
ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கின்றபோது வரலாற்றுப் புதினம் என்பதே தாம் நிலை நிறுத்த விரும்பிய ஒருவனின் புகழை கூறுவதற்காக புனையப்பட்டதொன்றே என்று புலனாகின்றது. வரலாறு என்பது கூட அதுதானே? எந்த நாட்டின் வரலாறு உண்மையை மட்டும் பேசுகின்றது? அப்படி பேசுவது சாத்தியமான ஒன்றுதானா? அமெரிக்க புகழ் பாடும் ஊடகங்களில் “சே” எப்படி சித்திகரிக்கப்பட்டுள்ளார்? இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்ட வி.பி.சிங் இறந்தபோது இந்தியா டுடேயில் அவர் பற்றி வெளியான செய்தி எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்று நினக்கின்றேன். இதே வகையில்தான் ஒரு காலத்தில் என் கனவு நாயகர்களாகவே இருந்த ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கின்றது என்று பின்னாளில் தெளிவாக புரிந்து கொண்டேன். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய திருஞான சம்பந்தர்தான் சமணர்களை தூக்கிலேற்ற தூண்டினார் என்பதை ”சம்பந்தர் செய்த் அற்புதங்கள்” என்று பட்டியலிட்டு எழுதி புள்ளிகளும் பெற்றிருக்கிறோம் என்று நினைக்கும்போதே வெறூப்பாக இருக்கின்றது. ஏனைய மதங்களின் வரலாற்றுப் பக்க்கங்களை திருப்பியபோதும் இது போன்ற அதிர்ச்சிகளே காத்திருக்கின்றன. இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் மன்னர்களின் வரலாறுகளே தவிர மக்களின் வரலாறுகள் இன்னும் எழுதப்படவே இல்லை. மன்னர்களின் வரலாறுகள் கூட வென்றவர்களின் பார்வையில்தான் கதை சொல்கின்றனவே தவிர தோற்றுப்போனவனின் வரலாறும், சிறுபான்மையினரின் வரலாறும் கூட எழுதப்படவில்லை. இந்த வகையில்தான் நான் அண்மையில் வாசித்த தேவகாந்தன் எழுதிய “கதாகாலம்” என்கிற மகாபாரதத்தின் மறு வாசிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
-2-
மகாபாரதக் கதையை தெரியாதவர்கள் எவரும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அதை முழுதாக தெரிந்தவர்கள் எவரும் இல்லை என்பதும். வேத காலத்தின் இறுதியில் நடந்ததாக சொல்லப்படும் இந்தக் கதை இன்று வரை கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகையில் “தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும்; தர்மம் வெல்லும்” என்ற அறத்தை காக்கும் நோக்கில் அதன் நாயக்ர்களாக சொல்லப்படும் பாண்டவர்களும், கிருஷ்ணனும் அதிகம் புனிதப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தேவகாந்தனின் மீள்வாசிப்பில் க

-3-
கதையில் பிடித்த சில பக்கங்கள்
காந்தாரி
தன் கணவனுக்கு கண் தெரியாது என்று தன் கட்புலனை இறக்கும்வரை துறந்தவள் காந்தாரி என்று சொல்லி காந்தாரியை “தாம் எதிர்பார்ர்கும்” பெண்மையின் இலக்கணம் என்று சொல்வதை கேட்கும்போதெல்லாம், கணவனுக்காக பார்வை துறந்தாள்; சரி. ஆனால் தானும் பார்வையை மறுத்ததால் தம் பிள்ளைகளை சரியாக வளர்க்காமல் விட்ட பழி அவளுக்குரியதுதானே? என்று யோசித்திருக்கின்றேன். ஆனால் காந்தாரி தான் கண் தெரியாத திருடராஷ்டிரனைத்தான் கல்யாணம் செய்யப்போகிரேன் என்று தெரியாமல் பீஷ்மக் கனவுகளுடன் இருந்தவள் என்றும், அதற்கான