மகாராட்டிராவில் உள்ள விதர்பா பகுதியில், நிலமற்ற கூலித் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஆனந்த் டெல்டும்டே. 1970 களில் மாணவர் பருவத்தில் மக்கள் போராட்டங்களில் குறிப்பாக, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கட்டடத் தொழிலாளர்களின் போராட்டத்தில் பங்கேற்றவர். அதன் பிறகு 1980களில் மும்பையில் நடைபெற்ற நூற்பாலைத் தொழிலாளர்கள், சேரி மக்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
ஜாதி, வர்க்கம், கம்யூனிசம், உலகமயமாக்கல், ஜனநாயக அரசியல் தொடர்பாக இன்று இந்தியா முழுவதும் அறியப்படுகின்ற முன்னணி அறிவாளிகளில் ஒருவராக ஆனந்த் டெல்டும்டே இருக்கிறார். ஒரு சுய சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும் பரவலாக கருதப்படும் இவர், விமர்சகராக, தத்துவவாதியாக பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த சமூக செயல்வீரர்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறார். டாக்டர் டெல்டும்டே எழுதியுள்ள 18 நூல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளன.
பல்வேறு முக்கிய பத்திரிகைகளிலும், குறிப்பாக "எக்கனாமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி' என்ற புகழ் பெற்ற இதழில், தலித் மக்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய பத்தி ஒன்றை தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு குழு மற்றும் இந்திய மக்களுக்கான மனித உரிமைகள் குழு ஆகியவற்றிலும் உறுப்பினராக செயல்பட்டு வரும் இவர், கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற சாதிய வன்கொடுமைகள், மதக் கலவரங்கள் தொடர்பான பல்வேறு உண்மை அறியும் குழுவில் பங்கேற்று, விரிவான அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். இடதுசாரிகள் மற்றும் தலித் இயக்கங்களோடு இணைந்து தீவிர பங்காற்றிவரும் டெல்டும்டே, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இடையறாது எழுதியும், உரையாற்றியும் வருகிறார்.
இந்தியாவில் மட்டுமின்றி அயல்நாடுகளுக்கும் சென்று, பல பல்கலைக் கழகங்களில் சிறப்புரையாற்றி வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவர், வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும், மேலாண்மை கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். டிசம்பர் 26, 2010 அன்று சென்னையில் குடிசைகள் அகற்றப்படுவதை கண்டித்து நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த வந்திருந்த போது, இந்நேர்காணல் எடுக்கப்பட்டது.
சந்திப்பு : 'கீற்று' பாஸ்கர்
நீங்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து வரும் வழியில் திருமாவளவன் படங்கள் தாங்கிய "தமிழர் இறையாண்மை மாநாட்டு'ப் பதாகைகளை பார்த்திருப்பீர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, இன்று அரசியல் தலைவராக மேலெழும்பி நிற்கும் திருமாவளவன், தலித் அடையாள அரசியலை விடவும் அண்மைக்காலமாக "தமிழர்' அடையாள அரசியலை முன்னெடுப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை என்றே நான் கருதுகிறேன். ஒரு தலித் முதலில் தன்னைச் சுற்றியுள்ள தம் சமூக மக்களின் பிரச்சனைகளை கையில் எடுக்கிறார். பிறகு தன்னுடைய சமூக மக்களின் ஆதரவைப் பெற்று, ஓர் அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். அதன் பின்னர் தேர்தல் அரசியலினூடாக ஒரு பெரும் அரசியல் சக்தியாக உருப்பெருகிறார். அவருடைய கனவு விரிவடைகிறது. அடுத்த கட்டமாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் பிரதிநிதி என்பதிலிருந்து ஒட்டுமொத்த மக்களையும் அணி திரட்டி, அவர்களின் தனிப்பெரும் தலைவராகும் பணிகளில் இறங்குகிறார். இதற்கிடையே எங்கிருந்து அரசியலைத் தொடங்கினோமோ, அம்மக்களின் உண்மையான பிரச்சனைகளை அவர் மறந்து விடுகிறார்!
