Wednesday, July 8, 2009

நவாலி தேவாலயப் படுகொலைகள் - 14 ஆண்டு நினைவுகள்

நன்றி - கோடை இணைய இலக்கிய இதழ்

பிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவு சொல்லை ஞாபகப்படுத்த கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்த காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை.

அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில் இருந்துவிட்டு வந்திருந்ததால் எனது பேச்சு தமிழ் கூட அவர்கள் பேசிய தமிழுடன் வேறுபட்டு இருந்திருக்கலாம். இதனால் பள்ளிக்கூடம் போவதே ஏதோ சிறைக்கு போவதை போன்று இருந்தது. இந்த நாட்களில் தான் பிரதீஸ் அறிமுகம் ஆனான். ஏதோ அவனுடனும் துளசி(1) என்ற இன்னொருவனிடமும் தான் கொஞ்சம் பழக ஆரம்பித்தேன்.

எப்போதும் அந்த பள்ளிக்கூட நண்பர்களை விட்டு விலகியே இருந்த என்னை அவன் மெல்ல மெல்ல பூமிக்கு இழுத்துவந்தான். ஒரு மழை நாளில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் வராமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு கற்களை எப்படி காந்தம் ஆக்குவது(2) என்ற ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லி தந்தான். அந்த வயதிலேயே அவனுக்கு நிறைய விடயங்கள் தெரிந்திருந்தன. பூக்களை அவற்றின் காம்பை பிடித்து கிள்ளும்போது அவை விழும் விதத்தில் இருந்து ஆண் பூவா பெண் பூவா என்று கண்டறியும் வித்தையை(2) ஒரு முறை எனக்கு பள்ளிக்கூடம் விட்டு வரும்போது பொறுமையாக சொல்லி தந்தான்.

அப்போதெல்லாம் அவன் ஒரு சிறிய அளவிலான சூட் கேசில்தான் பள்ளிக்கூடத்துக்கு புத்தகம் கொண்டு வருவான். நானும் எனது அப்பாவிடம் அடம் பிடித்து அது மாதிரி ஒரு சூட்கேஸ் வாங்கிக்கொண்டேன். அவனது சொந்தக்காரை யாரோ அவனுக்கு கொடுத்த ஒரு தோடம் (orange) பழத்தின் அரைவாசிய அவன் எனக்கு தந்தான். அதை ஒரு பேப்பரால் சுற்றி அந்த சூட்கேசில் வைத்திருந்தேன். சனி, ஞாயிறுகளில் வீட்டில் எடுத்து உண்டால் யர் தந்தது என்று கேட்பார்களோ என்று பயந்து அதை ஒளித்தே வைத்திருந்ததில் எனது புத்தகம் எல்லாம் தோடை வாசம் அடிக்க தொடங்கியது. இந்த நேரம் பார்த்து காந்தம், விளையாட்டு பொருட்களில் வரும் மோட்டார், சைக்கில் பாகங்கள் என்று சேர்க்கும் ஆசையும் வந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்ட போற வழியில் அரசடி சந்தி கடந்தவுடன் வரதனின் சைக்கில் கடை வரும். கடைக்கு முன்னால இருந்த நிலத்தில் பழைய சைக்கில் போல்ஸ், நட்டுகள் எல்லாம் எறிந்திருகும். நாங்கள் அதை பொறுக்கி சேர்ப்போம். என்னிலும் நிறைய உற்சாகமான பிரதீஸ் நிறைய சேர்த்து எனக்கும் பாதி தருவான். ஒரு முறை ஒரு பழைய விளையாட்டு ஹெலிகொப்டரை உடைத்து அதில் இருந்த காந்தத்தை இருவரும் பகிர்ந்து எடுத்தோம். எம்மிடம் இருந்த எல்லா இரும்பு உதிரிபாகங்களுக்கும் காந்தத்தை ஏற்றவேண்டும் என்பது எமது திட்டம்.

அப்போது நான் ஒரு மோதிரம் போட்டிருந்தேன். அடிக்கடி பிரதீஸ் அதை வாங்கி அணிந்து பார்ப்பான். ஒரு நாள் நான் அவனையே அதை வைத்திருக்க சொல்லிவிட்டேன். பிறகு இருவரும் வரதன் கடையை தாண்டி, ரோட்டோரத்தில் காயப்போட்டிருக்கிற எள்ளை(3) எல்லாம் எடுத்து சாப்பிட்டபடி வீட்ட போனோம். கொஞ்ச நேரத்தால எங்கட வீட்ட பிரதீஸ் அவன்ட அம்மாவோட வந்தி நிற்கிறான். ஏனோ தெரியேல்லை, அந்த மோதிரத்தை அவன் என்ட அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிட்டான். அதை பற்றி அவனிடம் அடுத்த நாள் கேட்கோணும் என்றிருந்தேன்.

