எழுதியவர் - யமுனா ராஜேந்திரன்
முவம்மர் கடாபியை நேரடியிலாக ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நிகரகுவா சான்டினிஸ்டாப் புரட்சியாளரான டேனியல் ஒர்ட்டேகா.
டேனியல் ஒர்ட்டேகா நிகரகுவாவை ஆண்ட சமோசா எனும் சர்வாதிகாரியை எதிர்த்து எழுந்த மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர். தேர்தலில் ஒரு முறை தோற்கடிக்கப்பட்டு மறுமுறை அதே மக்களின் பெருவாரியான வாக்குகளால் மீளவும் நிகரகுவாவை ஆண்டு வருபவர் டேனியல் ஒர்ட்டேகா.
லிபியா, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடு எனவும், அமெரிக்கா லிபியாவின் எண்ணெய் வளங்களை அபகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது எனவும், லிபியாவின் மீதான வரப்போகிற அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண்டிக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கியூபப் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ.
அதனோடு முவம்பர் கடாபி தமது மக்களுக்கான பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
காஸ்ட்ரோ எந்தவிதத்திலும் கடாபியை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் லிபிய மக்கள் எழுச்சி குறித்து எதுவும் பேசவில்லை என்பது மிகமிகத் துரதிரஷ்டவசமானது. பிடல் காஸ்ட்ரோ 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கியூபாவை ஆண்ட பாடிஸ்ட்டா எனும் சர்வாதிகாரியை எதிர்த்து, மக்கள் எழுச்சிக்கு அல்ல, கெரில்லா யுத்தத்திற்குத் தலைமையேற்றவர்.
வெனிசுலாவின் புரட்சியாளரான சேவாஸ் ‘கடாபி உள்நாட்டு யுத்தத்தை எதிர்கொண்டிருக்கிறார், லிபிய சுதந்திரம் நீடூழி வாழ்க’ எனத் தெரிவித்திருக்கிறார்.
உலகின் தெற்கு நாடுகளின் பிரச்சினையை தெற்கு நாட்டவரே தீர்த்துக் கொள்கிறோம் என்பது அவரது கருத்தியல். அதனடிப்படையில் அமெரிக்க-மேற்கத்திய அதிகாரத்துக்கு எதிராக லிபியப் பிரச்சினையை சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்வோம் என உலக நாடுகளுக்கு அவர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
லிபியாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் குறித்துத்தான் சேவாஸ் பேசுகிறாரேயல்லாது, அவர் லிபிய மக்களின் எழுச்சி குறித்து எதுவும் பேசுவதில்லை. வெனிசுலாவில் மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சேவாஸ், இருமுறை அதே மக்களின் பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர்.
லிபியாவில் நடப்பது இன்று நடப்பது என்ன?
மத்தியக் கிழக்கின் மக்கள் எழுச்சிகளின் ஒரு பகுதியாகவும் தொடர்ச்சியாகவும்தான் லிபியாவில் மக்கள் எழுச்சி எழுந்திருக்கிறது.
முபாராக்,பென் அலி போன்றுதான் லிபியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது இரும்புக்கர அதிகாரத்தினால் பதவி வகித்து வருகிறார் கடாபி. மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளை அதனது முரண்கள் மற்றும் பலவீனங்களோடும் ஆதரித்திருக்கிறார்கள் சமிர் அமின் மற்றும் தாரிக் அலி போன்ற மார்க்சியர்கள்.
இந்த எழுச்சிகளுக்கு மார்க்சியர்கள் தலைமைதாங்க வில்லை, ஆயினும் இந்த மக்கள் எழுச்சிகளை அவர்கள் ஆதரித்து நிற்கிறார்கள். தாமதமாகவேனும் திரட்டப்பட்ட தொழிலாளிகளும் இந்த மக்கள் எழுச்சிகளுக்கு ஆதரவாகவே நிற்கிறார்கள்.
லிபியாவில் இன்று ஏற்பட்டிருப்பது மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளின் ஒரு பகுதிதான். அதனது சர்வாதிகாரிகளுக்கும் மன்னராட்சிகளுக்கும் ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் எதிரானதுதான் இந்த மக்களது எழுச்சி.
மக்கள் எழுச்சிகளின் மூலம் ஆட்சிகளுக்கு வந்த சேவாசுக்கும், ஒர்ட்டேகாவுக்கும் குறைந்தபட்சம் இந்த மக்கள் எழுச்சிகளை ஏன் பரிவாகப் பார்க்க முடியவில்லை?
அந்த மக்களின் எழுச்சிகளின் முரண்களோடும் பலவீனங்களோடும் கூட ஏன் அதனது குணாம்சத்தை அளவிட அவர்கள் தயாராகவில்லை? இந்த மக்கள் எழுச்சிபற்றிப் பேசுகிற நிலைமையில், சர்வாதிகாரியான பாடிஸ்டாவை எதிர்த்துப் போராடிய பிடல் காஸ்ட்ரோ ஏன் மனம் கொள்ளவில்லை?