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இதனைத்தான் உத்தரப் பிரதேசத்தில் செல்வி மாயாவதி செய்தார். முதலில் அவர்கள் "பகுஜன்' (பெரும்பான்மை மக்கள்) என்று தலித்துகளை அணிதிரட்டினார்கள். தலித் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளைப் பெற்றது. பகுஜன் அரசியல் மூலம் ஒரு நிலையான வாக்கு வங்கியை மாயாவதி கைப்பற்றினார். தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சதவிகித வாக்குகளையே எல்லா தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி பெற்று வந்தது. அடுத்த கட்ட அரசியல் வளர்ச்சியை முன்னிட்டும், தன் வாக்கு வங்கியை விரிவாக்கவும், இதர மக்களையும் அவர் தம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனவே, அவர் "சர்வஜன்' (அனைத்து மக்கள்) எனும் முழக்கத்தை எழுப்பினார். இது, அரசியலில் ஓர் இயல்பான பரிணாம வளர்ச்சியே. இப்படிதான் திருமாவளவனும் நினைக்கிறார்.
தலித் மக்களை தன் பின்னே அணி வகுக்கச் செய்துவிட்டதால், அடுத்தகட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்க விரும்புகிறார். தலித்துகள் எல்லோரும் இவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா என்ற கேள்விகூட இருக்கிறது. ஆனால், தேர்தல் அரசியலில் இப்படியான மாயைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. பதாகைகள் மூலமாகவும், பிரச்சாரங்களின் மூலமாகவும் மாயைகள் கட்டமைக்கப்படுகின்றன. இந்த வகையில் இது அதிகப்படியான மக்களையும் போய் சேர்கிறது. தமிழ்த் தேசியம் என்பது, தமிழ்நாட்டில் வெகுகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியம் கேட்போரும் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் இங்கு இருக்கின்றனர். எனவே, இவர் இதனை கையிலெடுக்கிறார்.
தேர்தல் அரசியலுக்காக "தமிழர்' அடையாளத்தோடு செயல்பட்டாலும், தலித் அல்லாத சமூகம் திருமாவளவன் போன்ற தலித் தலைவரின் பின்னால் அணி திரளுமா?
தேர்தல் அரசியலில் ஒருவர் கையிலெடுக்கும் பிரச்சனை, அவருக்கு வாக்காகத் திரும்ப கிடைக்க வேண்டும் என்ற அவசிமில்லை. ஆனால், மக்கள் மத்தியில் அவர் மீதான ஒரு மாயை விதைக்கப்படுகிறது. வருங்காலத்தில் தமிழக முதல்வராகவோ, ஒரு மாபெரும் தமிழர் தலைவராகவோ வருவதற்கும், தலித் அல்லாத மக்களின் வாக்குகளையும் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் போன்ற அரசியல் உதவும் என அவர் நம்பலாம். ஆனால், இவை எந்த அளவுக்கு உதவும் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது.
ஏனெனில், நம் நாட்டில் அரசியல் என்பது சாதிய சமூகங்களாகப் பிரிந்து கிடக்கிறது. தேர்தலின்போது இவற்றின் கலவைதான் வேலை செய்கிறது. எனவே, இவ்வகை அரசியல் வாக்குகளாக மாறுமா என்ற கேள்விக்கான பதிலை நாம் மாயாவதியின் அரசியலோடு ஒப்பிட்டால் பெற முடியும். தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாயாவதி உறுதியாக ஒன்றும் செய்யவில்லை என்பதை தலித்துகள் ஒரு நாள் உணர்வார்கள் என்ற அச்சம் மாயாவதிக்கு இருக்கிறது. பிற சமூகங்களை குளிர்விப்பதன் பேரில் தலித்துகள் பிரச்சனைகளை அவர் மறந்து வருவதாக உத்தரப் பிரதேச மக்கள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர். இது விரைவில் தலித்துகளிடமிருந்து கிடைக்கும் வாக்கு வங்கியை பாதிப்படைய செய்யும். எனவே, இவ்வகை
அரசியலில் பலனில்லை என்றே தோன்றுகிறது. எது பலனளிக்கக் கூடிய அரசியல் பாதையோ, அதை தேர்தல் அரசியலுடன் சேர்ந்து செய்ய இயலாது. உண்மையான மக்கள் போராட்டங்கள் குறித்த ஒரு தொலைநோக்குப் பார்வை தேவைப்படுகிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக சாதி, சமூக எல்லைகளைக் கடந்து போராட வேண்டியிருக்கிறது. அது தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எவருக்குமே இதில் எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருக்கும்; திருமாவுக்கும்தான்!
