Thursday, March 24, 2011

மானமிகு கலைஞர் சரணாகதி



- எழுதியவர் ஞாநி ( கல்கி 12 மார்ச் 2011)

தன்னுடைய 75 வருடப் பொது வாழ்க்கையின் இறுதியில் இத்தனை பெரிய அவமானத்தை கலைஞர் கருணாநிதி சந்தித்திருப்பது பரிதாபமாகத்தான் இருக்கிறது. அரசியல் சாணக்கியர், ராஜதந்திரி என்றெல்லாம் புகழப்பட்டவரின் அரசியல் கணக்கு அவர் பேரன் வயதில் இருக்கும் ராகுல் காந்தியிடம் அடி வாங்கியிருக்கிறது.
எப்போதும் கண்ணியமாக நடந்துகொள்கிற கூட்டணித் தலைவரான சோனியாவிடம் இதுவரை மிரட்டியே காரியம் சாதித்து வந்த கருணாநிதிக்கு, இனி அந்த மிரட்டலகள் வேலை செய்யாது என்பது எப்படி புரியாமல் போயிற்று என்றுதான் புரியவில்லை. எத்தனை மந்திரி பதவி வேண்டும், யார் யாருக்கு எந்த இலாகா ஒதுக்கப்படவேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு முறையும் காங்கிரசை மிரட்டியே சாதித்து வந்திருக்கிறது தி.மு.க. இந்த முறை முடியவில்லை.
அறுபது இடம் வரையில் தர ஒப்புக் கொண்டோம். அதற்குப் பின்னர் இன்னும் மூன்று கேட்டால் எப்படி நியாயம் ? அதுவும் எந்தெந்த தொகுதி என்பதை அவர்களே முடிவு செய்யவேண்டுமென்று சொன்னால் எப்படி என்று ஒரு புலம்பல் அறிக்கை வெளியிட்டுவிட்டு அமைச்சரவையிலிருந்து விலகுகிறோம் என்று மிரட்டல் ஆயுதத்தைக் கருணாநிதி கையில் எடுத்தபோது, பழைய காங்கிரசாக இருந்திருந்தால் நிச்சயம் பயந்திருக்கும்.
இந்த முறை காங்கிரஸ் தி.முகவின் மிரட்டல்களுக்கு பயப்படப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக இருந்தன. ஆனால் அவை எதுவும் அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்கு உறைக்கவே இல்லை. முதல் கட்டப் பேச்சு வார்த்தைகளுக்கு வந்த காங்கிரஸ் குழுவில் தி.மு..கவுக்கு ஜால்ரா போடும் தங்கபாலுவை விட ப.சிதமபரத்துக்கே முக்கியத்துவமும் அதிகாரமும் இருந்ததை நடத்திய பேச்சிலேயே தி.மு.க உணர்ந்திருக்க வேண்டும். டெல்லிக்குச் சென்று சோனியாவிடம் தகவல்களைப் பரிமாறும்போதும், தங்கபாலு, குலாம் நபி ஆசாத் போன்ற தி.மு.க ஆதரவு நபர்கள் பின் தள்ளப்பட்டனர். முன்பிருந்திராத அளவு ஒவ்வொரு கட்டத்திலும் ராகுல் காந்தியின் பங்களிப்பு இந்த முறை அதிகரித்திருந்ததையும் தி.மு.க கவனிக்கத் தவறிவிட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக கருணாநிதியின் தி.மு.க மத்திய அமைச்சர்கள் ராஜினாமா மிரட்டல் அறிவிப்பு வெளியானபிறகு டெல்லி காங்கிரஸ் தலைமையிடமிருந்து துளிக் கூட சலனமே இல்லை. பழைய நிலையில் காங்கிரஸ் இருந்திருந்தால், அடுத்த விமானத்தில் குலாம் நபி ஆசாத் சென்னை வந்திருப்பார். பிரணாப் சென்னை வருகிறார், ஆசாத் சென்னை வருகிறார் என்று தி.மு.க தரப்பிலிருந்து பல்வேறு தொலைக்காட்சி சேனல் நிருபர்களிடம் சொல்லி செய்தி வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் காங்கிரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை.
பிரதமரை சந்திக்க அழகிரி, தயாநிதி முதலியோர் நேரம் கேட்டதும், பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கிவிட்டது. அதற்கு என்ன அர்த்தம் என்று தி.மு.கவுக்கு அப்போதுதான் உறைத்தது. நீங்கள் வந்து ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துவிட்டுப் போகலாம் என்பதுதான் அதன் அர்த்தம். ராஜினாம செய்வோம் என்று மிரட்டிக் கொண்டிருப்பது வேறு. கடிதத்தைக் கொண்டு போய் தருவது வேறு. எனவே தி.மு.க தரப்பிலிருந்து பிரணாப் முகர்ஜி மூலம் சமரசத்துக்கு கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது
சோனியாவை அழகிரியும் தயாநிதி மாறனும் சந்தித்தபோது எல்லாம் மிகத் தெளிவாக தி.மு.கவுக்கு புரிந்தது. முன்பு போல இனி காங்கிரசை மிரட்ட முடியாது. ஆட்சி கவிழ்ந்தாலும் சரி, எனக்குக் கவலையில்லை. ஏழாண்டுகளாக உங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் இப்போது எங்களை மிரட்டுவதை சகிக்க முடியாது என்று சோனியா தெளிவாக சொல்லிவிட்டார். மிரட்டலுக்கெல்லாம் இனி பயப்படமாட்டோம் என்று டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை சொன்ன அடுத்த நிமிடமே வாலைச் சுருட்டிக் கொண்டு காங்கிரஸ் சொன்னதற்கெல்லாம் ஒப்புக் கொண்டுவிட்டது தி.மு.க.
வீரமணி வர்ணிப்பில் மானமிகு கலைஞர் கருணாநிதியாக இருந்தவர் இப்போது அவமானமிகு கலைஞர் சரணாகதியாகிவிட்டார்.
தன் வழக்கமான வார்த்தை விளையாட்டுகளின் மூலம் தன் முகத்தில் கரி பூசப்பட்டதை மறைக்க முயற்சிக்கிறார் கலைஞர் சரணாகதி. காங்கிரசுக்கு 63 சீட்டுகள் கொடுத்ததை 63 நாயன்மார்களுடன் ஒப்பிட்டு அவமானத்திலிருந்து பத்திரிகையாளர்களின் கவனத்தை திருப்ப முயற்சிக்கிறார்.
‘விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் தோழமை உணர்வுடனும்’ இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இப்போது சொல்கிறார். ஏன் இந்த மனப்பான்மையும் உணர்வும் மூன்று தினங்கள் முன்னால் இல்லாமல் இப்போது முளைத்தன என்பதை அவரால் விளக்க முடியாது. தேவையில்லாமல் பத்திரிகைகள் விஷமம் செய்தன என்று குற்றம் சாட்டுகிறார். உண்மையில் பத்திரிகைகளும் சேனல்களும் தி.மு.க பிரமுகர்கள் ஆஃப் தி ரிகார்ட் என்று சொல்லி வரவழைக்க முயன்ற பொய்ச் செய்திகளையெல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தன என்பதுதான் உண்மை. காங்கிரஸ் தரப்பிலிருந்து எதுவும் வரவில்லை.
தி.மு.க மிரட்டல் ஆயுதத்தைக் கையில் எடுப்பதற்கு முன்னால் காங்கிரஸ் என்ன கேட்டதோ அதையேதான் இப்போது தந்திருக்கிறது. மொத்தம் 63 தொகுதிகள். எந்தெந்த தொகுதிகள் என்பதையும் காங்கிரஸ் தேர்வு செய்யலாம். ஆட்சியில் பங்கு பற்றி பகிரங்க அறிவிப்பு இல்லாவிட்டாலும், அதற்கும் உடன்பட்டே ஆகும் நிலை. போட்டியிடும் 121 தொகுதிகளில் 118 தொகுதிகளில் தி.மு.க வென்றால் மட்டுமே தனித்து ஆட்சி அமைக்க முடியும். அதற்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை. எனவே ஆட்சி அமைத்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கூட்டணிக் கட்சிகளுக்குமே ஆட்சியில் பங்கு தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
தி.மு.கவின் மிரட்டல்கள் இந்த முறை புஸ்வாணமானதற்குக் காரணம் என்ன ?
கலைஞர் சரணாகதியின் வீட்டுக் கதவையே சி.பி.ஐ தட்டும் நிலைக்குக் கொண்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். தி.மு.கவின் அரசியல் வாழ்க்கையை கி.மு. கி.பி போல ஸ்.மு., ஸ்.பி என்று பிரித்துப் பார்க்கலாம். ராசா பதவி நீக்கப்பட்டதை முதலில் சகிக்க வேண்டியிருந்தது. அந்த இடத்தில் இன்னொரு தி.மு.க அமைச்சர் நியமிக்கப்படாததை சகிக்க வேண்டியிருந்தது. ராசா கைது செய்யப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஈழத் தமிழர் பிரச்சினைக்கெல்லாம் கூட அதிகபட்சம் சில மணி நேர உண்ணாவிரதம்தான். அப்போதெல்லாம் பிரயோகிக்காத ராஜினாமா மிரட்டலை இப்போது தி.மு.க தலைவர் பயன்படுத்திப் பார்க்கக் காரணம் என்ன ?