அவர்களால் ஒரே ஒரு காரணம்தான் சொல்ல முடிகிறது.
கடாபி ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். ஏகாதிபத்தியம் எண்ணெய்வளத்தின் மீது ஆதிக்கம் கொள்வதற்காக இந்தப் பிரச்சினையைப் ‘பாவிக்க’ப் பார்க்கிறது.
முக்கியமான சில கேள்விகளை அவர்கள் தமக்குத்தானே கேட்டுக் கொள்ளவில்லை.
இந்த மக்கள் எழுச்சி ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான எழுச்சியா? இந்த மக்கள் எழுச்சியை ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் தலைமை தாங்குகிறார்களா? அல்லது இதுவரையிலும் கடாபியினால் கொல்லப்பட்ட 2000 வெகுமக்களும் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்பதனால்தான் கடாபியினால் விமானக் குண்டுவீச்சினால் கொல்லப்பட்டார்களா?
‘எமக்கு எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளும் தேவையில்லை, வெளிநாட்டுத் தலையீட்டையும் நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள் லிபியாவின் இரண்டாவது நகரான பெஞ்சாய் நகரின் கிளர்ச்சியாளர்களான இடைக்கால நிர்வாகத்தினர்.
எனில், மக்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டு, அந்தக் கிளர்ச்சியாளர்களை ஆயுதமுனையில் அடக்குவதை நிறுத்திவிட்டு, ஒரு சமாதான அரசியல் தீர்வுக்கு ஏன் கடாபி இணங்கிவரக் கூடாது? அந்தச் சமாதான முயற்சிக்கு - கிளர்ச்சியாளர்களுக்கும்; கடாபிக்கும் இடையிலான அப்படியான இணக்கத்திற்கு காஸ்ட்ரேவும், ஒர்ட்டேகாவும், சேவாசும் முயற்சி செய்யலாமே?
அதைவிட்டுவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் கடாபியின் அதிகாரத்தைத் தக்க வைக்கவேண்டும் என்கிற ரீதியிலும், கடாபிக்கு அமெரிக்க ஆபத்து எனப்பேசுவதிலும் என்னவிதமான தார்மீக அல்லது புரட்சிகர அறம் இருக்க இயலும்?
அனைத்துக்கும் மேலாகக் கேட்கவேண்டிய பிறிதொரு கேள்வியும் இருக்கிறது.
கடாபி கடந்த பத்து ஆண்டுகளாக ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகத்தான் இருக்கிறாரா? அமெரிக்க-மேற்கத்திய நிறுவனங்களுடன் அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற-எண்ணெய் நிறுவனங்களை மேற்குக்குத் தாரைவார்க்கிற அவரது கொள்கைக்கு என்ன பெயர்? அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில் அவர் அவர்களது செல்லப் பிள்ளையாக இருக்கிறாரே அதற்கு என்ன பெயர்?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் இவர்களிடம் சொல்வதற்கு ஒரே பதில்தான் இருக்கிறது.
அவர் எம்முடைய நண்பராக இருந்தவர். ஓரு காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தவர். எம்முடைய அனுபவத்தில் அமெரிக்காதான் எமக்குப் பொது எதிரி. ஆகவே எல்லாப் பிரச்சினையிலும், அமெரிக்காவுக்கும் மேற்கத்திய அதிகாரத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் எமது கொள்கை. ஓரு நாட்டை ஆளுகிறவர், சர்வாதிகாரியாக இருந்தாலும், மக்களது விருப்புக்கு எதிராக நூறாண்டுகாலம் எதேச்சாதிகாரியாக ஆட்சி செய்தாலும், கொடுங்கோல் மன்னராக இருந்தாலும், இனக்கொலை செய்பவராக இருந்தாலும், அவர்கள் தமது சொந்த மக்களையே கொன்றொழித்தாலும், அவர்களை நாங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கடமையின் பெயரால் ஆதரிப்போம்!
இந்தப் பதிலில் ஒரே ஒரு விடயம் மட்டுமே பொருட்படுத்தத்தக்கதாக இருக்கும்.
இலத்தீனமெரிக்க நாடுகளின் பொது அனுபவத்தில், அவர்தம் சொந்த அனுபவத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது அவர்களுக்குப் பிசாசு. அமெரிக்க ஏகாதிபத்தியமே வரலாற்று ரீதியில் இலத்தீனமெரிக்க நாடுகளின் கொடுங்கோலர்களுக்கு, சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்து வந்திருக்கிறது. அதற்கு எதிராகவே அங்கு மக்கள் எழுச்சிகள் தோன்றின. காஸ்ட்ரோவின் தலைமையிலும், ஒர்ட்டேகாவின் தலைமையிலும், சேவாசின் தலைமையிலும் அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். அதன்பொருட்டே அவர்கள் தென்னமெரிக்காவில் அமெரிக்க அதிகாரத்தைத் தகர்க்கிற மாதிரியிலான கூட்டமைப்பையும் சாதித்திருக்கிறார்கள்.
