அப்போது இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் தங்கி இருந்தோம். நாளை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்வு. பாடசாலைகள் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த பெரும்பாலான மக்கள் வடமராட்சியிலும், தென்மராட்சியிலும் இருந்த வீடுகளில் அடைக்கலம் அடைந்திருந்தனர். அப்போது நான் இருந்த வீட்டில்தான் பதிவர் புல்லட்டும் தங்கி இருந்தார். அதே போல கதியால் என்ற பெயரில் பதிவெழுதுபவர் மிக நீண்டகாலமாக என் ஆக நெருங்கிய நண்பர் ஆதலால் அவரும் ஒவ்வொரு நாளும் வீட்ட வந்து விடுவார். 90முதலே யாழ் குடா நாட்டில் மின்சாரம் இருக்கவில்லை. பாடசாலைகள் வேறு இருக்கவில்லை. பொழுது போவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. பாடல்கள் மட்டுமே எப்போதும் துணை செய்தன. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பின் காலை நிகழ்ச்சிகள் எப்போதும் எம் காலை நேர நண்பன். நல்ல வேளை, இலங்கை வானொலி ஒலிபரப்புகளைக் கேட்கக் கூடாது, அப்படி கேட்பவன் துரோகி என்று அப்போது யாரும் புறப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் யாழ் குடாநாட்டு மக்கள் பலாலியில் இருந்து ஒலிபரப்பாகும் எஃப் எம் ஒலிபரப்பு நிகழ்வுகளைக் கூட கேட்டு ரசிக்கவே செய்தனர்.
அந்த நேரங்களில் எஸ் பி. பாலசுப்ரமணியமும் ஜானகியும் இணைந்து சற்று விரகத்துடன் பாடும் பாடல்களுக்

திரைப்படங்களில் ஏதாவது முக்கிய சம்பவங்கள் நடைபெறும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாடலைத் திரும்ப திரும்ப காட்டுவார்கள். இதெல்லாம் சினிமாத்தனம் என்றுதான் நாம் பெரும்பாலும் நினைத்திருப்போம். ஆனால் சினிமாவைவிட நம்ப முடியாத நிகழ்வுகள் வாழ்க்கையில்தான் அதிகம் இடம்பெறுகின்றன. அச்சமில்லை அச்சமில்லை என்ற இந்திரா திரைப்படப் பாடலை நான் கேட்ட பெரும்பாலான சந்தர்ப்பங்களும் அது போன்ற அதிசயம்தான். வாழ்வில் நெருக்கடி மிகுந்து, அடுத்தது என்னவென்று தெரியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் இருந்து இந்தப் பாடலை காலம் எனக்காக ஒலிபரப்பும். 95ல் யாழ்ப்பாணத்தை விட்டு, பெற்றோர்கள், தம்பி, தங்கை எல்லாம் கொழும்பு சென்றிருக்க, நானும் ஒரு தம்பியும் (எனக்கு 16 வயது அவனுக்கு 13 வயது) 16 மைல் தூரத்தை இரண்டு நாட்களாக நடந்து கொடிகாமம் வந்து சேர்ந்த அன்று இந்தப் பாடலைக் கேட்டேன். பின்னர் கொடிகாமத்தில் இருந்து ராணுவக் கட்டுபாட்டு யாழ்ப்பாணத்துக்குச் செல்கையில் இதே பாடலைக் கேட்டேன். இது போல தனியாக இந்தியா சென்று தனியறையில் படுத்து இருந்த ஒரு இரவில், கனடா வந்தபின் எல்லா நம்பிக்கைகளும் உடைந்து போய் இருந்த ஒரு மறக்க முடியாத இரவில் என்று எத்தனையோ பொழுதுகளில் காலம் இந்தப் பாடலை எனக்காக பின்னணி இசையாக்கி உள்ளது.
