Thursday, November 27, 2008

நட்பை திருமணம் பிரித்திடுமா : எதிர்பக்கம் சிறுகதை


மனிதவாழ்வின் பயணத்தில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ரசனைகளும், விருப்பங்களும் கொள்கைகளும் முக்கியத்துவங்களும் மாறிவருவதுபோல உறவுகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் எம் கண்ணுக்கு தெரியாத ஒரு ரகசியபாதையில் தடம் மாறி செல்கின்றன. குழந்தை பருவத்தில் தாயுடன் இருக்கின்ற நெருக்கமான உறவு பின்னர் தந்தையுடன் நெருங்கிபின்னர் பதின் பருவத்தின் மத்தியில் நண்பர்களுடன் தாவுகின்றது. இந்த உறவு எல்லார் வாழ்விலும் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றது.

பொதுவாக உறவுகள் எல்லாம் ஏதோ ஒரு தீர்க்கமுடியாத பந்தத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நட்பை பொறுத்தவரை அதற்கு எந்தவித கட்டாயமுமில்லை. எந்த ஒரு நெருங்கிய நண்பனையும் ஒரே நாளில் நண்பனில்லை என்று ஒதுக்கி வைக்ககூடிய ஒரு உறவு அது. நட்பின் பெருமையும் இதுவே, சிறுமையும் இதுவே. இளமையில் நட்பை கொண்டாடுவோர் எல்லாம் மறக்காமல் சொல்லும் ஒரு வசனம் இது. இருபதுகளின் ஆரம்பத்தில் பொறுளாதார ரீதியில் பெரிய நெருக்கடிகளும் ஏற்படாத, அதே சமயத்தில் சமூகத்தில் ஒரு முழுவயதினராக (adult ) கணிக்கப்டும் போது நண்பர்களே உலகம் என்று தோன்றும். நட்புக்காக உயிரை தருவேன் போன்ற வசனங்கள் எல்லாராலும் பேசப்படும். ஒருவித குழு மனப்பான்மை பரவி சிலசமயங்களில் குழு கலாசாரம் வரை (Gang Culture / Mob Culture) இட்டுச்செல்லும்.

இதன் பிறகு இருபதுகளின் இறுதியில் திருமணம் நிகழ அதன் பிறகு வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். விரும்பிய நேரத்தில் படுத்து, எழும்பி, உண்டு, குளித்து , சவரம் செய்து அல்லது இவையேதும் செய்யாமல், வார இறுதி என்றால் இரவிரவாக நண்பர்களுடன் வெட்டிக் கதைபேசி இருந்த வாழ்வுக்கு புதிதாக ஒரு தடா வந்தவுடன் பெரும் மனக்குழப்பம் வரும். அதிலும் நண்பர்களின் பிறந்த நாள், அவர்களின் காதலியரின் பிறந்த நாள், முன்னாள் காதலியரின் பிறந்த நாள், இந்தியா பாகிஸ்தானை வென்ற நாள் மூன்றாம் மாடியில் இருக்கும் கீதா முதன் முதலாய் பார்த்து சிரித்த நாள் என்றெல்லாம் கூறி பார்ட்டி வைக்கும் கதையெல்லாம் எடுபடாமல் போகவே விரக்தியும் உண்டாகும். அதிலும் நண்பர்கள் கூட்டத்தில் முதலில் கல்யாணம் ஆனவன் என்றால் அதோகதி தான். அவன் இப்ப மாறீட்டான் மச்சான் (அல்லது அத்தான்), மனிசீன்ற கால்ல விழுத்திட்டான் என்ற காமென்ட்ஸ் அப்பப்ப காதில்விழ கோவிந்தா கோவிந்தாதான்.