இதற்குபிறகு சிறிது நாளில் அந்த ஆண்டும் முடிய நான் மிக சாதாரணமான புள்ளிகளையே பெற்றதால் என்னை சுதுமலையில் இருந்த எனது அப்பம்மாவீட்டிற்கு அனுப்பி அங்கு இருந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள் இப்படியே மெல்ல மெல்ல பிரதீஸ்டனான உறவு அப்போதைக்கு முடிவடைந்தது.


இதற்கு பிறகு அவனுடன் மீண்டும் பழக தொடங்கியது 10 வருடம் கழித்து, நானும் அவனும் ஒரே டியூஷனில் படிக்கும்போது. அவன் நிறைய வளர்ந்திருந்தான். பெரிதாக மீசை கூட வந்திருந்தது. நிறைய சதை போட்டிருந்தான். முன்பிருந்த நெருக்கம் தொலைந்துபோயிருந்தாலும் அன்பாக கதைத்தான். டியூஷன் முடிய அடிக்கடி ஒன்றாக வருவோம். நவாலியில் எம் இருவர் வீட்டிற்கும் நடுவில் இருந்த எனது கல்லூரி தோழனும்(4) அவனும் மிக நெருக்கமாகியிருந்தார்கள். சந்தோஷமாக நாட்கள் போய் கொண்டிருக்கும்போது, அந்த எனது கல்லூரி தோழனுக்கும் எனது தோழன் ஒருவனுக்கும் ஏதோ சில சிறுபிள்ளை கோபங்கள் வர நட்பு இரண்டு அணியாக பிரிந்தது. எனது நண்பன் பக்க நியாயங்களை ஏற்று நான் பிரதீஸுடனும் மற்ற நண்பனுடனும் கதைப்பதை தவிர்த்தேன். ஒரு நாள் டியூஷன்(5) முடிய நவாலி அரசடி சந்தியில் நாகேஸ் கடையில் பொறித்த வேர்கடலை வாங்கி கொறித்தபடி வீடு செல்லும்போது பிரதீஸும் மற்றைய நண்பனும் அருகில் வந்து “எமக்கும் உனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை, ஏன் நீ எம்மோட கதைக்கிறதில்லை” என்று கேட்டனர். ஒன்றுமில்லை என்றுவிட்டு நான் என் பாட்டில் போவிட்டேன். ஆனால் ஏனோ சின்ன வயது பிரதீஸின் ஞாபகங்கள் நிறைய வந்தன.


இதற்கு பிறகு பிரதீஸை நான் சந்தித்தது ஜூலை 9, 95ல். முதல் நாள் யாழ் இந்துக் கல்லூரி விளையாட்டு போட்டியை பார்த்து அதில் சாம்பியன் கிண்ணத்தை தவற விட்ட நண்பன் அனுஷனுக்கு(6) நானும் தயா என்ற நண்பனும் ஆறுதல் சொல்லிவிட்டு வீட்ட வர நேரமாகிவிட்டது. விடிய டியூஷனுக்கு போய்ட்டு வாறன். ஆமி முன்னேற அராலி பக்கத்தால முன்னேறுகிறான் என்று சனமு இடம்பெயர வெளிக்கிட்டுது. ரேடியோ எல்லாம் எதோ முன்னேறிபாய்ச்சல் என்று அலறுது. டியூஷன் முடிஞ்சு போனா உயரப்புலம் பிள்ளையார் கோயில், மூத்த நாயனார் கோயில், சிதம்பர பிள்ளையார் கோயில் என்று எல்லா இடமும் இடம்பெயர்ந்த சனம். நவாலி சர்ச் முன்னால் பெரிய கூட்டம். முன்னுக்கு இருந்த இந்து கோயிலிலும் நிறைய சனம். ஊரில் எனக்கு நன்கு தெரிந்த சனம் வேற நின்று உதவிசெய்து கொண்டிருந்தது. சர்ச்சுக்கு முன்னால் பிரதீஸ் அவன் ஒன்று விட்ட தமக்கையுடன் நின்றான். அவ அப்ப ஊர் விதானை. அதால இடம்பெயர்ந்த சனத்தின் விபரங்களை திரட்டி அவர்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர். நிறைய நாட்களின் பின்னர் அவனுடன் மனம் விட்டு கதைத்தேன். தூரத்தில் ஷெல் விழுந்து வெடிக்கும் ஓசைகள் கேட்க கேட்க அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சம்பந்தமேயில்லாமல் சின்ன வயசில் நான் கொடுத்த மோதிரம் பற்றி சொன்னேன். இதை இப்ப சொன்னால் பெடியள் பகிடி பண்ணுவாங்களடா என்று சிரித்தான். சில நாட்களின் முன்னர்தான் தனது தகப்பன் சவூதியில் இருந்து நீண்ட நாட்களின் பின்ன்ர் ஊர் வந்திருப்பதாக சொன்னான். குண்டுகள் வெடிக்கும் சத்தம் நெருங்குவதுபோல கேட்க, என்ன நடக்கும் என்று கேட்டேன். விட மாட்டங்களடா. ஏதாவது செய்வாங்கள் பாரன் என்றான். சிறிது நேரத்தில் விடைபெற்று வீட்ட வந்துவிட்டேன்.