"இலங்கையில், மலையகத் தமிழர்களின் விடுதலையைப் பற்றி கவலை கொள்ளாத ஒரு விடுதலைப் போராட்டம் குறித்து நாங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும்?' என்ற குரலை தமிழக தலித் எழுத்தாளர்களில் ஒரு குழுவினர் எழுப்பியுள்ளனர். இது குறித்து உங்கள் பார்வை என்ன?
முதலில், எனக்கு தமிழ் தெரியாது என்ற உண்மையையும், எனவே இங்குள்ள நிலவரமும், நடக்கும் விவாதங்களும் முழுமையாகத் தெரியாது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். என்னுடைய கருத்து என்னவாக இருக்குமென்றால், இதுபோன்ற எதிர்ப்பை சாதியை முன்னிறுத்தி, எல்லா பிரச்சனைகளிலும் வைக்க முடியும். விடுதலைப் புலிகளின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இலங்கையிலுள்ள தலித்துகள் இதனை எழுப்பவில்லை. எனவே, மற்றவர்கள் இப்பிரச்சனையை எழுப்பினால், அதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். அங்கு சிங்களப் பெரும்பான்மையினர், தமிழர்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழர்களை நாம் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் என்று வகைப்படுத்தினாலும் அவர்கள் தமிழர்கள். ஒருவேளை விடுதலைப்புலிகளின் தலைமை, சாதிய மனப்பான்மையோடு இயங்குவதாக அங்குள்ள தலித் தமிழர்கள் சொன்னால், அதற்கு நாம் முக்கியத்துவம் தரலாம்.
ஒரு மனிதன் பல்வேறு அடையாளங்களோடு இயங்குகிறான். தலித்துகள் என்று நாம் அடையாளப்படுத்தினாலும், அதனுள் இருக்கும் உட்சாதி பிரிவுகளைக் கொண்டும் கேள்வி எழுப்பலாம். இதுபோல் பல்வேறு படிநிலைகளில் அடையாளங்கள் இருக்கின்றன. எனவே தமிழர், சிங்களர் என்பன பெரிய அளவிலான மக்கள் திரளின் அடையாளங்கள். இதுபோன்ற ஒரு பிரச்சனையில் சாதியை முன்வைத்து கேள்வி எழுப்பினால், எந்த ஒரு அடிப்படையான போராட்டத்திலும் இக்கேள்வியை எழுப்ப முடியும் என்றாகி, ஒட்டுமொத்த போராட்டத்தையும் அது வலுவிழக்கச் செய்துவிட முடியும்.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் செயல்படும் நக்சல்பாரி இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். “ஆந்திராவில் இருக்கும் சில ரெட்டிகளுக்கும், ராவ்களுக்கும் பிரச்சனை இருக்கலாம். அதனையொட்டி அவர்கள் புரட்சி செய்யலாம்; இதில் தலித்துகளுக்கு என்ன இருக்கிறது?'' என்று கூட ஒருவர் கேட்டுவிட முடியும். உண்மையில் கேட்டே கூட இருக்கிறார்கள். ஆனால் அது சரியா? ஒருவேளை இயக்கத்திற்குள்ளே இருக்கும் தலித்துகள் இதனை எழுப்பினால், உண்மையான முரண்பாடுகளை விவாதித்து தீர்க்க வேண்டிய அடிப்படை நியாயம் இருக்கிறது. அப்படி இல்லாதபோது அவை புறந்தள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தலித் என்பதால்தான் ஆ.ராஜா, வட இந்திய ஆங்கில ஊடகங்களால் களங்கப்படுத்தப்படுவதாக கருணாநிதி கூறியிருப்பதில் உண்மை இருக்கிறதா?