புறா விடு தூது, கிளி விடு தூது, புழுதி விடு தூது என்கிற விடு தூதுகளைப் போல நான் தூது சொல்ல அனுப்பியவையும் பாடல்களே. அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். தோழி ஒருத்தியிடம் மெல்லக் காதலைச் சொல்லவேண்டும். அவளோ நீ யாரைக் காதலிக்கிறாய், யாரைக் காதலிக்கிறாய் என்று அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருப்பவள். உன்னைத்தான் என்று சொல்ல ஆசை, அதைக் கேட்கத்தான் அவளும் ஆசைப்படுகிறாள் என்று நிச்சயம் தெரியும். ஆனாலும் சொல்லத் தயக்கம். அப்போதும் பாடல் தான் துணை வந்தது. உல்லாசம் திரைப்படத்தில் “வீசும் காற்றுக்கு” என்று ஒரு பாடல் வரும். படத்தில் நாயகி மகேஸ்வரி நாயகன் விக்ரமிடம் நீ யாரைக் காதலிக்கிறாய் என்றூ கேட்க, உன்னைதான் என்று சொல்ல முடியாமல் விக்ரம் தவிப்பார். இதையே நானும் பயன்படுத்திக் கொண்டேன். இந்த சமயத்தில்தான் (இந்த நிகழ்வு நடைபெறும்போதுதான்) மின்சாரக் கண்ணா திரைப்படப் பாடல்களும் வெளியாகி ”உன் பேர் சொல்ல ஆசைதான்” பாடல் என் விருப்பப் பாடலாக வீட்டில் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினேன். ஒரு பாடல் கசட்டில் (இசைத்தட்டுகள் எல்லாம் அப்போது அவ்வளவு பிரபலமாகவில்லை) இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து பதிந்து கசட்டுக்கு “யாரோ அவளுக்கு என்று பெயரும் எழுதி அவளிடம் கொடுத்தேன். நான் காதலிக்கும் பெண் யாரென்று இந்தப் பாடல்களில் சொல்லி இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளிடம் வாக்மேனைக் கொடுத்தேன். வீசும் காற்றுக்கு பாடல் ஒலிக்கின்றது. யாரவள் யாரவள் என்று பின்னணியில் ஒலித்த குரல்கள் மெல்ல அடர்த்தியாகிவர, “மேகம் போலே என் வானில் வந்தவளே, யாரோ அவளுக்கு நீதான் என்னவளே” என்று பாடல் ஒலிபரப்பாகும். அடுத்து ஒலித்த உன் பேர் சொல்ல ஆசைதான் பாடலும் அதை உறுதி செய்ய, எதிர்பார்த்த செய்தி, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கிடைத்த பரவசம் அவள் முகத்தில்.
-2-
ஞாபகங்கள் இனிமையானவை. சமயங்களில் அவை கொடுமையானவையும் கூட. மறந்தே தீரவேண்டும் என்று நினைக்கும் சில நினைவுகளை புதைக்கவே முடியாமல் போவது போல துன்பம் வேறில்லை. “மறக்கத்தான் நினைக்கிறேன்” என்று ஒரு வரியில் இதைக் கவித்துவமாகத் தன் கிறுக்கல்கள் புத்தகத்தில் சொல்லி இருப்பார் பார்த்திபன். ஆட்டோகிராப் சினேகா போல ஒருத்தி. புலம்பெயர் வாழ்வின் என் முதல் கட்டத்தில் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்தவள். அலைபாயும் மனத்துடன் நான் தடுமாறும் போதெல்லாம் என்னை நிலையாக்கினவள். என் நண்பன், என்பதைத் தாண்டி, எனக்கு மட்டுமே நண்பன் என்கிற அவள் எதிர்பார்ப்பு சமயங்களில் எரிச்சலூட்டினாலும், ஒ


”மீண்டும், சந்திக்கும் வாய்ப்பு வந்தால் தள்ளி நின்றழுது பார்ப்போம்” - வைரமுத்து
18 comments:
ஐயோ ஐயோ ஐயோ... கொல்றீங்க அருண்....
ஹையோ.., கண் கலங்க வைச்சுடீங்க..., ஹாட்ஸ் ஆப்...
:))
//ஞாபகங்கள் இனிமையானவை//
மீட்டெடுத்த விதமும் பகிர்தலும் அருமை!
தொடருங்கள்...!
கோகுலம் படத்தில் செவ்வந்திப் பூவெடுத்தேன் அதில் உன்முகம் பார்த்திருந்தேன் - இதை இப்ப கேட்டாலும் ஆரம்ப பள்ளிக்காலங்கள் நினைவுக்கு வந்து விடும்.
அதே போல கொடிகாமத்துக்காலங்களை முத்துப் படப்பாடல்கள் ( இது உங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்)
காலங்களை நினைவுறுத்துவதில் ஈழ எழுச்சிப்பாடல்களுக்கும் இடமிருக்கிறது.