எதிர்ப்பாகவே தன் கண்களை மறைத்து துணிகட்டி மணவறை வந்தாள் என்றும் சொல்லும்போது அதிகாரத்துக்கு எதிரான சற்றுப் பலவீனமான எதிர்க்குரலாகவே காந்தாரி தெரிகின்றாள். “இதுபற்றிக் கேட்டபோது “திருடராஷ்டிரன் சாம்பிப் போனான். அவள் தன்னையோர் அபாக்கியவதியாய்ச் சபையில் அடையாளப்படுத்தியதாய் அவன் எண்ணிப் புழுங்கினான். ஆனால் சபையோ அவளின் பதி பக்தியாய் அதைக்கண்டு மெய் மறந்திருந்தது.-பக்.21)”
குந்தி
பாரதக் கதையை பொறுத்தவரை அதீதமான அமானுஷ்யத் தன்மை வாய்ந்த கதாபாத்திரமாகவே குந்தியின் பாத்திரத்தை பார்க்கமுடிகின்றது. ஆனால் கதாகாலத்தில் வரும் குந்தியோ தொடர்ச்சியாக கட்டுடைக்கப்படுகின்றாள். (ஒரு வாசகனாக பாரதத்தை வாசித்தபோது குந்தி பற்றி என்னுள் உருவாகியிருந்த விம்பம் கதாகாலத்தில் வரும் கட்டுடைக்கப்பட்ட குந்தி பாத்திரமே). முதலில் குந்தி புத்திரர்களை எடுத்துக்கொள்வோம். குந்தி துர்வாச முனிவருக்கு செய்த பணிவி

குந்தி பற்றிய இன்னுமொரு விபரிப்பு மாத்ரி, பாண்டுவுடன் உடன் கட்டை ஏறியபோது சொல்லப்பட்டுள்ளது. மாத்ரியுடன் உடல் நிலை இடம் தராதபோதும் பாண்டு கூடலில் ஈடுபட்ட்தே அவன் இறப்புக்கு காரணம் என்று சொல்லி குந்தி எழுப்பிய இழிமொழிகள் கேட்க முடியாதே மாத்ரி சிறு குழந்தையாக இருந்த சகாதேவனின் கண் முன்னரே தீயில் வீழ்ந்து இறந்தாள் என்றும் அன்று உணர்ந்த சோகமும் தனிமையுமே சகாதேவனை ஞானத்தேடலில் ஆழ்த்திற்று என்றும் சொல்கிறார். சற்று யோசித்தால், வம்ச விருத்திக்கான உடல்நிலையான தகுதி இல்லாதவன் பாண்டு. இது தெரிந்தும் அத்தினாபுர பெரியோர்கள் குந்தி மேல் பழி போட்டு மறுதாரமாய் மாத்ரியை மணம் செய்துவைக்கின்றனர். இன்று நடப்பதும் இதுதானே? அசுவத்தாமா மட்டுமல்ல, குந்தியும் இன்று வாழ்ந்துகொண்டே இருக்கிறாள்.
கணவனை இழந்து நாடு திரும்பிய குந்தி அங்கு தன் பிள்ளைகள் இரண்டாம் பட்சமாய் நடத்தப்படுவது கண்டும், தன் பிள்ளைகள் பாண்டுவின் புத்திரர்கள் என்ற பொருள்பட ”பாண்டவர்” என்று மட்டும் அழைக்கப்பட காந்தாரியின் புத்திரர்கள் “கௌரவர்கள்” என்று, மரியாதைக்குரியவர்கள் என்று பொருள்பட அழைக்கப்படுவது கண்டு மனம் வேகுகின்றாள். இதற்கு காரணம் பாண்டவர்கள் பாண்டுவுக்குப் பிறக்காமல், தானும் மாத்ரியும் செய்த “வனவுலா”வின் விளைவால் பிறந்தவர்கள் என்பதை சத்தியவதியும், பீஷ்மனும் அறிந்திருப்பார்களோ என்றும், முழுமையான அரச குலப் பெண் இல்லை என்பதால்தான் இப்படி ஓரங்கட்டப்படுகின்றோமோ என்றும் பலவாறாக சந்தேகித்து, முடிவாக இனி தன் பணி பாண்டவர்கள் ஐவரையும் அத்தினாபுர மன்னர்களாக ஆக்குவதொன்றே என்று தீர்க்கமாகின்றாள். தம் வாழ்வின் இன்பங்கள் எல்லாம் தம் மணவாழ்வினால் பறிக்கப்பட்ட இரண்டு பெண்களான காந்தாரியும், குந்தியும் தம் பிள்ளைகள் அத்தினாபுர அரசுக்கட்டேற வேண்டும் என்று காய் நகர்த்தினார்கள். ஒரு நல்ல எச்சம் பாரதக் கதை. மோசமான எச்சம் ஏறத்தாழ குருவம்சம் முழுதுமே அழிந்தது ஒன்று. நல்லது நடக்க வேண்டும் என்று எத்தனை தீயதும் செய்யலாம் என்ற மோசமான நீதி சொல்லப்பட்டது.
