Friday, December 1, 2006

தொட்டாச்சிணுங்கி உறவுகள்


“ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட ஐஸ்கட்டி உடைய, நட்பு பெருக, வரும்
தலைமுறை மீது அக்கறை அதிகமாகும். முன்பைவிட அக்கறையாய், அன்புச் சூழ்நிலையில் அமைதியான இடத்தில் அடுத்த தலைமுறை வளாரும். அந்த தலைமுறையில் கலை இலக்கியமும், அரசியலும், பொருளாதரமும், வாழ்க்கை நிலையும் உயரும்…..” - பாலகுமாரன்


அண்மையில் மீண்டும் ஒருமுறை தொட்டா சிணுங்கி திரைப்படத்தை பார்த்தேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நல்ல சினேகிதம் மலரலாம், தொடரலாம் என்பதை அழுத்தமாக கூறிய மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று. மனதோடு மழைக்காலம் (ஷாம்-நித்யா தாஸ்), மறுபடியும் (அரவிந்த் சாமி-ரேவதி) போன்ற படங்களில் ஆண், பெண் சினேகிதம் பற்றி காட்டப்பட்டாலும் நடைமுறை வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை யதார்த்தமாக காட்டியது இப்படத்தில் தான். ரகுவரன் தாழ்வு மனப்பான்மையுட ரேவதி- கார்த்திக் நட்பினை சந்தேகிப்பது போல வரும் காட்சிகளில் அவர் ஒரு சாதாரண மனிதனுக்கு இயல்பாக ஏற்படகூடிய மன உணர்வுகளை அல்லது மன உளைச்சல்களை பிரதிபலிக்கிறார். மேலும் வசனம் எழுதிய இயக்குனர் அதியமானின் அற்புதமான வாதத்திறமையினால் ரேவதி, கார்த்திக், ரகுவரன், தேவயானி, நம்பியார், பிரசாத் என்று அனைத்து கதாபாத்திரங்களின் நியாயங்களும் சரியான முறையில் முன்வைக்கப்படுகின்றன.

உண்மையில் நாம் வாழும் பிற்போக்கான சமூகத்தினால் நிராகரிக்கப்படும் ஆண், பெண் நட்புகள் ஆண்களையும், பெண்களையும் மனதளவில் அங்ககீனர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. சகோதரியாகவோ. தாயாகவோ அதன் வழிவந்த உறவுகளாகவோ அல்லது மனைவியாகவோ மட்டும் தான் ஒரு பெண்ணுடன் உறவு ஏற்படமுடியும் என்பது இங்கே எழுதாத சட்டமாக மாறிவிட்டது. நான் உயர் கல்லூரியில் படித்தபோதும், அதன் பின்னும் இந்த நெருக்கடிகளுக்கு ஓரளவு வளைந்து “அவரோட அண்ணாமாதிரிதான் பழகுகிறேன்” என்று கூறும் பெண்களையும் “அவ எனக்கு தங்கச்சி மாதிரி” என்று கூறும் ஆண்களையும் எண்ணிக்கையில்லாமல் கண்டிருக்கிறேன். எனது நண்பன் ஒருவன் அக்கா, அக்கா என்றழைத்த பெண்ணுக்கு அவனைவிட இரண்டு வயது குறைவு… இதைபற்றி அவனிடம் கேட்டபோது சொன்னான் “நான் அவவை லவ் பண்ணேல்ல, ஒருவேளை அவவோ இல்லை வேறு யாராவதோ அப்படு நினனக்காமல் இருக்க தான் இப்படி கதைக்கிறேன்”. இப்போது அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது…. ஆனால் அக்கா, அக்கா என்று அன்பாக பழகியவனுக்கு அழைப்பு இல்லை. தனது புனிதத்தை காக்க அந்த பெண் செய்த / செய்யவேண்டிய காரியம் இது…. இதற்கு காரணம் இத்துப்போன எமது சமூக கட்டமைப்பு. ஆணும் பெண்ணும் மனதில் எந்த கள்ளமும் இல்லாமல் இவன் எனது தோழன் என்றோ அல்லது எனது தோழி என்றோ தனது குடும்பத்தினரிடமோ அல்லது கணவன், மனைவிக்கோ அறிமுகப்படுத்தும் நிலை
எம்மிடையே இன்று இல்லை.

ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நல்ல தோழமையாக இருப்பதாலும், ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பதாலும் அவர்கள் வாழ்வில் எவ்வளவு அனுசரிப்பு அதிகரிக்கும் என்பது ஏன் எவருக்குமே புரிவதில்லையோ?? கல்யாணச்சந்தையில் பெண் சினேகம் அதிகம் என்பது ஒரு ஆணின் மார்க்கெட்டை குறைக்கும் விடயமாகவே இருக்கின்றது, பெண் சினேகம் என்பதே ஏன் ஒரு கொச்சையான விடயமாக கருதப்படுகிறதோ தெரி்யாது, எதற்கெடுத்தாலும் ராஜராஜசோழன் என்றும், ராஜேந்திரன் என்றும் பழம்பஞ்சாங்கத்தை புரட்டும் நம்மவர்கள் ஏனோ அவர்கள் இருவரும் பெற்றா வழங்களுக்கு அவர்களுக்கு அமைந்த அற்புதமான பெண் தோழியரும் காரணம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

இப்படியான சமுதாய நிர்ப்பந்தங்களுக்கு வளாஇந்து கொடுக்காமல் கல்லூரி நாட்களில் நெருக்கமாக பழகிய (இந்த நெருக்கமாக என்பதை கூட வேறு அர்த்தத்தில் தான் சமுதாயம் பார்க்கும்) தோழனும் தோழியும் அவர்கள் குடும்பங்களாலேயே மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டு இருவரும் கண்டால் கூட கதைக்கக்கூடாது என ஆயுத முனையில் மிரட்டப்பட்டதை நன்றாக அறிந்தவன் நான்.

தொட்டாசிணுங்கி படத்தை முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் பார்த்துவிட்டு அதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது எனது நன்பன் ஒருவன் இந்த நட்பு நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று கூற நான் சாத்தியம் என்று கூறினேன். இதற்காக பந்தயமும் பிடித்தோம். இப்போது அவன் மணந்திருப்பது எனது சினேகிதியை, எம் நண்பன் ஒருவனின் சகோதரியை. மீண்டும் அவனை நேரில் காணும்போது அவனிடம் கேட்கவேண்டும்; அது சாத்தியமா இல்லையா என்று.

4 comments:

Prabhu Rajadurai said...

"அது சாத்தியமா இல்லையா என்று"
சாத்தியம் இல்லை என்றுதான் தோன்றுகிறது...

அருண்மொழிவர்மன் said...

என்னை பொறுத்தவரை அது என்றும் சாத்தியம்... ஆனால் அவனது கருத்து தான் நான் வினவி நிற்பது...

Gunalan G said...

இதில் கடைசிப் பந்தியில் சொல்லப்படும் நண்பன் என்னும் தொப்பியை தலையில் போட்டுக் கொண்டு பதில் சொல்லும் பணியை அருண்மொழி எனக்கு தந்திருக்கிறார். சாத்தியம் தான் நண்பனே...

அருண்மொழிவர்மன் said...

அது நீயேதான். நான் கனடா வந்தபின்னும், எமது காதலியரை பற்றி முதன்முதல் கதைத்தபோதும் இது பற்றி ஞாபகப்படுத்தி இருக்கிறோம்

Post a Comment