Wednesday, January 14, 2009

ஜெயமோகன் - ஏழாம் உலகம் சொன்னவை

நவீன இலக்கியங்களுடனான தொடர்பு எனக்கு நெருக்கமாவதில் ஜெயமோகனின் பங்கு பெருமளவானது. ஆனால் அவரது புத்தகங்களை என்னால் பெருமளாவு அணுகமுடியவில்லை. முதலில் விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கினேன். ஏனோ என்னால் அதில் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இதே நிலை தான் சாருவின் ஸீரோ டிகிரிக்கும் ஏற்பட்டதால் அது நவீன இலக்கியங்களுடன் எனக்கு அந்த நேரத்தில் போதிய பயிற்சி இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். ஜெயமோகனின் எழுத்துக்களில் அவர் இலக்கியமுன்னோடிகள் வரிசை என்று எழுதிய சில நூல்களை வாசித்திருக்கின்றேன். சில முக்கியமான எழுத்தாளர்களை அறிந்துகொள்ள அந்நூல்கள் பெருமளவு உதவியுள்ளன.

இது தவிர ஜெயமோகனின் எழுத்துக்களை நான் தவிர்த்ததற்கு ஜெயமோகன் மீது அந்நாட்களில் இருந்த சில குற்றசாட்டுகளிம் காரணமாக இருக்கலாம். அதாவது மனோரமாவில் வந்த ஒரு இசை விமர்சனத்தை அவர் திருடியதாக வந்த குற்றசாட்டு, வேறு பெயர்களில் சக எழுத்தாளர்களை அவதூறு செய்யும் எழுத்துக்கள் என்று அந்த பட்டியல் தொடரும். இன்று “ஆசிரியன் இறந்துவிட்டான்” என்ற கருத்தை புரிந்து என்று அதை ஓரளவு பின்பற்ற முயன்றாலும் சில நேரங்களில் என்னை அது தடுக்க செய்கின்றது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அண்மையில் வாசித்த ஜெயமோகனின் ஏழாம் உலகம் மனதளவில் பெரு மாற்றங்களையும் தாக்கங்களையும் தந்தது.

இந்த கதையில் நம்மை சூழ உள்ள ஆனால் நாம் பார்க்காத அல்லது கவனத்தில் கொள்ளாத ஒரு உலகத்தை பற்றி சொல்கிறார் ஜெயமோகன். விஸ்ணுபுரம் போன்ற ஒரு கற்பனை தளமாக இல்லாமல் ரத்தமும் சதையுமாக நம்மை சூழ வாழும் ஒரு உலகே இங்கு கருப்பொருள் ஆக்கப்படுகின்றது. கதையில் வரும் பிரதான கதாபாத்திரமான பண்டாரம் உட்பட பல முக்கிய பாத்திரங்கள் உடற்குறைபாடுகளுடன் பிறந்தவர்களை வேறு உடற்குறைபாடுகளுடன் பிறந்தவர்களுடன் உறவு கொள்ளச்செய்து அதன் மூலம் மேலும் உடற்குறைவான மனிதர்களை தோற்றுவித்து வியாபாரம் செய்கின்றார்கள். இந்த உடற்குறைவானவர்களை பிச்சை எடுக்க செய்வது இவர்களது பிரதான தொழில். அத்துடன் அவர்களின் உடலில் ஒழுங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் உறுப்புகளை எடுப்பதற்காக காசுக்காக விற்பது (தொரப்பன் என்ற கதாபாத்திரம் இப்படியாக விற்கப்படுகின்றது), அதிகாரிகளிலிடம் இருந்து சலுகைகளை பெறுவதற்காக பெண்களை பாலியல் தேவைகளுக்காக உபயோகிப்பது (எருக்கை பாத்திரம்) என்று பணம் உழைப்பதற்கான அனைத்து வழிகளிலும் அவர்கள் உபயோகிக்கப்படுகிறார்கள். அதே நேரம் தம் சக மனிதர்களிடமும், குடும்பத்தார்களிடமும் பாசமுள்ளவர்களாக இருக்கும் இவர்கள் இந்த குறை உடல் மனிதர்களை எந்த ஒரு விதத்திலும் உயிர்களாகவே மதிப்பதில்லை. எல்லா குறை உடலிகளும் “உருப்படிகள்” என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால் அந்த உருப்படிகள் இவர்களுடன் எஜமான விசுவாசத்துடன் (நம்ம தமிழ் சினிமாவின் எம்ஜிஆர், ரஜினி, சரத்குமார் போல) இருக்கின்றானர். கதையில் ஒரு சந்தர்ப்பத்தில் பண்டாரத்தின் மகளின் திருமணம் தொடர்பாக சிக்கல்கள் எழும்போது தமக்கு நேர்ந்த சொந்த பிரச்சனை போன்று எல்லா குறை உடலிகளும் ஆலோசனை சொல்கின்றனர்.