96 இறுதிகளில் வன்னியில் இருந்தோம். தூத்துக்குடி திரைகடல் ஓடிவரும் தமிழ்நாதத்தில் 3 தமிழ்பாடல்கள் போடுவார்கள். அதைக் கேட்டுக்கொண்டே கனவில் அவவோடு டூயட் பாடிவிட்டு உறங்குவேன் :)
மீனம்மா உன்னை மழை நனைக்கும் இங்கு எனக்கல்லவா குளிர்க் காய்ச்சல் வரும் :)
மிகப் பிடித்திருந்தது நண்பரே.
இந்தப் பதிவை படித்துவிட்டு மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன்!
ஆகா நல்ல அனுபவங்கள்
நான் பஸ்ஸில் ஒருமுறை போகும் போது லவ் டுடே படத்தில் வரும் " ஏன் பெண்ணென்று பிறந்தாய்" பாடல் ஒலிக்கிறது. இறங்கும் இடம் வந்தப் பின்னும் பாடல் கேட்க வேண்டுமென்பதற்காகவே இரண்டு ஸ்டாப் தாண்டி போய் இறங்கினேன்.
உங்கள் அனுபவங்கள் அருமை. நீங்கள் குழைத்தெடுத்து எழுதிய ஒவ்வொரு சொல்லினும் இனிமை அதனிலும் சிறப்பு. பாராட்டுக்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் அருண்.
பகிர்வுகளுக்கு நன்றி :)
உங்களுக்கு 'வீசும் காற்று' போல எல்லாருக்கும் ஒரு பாடல் இருக்குது;-)
பல இடங்களில் கண்கலங்கிற்று அண்ணா.. சில இடங்களில் பொறாமையாகவும் இருந்தது.. நானும் ஒரு காலத்தில் கச்சேரி லைபிரரியில் படுகிடையாக கிடந்து பாலகுமாரன் புத்தகங்களை வாசித்தவன்தான்..
ஓரு இருள் கவியும் பொழுதில் மெலிதாக ஓடிவரும் நதியின் கரையில் இருந்து என்னைக்கடந்து போன சருகுகளை பார்க்கும் உணர்ச்சி முதுகுத்தண்டூடே பாய்வது போலிருந்தது.. அப்படி ஒரு வடிப்பு.. வாழ்த்துக்கள்..
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா ... ஒத்த புள்ள பெத்தாங்களே அது யாரு ஒங்க அப்பா ... ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா...
நண்பாஆஆஆஆஆ.....!
என்ன சொல்ல...! வார்த்தைகள் இல்லை. விழியோரம் வழியும் துளிகளைத் தவிர்க்க முடியவில்லை. பழையனவற்றை பதமாகவும் பண்பாகவும் தரும் ஆற்றல் உன்னிடமல்லாது வேறெவரிடமும் நான் காணவில்லை. தொடரட்டும் வாழ்த்துக்கள்..!!
டிஜே சொன்னதுதான் இந்த நட்சத்திர வாரம் என்னைப்பொறுத்த வரைக்கும் இந்தப்பதிவில் இருக்கிறது, எனக்குரியதை கொடுத்திருக்கிறது. உண்மையில் இந்த பாடல்கள் பற்றி நானும் எழுதோணும் எழுதோணும் எண்டு சொல்லியிருப்பன் ஆனா எழுதினதில்லை ஏனெண்டா அது சொல்லி முடிக்கக்கூடிய விசயமா என்ன? இந்தப்பதிவை வாசிச்சு முடிக்கும் கணத்தில் உங்களோடை கதைக்கோணும் போல இருந்திச்சு அருண்...
சயந்தன் சொன்னது போல முத்து ஒரு இடறுப்பாடான காலத்துல வந்த படம் அதைப்பாத்ததும் ஒரு கதைதான், அதே நேரம் ஈழத்துப் பாடல்களும். உண்மைதான் அருண் பாடல்கள் காலத்தை மறக்கச் செய்வன...
இனியெப்பொழுதும் சந்திக்காமல் இருப்போம் இந்த வார்த்தை அனேகம் பேரிடம் இருக்கிறது போலும்.
'ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்..."
Arumaiyana pathivu. Nan mattum than intha mathiri padalgalodu ninaivugalaiyum associate panuvainu ninaichain - nice to know its a common thing.
Nalla eluthi irukinga. Enaku enoda list of songs nyabagam vanthiruchu. ipod niraiya ipadi ninaivugal vachirukirain nan.
keep writing more.
Cheers
Deeksh
தங்கள் பதிவுகளை நன்கு இரசித்துப் படித்தேன். படிக்கிறேன். படிப்பேன்.
வாழ்த்துகளும் நன்றிகளும்.
சுவாரசியம்!
Post a Comment