இது, கருணாநிதியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பதில்தான். ஆ.ராஜா ஒரு மத்திய அமைச்சர். அவர் ஊழல் புரிந்திருந்தால் அதற்கும் அவர் தலித் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாதியை வைத்து அவர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ராசா தலித் என்பதால் வட இந்திய பார்ப்பனிய ஊடகங்கள் இதனை ஊதி பெரிதுபடுத்தி காட்டுகின்றன என்கிறார். இது, உதறித்தள்ள வேண்டிய ஒரு கருத்து. அவர் தவறு செய்திருந்தால் தனிப்பட்ட நபராக அவர் குற்றவாளி; இதில் சாதிக்கு எந்த இடமுமில்லை. ஊடகங்கள் ஆனாலும் சரி, வேறு எங்கும் ஒரு சிறிய அளவேனும் சார்பு நிலையும், வேற்றுமை பாராட்டுதலும்
இருக்கவே செய்யும். சாதி அத்தகைய வலுப்பெற்றது. அதற்காக, நடக்காத ஒன்றை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக சொல்லி தப்பிக்க முடியாது. ராஜா தவறு செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.
தலித்துகளின் நேரடியான பிரச்சனைகளில் களம் இறங்கத் தயாராக இல்லாத தமிழ்த் தேசியவாதிகள், தலித்துகளையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியத்தை கட்டமைக்க முயல்வது பற்றி தங்கள் கருத்தென்ன?
இந்தியாவில் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்கள் குறித்து முழுமையாக எனக்குத் தெரியாது என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். "இங்கு ஒவ்வொரு ஜாதியும் ஒரு தேசமாக இருக்கிறது' என்ற அம்பேத்கரின் கூற்றை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். அது, இன்றளவும் மாறாத உண்மையாக நீடிப்பதை நான் உணர்கிறேன். தேசியம் என்பது பழங்காலந்தொட்டே முதலாளித்துவத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியைக் கூட தேசியம் அல்லது தேசம் என்று கருத்தியல் ரீதியாகச் சொல்லலாம்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தேசியச் சாயம் பூசி, தேசிய இனப் போராட்டம் என்று நியாயம் கற்பித்துக் கொள்ள முடியும். ஆனால், ஒரு தேசம் அப்படியெல்லாம் உருவாவதில்லை. நியாயமான உணர்வுப்பூர்வமான போராட்டங்களும் இந்தியாவில் நடந்து கொண்டுதானிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வடகிழக்கை எடுத்துக் கொள்வோம். அங்கே சாதி உள்ளிட்ட பிரிவினைகள் ஒப்பிடத்தக்க அளவில் குறைவே. இந்திய அரசு நடத்திவரும் அடக்குமுறைகளுக்கெதிராக அவர்கள் குரலெழுப்பியுள்ளனர். இவர்களின் போராட்டத்தை தேசியப் போராட்டமாக நான் ஒப்புக்கொள்வேன். வரலாற்று ரீதியாக அவர்கள் வேறுபட்ட மனிதர்களாகவே இருந்து வந்துள்ளனர். அவர்கள் தனித்தன்மையான அடையாளங்களோடு வாழ்ந்து வருகின்றனர். நெடுங்காலமாக இந்தியாவும் அவர்களை ஒரு காலனியாகவே கருதி வந்துள்ளது. காலனிய ஒடுக்குமுறைகளையும் அவர்கள் அனுபவித்து வந்துள்ளனர். அவற்றிற்கு எதிரான அவர்களின் போராட்டத்தை நாம் தேசியப் போராட்டமாக அங்கீகரிக்கலாம். இவர்களின் போராட்டத்தோடு ஒப்பிடும்படியான போராட்டம், ஒருங்கிணைந்த இந்தியாவின் இதர பகுதிகளில் எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கான குரல்கள் வெகுகாலமாகவே ஒலித்து வருகின்றன என்றபோதிலும், இதனை ஒரு நியாயமான தேசியப் போராட்டமாக என்னால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், இவ்வகைப் போராட்டங்கள் இங்கு எழுப்பப்படும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் குரல்களையும், போராட்டங்களையும் ஒருவகையில் வலுவிழக்கச் செய்து விடுகின்றன. தமிழ்நாட்டில் தலித்துகளின் போராட்டங்களும் காலங்காலமாக நடந்து வருகின்றன. பெரிய அளவில் வட இந்தியா அல்லது இந்தி, தமிழ் இனத்தை ஒடுக்கிக் கொண்டிருப்பதாகவும், அதற்கெதிரான தமிழ்த்தேசியப் போராட்டம் என்ற பெயரில் தலித்துகளின் போராட்டங்களையும், எழுச்சியையும் அதனுள் புதைக்கக்கூடிய ஆபத்துகளுக்கு இது வழிவகுக்கும்.
காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் நடை பெறும் தேசிய இனப் போராட்டங்களையும், இந்தியாவின் இதர பிராந்தியங்களில் எழுப்பப்படும் தேசியப் போராட்டங்களையும் ஒப்பிட முடியுமா?
இந்தியாவில் வெவ்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் காஷ்மீரிலோ, வடகிழக்கிலோ நடைபெறும் போராட்டத்தை பிற போராட்டங்களோடு நேரடியாக ஒப்பிட முடியாது. நான் தேசிய விடுதலைப் போராட்டம் என்னும் வெளியிலிருந்து போராட்டங்களை ஒப்பிடுவதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். காஷ்மீரிலோ, வடகிழக்கிலோ நடைபெறும் போராட்டங்களை தேசிய விடுதலைப் போராட்டம் என்று நாம் சொல்கிறோம் என்றால், அங்கு ஒட்டுமொத்த மக்களும் இந்திய அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அப்பகுதிகள் இந்தியாவின் காலனிகளாக எப்போதோ குறுக்கப்பட்டுவிட்டன. இந்திய ராணுவத்தைத் தவிர அங்கு வேறொன்றும் இல்லை. அது ஒரு அப்பட்டமான தேசிய விடுதலைப் போராட்டம்.
இந்தியாவின் இதர பிராந்தியங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. சாதிகளுக்கெதிரான போராட்டம், விவசாய கூலி உள்ளிட்ட வர்க்கப் போராட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்து நடக்கும் போராட்டம், குடிசை அகற்றுதலுக்கெதிரான போராட்டம் என எண்ணற்ற போராட்டங்கள் நடக்கின்றன. இப்போராட்டங்களில் தேசியக் கேள்வியை முன்வைக்கும்போது, எடுத்துக்காட்டாக மகாராட்டிரா போன்ற மாநிலங்களில் சிவசேனாவைப் போன்ற ஒரு கட்சி தோன்றி மராட்டியப் போராட்டத்தை கையிலெடுக்கும்போது என்னவாகிறதென்றால், பிராந்திய அடையாளப் போராட்டமானது மேற்கூறிய அனைத்துப் போராட்டங்களையும் தன்னுள் விழுங்கி விடுகிறது. மகாராட்டிராவில் நடந்த மராட்டிய போராட்டங்கள், அங்குள்ள உழைக்கும் மக்கள் போராட் டங்களை சூன்யமாக்கி விட்டன எனலாம். ஆகவே, இதுதான் பிற பிராந்தியங்களிலும் நடக்கும்.
