தான் தெரியாது....

கானா பிரபா said...

சில பதிவுகளைப் படிக்கும் போது நான் எனக்குள் பேசிக்கொள்வதாக உணர்வேன், அப்பதிவுகளில் நீங்களும் ஒருவர்,
fire fox browser மூலம் படங்களை இணைக்கலாம். Internet explorer பிரச்சனை கொடுக்கும்.

Anpumathi said...

Nanri Nanpa,
Ninaithen Nekilnthen. Ennal unarvukal ponkum poluthu varthaikaludan vilaiyada mudiyavillai. Pettathai vida valartha pasam perithu enparkale athu ithuthano. Kankalal ithai vasippathai vida antha ninaivukalai meeddi oruthadavai aluthal enna enkirathu manam. Enna sieya? Sorkamme Enralum Athu Nammoorai pola varuma? Ninaivukal enpathu kodukkum valiyai unartha mudiyavilai.

அருண்மொழிவர்மன் said...

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரலாறு உண்டு... ஆனால் எமக்கு மட்டும் வரலாறூ என்பது எமது ஒட்டுமொத்த நண்பர்களின் வரலாறாகவே உள்ளது. இது தான் எமது நட்புக்கான வெற்றி

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்,
நடப்பதையே நினைத்திருப்போம்.
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் வரும் சந்திப்போம்

கானா பிரபா said...

வணக்கம் அருண்மொழி

நீண்ட நாட்களாக உங்களை வலைப்பதிவில் காணவில்லையே வேலைப்பளுவோ?

Prashanth said...

சோகங்களில் பெரிய சோகம் ஊரைவிட்டு பிரிவது தான்

I think every tamils who displaced , agree with Author

Post a Comment