இப்படிபட்ட ஒரு நிலையை மிக அழகாக எதிர்பக்கம் என்று ஒரு கதையாக்கியிருப்பார் பாலகுமாரன். கல்யாணத்தின் பின்னர் நண்பர்களுடனான தொடர்பு குறைய, கல்யாணம் ஒரு கால்விலங்கு போன்ற ஒரு விம்பத்தை உருவாக்கி, இறுதியில் வாழ்வின் ஒரு கட்டம் இது. இதுவும் கடந்துபோகும் என்று அழகாக கதையை முடித்திருப்பார் பாலா. வரது மைலாப்பூரில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறான். கணேசன், மனோகர், கலியபெருமாள், சுப்பிரமணி என்று ஒரே அந்தஸ்தில் உள்ள நண்பர்கள்.இந்நிலையில் திடீரென வரதுவுக்கு கல்யாணம் நிச்சயமாகிறது. அத்தனை நண்பர்க்ளும் தம் வீட்டு விசேஷம் போல காலை காப்பி முதல் கையலம்புகிற தண்ணீர் வரை பொறுப்பை இழுத்துபோட ஜாம் ஜாமென்று கல்யாணம் முடிகின்றது. வரது மனைவி கல்யாணியுடன் மைலாப்பூர் வருகின்றான்.

கல்யாணி வரதுவின் நண்பர்களை அண்ணா அண்ணா என்றழைக்கிறாள். வரது நண்பர்களுடன் தம்பதியராய் நின்று படமெடுத்து நடு ஹாலில் மாட்டுகிறான். பொம்பள கையால சாப்பிட்டு எத்தனை காலமாச்சு என்று ஒருவன் அங்கலாய்க்க அவர்களின் வீட்டிற்கு கல்யாணியின் சமையலில் இரண்டு வாரம் வத்தக்குழம்பு போகிறது, ஒருவாரம் ரசம் போகிறது , நாலாம் வாரம் முடியல என்று தகவல் மட்டும் போகிறது. அதே நேரம் கல்யாணி நண்பர்கள் திருமணத்தில் செய்த உதவிகளை எல்லாம் அடிக்கடி கேலியாக்குகிறாள். கிராமத்திலிருந்து வந்த கல்யாணியால் திருமணத்தில் லைட் ம்யூசிக் ஏற்பாடு செய்த நண்பர்களின் செயல் கேலி செய்யப்படுகிறது. பேச்சு வளர நண்பர்களுடன் ஒரு இடைவெளியை ஏற்படுத்தவேண்டும் என்று கல்யாணி வற்புறுத்துகிறாள். தான் தன் வீட்டை விட்டு வந்தது போல வ்ரதுவும் நண்பர்களைவிட்டு விலக வேண்டுமென்று வாதிடுகிறாள். கல்யாணி இவன் நண்பர்கள் உதவிகளை எல்லாம் நக்கலாக பேச வரது பதிலுக்கு அவள் உறவினர்களை பற்றி திட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியே செல்லுகிறான்.

அடுத்த நாள், கல்யாணி கலியபெருமாளிடம் சென்று வரதுவை பற்றி முறையிட, மன்னிப்புகேட்டு வத்தகுழம்பு ஒரு சட்டியும் கொடுத்துவிட்டு வருகிறாள். முழு பிரச்சனையும் வத்தகுழம்பாலே வந்தது போன்ற ஒரு நிலை உருவாக்கப்படுகிறது. உன் உறவே வேண்டாம் என்று நண்பர்கள் வேறு புறக்கணிக்கதொடங்குகிறார்கள். அதன் பிறகு மனோகரை ஒரு சந்தர்ப்பத்தில் காண்கிறான். அவன் தனது கல்யாணத்துக்கு வரதுவை அழைக்கிறான். (இந்த இடத்தில் அவன் கை குலுக்கலில் சினேகமில்ல்லை என்று ஒரு வசனம் வரும்). கல்யாண ஒழுங்குகள் எல்லாமே காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டதாய் மனோகர் சொல்கிறான். ஒரு முறை பட்டதே போதும் என்று அவன் சொல்வது வரதுவை தாக்குகிறது. தனக்காக வீட்டில் புதிதாக யாரும் வந்துள்ளார்களா என்று வரது கேட்க ஆறு வருட ஸ்னேகமே மூன்று வாரத்தில் புட்டுகிச்சு, புதுசா ஒண்ணு தேவையா என்று சொல்கிறார்கள். கல்யாணியிடம் முன்னர் வத்த குழம்பு கேட்ட கணேசன் வத்த குழம்பென்றாலே தனக்கு பிடியாது என்கிறான். இப்படி புறக்கணிப்பின் வலி மீண்டும் மீண்டும் வரதுவுக்கு உணர்த்தப்படுகிறது. சில காலம் செல்கிறது. கல்யாணி பிள்ளை பெற , குடும்ப சகிதம் கோயிலுக்கு போகும்போது தாம் முன்பு சந்திக்கும் அதே கோயிலருகில் அடுத்த தலைமுறை இளைஞர்கள் நிற்பதை பார்த்தபடி, கல்யாணி குழந்தைகளின் உடை பற்றி ஏதோ சொல்ல ஆமாம் என்று சொன்னபடி போகிறான்.


