Saturday, October 14, 2006

பாலகுமாரன்: கம்யூனிஸ்ட்; எழுத்தாளர்; சித்தர்


அண்மையில் மீண்டும் ஒருமுறை பாலகுமாரன் எழுதிய இரும்புக் குதிரைகள் என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது பாலகுமாரன் மீது லேசான கோபம் வந்தது; ஏன் இவர் இப்படியான புத்தகங்களை இப்போது எழுதுவது இல்லை. அதிலும் அந்த குதிரை கவிதைகள்.

குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய் பறவை போல
இலக்குகள் குதிரைக்கில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர…
……………………………..
………………………………….
இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்.

என்று அவர் எழுதிய குதிரை கவிதைகள் எமது பதின் வயதுகளில் எம்மிடையே மிகப்பிரபலம். அதிலும் யுத்தம் காரணமாக புத்தகங்கள் தட்டுபாடான யாழ்ப்பாணத்தில் எனது பெரியப்பா மூலமாக எனக்கு நிறைய புத்தகங்கள் கி
டைப்பதால் எனது நண்பர்களுக்கோ எனக்கோ புத்தகங்களுக்கு தட்டுபாடு கிடையாது. அப்படியான நேரத்தில் எனக்கு பாலகுமாரனை அறிமுகம் செய்தவன் எனது நண்பன் தயாபரன். அவன் மூலமாக அவரது நெல்லுக்கு இறைத்த நீர் வாசித்து அதன் பாதிப்பில் தொடர்ந்து பாலகுமாரன் புத்தகங்களாக வாசித்து தள்ளதொடங்கினேன்.

பாலகுமாரனின் படைப்புகளை தொடர்ந்து தீவிரமாக படித்துவருபவன் என்ற அளவில் அவரது படைப்புகளை ஆரம்பகாலம், இடைக்காலம், தற்காலம் என்ற அளவில் பெரிய வித்தியாசங்களை காணலாம்.

ஆரம்பகாலங்களில் முற்போக்கான எண்ணங்களுடன் கம்யூனிச சிந்தனை பெண்விடுதலை என்கிற அளவில் எழுதிய மெர்க்குரிப் பூக்கள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், அகல்யா, ஆசை எனும் வேதம், தாயுமானவன் என்று அவர் எழுதிய நாவல்கள் நல்ல தரத்தில் இருந்தன. அவருடைய இரும்புக்குதிரைகள் நாவலில் வருகின்ற தாரணி, கௌசல்யா, காயத்ரி என்கின்ற மூன்று பெண்களுமே சாதாரண இல்லத்தரசி, முன்னேறும் வேகமும், துணிச்சலும் கொண்ட பெண், மரபுகளை மதியாத, அவற்றை உடைத்தெறியும் வேகம் கொண்ட புதுமைப்பெண் என்கின்ற மூன்று நிலைகளில் காட்டப்பட்டு இருப்பார்கள். கதையின் நாயகனான விஸ்வநாதனோ இலக்கிய தேடலும் கவிதை எழுதும் மோகமும் கொண்ட, ஆனால் குடும்பவாழ்வின் சுமைகளில் மூழ்கிப்போனவனாக சித்திரிக்கப்பட்டிருப்பான்.

இதைப்போலவே மெர்க்குரிப்பூக்கள் நாவலும் கம்பனி ஒன்றில் நிகழும் ஸ்ட்ரைக்கில் கொல்லப்பட்ட் தொழிலாளியயும், அதே கம்பனியில் வேலை செய்த அயல்வீட்டுப்பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்த இளைஞனும் இவர்கள் இருவரையும் சுற்றிய நிகழ்வுகளிலும் கதை பின்னப்பட்டிருக்கும். இந்த கதையை தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே எழுதவதாயும் அவர் தனது சுயசரிதமான முன்கதை சுருக்கத்தில் கூறி இருந்தார். இந்த காலகட்டங்களில் அவர் ட்ராக்டர் கம்பனியில் வேலை செய்து கொண்டே எழுதியிருந்தாலும் அவரது படைப்புகள் நல்ல தரத்தில் இருந்தன.