அடுத்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை மும்பை கம்பெனியிடமிருந்து கடனாகப் பெற்ற கலைஞர் டி.வியின் இயக்குநர்களான தயாளு அம்மாளுவும் கனிமொழியும் இருக்கிறார்கள். இந்த நெருக்கடிச் சூழலில் தொகுதிப் பங்கீட்டை பேரமாக்கி குடும்பத்தைக் காப்பாற்ற தி.மு.க தலைவர் செய்த முயற்சிகள் விபரீதமாகிவிட்டன.எல்லாம் நலமாக முடிந்துவிட்டது எனக்கு மகிழ்ச்சிதான் என்று கலைஞர் சரணாகதி சொன்னாலும், விளைவுகள் என்ன ?
சராசரி தி.மு.க தொண்டன் தன் தலைவர் மீதும் சரி, காங்கிரஸ் மீதும் சரி கடும் எரிச்சலில் இருக்கிறான் என்பதுதான் நிஜம். தன் குடும்ப நலனுக்காக கட்சியைத் தலைவர் காங்கிரசிடம் விற்றுவிட்டார். ஈசன் சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்டது போல காங்கிரஸ் கேட்டது. சொந்தப் பிள்ளையைக் காப்பாற்ற, கழகம் என் குடும்பம் என்று சொல்லிவந்த தலைவர், கழகக் குடும்பத்தைக் கறி சமைத்துக் காங்கிரசுக்குப் பரிமாறிவிட்டார். 44 வருடங்களாக எங்களை அண்டிப் பிழைத்த கட்சி எங்களை இப்போது மிரட்டுவதா என்று கொதிப்படைந்திருக்கும் தி.மு.க தொண்டன் நிச்சயம் 63 தொகுதிகளில் காங்கிரசின் வெற்றிக்காக அரும்பாடெல்லாம் படப் போவதே இல்லை.
மறுபக்கம், காங்கிரஸ் கட்சிக்குள் ஏழாண்டு காலமாக இருக்கிற அதிருப்தி இப்போது 63 சீட் அறிவித்ததால் தீர்ந்துவிடவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலினால் தமிழ்நாட்டில் மட்டும்தான் தி.மு.கவுக்கு இழப்பு. காங்கிரசுக்கோ அனைத்திந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கு எதிராக ஸ்பெக்ட்ரம் ஊழல் எதிர்க்கட்சிகளால் பெரிதுபடுத்தப்படுகிறது. தி.மு.கவைக் கழட்டி விட்டிருந்தால் இந்த பழியிலிருந்து தப்பித்திருக்கலாம் என்றே இளைஞர் காங்கிரசினர் நினைக்கிறார்கள். ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடங்கியபோதே நீட்டிய ஆதரவுக்கரத்தை அப்போதே பற்றியிருக்கலாம் என்று நினைக்கும் காங்கிரசார் தேர்தலில் தங்கள் தொகுதிக்கு வெளியே தி.மு.கவுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.
கலைஞர் சரணாகதியின் சரணாகதியால் தி.மு.கவுக்கு ஏதாவது உடனடி லாபம் என்றால் அது ஒன்றே ஒன்றுதான். காங்கிரஸ் அ.தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்துவிடாமல் தடுக்க முடிந்திருக்கிறது. அப்படி ஒரு கூட்டு ஏற்பட்டிருந்தால், தேர்தலில் தி.மு.கவின் நிலை இன்னும் சிக்கலாகிவிடும்.
தி.மு.க, காங்கிரஸ் தொகுதி உடன்பாடு சிக்கல் இருவருக்கும் உணர்த்தும் முக்கியமான உண்மை ஒன்று பாக்கி இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் நீரா ராடியா போன்ற தரகர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதுதான் அது ! நீரா ராடியா இருந்தவரையில் இருதரப்பு பேரங்களும் பரஸ்பரம் சுமுகமாகவே நடந்திருக்கின்றன. இந்த முறை ஒரு நீரா ராடியா இல்லாதது எவ்வளவு பேரிழப்பு தி.மு.கவுக்கு !
இந்த வாரப் பூச்செண்டு
முதல் முறையாக கூட்டணி அரசியலில் உறுதியாக செயல்பட்டிருக்கும் சோனியா காந்திக்கு.
இந்த வாரக் கொடுமை
தாமஸ் மீது ஊழல் வழக்கு இருப்பது எனக்கு அவரை கண்காணிப்பு ஆணையராக நியமிக்கும் வரை தெரியாது – பிரதமர் மன்மோகன்சிங்.

2 comments:

Anonymous said...

அரசியலின் இன்றைய உண்மை நிலையை விளக்கியிருக்கிறார். கடைசியாக 'சிங்' என்றால் யார் எனத்தெரியாது என மன்மோகன் சிங் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

...αηαη∂.... said...

//தாமஸ் மீது ஊழல் வழக்கு இருப்பது எனக்கு அவரை கண்காணிப்பு ஆணையராக நியமிக்கும் வரை தெரியாது – பிரதமர் மன்மோகன்சிங்.///

அவருக்கு சொன்னா தான தெரியும்..,

Post a Comment