நம் யதார்த்த வாழ்வில் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை ஒன்றை இக்கதை மூலம் தெளிவாக காட்டுகிறார் பாலா. பொதுவாக போனால் வேலை, வந்தால் வீடு என்றளாவில் பலர் வெளிப்புற தேடல்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் அதனை பார்த்து வளரும் பெண்கள் தம் கணவர்களும் அப்படியே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் முளைவிடுகின்றது இந்த பிரச்சனை. அதுவும், தனது அப்பாவோ, அண்ணாவோ, மாமாவோ, அத்தானோ அப்படி இருக்கிறான் என்பதற்காக அப்படியே தன் கணவனும் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது. பல்லாண்டுகாலமாக இருந்த தொடர்புகளை, வழக்கங்களை ஒரே நாளில் அறுப்பது முடியாதென்பதை இருவருமே உணரவேண்டும். இதற்கு இன்னொரு காரணம் ஒருவனுக்கு இருக்கும் எந்த கெட்ட பழக்கத்திற்கும் அவனது நண்பர்களையே காரணமாக சொல்கின்ற ஒரு சபிக்கப்பட்ட மனநிலை. ஒருவன் கெட்டுப்போனால் அவன் நண்பர்களை குற்றம் சாட்டுபவர்கள் ஒருபோதும் அவன் நல்ல நிலைக்கு வரும்போது நண்பர்களை பாராட்டுவதில்லை. இந்த நிலையே பெண்களை பொதுவாக கணவர்களை நண்பர்களிடம் இருந்து பிரிக்க தூண்டுகிறது. இதுபோல நான் அவதானித்த இன்னொரு முரண், ஒருவரை பற்றி விசாரிக்கும்போது “அவன் நல்ல பெடியன், friends என்றதே இல்லை” என்று கூறுவது. இதில் என்ன யதார்த்தம் என்ன என்று எனக்கு இன்றளவும் புரியவில்லை.

இந்த கதையில் பாலா எந்த ஒரு முடிவையும் முன்வைக்கமாட்டார். வரது அந்த வாழ்க்கையையே ஏற்றுகொண்டான் என்றளவில் கதை முடியும். இது ஒரு சமரச மனப்பாங்கு. இது நம் வாழ்க்கைமுறை பற்றி, குடும்பம் பற்றி மிகப்பெரும் கேள்விகளை எழுப்புகின்றது. எல்லா கேள்விகளும் பதில் சொல்லவேண்டியனவும் அல்ல ,பதில்கள் உடையனவும் அல்ல.


எதிர்பக்கம் கதை நானே எனக்கொரு போதிமரம் என்கிற சிறுகதை தொகுப்பில் வெளியானது.

9 comments:

சின்ன அம்மிணி said...

நான் ரசித்துப்படித்த பாலகுமாரன் கதைகளில் ஒன்று இது.

அருண்மொழிவர்மன் said...

ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளுமே இப்படி தர்க்கரீதியானவையாகவே இருக்கும். அற்புதமான எழுதாற்றல் கொண்டவர். இப்போது ஏனோ ஆன்மீக பக்கம் போய்விட்டார்

JEGA said...

THANKS ARUN FOR TAKING MY WORDS SERIOUSLY BY SENDING THE SECOND ARTICLE. THE ARTICLE IS INTERESTING AND IT TELLS ABOUT THE BITTER SIDES OF MARRIAGE LIFE. HOPE IT IS NOT YOUR OWN EXPERIENCE. KEEP IT UP AND GOOD LUCK

Maya said...