திரௌபதி
பாரதக் கதையை வாசிக்கும்போது திரௌபதிக்கு இழைக்கபட்ட அநியாயத்தை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருக்கின்றோம். சுயம்வரத்தின்போது தகப்பன் அவளை தான் வைத்த வீர விளையாட்டிற்கான பரிசுப் பொருளாக்கினான். சூதட்டத்தின்போது தர்மன் அவளை தன் உடமைப் பொருளாக்கினான். திரௌபதி என்ற பெண்ணை பெண்ணாக யார் பார்த்தார்கள்?. ஐவீரும் ஒருவீராய் .... என்று அன்னை சொன்னதின் வழியொழுகினார்கள் என்று உரை எழுதுவதை விடுத்து, அன்னை சொன்னால் கூட ஏற்க முடியாத அறம் இதென்றல்லவா பாண்டவ புத்திரர்கள் மறுத்திருக்கவேண்டும். பாடசாலையில் பரிசாக பெற்றுவரும் விளையாட்டுக் காரை “எல்லாரும் சேர்ந்து விளையாடவேண்டும்” என்று அம்மா சொல்வதுபோல அல்லவா குந்தியும் சொல்கின்றாள். ஒவ்வோராண்டும் ஒவ்வொருவருக்கு அவள் உடமை என்று முறை வைத்துக் கொண்டார்களாம். இதனால், ஒருவனின் கருவை தாங்கிய நிலையில் இன்னொருவனின் உடமையாக போகின்றாள் திரௌபதி. எவ்வளவு கொடுமை இது. திரௌபதி சிரித்ததற்கான பழிவாங்கலே சூதாட்டம் என்றால், ஒரு கேலிச் சிரிப்பும் ஒரு துகிலுரிவும் நேர் சமமா?. சூதாட்ட அவையிலே அதிகம் அவமானப் பட்டவள் திரௌபதி. தீர்க்கமுடியாத அவமானம் அது. அதனால்தான் அவள் பாண்டவர்களுக்குள் இருக்கும் பழிவாங்கும் நெருப்பு வனவாசம், அஞ்ஞாத வாசம் என்று அணைந்துவிடக்கூடாது என்று அவர்கள் கூடவே சென்று, சூதாட்ட சபையிலே செய்த சபதங்களை தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தாள் என்று கதாகாலத்தில் கதை சொல்லி சொல்வது யதார்த்தமானதாகவே இருக்கின்றது. விராட நாட்டில் போரில் அர்ச்சுணன் வெளிப்படுகிறான். அஞ்ஞாதவாச காலம் முடியமுன்னரே அர்ச்சுணன் வெளிப்பட்டான் என்ற சலசலப்பு எழுகின்றது. தர்க்கரீதியாக அந்தக் குற்றச்சாற்று சரியானதே என்று சகாதேவனும் உணர்கின்றான். இதை அறிந்த திரௌபதி சகாதேவனிடம் சென்று பேசிவிட்டு பின் கிருஷ்ணனிடமும் பேசுகின்றாள். அப்போதெல்லாம் அவளுக்கு எந்த சமரசமும் ஏற்பட்டுவிடாமல் நிச்சயம் போர் நடைபெறவேண்டும் என்ற முனைப்பே இருக்கும். இதை தேவகாந்தன் “கூந்தல் அவளைச் சிறைப் பிடித்துள்ளதாய்க் கண்டுகொண்டிருந்தான் கிருஷ்ணன்” என்பார். அதாவது பழிவாங்கும் உணர்ச்சி அவளுக்குள் இருக்கவில்லை. பழிவாங்கும் உணர்ச்சிக்குள் அவள் மூழ்கிப் போய் இருந்தாள் என்கிறார். இறுதியில் சத்தியவதியிடமிருந்து காந்தாரிக்கும், குந்திக்கும், பின் திரௌபதிக்கும் தாரைவார்க்கப்பட்ட அத்தினாபுரத்து சோகங்கள் எல்லாம் திரௌபதியிடமிருந்து உப பாண்டவர்களின் மனைவியருக்கும், அபிமன்யு மனைவி உத்தரைக்கும் தாரைவார்க்கப்படுகின்றன.
..........................................மீதி அடுத்த பதிவில்