நவாலிக்கு அருகில் குண்டுகள் விழ தொடங்க நாமும் சுதுமலை நோக்கி சென்றுவிட்டோம். பின்னேரம் ஒரு நான்கரை மணி அப்படி இருக்கும் தொடர்ச்சியான சத்தம். புக்காராவில்(7) வந்து ராணுவம் குண்டு போட்டு நிறைய சனம் செத்துவிட்டது(7) என்று ரோட்டால சனம் குளறிக்கொண்டு ஓடி திரியிது. எதுவுமே செய்யமுடியாத நிலை. இரண்டு நாட்களின் பின்னர் செத்தவர்கள் பேர் பேப்பரில் வருகிது. அதில் அவனது அக்காவின் பெயருடன் அவனது பெயரும். என் நினைவுகள் எல்லாம் ஒரு வெட்ட வெளியில் குவிக்கப்பட்டு ஒரு கணம் செயலிழந்தேன். கிட்ட தட்ட நான் யாழ்ப்பாணம் வந்த நாள் முதல் அறிமுகமான நண்பன். மற்றவர்கள் முன்னர் உணர்ச்சிகளை காட்டாமல் கழிவறை சென்றேன். என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அழு அழு என்று அழுதேன். இனிய நண்பன் ஒருவன் இறந்துவிட்டன் என்று, வீணாக கதையாமல் விட்டு விட்டோமே என்று, அவன் சாவதற்கு கொஞ்ச நேரம் முன்னர் கூட கதைத்துள்ளோமே என்று எத்தனையோ எண்ணி எண்ணி அழுதேன். கிட்ட தட்ட 150 க்கு மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்கள். நிறைய பேரின் உடல்களை எடுக்க முடியாமல் கட்டட இடிபாடுகளின் இடையேயே மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்தி எரித்தார்கள். அவனது உடலை எடுக்க முடிந்ததாம். ஆனால் தலை வெடித்து பிளந்திருந்த அவனது உடலை பார்த்து அவனது தந்தை கதறி கதறி அழுதாராம்.

இதற்கு பிறகு எத்தனையோ நடந்துவிட்டது. எமது ஊரில் இருந்து நிறைய பேர் விடுதலை போராட்டத்தில் குதித்தார்கள். அந்த பகுதியில் கிட்ட தட்ட எல்லா வீட்டிலும் ஒரு சாவு விழுந்திருந்தது. பாலகுமார் என்ற உதைபந்தாட்ட வீரன் தன் கால்களை இழந்தான். ரெக்ஸன் என்கிற நண்பனின் தங்கை கொல்லப்பட்டாள். நிறைய இழப்புகள். ரத்தங்கள்.


இப்போதும் கையில் ஒரு மோதிரம் அணிந்துள்ளேன். எப்போதும் பேசாமல் இருக்கும் மோதிரம் திடீரென்று கையை உறுத்துவதுபோல தோன்றும்போது பிரதீஸுடன் கடைசியாக கதைத்த ஞாபகம் வரும்.


(1) துளசி – இவன் மானிப்பாயை சேர்ந்தவன்। விடுதலை போராட்டத்தில் குதித்து அண்மையில் வீரமரணம் அடைந்தவன்
(2) புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடும் என்பதுபோல எமது பால்யகால நம்பிக்கைகள்।

(3) நவாலி, ஆனைக்கோட்டை பகுதிகள் நல்லெண்ணெய், அதாவது எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் செய்வதில் பேர்போனவை। அதனால் பல வீடுகளின் வாசலில் காய் விடப்பட்ட எள்ளும், காதுகளில் விழும் செக்கிழுக்கபடும் ஓசையும் எப்போதும் நிறைந்திருக்கும்

(4) இப்போதும் இவனுடன் அடிக்கடி கதைப்பதுண்டு। திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் நவாலியில் வசித்து வருகிறான்.