அருண்மொழிவர்மன்,

புத்தக அறிமுகத்துக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி! பாலகுமாரன் சிறந்த எழுத்தாளரென்பதில் எதுவித சந்தேகங்களும் இல்லை. ஆனால், இந்தக் கதையும் சரி உங்கள் எதிர்வினையும் சரி, அன்றாடச் சமூகத்து பொதுப்புத்தியினை மட்டுமே காட்டுவதாகத் தோன்றுகிறது. (தாங்கள் 'பெண்' என உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தைக்கொண்டு ஒரு பெண்ணை மதிப்பிடுவது..) அந்தப் பெண்ணின் உணர்வுகளைப்பற்றி இங்கு யாருமே கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. திருமணமென்பது ஆண்களின் வாழ்வில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, மாற்றங்களுக்குக் காரணமாகிறதோ, ஒரு பெண்ணை அதைவிட ஆயிரம் மடங்கு பாதிக்கிறது. 'திருமணமென்பது பெண்களுக்கான பலிபீடம்' என மாலதி மைத்ரி எழுதியது நினைவுக்கு வருகிறது.

உங்கள் நண்பர்கள் போலவே பெண்களுக்கும் நண்பர்கள், மிக மிக நெருங்கிய தோழிகள் இருந்திருப்பார்கள்.. தனது 'செட்'டில் முதலில் திருமணமாகிய ஒரு பெண், அப்படியே ஒதுக்கப்பட்டு விடுவாள், அல்லது குடும்ப வேலைகளோடு நண்பர்களை முன்புபோல சந்திக்கவும், ஊர்சுற்றவும், சினிமா பார்க்கவும் முடியுமா அவர்களால்.. அல்லது ஆண்கள்தான் விட்டுவிடுவார்களா.. தனது மனைவி நண்பர்களோடு சினிமாவுக்குப் போவதை.. ஆண்கள் மட்டும்தான் பார்ட்டி கொண்டாடுவார்கள், நண்பர்களோடு வாழ்வை அனுபவிக்கத் தெரிந்தவர்களென்று நினைக்கவேண்டாம்.. பெண்கள் நண்பிகளுடன் சேர்ந்து அடிக்கும் கும்மாளங்கள் உங்களதுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவையல்ல.. அவர்கள் என்னத்துக்கெல்லாம் Treat கேட்பார்களென்று தெரிந்தால் உங்களுக்கே மூச்சு முட்டிவிடும். ஆனால், அவர்களது உலகம் உங்களுக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை, ஏனெனில் எவருக்கும் அந்தளவுக்கு அக்கறையுமில்லை.

எல்லாவற்றையும் ஒற்றைப்படையில் பார்த்து முடிவுக்கு வரமுடியாது.. உங்களுக்காக தனது மிகப்பிரியமான குடும்பத்தை, செல்லமாகக் கூட வளர்ந்த சகோதரர்களை, நண்பர்களை, அந்தக் குதூகலமான பழைய வாழ்வை எல்லவற்றையும் விட்டுவந்து உங்களுக்கே தன்னை அர்ப்பணித்த அந்தப் பெண்ணுக்கு நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா.. திருமணத்துக்குப் பிறகு, உங்கள் குடும்பம்தான் அவளது குடும்பம், உங்களது நண்பர்கள்தான் அவளது நண்பர்களுமென்றால், அவளுக்கென்றிருந்த சுயாதீனம், தனித்துவம் எங்கே போயிற்று. எவ்வளவு விடயங்களை அவள் இழக்கவும், சகித்துக்கொள்ளவும், சமரசத்துக்குள்ளாகவும் வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி எந்த 'மாபெரும்' எழுத்தாளரும் கதைப்பதைக் காணோம்.. அவர்களுக்கும் தங்கள் குடும்பத்தை, நண்பர்களைப் பற்றிய ஏக்கங்கள், தவிப்புகள் இருக்குமென்பதைப் புரிந்துகொண்டு, உங்களுக்கு நண்பர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே சுதந்திரத்தை, வெளியை அவளுக்கும் தராதவரையில் எந்தத் திருமண வாழ்வுமே சந்தோஷமாயிருக்கப் போவதில்லை.

