Wednesday, February 28, 2007

கலைந்து போகும் காலங்கள்

அண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான the sporststarன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு வீரர்களின் அழகிய வண்ணப்படம் வருவது வழக்கம். அதனை தான் நான் எனக்கு விருப்பமான் ஆசிரியர்களின் கொப்பிகளிற்கு உறையிடுவேன். அப்படியாக உறையிட்டு எனக்கு கிடைத்த கொப்பியை பார்த்ததும் எனது மனம் மழையில் நனைந்த துணி போல கனக்கத்தொடங்கியது.

எமக்கு ஒன்பதாம் ஆண்டு முதல் 11ம் ஆண்டு வரை விஞ்ஞானம் படிப்பித்தவர் திரு வை. க. தவமணிதாசன் அவர்கள். கண்டிப்புக்கு பெயர் போனவர். சின்னதாய் ஒரு கவிஞர். “வைகை” என்று ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டவர். அதில்
“வைகை எந்தனுக்கு வாடிக்கை ஆனதற்கு
வைகை முறையே தலையும் தலையெழுத்தும்” என்று மாணவர்களை கடுமையாக கண்டிக்கும் தன் இயல்பு பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அமிலத்துக்கும் காரத்துக்கும் இடையிலான நடுநிலையாக்கல் தாக்கம் பற்றி
அமிலம் + காரம் --> உப்பு + அப்பு (நீர்)
என்று எல்லாம் சுவரசியமாகக் கற்பிப்பார். (இவர் பற்றி முழுமையாக ஒரு தனி பத்தி எழுதவேண்டும். ஆனால் நான் இப்போது கூறவந்ததை முதலில் கூறிவிட்டு பிறகு இவர் பற்றி.) அவருடைய பாட கொப்பிக்கும் எனது வழக்கப்படியே உறையிட்டிருந்தேன். ஆனால் அந்த உறையை பார்த்ததும் என் மனம் பாதிக்கப்பட காரணம் அதில் இருந்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேமியன் மார்ட்டினின் படம். அது (92) அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்த காலம். அந்த கொப்பி மீண்டும் எனது கை வந்து சேர்ந்தபோது அவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். என்னை பொறுத்தவரை நான் விட்டுவந்த யாழ்ப்பாணம் இப்போதும் என்மனதில் (10 ஆண்டுகளாகியும் கூட) (F)ப்ர்ட்ஜில் வைத்த பழம்போலதான் உள்ளது. ஆனால் நிஜத்தில் ஒரு தலைமுறை, அதுவும் நாம் பார்த்து, ரசித்து, பழகி, கற்று வளர்ந்த தலைமுறை எம்மை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாற்றாண்டின் அற்புத வீரர் என்று கொண்டாடப்பட்ட சச்சின் , லாரா, ஷான் வார்னே, மக்ராத், ட்ராவிட், இன்ஸமாம், பொலொக் என்று பெரும் சிங்கங்கள் எல்லாம் ஓய்வு பெறும் கால கட்டத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட சச்சினின் சர்வதேச அனுபவமும் எனது விளையாஅட்டு அனுபவமும் ஒரே கால அளவானவை.

சினிமாவில் கூட புதிய தலைமுறையினர் பொறுப்பேற்க தொடங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, இளையராஜா, வைரமுத்து, வாலி, போன்ற ஜாம்பவான்களிடமிருந்து செல்வராகவன், கௌதம், முருகதாஸ், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ் போன்றோர் கிட்டதட்ட பதவியேற்று கொண்டனர். எமது பதின்ம வயதுகளில் 27 வயதுகாரரை எல்லம் மிகுந்த மரியாதையுடன் அண்ணே என்று தான் அழைப்பதுடான் வழக்கம். இப்போது அதே 27 வயதில் நாம் இருக்கும்போது பதின்மவயதார் அண்ணே என்றழைக்கும்போது நட்புக்குள் வயதேது என்றுததன் சொல்ல தோன்றுகிறது.