(5) இந்த டியூஷன் கால நினைவுகள் பற்றி முன்பு ஒரு முறை எழுதியுள்ளேன். அதன் சுட்டியை பெற இங்கே அழுத்தவும்।

(6) அன்று அவன் பிறந்த தினம் வேறு, இதனால் அவன் சகஜ நிலைக்கு வரும்வரை காத்திருந்தோம்।

(7) புக்காரா (Pucara) இவை ஆர்ஜெந்தீன தயாரிப்பு யுத்த விமானங்கள்। 90களின் மத்திய பகுதிகளில் பெருமளவு இன அழிப்பில் பயன்பட்டவை. பின்னர் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தவகை யுத்த விமானத்துடன் அப்போது குண்டுகளை வீசிய விமானியும் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

(8) கிட்ட தட்ட 150 பேர் செத்தனர். இது பற்றிய பதிவுகள்
http://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing
http://www.tamilnation.org/indictment/genocide95/gen95012.htm
http://www.ltteps.org/?view=1750&folder=25






12 comments:

சாந்தி ரமேஷ் வவுனியன் said...

நவாலி தேவாலம் படுகொலை நிகழ்வுகள் காலகாலங்களுக்கும் மாறாத வடுக்களாகவே எம்மோடு தொடரும்.

தங்கள் நினைவுமீட்டலுக்கு நன்றிகள் அருண்மொழிவர்மன்.
சாந்தி

கானா பிரபா said...

வணக்கம் நண்பா

பதிவைப் படித்தேன் பாரமாகியது மனம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்தத் துயரவடு மாறாது அதுவும் நேரடியாகச் சந்திக்கும் போது அதன் வீரியம் சொல்ல வார்த்தை இல்லை.

சயந்தன் கூடத் தன் அனுபவத்தை இங்கே இட்டிருக்கின்றார்


http://sajeek.com/archives/172

அருண்மொழிவர்மன் said...

//கானா பிரபா said...

வணக்கம் நண்பா

பதிவைப் படித்தேன் பாரமாகியது மனம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்தத் துயரவடு மாறாது அதுவும் நேரடியாகச் சந்திக்கும் போது அதன் வீரியம் சொல்ல வார்த்தை இல்லை.

சயந்தன் கூடத் தன் அனுபவத்தை இங்கே இட்டிருக்கின்றார்


http://sajeek.com/archives/172//

உண்மைதான் பிரபா.

சயந்தன் எழுதிய பக்கங்களை முன்னர் வாசித்திருக்கின்றேன்

அருண்மொழிவர்மன் said...

//முல்லைமண் said...

நவாலி தேவாலம் படுகொலை நிகழ்வுகள் காலகாலங்களுக்கும் மாறாத வடுக்களாகவே எம்மோடு தொடரும்.

தங்கள் நினைவுமீட்டலுக்கு நன்றிகள் //

இப்படி எத்தனையோ பேருக்கு எத்தனையோ அவலங்கள்.
என்னால் எழுத முடிந்தஹ்டு இதைத்தான். நவாலியில் இருந்தவன் என்ற அடிப்படையில் அது இன்னும் இலகுவானது

கதியால் said...

அருகே இருந்தோம்...! அன்றிரவு செய்தி கேட்ட போது நெஞ்சு நொருங்கி போய்விட்டது. 160 உயிர்கள் ஒரு நொடிப்பொழுதில் துடிக்க துடிக்க கொல்லப்பட்ட கணம் எப்படி மறக்காமல் இருக்க முடியும். இன்றும் உணர்வை உசுப்பும் ஒரு படுகொலைகளில் இதுவும் ஒன்று....! காலம் மாறும் காத்திருப்போம்...!!

நவாலியான் said...

ஹ்ம்ம் , இப்போது நினைத்தாலும் , அந்த மாலை நேரமும் , பெற்றோரை நவாலிக்கு அனுப்பிவிட்டு பட்ட துன்பமும் , அப்படியே நிற்கின்றது. ஆனால் அதே வகை அல்லது அதே விமானம் சுட்டு விழுத்தப்பட்டு அதே தேவாலய முன்றலில் வைக்கப்பட்டபோது , அதுவே சரியான பதில் என அனைத்து தமிழரையும் நினைக்க வைத்தது.