எனவே, தமிழ்த் தேசியப் பிரச்சனையை இங்கே செயற்கையாக உருவாக்கினால், எந்த அரசியலை தமிழ்த் தேசியம் முன்வைக்கிறதென்ற நியாயமான கேள்வி உடனடியாக எழும். தமிழ்நாட்டில் வாழும் தலித்துகளின் பழங்குடிகளின் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன; இதர மக்களுக்கும் அவர்களின் நிலம் உள்ளிட்டவை அபகரிக்கப்படுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றுக்கான எல்லாபோராட்டங்களும் தேசியத்தின் பெயரால் புதைக்கப்பட நேரும் ஆபத்துகள் இருக்கின்றன. தமிழ்த் தேசிய ஒற்றை அடையாளம் அவர்கள் மீது திணிக்கப்பட்டு, “இது போன்ற சிறு பிரச்சனைகளை மறந்துவிட்டு தமிழ்த் தேசியம் எனும் மாபெரும் லட்சியத்தை முன்னிறுத்தி ஒன்றுபட வேண்டும்'' என்று அவர்களிடையே பிரச்சாரம் செய்யப்படும். எனவே, தமிழ் தேசியப் போராட்டத்தில் நியாயம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
"உலகமயமாக்கல் தலித்துகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்ற பிரச்சாரத்தின் தோல்விக்கு – கயர்லாஞ்சி ஒரு சான்று' என்று உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். "நகரமயமாக்கல்' சாதி இந்துக்களின் வன்கொடுமைகளிலிருந்து தலித்துகளை மீட்கிறது என்ற ஒரு வாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கிராம அமைப்பு முறைதான் சாதியப் படிநிலை அமைப்பை உருவாக்கி, ஊட்டமளித்து, செம்மையான முறையிலே இதுவரை பாதுகாத்தும் வந்துள்ளது. வரலாற்றை நீங்கள் சரியாகப் படித்துப் பார்த்திருப்பீர்களேயானால், தலித்துகளுக்கு தப்பிக்க எப்போதும் இரண்டு மார்க்கங்களே இருந்து வந்துள்ளன. ஒன்று நிலம்சார் இடப்பெயர்வு மற்றொன்று அறிவுசார் பெயர்வு. நிலம் சார்ந்து கிராமங்கள் ஜாதியுடன் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, கிராமங்களிலிருந்து வெளியேறுதல் ஒரு தப்பிக்கும் வழியாக இருந்திருக்கிறது. சாதியானது இந்து மதத்துடன் பிணைந்துள்ளது. எனவே, இந்து மதத்திலிருந்து வெளியேறி பிற மதங்களுக்கு மாறுதல் மற்றொரு தப்பிக்கும் மார்க்கமாக இருந்து வந்திருக்கிறது. எனவே, அவர்கள் இஸ்லாம், கிறித்துவம் உள்ளிட்ட மதங்களுக்கு மாறி வந்துள்ளனர். முகலாய ஆட்சிக்காலங்களில் நகரங்களுக்கு குடிபெயர்தல் தொடங்குகிறபோது, அப்போதிலிருந்தே அதைப் பயன்படுத்தி தலித்துகள் கிராமங்களிலிருந்து வெளியேறி நகருக்கு குடிபெயர்ந்தும் தப்பித்து வந்துள்ளனர். ஆனால், இந்த இரண்டு மார்க்கங்களுமே முழுமையான பலனை, வெற்றியை தரவில்லை எனலாம். அம்பேத்கரின் மதமாற்றத்தையும் சேர்த்து, மதமாற்றமும் பெரிய அளவிற்கு உதவவில்லை என்றே சொல்லலாம். அதே நேரத்தில், இந்த இரு மார்க்கங்களும் ஓரளவிற்கு தலித்துகளுக்கு உதவியிருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.
நகரமயமாதலில் நன்மையில்லாமலில்லை. சாதி பாகுபாட்டின் வீரியம் நகரங்களில் வெகுவாகக் குறைவு. நகர சூழலில் "என்னைத் தொடாதே' போன்ற அசல் தீண்டாமைகளை கடைப்பிடிக்க முடியாது. ஆனால், அங்குதான் சாதியின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை முக்கியப் பங்காற்றுகிறது. முன்னர் நம்பிக் கொண்டிருந்ததுபோல, சாதி என்பது தீண்டாமை, சடங்குகள் போன்ற குறிப்பிட்ட வடிவங்களுக்கு உட்பட்டதல்ல. சாதியானது சூழலுக்கேற்ப புதிய வடிவில் தானே தன்னைப் பொருத்திக் கொள்ளும் வலுப்பெற்றது. பல நேரங்களில் இந்த உண்மை தலித் அறிஞர்களால் கூட புரிந்துக் கொள்ளப்படவில்லை.