மனைவியால் உங்கள் நட்பு, அல்லது சுதந்திரவெளி பாதிக்கப்படுகிறதென்றால், உங்களால் அவளது வெளி அதைவிட மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றுதான் அர்த்தம்.. தன்னைக் கோயில் கட்டிக் கும்பிடுமாறு எந்தப் பெண்ணும் எதிர்பார்ப்பதில்லை.. குறைந்தபட்சம் ஒரு சக மனுஷியாகவாவது - தனது உணர்வுகளை, விருப்பங்களை மதிக்கும்படிதான் எதிர்பார்க்கிறாள்.. அதைக்கூட வழங்க முடியாமல் திருமணத்தால் என் வாழ்வு பாழாய்ப்போயிற்றெனப் புலம்புபவர்களைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.. தாங்கள் ஒரு பெண்ணின் வாழ்வை அவ்வளவு பாழாக்கிக் கொண்டிருப்பதால்தான் தங்களது வாழ்வும் அப்படியிருக்கிறதென்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமலிருக்கிறார்களே..

DJ said...

சுத‌ன், பால‌குமார‌ன் உங்க‌ளைப் போல‌வே என‌க்கும் மிக‌ப்பிடித்த‌மான‌ எழுத்தாளராக‌ இருந்தார். இற்றைவ‌ரை ஒரு எழுத்தாள‌ருக்கு த‌னிப்ப‌ட்டு க‌டித‌ம் எழுதிய‌து என்றால் பாலாவுக்குத்தான் (ப‌தின்ம‌த்தில் விசா ப‌திப்ப‌க்த்தில் விலாச‌ம் பார்த்து அனுப்பியிருந்தேன். கிடைத்திருக்குமா தெரிய‌வில்லை). ஆனால் உங்க‌ள‌து ப‌திவை வாசித்துக் கொண்டிருக்கும்போது, இன்னொரு ப‌க்க‌மும் இருக்கின்ற‌தென்ப‌தைச் சொல்ல‌ நினைத்திருந்தேன். அதை மாயா ‍-நான் நினைத்தை விட‌- அருமையாக‌ பின்னூட்ட‌த்தில் சொல்லியிருக்கின்றார். மாயா குறிப்பிடுவ‌து போல‌,

/எல்லாவற்றையும் ஒற்றைப்படையில் பார்த்து முடிவுக்கு வரமுடியாது.. உங்களுக்காக தனது மிகப்பிரியமான குடும்பத்தை, செல்லமாகக் கூட வளர்ந்த சகோதரர்களை, நண்பர்களை, அந்தக் குதூகலமான பழைய வாழ்வை எல்லவற்றையும் விட்டுவந்து உங்களுக்கே தன்னை அர்ப்பணித்த அந்தப் பெண்ணுக்கு நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா.. திருமணத்துக்குப் பிறகு, உங்கள் குடும்பம்தான் அவளது குடும்பம், உங்களது நண்பர்கள்தான் அவளது நண்பர்களுமென்றால், அவளுக்கென்றிருந்த சுயாதீனம், தனித்துவம் எங்கே போயிற்று. எவ்வளவு விடயங்களை அவள் இழக்கவும், சகித்துக்கொள்ளவும், சமரசத்துக்குள்ளாகவும் வேண்டியிருக்கிறது./