இதற்கு பின்னர் அவர் சினிமா ஆசையில் உத்தியோகத்தை உதறிவிட்டு K பாலசந்தரிடம் உதவி இயக்குனராக சிந்து பைரவி, புன்னகை மன்னன் போன்ற படங்களில் பணியாற்றினார். அக்கால கட்டங்களில் அவருடன் சக உதவி இயக்குனராக வேலை செய்தவர்கள் தான் சுரேஷ் கிருஷ்னா (பாஷா, வீரா, பாபா, ஆளவந்தான்) வஸந்த் (கேளடி கண்மனி, ரிதம், ஆசை, நேருக்கு நேர்). பின்னர் பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு என்கிற படத்தை இயக்கினார். படம் மாபெரும் வெற்றி பெற்றாலும் அந்த படத்தில் ஏற்பட்ட கசப்பு அனுபவங்களால் அதற்கு பின்னர் எந்த ஒரு படத்தையும் இவர் இயக்கவில்லை. (ஆனால் பல படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அண்மையில் கூட புதுப்பேட்டை, மன்மதன் படங்
களில் வசனங்கள் பாராட்ட்ப்பட்டன.) ஆனால் திரை துறையில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படியில் நிறைய நாவல்களை எழுதினார். ஆனால் இந்த நேரத்தில் தான் அவரது நாவலின் தரம் குறைய தொடங்கியது என்றும் சொல்லலாம். எழுத்தையே முழு நேர தொழிலாக கொண்டதால் நிறைய எழுதும்படி ஏற்பட்ட கட்டாயமும் இதற்கு காரணமாய் இருக்கலாம்.

அதே சமயத்தில் யோகி ராம்சுரத்குமாரடன் ஏற்பட்ட அறிமுகமும் ஆன்மிகத்துடன் எற்பட்ட அதீத ஏடுபாடும் கூட அவரது எழுத்தை பாதித்தது என்றே சொல்லவேண்டும். இக்கால கட்டத்தில் விதுரன் கதை, க்ருஷ்ண அர்ச்சுணன், முதிர் கன்னி, பழமுதிர்குன்றம், தங்கத்தாமரை போன்ற சில நல்ல படைப்புகளை படைத்திருந்தார். ஆனால் ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாளராக, முற்போக்காளராக அறியப்பட்ட பாலகுமாரன் அதன் பின்னர் காணாமல் போய்விட்டர். இதன் பின்னர் இந்துத்துவ கருத்துகளை மிக வேகமாக பரப்பவே முற்பட்டார். அதே போல அவரது சோழர்கள் மீதான ஈடுபாடும் அவரது நாவல்களில் வெளிப்படையாக தெரிந்தது. அதே போல அவர் தன் நாவல்களில் வரும் கதா பாத்திரங்களை தொடர்ந்து தெளிவானவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் காட்டிக்கொண்டார். தமிழ்மொழி ஆர்வம் தியானம் போன்ற விடயங்களை பரப்பும் முயற்சியில் இவர் பங்களிப்பு தந்திருந்தாலும் கதைகளில் திரும்ப திரும்ப அது கூறப்பட்டபோது சலிப்பே தோன்றியது. மேலும் ஒருகாலத்தில் தன்னை கம்யூனிஸ்ட்டாக காட்டிக்கொ
ண்ட இவர் பின்னர் வெளிப்படையாகவே தன் பிராமண ஆதரவை காட்டிக்கொண்டார். அதேபோல அண்மையில் எழுதிய “குருவழி” என்கிற புத்தகத்தில் ஒருகாலத்தில் தன்னை வழிகாட்டியதாக கூறிய அயன் ராண்ட் இன் கருத்துக்களையே முட்டாள்தனமானவை என்று கூறி, தொடர்ந்து அதுவே வளர்ச்சி என்றும் கூறிக்கொண்டார்.

முன்பொருமுறை முன்கதை சுருக்கம் என்று இவர் எழுதியதற்கும் இப்பொது எழுதி வரும் சுயசரிதமான காதலாகி கனிந்துவுக்கும் இடையிலேயே எத்தனையோ வெளிப்படையான வித்தியாசங்கள். அது மட்டுமல்லாமல் அவர் அண்மையில் எழுதிய ஏழாவது காதல், அப்பம் சடை தயிர் சாதம், உடையார், காதல் சிறகு போன்றவை கூட இவரது ஆரம்ப காலங்கள் போல அமையவில்லை. கிட்ட தட்ட பாலகுமாரனின் 100 புத்தகங்களை ஒரு பொக்கிஷம் போல வைத்திருக்கும் என்போன்ற தீவிர பாலகுமாரன் வாசகர்களுக்கு இது ஒரு இழப்பு தான்.

15 comments:

Anonymous said...

மனிதனின் வாழ்க்கையை இரண்டு பகுதிகளாகப் பார்க்க வேண்டும். 40 வயது வரை - அத்ற்குப்பிறகு உள்ள பகுதி
40 வயதுவரை உள்ள வேகம், எழுச்சி, தார்மீகக் கோபம் எல்லாம், இரண்டாவது பகுதியில் அதாவது 40 வயதிற்குமேல் விவேகமாகவும் சாந்தமாகவும் மாறிவிடும்.
பாலகுமாரன் மட்டும் அதற்கு - அந்த மாற்றத்திற்கு விதி விலக்கா என்ன?

அருண்மொழிவர்மன் said...