என்றாலும், இந்த அனுபவத்தை உலகின் எல்லா நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் இன்று பொருத்தமுடியாது.
எந்தெந்த நாடுகளில் எது எது முன்னுரிமை என்பதனை அந்தந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இலத்தீனமெரிக்க நாடுகள் தமது அனுபவத்தைப் பொதுமைப்படுத்தியதும், ஆசிய நாடுகளின் இடதுசாரிகள் தமது கடந்தகால அனுபவங்களைப் பொதுமைப்படுத்தியதும்தான் ஈழப்பிரச்சினையில், நடைமுறையில், அவர்களை இனக்கொலைக்கு உள்ளான தமிழ்மக்கள் எதிர்ப்பு நிலைபாட்டுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவு நிலைபாட்டுக்கும் அவர்களைக் கொண்டு சேர்த்தது.
துரதிருஷ்டவசமாக ராஜபக்சே அமெரிக்க-மேற்கத்திய-சீன-இந்திய ஆதரவைக் கோரிப்பெறுகிற ஒரு ஆட்சியாளர்தான் என்பதனை அவர்கள் உணரவில்லை. அதுமட்டுமன்று ஒரு மூன்றாம் உலக நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும்-மேற்கத்தியர்களும் வலியுறுத்துகிற மனித உரிமை எனும் அஸ்திரத்தை நாங்கள் ஒப்புவதா எனும் அடிப்படையில், சுயாதீனமான மனித உரிமை அரசியலையும் அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.
உலகின் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எழுகிற எதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தமது உடனடி நோக்காகக் கொண்டிருப்பதில்லை. இன்றைய நிலையில் அது திட்டவட்டமான இடதுசாரித் திசையிலான அரசியலைத் தேர்ந்து கொள்வதும் சாத்தியமில்லை.
பின்-சோவியத் பின்-செஞ்சீன நிலைமையில் சோசலிச மறுகட்டமைப்புக்கான இடைக்காலகட்டமே இன்றைய காலம்.
மேலாக, ஒடுக்குமறையின் தன்மையே அவர்களது எதிர்ப்பின் தன்மையையும் தீர்மானிக்கிறது. அவ்வகையில் ஏற்பட்டிருக்கும் மத்தியக் கிழக்கு எழுச்சி, எகிப்து முதல் லிபியா வரையிலான எழுச்சி அதனது அடிப்படையில் முடிமன்னராட்சிகள், பல பத்தாண்டுகளாக வாரிசுகளை வளர்த்துவரும் எதேச்சாதிகாரிளுக்கு எதிரான மக்களாட்சி நோக்கிய எழுச்சிகள்தான். இதனை அமெரிக்க ஏகாதிபத்தியம் ‘பாவித்து’க் கொள்ளும் என்பதற்காக இந்த எழுச்சிகளை அங்கீகரிக்க மறுப்பதோ, அது பற்றிப் பேசாமல் தவிர்ப்பதோ இடதுசாரி அரசியல் ஆகாது.
எகிப்து-துனீசியா-லிபியா எனத் தொடரும் இந்த எழுச்சி எதேச்சாதிகாரிகளை பதவியிலிருந்து அகற்றுவதோடு மட்டும் நின்றுவிடாது. இந்த மக்களின் எழுச்சிகள் மக்களாட்சிக்கும் தேசிய இறையான்மைக்கும் ஆனது எனில், இது ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பை எதிர்த்;துப் போராடுவதனின்றும் தவிர்க்கவியலாதது.
இன்றைய கேள்வி இதுதான் : ஏகாதிபத்தியம் ‘பாவித்து’க் கொள்ளும் என்பதன் அடிப்படையில் சொந்த மக்களைக் கொல்கிற சர்வாதிகாரியை நாம் ஆதரிப்பதா? அல்லது உடனடியில் பிரதிநிதித்துவ ஆட்சி நோக்கிய, சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்களாட்சி அமைப்புக்கள், அதன்பின்பான தவிர்க்கவியலாத தேசிய இறையான்மைக்கான போராட்டம் - அது ஏகாதிபத்திய எதிர்ப்பாகவே இருக்கும் - என்பதனை நாம் ஆதரிப்பதா?
எமது தேர்வு இரண்டாவதாகவே இருக்க வேண்டும்
-கீற்று இணையத்தளம்
மார்ச் 2/ 2011
No comments:
Post a Comment