அருண்மொழிவர்மன் said...

//கதியால் said...

அருகே இருந்தோம்...! அன்றிரவு செய்தி கேட்ட போது நெஞ்சு நொருங்கி போய்விட்டது. //

அன்று நடந்த நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சியாக எம் இன்னுமொரு நண்பன் எம்மை பிரிந்து சென்றதும் நாம் பட்டட் துயரும்..........

போதுமப்பா

அருண்மொழிவர்மன் said...

நவாலியான் said...

ஹ்ம்ம் , இப்போது நினைத்தாலும் , அந்த மாலை நேரமும் , பெற்றோரை நவாலிக்கு அனுப்பிவிட்டு பட்ட துன்பமும் , அப்படியே நிற்கின்றது. ஆனால் அதே வகை அல்லது அதே விமானம் சுட்டு விழுத்தப்பட்டு அதே தேவாலய முன்றலில் வைக்கப்பட்டபோது , அதுவே சரியான பதில் என அனைத்து தமிழரையும் நினைக்க வைத்தது.///


உங்களைப் போலவே பலருக்கும் மறக்க முடியாத மாலையாகிப் போன மாலை அது.

அந்த தேவாலயம் சார்ந்த சூழலில் அதிகம் பழகியவன் என்ற முறாஇயில் எனக்கும் அதிகம் அந்தப் பாதிப்பு இருந்தது.

எனக்கு அப்போது நெருக்கமாக இருந்த சுதாகரன், தேவானந்த் என்ற இரண்டு நாண்பர்கள் வேறு அப்போது தேவாலயத்திற்கு அயலில் இருந்தார்கள்...........

துர்க்கா-தீபன் said...

எமனும் நினைந்தழும் கொடுந்துயர்.....!
நவாலி உள்ளிட்ட அனைத்து இன அழிப்பு படுகொலைகளுமே நீதி கேட்கப்படவேண்டியவை. யாரிடம் என்று தெரியாத மௌனம் விரிகிறது எங்களுக்கான உலகில் நீதி என்பதே இல்லை, ஆனாலும் இதை எழுதுவோம் கேட்கிறார்களோ மறுக்கிறார்களோ ஆண்டு தோறும் உலகின் செவியில் அறைவோம். அஞ்சலிகளில் நினைவுகளில் நெஞ்சோடு வாழ்பவர் கதையை பிரியமில்லாது உலகம் கேட்கட்டும்.

தமிழன்-கறுப்பி... said...

நிறைய பாதிப்பை கொடுத்த ஒரு சம்பவம் சொல்லப்போனால் அதன் பிறகுதான் மரணங்கள் ...

இந்த காட்சிகளை போட்டுக்காட்டி இளந்திரையன் பேசிய பொழுது, வேண்டாம் என்று போயிற்று..

அருண்மொழிவர்மன் said...

துர்க்கா-தீபன் said...

ஆனாலும் இதை எழுதுவோம் கேட்கிறார்களோ மறுக்கிறார்களோ ஆண்டு தோறும் உலகின் செவியில் அறைவோம். அஞ்சலிகளில் நினைவுகளில் நெஞ்சோடு வாழ்பவர் கதையை பிரியமில்லாது உலகம் கேட்கட்டும்.//


உண்மையில் சற்று நிதானமாக யோசிக்கும்போது மக்கள் பற்றிய அக்கறாஇ என்பதே இன்று மலினமாகி விட்டதென்றே தெரிகின்றது... அதற்காக இதை எழுதாமல் விட்டால், அது அப்படியே மறக்கப் பட்ட வலியாகிவிடும்....

முன்பொருமுறாஇ, கோகிலா மகேந்திரன் சொன்ன நமக்கான கதைகளை நாமெ எழுதுவோம் என்பதை சுட்டிக்காட்டி இருந்தீர்கள். அதன் நீட்சியாகக்கூட இதைப் பார்க்கலாம்

அருண்மொழிவர்மன் said...

தமிழன்-கறுப்பி... said...
இந்த காட்சிகளை போட்டுக்காட்டி இளந்திரையன் பேசிய பொழுது, வேண்டாம் என்று போயிற்று..//

தமிழன் கறுப்பி...

இது பற்றி நான் எழுதும்போது சில இடங்களை எழுதாமல் கடந்தே எழுதினேன், அந்த குற்ற உணர்வையும் தாங்கியபடியே.........

இறப்புகள் ஏற்படவான காரணங்களும், இறப்புகளின் பின்னர் அவை பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட முறைகள் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு....

Post a Comment