உண்மைதான் . ஆனால் மற்ற எழுத்தாளர்களை போல அல்லாது வாசகர்களால் ஒரு வழிகாட்டி, குரு என்ற ரீதியாக மதிக்கப்படுபவர் பாலகுமாரன். ஆனால் அவரது அண்மைய படைப்புகள் ஏமாற்றாத்தை தான் தருகின்றன

manasu said...

உங்கள் எண்ணம் தான் எனக்கும். நான் உள்ளம் கவர் கள்வனில் ஆரம்பித்து.... நீங்கள் சொன்ன எல்லா நாவல்களும் படித்துளேன். குதிரை கவிதை கூட எழுதியதுண்டு. இரும்பு குதிரைகள் ராவுத்தர விட்டுட்டீங்களே....நல்ல பாத்திர படைப்பு. பச்சை வயல் மனது, கரையோர முதலைகள், சின்ன சின்ன வட்டங்கள். இனிது இனிது காதல் இனிது.... என நிறைய

மா சிவகுமார் said...

அருண்மொழி,

நல்ல அலசல். நீங்கள் சொன்ன முதல் கட்டத்தை ரசித்தவர்களில் நானும் ஒருவன். அப்புறம் வந்த ஆன்மீகக் கட்டம் தனது எழுத்து திறமையைப் பயன்படுத்தி நம்மை ஏமாற்றுவது போன்ற உணர்வை உருவாக்கியது. இப்போதெல்லாம் புதிய படைப்புகளை படிப்பதையே தவிர்த்தாயிற்று.

நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

True,

He keep repeating the same topics again and again. A consistent reader can now predict what he is going to write next.

- BK Fan.

அருண்மொழிவர்மன் said...

மனசு அவர்களே
நன்றி

இரும்பு குதிரைகளில் எனக்கு பிடித்த இன்னொரு பாத்திரம் நாணு வாத்தியார். அதேபோல விஸ்வநாதனுக்கும் காயத்ரிக்குமான அந்த விவாதம்...

நீங்கள் இனிது இனிது காதல் இனிது பற்றி கூறினீர்கள் அதே பாணியில் இப்போது இதுதான் வயசு காதலிக்க என்று எழுதினார். ஆனால் பழைய கட்டுமானம் இப்போது இல்லை

அருண்மொழிவர்மன் said...

சிவக்குமார்
நன்றி
அவரது ஆன்மீகம் பற்றிய சமீபத்திய எழுத்துகளில் எனக்கும் கிட்டதட்ட அதே அபிப்பிராயம் தான். கடலோரக் குருவிகளில் வரும் பெரியவர் எவ்வளவு தீர்க்கமாக ஆன்மீகம் பேசினார். ஆனால் இப்பொதைய பாத்திரங்களில் அப்படியான தெளிவு கிடையாது

Anonymous said...

அருண்மொழி..நானும் எனது இருபதின் ஆரம்பத்திலிருந்து இன்று முப்பதின் துவக்கம் வரை சுமார் 11 ஆண்டு காலமாய் பார்த்த பாலகுமாரன் என்கொன்றும் வித்தியாசமாய் படவில்லை. ஒரு படைப்பாளி என்ன படைப்பது என்பது அவனது தனிப்பட்ட சுதந்திரம்.நாங்கள் எல்லோரும் சொல்வதைப் போல் குருவை விமர்ச்சிக்கத் தேவையில்லை.

அவரது இருபது-முப்பது வயது அனுபவம் ஓடல்,ஊடல்,கூடல் மற்றும் சாடல் சார்ந்த கதைகளும் சரி பின் வந்த உள் தேடல் கதைகளும் சரி..அவரது வழக்கமான பாணியாக மட்டுமே எனக்குப்பட்டது.
அதுவும் அவரது உடையார் என்னை மிகவும் கவர்ந்தது. கல்கி என்ற மிகப்பெரிய ஜாம்பவான் தொட்ட ஜெயித்த ஒரு விடயத்தை எடுத்தாழ்வெதென்பதே மிகப்பெரிய பொறுப்பு...
அதனை மிக அழகாய் வென்றார் அவர்.
அவர் கண்டுத்த அவர் சொந்த முத்து அவரது குரு...அதை மற்றவற்றைபோல் அல்லாது மற்றவர்க்கும்...பெறுக இவ்வையகம் என அவர் அளிக்க விழைந்தார் இதில் என்ன தவறு..

ஆயினிம் அந்தக்குதிரை கவிதைகள் எனக்கும் பிடிக்கும் ..அதை விட கரையோரமுதலைகள் கவிதை படித்திருக்கிறீரா...