நான் புத்தகம் வாசிக்கதொடங்கிய ஆரம்பகாலங்களில் மரபுக்கவிதைகளையும் கவிஞர்களையும் சாடி மு. மேத்தா, வைரமுத்து போன்றோர் பேசிவந்தனர். இப்போது அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்று பேசும் நவீன இலக்கியகாரர் வந்துவிட்டனர்.

காலம் ஒரு வற்றாத நெடுநதி போல ஒடிக்கொண்டேயிருக்கிறது. அதன் கரையில் அது விட்டுசெல்லும் தடங்கள் பற்றிய விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே அது பல மைல்களை கடந்து சென்று இன்னும் பல புதிய தடங்களை உருவாக்கிவிடுகிறது. சில மாதங்களின் முன்னே எனது நன்பனின் சித்தி மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும்போது அவனுக்கு 6 அல்லது 7 வயது இருந்திருக்கும். எனது மனதளவில் அவன் பற்றிய விம்பம் சிறுவன் என்கிற அளவிலேயே பதிந்துள்ளது. ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது அவன் சொன்னான், “நீங்கள் இங்க இருக்கேக்க உங்களுக்கு இப்ப எங்கட வயதுதானே” என்று. காலம் பயணிக்கும் வேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றோ என்று எனக்கு சந்தேகம் வந்தது.

எனது சக மாணவி ஒருத்தி, ஏறத்தாழ எமது வயதுடைய எல்லாராலும் காதலிக்கப்பட்டவள், ஆனால் யாரையும் காதலிக்காதவளுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அது பற்றி எனது நண்பன் ஒருவன் சொன்னான் “நாங்கள் கல்யாணம் கட்டி பிள்ளை பெற்றாலும் வயசாச்சே என்ற நினைப்பு வராது, ஆனால் எங்களோட படிச்ச ஒருத்திக்கு கல்யாணம் என்றாலே வயசு போன மாதிரி இருக்கடா” என்றான். எமக்கே தெரியாமல் எம் வாழ்வில் பங்கெடுத்த விடயங்கள் கடந்து போகும் போது தான் புரிகிறது எத்தனை காலம் எம்மை கடந்து போய்விட்டது என்று.

18 comments:

கானா பிரபா said...

நண்பா

சற்று இடைவெளிக்கு முன் பதிவு மூலம் தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. கொப்பிக்கு உறை போடுவதில் இருந்து சக மாணவியின் கல்யாணம் ஏற்படுத்தும் தாக்கம் (வயது போகுது) எல்லாமே எனக்கும் ஒருமித்த நினைவுகள். அருமை

G.Ragavan said...

// எனது நண்பன் ஒருவன் சொன்னான் “நாங்கள் கல்யாணம் கட்டி பிள்ளை பெற்றாலும் வயசாச்சே என்ற நினைப்பு வராது, ஆனால் எங்களோட படிச்ச ஒருத்திக்கு கல்யாணம் என்றாலே வயசு போன மாதிரி இருக்கடா” என்றான். //

மிக அழகு. ரசித்தேன். :)

கொப்பி என்றால் நோட்டுப் புத்தகமா?

அமிலம் + காரம் -> உப்பு + அப்பு மிகவும் அருமை. எனக்கொரு சித்தர் பாட்டு நினைவிற்கு வருகிறது. வரிகள் மறந்து போயின. கருத்து மட்டும் நிற்கிறது. நாழி உப்பும் நாழி அப்பும் சேர்ந்து நாழி அப்புதான் மிஞ்சும். நாழி என்பது உழக்கு. ஒரு உழக்கு உப்பை ஓருழக்கு நீரோடு சேர்த்தால் நீர்தான் மிஞ்சும். அதுவும் ஓருழக்குதான். ஈருழக்கு அல்ல.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் கானா பிரபா.
இன்று நீங்கள் என்னை காணாவில்லையே என்றூ தேடி அபுப்பிய மடல் பார்த்ததும் தான் இதனை எழுத தொடங்கினேன்.
எனது எழுத்துகளுக்கு கிடக்கும் உச்ச பட்ச ஆதரவு உங்களால் தான் கிடைக்கிறது. நன்றிகள்......