இதுபோல கதையில் இந்த குறை உடலிகளின் இயல்பை காட்டும் ஒரு சந்தர்ப்பம் வருகின்றது. போலீஸ் அதிகாரியுடன் உறவு கொள்வதற்காக எருக்கம்மை என்பவள் காவல் நிலையம் கொண்டு செல்லப்படுகின்றாள். அங்கு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டுசெல்லப்படும் அவளை ஆதரவற்ற பெண்கள் மடத்துக்கு கொண்டு செல்ல கன்னியாஸ்திரீகள் முயல்கின்றனர். இந்நேரத்தில் பண்டாரத்தின் உதவியாளனான பெருமாள என்பவன் ஆஸ்பத்திரி சென்று அவள் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி அவளை தனது மனைவி என்று சொல்லி மீண்டும் பண்டாரத்திடம் கூட்டிவருகின்றான். இதன் பின்வரும் நேரங்களில் எல்லாம் அவள் பெருமாளை கணவனாகவே பாவித்து கதைப்பது அதை கேட்கும்போதெல்லாம் பெருமாள் அவளை தாக்குவதுமாக வரும் கட்டங்கள் சிரிப்பை தந்தாலும் தீவிர சிந்தனைக்கு உள்ளாக்கப்படவேண்டியவை. ஆடுகள் தாம் ஆடுகள் என்று உணரும்போது மந்தையைவிட்டு விட்டு வெளியேறுகின்றன என்று எங்கோ படித்தது ஞாபகம் வருகின்றது. இத்தனைக்கும் எருக்கு அந்த மருத்துவமனையைவிட்டு அழைத்துவரப்படும்போது மலம் அள்ளும் வண்டியில் வைத்துதான் அழைத்து வரப்படுகின்றாள். பொதுவாக சிலருக்கு இயல்பிலேயே இருக்கும் அடங்கிபோகும் மனநிலைதான் எல்லா உரிமை மீறல்களுக்கும் அடிப்படை என்ற வாதத்தை எவ்வளவுக்கு இந்த சந்தர்ப்பத்துடன் தொடர்புபடுத்தலாம் என்று தெரியவில்லை.