பார்த்தீர்களா...அன்பானவரைப் பற்றிப்பேச ஆரம்பித்தால் ஒரு நீண்ட கதை ஆகிவிட்டது..ஆயினும் மகிழ்ச்சி..நன்றி.அருண்மொழி
tamizi

அருண்மொழிவர்மன் said...

tamizi
நானும் பாலகுமாரனை குருவாக ஏற்றுக்கொண்ட பலரில் ஒருவன் தான். ஆனால் எழுத்து என்று பார்க்கும்போது தற்போது கிட்ட தட்ட ஒரு தேக்க நிலையில் தான் உள்ளார். அவரது வேட்டை கதையில் எல்லம் அந்த முடிவு எவ்வளவு யதார்த்தம் என்பது கேள்விக்குறி தான்

murali said...

ஐயா நன்றி,
எழுத்துச் சித்தரை பற்றி பதிவிட்டதுக்கு.பாலகுமாரனின் எழுத்துக்கள் வாசகனை உரு மாற்றக் கூடிய வல்லமை படைத்தது.சத்தியம் நிரம்பிய எழுத்துக்கே இது சாத்தியம்.

அவரது ஆக்கங்களில் தென்படும் மாற்றங்கள், அவர், அவருள் மாறியதால், இயல்பாகவே ஏற்பட்டதாகவே கருதுகிறேன்.

அவரால் இன்னோரு மெர்குரிப் பூக்களோ, இரும்பு குதிரையோ படைக்க முடியும் என தோன்றவில்லை. அது அவசியமும் இல்லை.

அவர் ஒரு காவியம் படைக்க வேண்டும். அந்த பலம் இன்றைய தமிழக எழுத்தாளர்களில் அவரிடம் மட்டுமே உள்ளதாக நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

buginsoup said...

பலாமரம் படித்திருக்கிறீர்களா? சிறுவர் சீர்திருத்தப்பள்ளிப்பள்ளியை கண் முன் கொண்டுவந்து நிறுத்துவார். அதைப்படித்த 14-காம் வயதில் மனதைப்பிசைந்தது. யாரவது அப்புதினத்தை திரைப்படமாக்கமட்டார்களா என்று விரும்பினேன்.
அந்த பாலகுமாரன் இப்போது இல்லை!

அவரது தற்போதய எழுதுக்களை படிப்பதில்லை.

அருண்மொழிவர்மன் said...

ஆம் படித்திருக்கிறேன்
ஆனால் நான் திரைப்படமாக்கப்படுமா என்று அதிகம் ஏங்கியது அவரது பயணிகள் கவனிக்கவும், சிநேகமுள்ள சிங்கம் இரண்டிலும்தான்

தமிழ் விரும்பி said...

Arunmozhi Arivathu,
Ithu ellorai porutha varai mikaperiya sikkalthan. Oruvar karuthiyal sarnthu thannudaiya sinthanaikalai solla varukinra pothu kala neroddathil avar sinthanaikal mattapadum. Ithe ponra oru pirachinai Perasiriyar ka.Sivathampi Iyavitkum kampavarithi E.Jeyaraj itkum idaiyil elunthathu. Unkalai polave Kampavarithi Sivathampi Iyavai niraiyave sadinar. Karuthukal,Sinthanaikal marukinrana enru. Oruvar ore karuthudan than vala vendum enrum koorinar. Aanal Sivathampi iyavo athai maruthar. Kalathitketpa karuthum marupadawenum. Ithil nanum konjam udan padukiren. Neenkal Eppadiyo theriyathu. Ithatku sanraka, Kavyarasu Kannathasan, Jeyakanthan Ponravarkali kollalam.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம்

மாற்றங்கள் ஒன்றூதான் இங்கு மாறாமல் இருப்பது என்பதில் அசையாத நம்பிக்கை உடையவன் நான். அந்த மாற்றங்களுக்காக நான் அவரை வமிர்சிக்கவில்லை. ஆனால் அந்த மாற்றங்கள் சிறிது பிற்போக்காக மாறுவதுதான் எனது கவலை. மேலும் இப்போது அவர் எழுதும் நாவல்களிலும் கட்டுரைகளிலும் பழைய கட்டுமானமும் இல்லை.
அத்துடன் அவர் எழுதிய வாழ்க்கை வரலாறிலும் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன. இவைதான் எனது கருத்துகள்.

அது மட்டுமல்லாமல் இவர் ராஜ ராஜ சோழன் வரலாறை உடையார் என்றா பெயரில் எழுதும்போது கல்கி போல கற்பனையை கலவாமல் நிஜ வரலாறாகவே எழுதுகிறேன் என்றும் கூறினார். ஆனால் அதில் ஆதித்த கரிகாலன் கொலை, அருண்மொழிவர்மன் அரியணாஇ ஏற்றம் போன்ர இடங்கள் எதுவிதமான வரலாற்று ஆதாரமும் இல்லாதவை

Jaikanth said...

எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

வலைதள முகவரி:
http://www.balakumaaran.blogspot.com/

ஓர்குட் முகவரி:
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=30823748

Post a Comment