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் ராகவன்....
கொப்பி என்றால் நோட்டுப் புத்தகம் தான்.. நாம் கொப்பி என்று சொல்லுவோம். ஆதரவுக்கு நன்றிகள்

Anonymous said...

sothanai

அருண்மொழிவர்மன் said...

test tttt

Theivigan said...

எப்பிடித்தான் உனக்கு மட்டும் இப்படி பழைய நினைவுகளை பழுதடையாமல் பதிவுசெய்து எம்மை மறதிக்காறர் ஆக்க முடியுதோ தெரியவில்லை.அடித்துச்சொல்கிறேன் பதிவை வாசித்து முடித்த பின்னர் எந்தன் பாதி விழிகளை கண்ணீர் மறைத்தது.

மீதியை தொலைபேசியில் சொல்கிறேன்.

தெய்வீ

Prashanth said...

It is touching a lot. You are writing like Ramakrishnan ( Anandavikatan) or affected by him

- Prashanth

வெற்றி said...

அருண்,
நல்ல பதிவு. உங்கள் பதிவைப் படித்ததும் என் பழைய கால ஈழத்து நினைவுகளும் மனதில் எழுந்தது.

தொடருங்கள்.

அருண்மொழிவர்மன் said...

நன்றி வெற்றி.....

இந்த அவசரகதி வாழ்வினி இடையே எம்மை அயற்சி நீக்கி தாலட்டுபவை அந்த அழகிய பழைய நினைவுகள் தான்



நன்றி வெற்றி.... நீங்களும் கனடாவில் தானா இருக்கிறீர்கள்.... நான் ஸ்கார்பரோவில்....

அருண்மொழிவர்மன் said...

நன்றி பிரஷாந்த்
ராமகிருஷ்ணன் நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர். எனவே இதை எனக்கு கிடைத்த ஒரு பாராட்டாக எடுத்துக்கொள்ளுகிறேன்

Sowmya said...

miga azhagaana oru pathivu. puthiya thamizh vaarthaigalai katru kolla oru santharpamaaga ithu amainthu vittathu Vaazhthukkal :)

அருண்மொழிவர்மன் said...

நன்றி சௌம்யா.. எனது பதிவை எப்படி தேடி பிடித்தீர்களோ தெரியாது. ஆனால் இப்படியான ஊக்கங்கள் தான் என்னை மீண்டும் எழுதப்பண்ணும். நினைவுகள் நெஞ்சில் கனக்கும்போதெல்லாம் வலைப்பதிவுகளில் வந்து தான் இளைப்பாறிக்கொள்வேன்

Anonymous said...

hi
testing messsage

Anonymous said...

hiiiiiiii

Anonymous said...

I thought of just have a glance at your blog; But, believe me... I can't stop reading every single words of it. Honestly, you took me to Jaffna instantly. Well done Suthan! I remember the day (uppu + appu). Thavamanithasan sir......what a teacher for us....how can I forget him....Keep writingda

K.Guruparan said...

hi
nice
YARADA ANTHAP PEDDAI?(kalyaanam kadiya)

அருண்மொழிவர்மன் said...

குரு....

எனக்கு தெரிந்து எமது வகுப்பில் முதன் முதல் கவிதை எழுதியவன் நீதான். 90ம் ஆண்டு அர்ச்சுனா சஞ்சிகையில் வந்திருந்தது. கவிதை மறந்துவிட்டது.....

அதன் பின்னை 96ல் எமது காலைப் பிரார்த்தனைகளில் (காதல் பிரார்த்தனைகள்) உனது கவிதைகளை வெகுவாக ரசித்தவன் நான். நீ கேட்டதற்காக கைகள் படபடக்க குமாரசுவாமி மண்டபத்தில் திருக்குறளும் பொருளும் வாசித்தது மறக்கமுடியாத அனுபவம். அதேபோல் 95ல் ஒரு பிரசார கூட்டத்தில் உன்னருகில் இருந்தபடியே "என்னசொல்லடா... என்ன சொல்லடா" என்று கேட்டதும்.....

Post a Comment