எனவே, நகர சூழலில் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுவதுபோல பாரம்பரிய சாதி – தீண்டாமைகள் கடைப்பிடிக்கப்படாவிட்டாலும் கூட, வேறு வகையான சாதியப் பாகுபாட்டு வடிவங்களை காணமுடியும். இதற்கு எடுத்துக்காட்டாக, நகரங்களிலிருக்கும் சேரிகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். மும்பையிலுள்ள சேரிகள் எனக்கு நன்கு பரிச்சயமானவை. ஒரே சேரியிலும் சாதி ரீதியிலான குடிசை வளையங்கள் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இது கிட்டத்தட்ட ஒரு கிராம முறையை ஒத்திருக்கும்.
நகரமயமாதலின் நன்மையென்று பார்க்கும்போது, அங்கு சாதிப் பாகுபாடுகள் குறைவே. சாதிய வளையங்களுக்குள் வாழ்ந்தாலும், வெவ்வேறு சாதிய சமூகங்களுக்குள்ளான உறவுகள் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் தாழ்வில்லை. கிராமங்களிலே கூட எப்போதும் பகையுணர்வுடனும், வெறுப்புணர்வுடனும் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எப்போது தலித்திடம் சொத்து இருக்கிறதோ, அல்லது "கயர்லாஞ்சி மொழி'யில் சொல்வதானால், எப்போதெல்லாம் அதிகாரம் மற்றும் செல்வாக்கில் தங்களை விட தலித்துகளிடம் ஏற்றம் உணரப்படுகிறதோ, அப்போது ஏதோ ஒரு பிரச்சனை தூண்டுதலாக இருந்து – அது தலித்துக்கெதிரான வன்கொடுமைக்கு வழிவகுக்கிறது. நகரச் சூழலில் இவ்வகையான வெளிப்படையான வன்கொடுமைகளுக்கு வாய்ப்பு குறைவு. நகர சூழலில் பின்பற்றப்படும் சாதியப் பாகுபாடுகள் கிராமங்களைப் போல வெளிப்படையானவையல்ல. நீங்கள் தலித் என்று தெரியவந்தால், கார்ப்பரேட்டுகளிலும் அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் – உங்களிடம் ஒரு வேறுபாடு காட்டப்படும். இதுபோன்ற பாகுபாடுகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
– அடுத்த இதழிலும்
ஆனந்த் டெல்டும்டே எழுதியுள்ள நூல்கள்
l Persistence of Caste – 2010
l On Imperialism and Caste – 2009 l Globalization and Dalits : Perspectives of Buddhist Economics – 2009
l Samrajyavad ani Jaat
(Marathi) – 2009 l Khairlanji :
A Strange and Bitter Crop – 2008 l Ekavisavya Shatakatil Bharat : Unmad ani Awhane
(Marathi) – 2008
l Anti-Imperialism and Annihilation of Castes – 2005
l Hindutva and Dalits : Perspectives for Understanding Communal Praxis – 2005
l Ambedkar and Muslims: Myths and Facts – 2003
l Jagatilikaran ani Kashtakari Dalit-Bahujan – 2002
l Glabalization and Dalits – 2001 l Capitalism and Caste
l ‘Ambedkar’ in and for the Post-Ambedkar Dalit Movement – 1997 l Impact of New Economic Reforms on Dalits in India, (Monograph) – 1997
l On Imperialism and Caste – 2009 l Globalization and Dalits : Perspectives of Buddhist Economics – 2009
l Samrajyavad ani Jaat
(Marathi) – 2009 l Khairlanji :
A Strange and Bitter Crop – 2008 l Ekavisavya Shatakatil Bharat : Unmad ani Awhane
(Marathi) – 2008
l Anti-Imperialism and Annihilation of Castes – 2005
l Hindutva and Dalits : Perspectives for Understanding Communal Praxis – 2005
l Ambedkar and Muslims: Myths and Facts – 2003
l Jagatilikaran ani Kashtakari Dalit-Bahujan – 2002
l Glabalization and Dalits – 2001 l Capitalism and Caste
l ‘Ambedkar’ in and for the Post-Ambedkar Dalit Movement – 1997 l Impact of New Economic Reforms on Dalits in India, (Monograph) – 1997
கீற்று இணையத்தளம்
மார்ச் 02/ 2011
No comments:
Post a Comment