இவ்வாறான‌ ப‌க்க‌ங்க‌ளை ஆண்க‌ளாகிய‌ நாம் ப‌ல‌வேளைக‌ளில் பார்க்க‌த் த‌வ‌றிவிடுகின்றோம் என்றே எண்ணுகின்றேன். மாயா குறிப்பிடுவ‌தைப் போல‌, ஒரு பெண் எங்க‌ள‌து வெளியை சுருக்க‌ச் செய்கின்றார் என்றால், நாம் இன்னும் அதிக‌மாய் அந்த‌ப் பெண்ணின் வெளியை இறுக்க‌ச் செய்கின்றோம் என்றுதானே அர்த்த‌ம். அப்பெண்ணின் விருப்பை/அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளை அறிந்துகொள்ள‌ முய‌ற்சிக்காம‌ல், ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ளை எம்மைப் போல‌வே அந்த‌ப்பெண்ணும் விள‌ங்கிக்கொள்ள‌வேண்டும் என்று எதிர்பார்ப்ப‌துகூட‌ ஒருவ‌கை வ‌ன்முறையே. உதார‌ண‌மாய் இங்கே திரும‌ண‌மான‌ பின்புகூட‌, பெண்க‌ள் Girls Night outற்குச் செல்வ‌தை கூட‌ நாம் ஏற்றுக்கொள்ள‌ இன்னும் ம‌ன‌த‌ள‌வில் த‌யாராக‌ இருக்கின்றோமா என்று எங்க‌ளை நாங்க‌ளே கேட்க‌வேண்டிய‌வ‌ராக‌ இருக்கின்றோம். பெண்க‌ள் தாம் விரும்பிய‌தைச் செய்ய‌க்கூட‌ விடாத‌ எம் ச‌மூக‌த்தின் வ‌ன்முறையை இங்கேயெடுத்த‌ To be Continued... குறும்ப‌ட‌த்தில் ப‌திவு செய்திருக்கின்றார்க‌ள் (சும‌தி, த‌ர்சினி, த‌ர்ஷ‌ன் ந‌டித்த‌தாய் நினைவு)

DJ said...

YouTubeல் To Be Continuedஐ பார்க்க‌லாம்:
http://www.youtube.com/watch?v=qPJtaZ92rqA

அன்புடன் அருணா said...

இன்னும் மறக்கமுடியாத பாலாவின் கதைகளில் ஒன்று இது...இப்பவும் வத்தக் குழம்பு வைக்கும் போது நினைவுக்கு வரும் கதை இது...அருமையான பதிவு.
அன்புடன் அருணா

அருண்மொழிவர்மன் said...

மாயா, டிஜேவருகைக்கும் உங்கள் கருத்துகளை பதிந்ததற்கும் நன்றிகள். எனது பதிவு பற்றிய உங்கள் இருவரதும் விமர்சனங்கள் கிட்டதட்ட ஒரே கோணத்திலேயே இருந்ததனால் ஒரே பதிலாகவே எழுதுகிறேன்.

நேரப்பற்றாக்குறை காரணமாக உடனே பதிலிடவில்லை. மேலும் நன்றி, என்று ஒரு வரியில் பதிலிடக்கூடிய சம்பிரதாய பின்னூட்டமாக இல்லாது விரிவான வாசிப்புக்குரிய ஒரு பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள். இப்படியான கருத்து வெளிப்பாடுகள்தான் எம் சிந்தனையை ஆரோக்கியமாக்கும்.

முதலில் இது எதிர்பக்கம் என்கிற பாலகுமாரன் எழுதிய ஒரு கதையை முன்வைத்து அந்த கதையில் வருகின்ற வரது என்கிற கதாபாத்திரம் திருமணம் மூலம் அடைந்த அனுபவங்களை மட்டுமே மையமாக கொண்டு எழுதப்பட்டதேயன்றி, சமுதாய நடைமுறை ஒன்று பற்றிய எனது விமர்சனமாக எழுதப்படவில்லை. பெண்ணுக்கு எதிராக செய்யப்படும் அனைத்துவிதமான (அதாவது ஆண்களாலும், பெண்களாலும்) செய்யப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவன் நான். அதிலும் கலாசார காவலர் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் சில மோசமான பிற்போக்குவாதிகள் செய்யும் சில அநியாயங்கள் என்னை பெரிய அளவு மன உளைச்சலில் தள்ளியிருக்கின்றன. லீனா மணிமேகலை ஒரு பெண்கள் கல்லூரியில் துப்பட்டா அணியவில்லை என்பதற்காக அனுமதிக்கப்படாதது எத்தனை பெரிய அத்துமீறல். பின்பொருமுறை அதை பற்றி ஒரு (அப்படி செய்தது சரியா, பிழையா என்று) தொலைக்காட்சி விவாதம் கூட நடைபெற்றது. இதை பார்த்த எனது நண்பன் ஒருவன் அவர்கள் செய்தது சரிதான் என்று வாதிட்டது ஓரிரு நாட்கள் என்னை அமைதி குலைந்த ஒரு மனநிலையில் வைத்திருந்தது. அண்மையில் ஒரு விழாவில் வந்திருந்த பெண்கள் எவருமே தமிழரின் தேசிய உடையான சேலையை அணியவில்லை என்று சீமான் ஜீன்ஸும் கறுப்பு சட்டையும் அணிந்து முழங்கியது எத்தனை பெரிய முரண்? ஆனால் இதுதான் எமது சமுதாய நிலை. இப்படியான் ஒரு பிற்போக்கு சமூக நிலையை நான் முற்றாக எதிர்க்கிறேன்.