கதையில் வருகின்ற பண்டாரம் என்ற பிரதான கதாபாத்திரம் அச்சொட்டாக ஒரு சராசரி மனிதனின் மனநிலையில் வார்க்கப்பட்டிருக்கின்றது. ஒரு பொது நீதியில் அதாவது சமுதாய நீதியில் வைத்து பார்க்கும்போது இவர் செய்வது எவ்வளவு அநியாயம் என்பது புரியும். ஆனால் தனது மூத்த மகளின் திருமணத்தை முன்வைத்து எழும் பிரச்சனைகளின்போதும், அவளுக்கு செய்த நகைகளை எடுத்துக்கொண்டு இரண்டாம் மகள் வீட்டைவிட்டு வெளியேறும்போதும் மீண்டும் மீண்டும் அவர் “நான் யாருக்கென்ன பாவம் செய்தேன், ஏன் தெய்வம் என்னை இப்படி சோதிக்குது” என்று புலம்புவதும் பல சந்தர்ப்பங்களில் முருகா முருகா என்றூ ஜெபிப்பதும் நல்ல அவதானிப்பு. என் சொந்த அனுபவத்தில் சமூக விரோத செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்களும், மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்களும் பக்திமான்களாக இருப்பதை அல்லது அப்படி நடிப்பதை கண்டிருக்கின்றேன். சமூக இயகத்தில் தமது பங்களிப்பு பற்றி எழும் தாழ்வு மனப்பான்மையே இவர்களை இப்படியான புனிதர் தோற்றத்தை புனைய வைக்கின்றதோ. பண்டாரம் கோயிலுக்கு செல்கின்றார். அங்கு அர்ச்சகராக உள்ள போத்தி இறைவனை அலங்காரம் செய்யும்போது வெத்திலை சாறை இறைவன் விக்கிரகத்தின் அடியில் துப்புகின்றார். அது வழமை என்றும் சொல்கிறார். பின்னர் மது அருந்திய நிலையில் பூஜை செய்கின்றார். ஜோதிடம் சொல்கின்றேன் என்ற பெயரில் அவர்கள் வந்த வாகனத்தில் இருக்கும் அலுவலக பெயரை கவனித்து, நீங்கள் பொருளியல் துறையை சேர்ந்தவர்கள் என்கிறார். பத்து ரூபாய் தட்சணை அதிகமோ என்று யோசித்தவர்கள் இரண்டு நூறு ரூபாய் தாள்களை வைத்துவிட்டு வெளியேறுகின்றனர். அர்ச்சகர்கள் பற்றி எழுப்பப்பட்டிருக்கும் சமூக கட்டமைப்பு தூள் தூளாகின்றது. என் அனுபவத்தில் மது அருந்தும், புலால் உண்ணும் அர்ச்சகர்களை கண்டிருக்கின்றேன். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை, வாழ்க்கைமுறை என்று ஏற்றுக்கொள்ளுகின்ற அதே நேரம் அர்ச்சகர் என்பதற்காக சமூகம் தருகின்ற எல்லா சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு இவற்றை செய்வதை நான் 100% எதிர்க்கின்றேன். சிறு வயதில் எம் வீட்டிற்கு வந்த ஒரு ஜோதிடர் என் தாயிடம் 10க்குள் ஒரு இலக்கதை சொல்லும்படி கேட்டார். அம்மா ஒரு இலக்கத்தை சொல்ல வீட்டு வாசலின் வலது புறத்தில் அந்த இலக்கம் எழுதப்பட்டிருக்கும் என்றார். இப்படி குடும்ப உறுப்பினர் ஒன்றிரண்டு பேரை கேட்டு அந்த இலக்கங்களை எல்லாம் எம் வளவில் காட்டி எம்மை பெரும் ஆச்சர்யங்களில் ஆழ்த்தினார். அவரிடம் ஒரு சடங்கு செய்வதென்று எமது வீட்டில் ஏற்பாடானது. சிறிது நேரத்தில் அப்பா வந்தவுடம் பார்த்தால் 10க்குற்பட்ட எல்லா இலக்கங்களும் எம் வீட்டு முற்றத்தில் வெவ்வேறு இடங்களில் தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்த கதையில் வரும் போத்தி என்ற அர்ச்சகர் முத்தம்மை என்ற குறை உடல் கொண்ட பெண்ணை புணர வேண்டும் என்ற தன் அவாவை பண்டாரத்திடம் வெளிப்படுத்துகிறார். சமுதாயத்துக்காக தான் புனைந்த உத்தமன் வேடம் கலையுமோ என்ற பயத்தில் ஒரு தளம்பல் நிலையிலேயே அவரது வேண்டுதல் வைக்கபடுகின்றது.

கதையில் வரும் அகமதுகுட்டி என்ற பாத்திரம் மிகப்பெரிய அறிவுஜீவியாக முன்வைக்கபடுகின்றது. தீர்க்கமான அகமதுகுட்டியின் யோசனைகள் கதையின் பிற்பகுதியில் பெரும் துணை செய்கின்றன. அதேபோல பண்டாரம் போன்ற சக வியாபாரியாக வரும் கொச்சனும் புத்திசாலியாக காட்டப்படுகின்றான். கொச்சன் கதாபாத்திரத்தின் அறிமுகத்தில் அவர் புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதாக காட்டப்படுவது அவர் ஒரு படிப்பாளி என்பதற்கான க்ளிஷே என்றே நினக்கின்றேன். கதையின்படி இவர்கள் இரண்டுபேரும் மலையாளிகள். இப்படியான சந்தர்ப்பங்கள் தாம் ஜெயமோகனை இந்துத்துவவாதி, தமிழ்நாட்டை தொடர்ந்து நக்கலடிப்பவர் என்கிற விமர்சனங்களுக்கு தொடர்ந்து உள்ளாக்குகின்றன என்று நினைக்கின்றேன்.

தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டல்களூடாக செல்கின்ற கதை இறுதியில் சமூக கட்டமைப்பு பற்றியும், மனிதாபிமானம் பற்றியும் பரிணாம வளார்ச்சியின் உச்சகட்டத்தில் இருப்பவன் மனிதன் என்ற கற்பிதம் பற்றியும் மிகப்பெரும் கேள்விகளுடன் நிறைவடைகின்றது. குறை உடலியான முத்தம்மை பெற்ற ரசனிகாந்த் என்ற குழந்தையை விற்ற பின்னர் அவள் மூலமாக மீண்டுமொரு குறை உடலியை உற்பத்தி செய்யும் நோக்குடன், இன்னொரு குறை உடலிக்கு (கூனன்) போதையூட்டி முத்தம்மையுடன் புணர தூண்டுகிறார் பெருமாள. அப்போது குறை உடலியின் கையில் இருக்கும் ஒற்றை விரலின் மூலம் அது தனக்கு பிறந்த முதலாவது குழந்தை என்று அடையாளம் கண்ட முத்தம்மை கதறுகிறாள். அதையும்தாண்டி அவள் வல்லுறவுக்கு உள்ளாக்கபடுகின்றாள். ஒரு இனம் மீது இன்னொரு இனம் செய்யும் ஆக்கிரமிப்பு, வன்முறை, வல்லுறவு பற்றி மிக பெருமளவில் கதைக்கபடுகின்றது. ஆனால் ஏன் ஒரு இனதுக்குள்ளேயே நடைபெறும் இந்த அத்துமீறல்கள் பேசப்படுவதில்லை என்கிற கேள்விகளை நிறைத்துவிட்டு கதை நிறைவடைகின்றது.



(இந்தக் கட்டுரையில் குறை உடலி, உருப்படி போன்ற சொற்கள் ஒரு புரிதலுக்காகவும், கதையுடன் அணுக்கமாக செல்வதற்காகவுமே உபயோகிக்கப்பட்டன. ஆயினும் அதற்காக வருத்தம் தெரிவிக்கின்றேன்.)

12 comments:

ramalingam said...

நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தினீர்கள். நன்றி.

அருண்மொழிவர்மன் said...

இவரது மற்ற புத்தகங்களையும் வாசிக்கவேண்டுமென்ற ஆவல் பிறந்துள்ளது

கே.ஆர்.பி.செந்தில் said...

வணக்கம் நண்பரே,

உண்மையில் இந்த புத்தகம் படிக்கும்போது எனக்கு நான்கு நாட்கள் தூக்கமே இல்லை ,

இந்த கதையைத்தான் பாலா '' நான் கடவுள்'' படத்தில் பயன்படுத்தியுள்ளார் ,

இதனைப்பற்றி நான் என்னுடைய பிளக்கில் எழுதியுள்ளேன்...
www.krpsenthil.blogspot.com

கிருஷ்ணா said...

நவீன இலக்கியங்களோடு எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது. ஆனால், தேடல்களுக்கான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறாய். கூ்டவே நான் கடவுள் திரைப்படம் குறித்தான எதிர்பார்ப்பையும்...

Anonymous said...

avarathu mathaveri, inaveri enbathakku appal avar oru nalla ezuththaalar. avarathu ella puththakangkalaiyum vaasiththupparunkal

முரளிகண்ணன் said...

நான் கடவுள் அனுபவத்திற்க்காக இந்த புத்தகத்தை இப்போது படிக்க போவதில்லை. படம் பார்த்துவிட்டு படிப்பேன்.

Jega said...

i hope director bala will keep the hype of the story in the movie as it is now

அருண்மொழிவர்மன் said...

ராமலிங்கம்,
வணக்கம்....

முதன்முறையாக பதிலிட்டுள்ளீர்கள்.

பொதுவாக வெளிவரும் எல்லாப் புத்தகங்களையும் வாசிப்பது என்பது எம்மால் முடியாது. எனவே மற்றவர் ஒரு புத்தகத்தை வாசித்து ஒரு அறிமுகத்தை தரும்போது எம்மாலும் அதனை வாசித்து ரசிக்க முடியும். நீங்கள் வாசித்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள்

அருண்மொழிவர்மன் said...

krp செந்தில்.
உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. நான் நினைக்கிறேன் இந்த கதையின் கருவை பயன்படுத்தியே நான் கடவுள் உருவாகின்றது என்று. இந்த கதையை அப்படியே படமாக்குவது வியாபார ரீதியில் பாதிக்கலாம்

அருண்மொழிவர்மன் said...

நன்றி கிருஷ்ணா.

இந்த கதையையும் வாசியுங்கள், படத்தையும் பாருங்கள். இரண்டும் இனிய அனுபவங்களாகவே அமையும்

அருண்மொழிவர்மன் said...

அனாமியே...

ஜெயமோகன் மதவெறி பிடித்தவர் என்பது ஒரு பொதுக்கருத்து. அதை ஆராயுமளாவுக்கு நான் இன்னும் அவரை படிக்கவில்லை

அருண்மொழிவர்மன் said...

வாருங்கள் முரளிகண்ணன்...

ம்ம்... நான் கடவுள் 29ம் திகதி வெளிவருகின்றாது என்று நினைக்கின்றேன்... புத்தக கண்காட்சியில் ஏழாம் உலகத்தையும் வாங்கிவிடுங்கள்

Post a Comment