ஒரு பெண் தான் சார்ந்த முடிவுகளை தானே எடுக்கும் காலம் வரும்போதுதான் உண்மையான சமுதாய அபிவிருத்தி ஏற்படும். இங்கு நாம் செய்யவேண்டிய முக்கிய கடன் அப்படி முடிவுகளை எடுப்பதற்கு ஒரு பெண்ணிற்கு இருக்ககூடிய எல்லா தடைகளையும் விலக்குவதேயாகும். ஒரு உதாரணத்திற்கு ஒரு பெண்ணை மறுமணம் செய்யகூடாது என்று கட்டாயப்படுத்துவதும் பிழை, அதேபோல மறுமணம் செய்யசொல்லி கட்டாயப்படுத்துவது பிழை. தான் மறுமணம் செய்வதா, இல்லையா என்பதை எவ்விதமான புறக்காரணிகளின் செல்வாக்குமில்லாமல் ஒரு பெண் எடுக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

அதேபோல டீஜே சொன்ன பெண்களை திருமணத்திற்கு பின்னர் நாம் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை என்பது முகத்தில் அறையும் ஒரு நிஜம்தான். என்னைபொறுத்தவரை, நான் அறிந்த எல்லாப் பெண்களிடமும் அவர்களை இயன்றவரை சுயாதீனமாக இயங்குபவர்களாக (independent) இருக்கும்படி கேட்பது வழக்கம். ஏதோ சிலகாரணங்களால் பெண் ஆணை சார தொடங்கியபோதே பெண் முதன்முதலாக அடிமையாக்கப்பட்டாள். முற்போக்கானவர்கள் என்று நான் நினைக்கும் சில நண்பர்கள் கூட தாம் கன்னித்தன்மை இழந்திருந்தாலும் தாம் திருமணம் செய்யப்போகும் பெண் கன்னியாக மட்டுமல்லாமல், இதுவரை காதலிக்காதவளாக கூட இருக்கவேண்டும் என்று கூறியது எனக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

நான் மீண்டும் நீண்டும் சொல்வது, என் வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும், நான் ஒரு பெண்ணையும் அடிமைத்தனம் செய்வதை ஆதரித்ததோ, ஏற்றுக்கொண்டதோ கிடையாது. அந்தக் குறிப்பிட்ட கதையை முன்வைத்து எழுதும்போது நான் எழுதியது கூட அப்படி தோன்றியிருக்கலாம். இப்படியான ஒரு தோற்ற மயக்கம் இனிமேல் வராதிருக்க என்னால் முடிந்தது செய்வேன்.

டிஜே, நீங்கள் சொன்ன To Be Continued….. குறும்படம் பார்த்தேன். அதுபோல, அல்லது ஒருபடி கூட சுமதி நடித்த மனுஷி இருந்தது. நான் கண்ணால் பல குடும்பங்களில் பார்த்த / பார்க்கின்ற நிகழ்வு அது. அதை பார்த்த பின் அன்றைய சந்திப்பில் சுமதி வேடிக்கையாக கேட்டதை ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் பரிசோதித்து பார்ப்போம் என்று கூட தோன்றியது.

அருண்மொழிவர்மன் said...

அருணா...

பாலகும்மரனின் கதைகளில் கதாபாத்திரங்கள் அற்புதமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்,... அதானால் எம் நடைமுறை வாழ்விலும் அவரின் கதாபாத்திரங்கள் கலந்துவிட்டது போல ஒரு பிரேமை உருவாகிவிடும்....
பகிர்வுக்கு நன்றிகள்

Post a Comment