Thursday, September 16, 2010

அம்பாந்தோட்டை, சிட்டாகாங் துறைமுகங்கள் மீது சீனா காட்டும் அக்கறை


1. இலங்கையின் தெற்குப் பக்கத்திலே உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் துறைமுகம் ஒன்றை நிர்மாணம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டத் தேவைகளுக்கான நிதித் தேவையில் 85% இனை (360 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஏற்கனவே தனது ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EX-IM Bank) ஊடாக குறைந்த நிபந்தனைகளுடனான கடனாக வழங்கியிருந்த சீன அரசு இப்போது அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் கட்ட நிர்மாண வேலைகளுக்கான செலவுகளுக்காக மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உடன்பட்டுள்ளதுகடந்த ஜூன் 10-12ம் திகதிகளில் இடம்பெற்ற சீன உப பிரதமர் ஸாங்க் டிஜியாங் தலைமையிலான குழுவினரின் இலங்கைப் பயணத்தின் போது இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாதிடப்பட்டிருக்கிறது.  2023ல் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இத்திட்டத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கையில் சீன அரசு இது வரை முதலிரு கட்டங்களுக்காக மாத்திரம் கிட்டத்தட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது


2.  இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் நிறைவுறும் போது 3 கப்பல்கள் தரித்து நிற்கும் அளவே துறைமுக வசதிகள் இருக்கப்போகின்ற அதே வேளை, இத்திட்டம் 2023ல் அதன் முழு வடிவத்தை அடையும்போது 30க்கு மேற்பட்ட  கப்பல்கள் தரித்து நிற்கக்கூடிய அளவுக்கு விஸ்தீகரிக்கப்பட்டிருக்கும்.  (தற்போது கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கக்கூடிய கப்பல்களின் எண்ணிக்கை 30 என்பது குறிப்பிடத்தக்கதுஇலங்கையில் துறைமுகம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் தன்னகத்தே கொண்டு அல்லது தனக்கு மிக அருகில் கொண்டு கொழும்பு மிக முக்கிய நகரமாக இருக்கின்ற வேளை, தனது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையை இன்னுமொரு கொழும்பாக மாற்றும் மகிந்த ராஜபக்சேயின் திட்டத்தின் ஒரு பகுதியே இதுகொழும்புத் துறைமுகத்துக்கு நிகரான நவீன வசதிகள் கொண்ட, பெரிய துறைமுகம், வீரவிலயில் அமைய இருக்கின்ற சர்வதேச விமான நிலையம், எண்ணெய்க் குதங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள், சுற்றுலா மையங்கள், கருத்தரங்கங்கு மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் போன்றவற்றை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைப்பதன் வாயிலாக எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒன்றை நடாத்துவதற்கான எல்லா வசதிகளும் கொண்டதாக அம்பாந்தோட்டையை மாற்றுவது மகிந்த ராஜபக்சேயின் கனவாக இருக்கலாம்இங்கே கட்டத் திட்டமிடப்பட்டிருக்கும் சர்வதேச கருத்தரங்கு மண்டபத்திற்காக தென் கொரியாவிடம் இருந்தும் நிதி உதவிகள் ராஜபக்சே தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.


3.  அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான கடனுதவியை எந்தத் தயக்கமும் இன்றி சீன அரசு அதிகரித்து இருக்கின்ற அதே வேளை, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது சீனப் பயணத்தின் போது பங்களாதேஷில் உள்ள சிட்டாகாங் துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் புனர் நிர்மாணப் பணிகளுக்காகக் கேட்டிருந்த நிதி மற்றும் நிர்மாண உதவிகள் பற்றி சீன அரசாங்கம் இதுவரை எதுவிதமான பதிலையும் கூறவில்லைதனது இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு பங்களாதேஷ் சென்ற சீன உப பிரதமர் ஸாங்க் டிஜியாங் தலைமையிலான குழுவினர் இந்த உதவிகள் பற்றிய அறிவிப்பர் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போய் இருக்கின்றது


4. பங்களாதேஷ் உள்ளூர்ச் செய்தி நிறுவனங்கள் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்பின்போது ஸாங்க் டிஜியாங், சிட்டாகாங்கில் பெரிய கப்பல்கள் வந்து போகக் கூடியவாறு ஆழமான துறைமுகம் (Deep Sea Port) கட்டுவதற்கும், பங்களாதேஷின் முதலாவது செய்மதியை விண்ணுக்கு ஏவும் திட்டத்திற்கும் உதவி வழங்குவதாகவும் மேலும் "பக்லா தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை", "ஷாஜாலால் உரத் தொழிற்சாலை" போன்றவற்றிற்கு உடனடி நிதி உதவிகளை வழங்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் அறிவித்தபோதும் இவை பற்றிய உத்தியோக பூர்வ அறிவித்தல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லைஇப்பேச்சுவார்த்தைகள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசும்போது பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் டிபு மோனி, பங்களாதேஷில் தமது முதலீடுகளை அதிகரிக்கவும், பங்களாதேஷ்-சீனா இடையிலான வர்த்தகத்தில் மேலும் சமத் தன்மையை ஏற்படுத்தவும் பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மேலும் சிலனவமுக்கிற்றுக்கு சுங்க வரியை இல்லாதொழிப்பதாகவும் சீனத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இருக்கிறார்இத்துடன் பங்களாதேஷ் தனக்கான உணவுப் பொருடகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், பாதுகாப்புத் தேவைகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் போன்றவற்றை எதிர்கொள்வதற்கான ராணுவ ரீதியிலான உதவிகளையும் வழங்குவதுடன்  பங்களாதேஷின் தொலைத்தொடர்பு சேவைகளையும், அடித்தளக் கட்டுமாணத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான அனுசரனைகளை அதிக்ரிப்பதாகவும் சீன அரசு சார்பில் ஒப்புக்கொண்டுள்ளதாக டிபு மோனி கூறி இருக்கிறார்இங்கே பங்களாதேஷின் அடித்தளக் கட்டுமாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு சீன உடன்பட்டுள்ளதாகக் கூறப்பட்டபோதும் அது, சிட்டாகாங் துறைமுக அபிவிருத்தியை குறிப்பிடுமா என்பதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லைஅதே நேரம் ஷேக் ஹசீனா இந்தக் கோரிக்கையை முன்வைத்து (மார்ச்சில் முன்வைக்கப்பட்டது) 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் சீனா இது பற்றிப் பரிசீலிக்கவில்லை என்று ஒதுக்கிவிடவும் முடியாதுள்ளது.

5.  பாகிஸ்தானின் மெக்ரான் கரையோரமாகச் சீன உதவியுடன் கட்டப்பட்ட க்வாடார் (Gwadar) துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து துறைமுகம் இயங்க ஆரம்பித்திருக்கின்ற வேளையில், இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகளையும் விரைவாக நிறைவசெய்து துறைமுகத்தை போக்குவரத்துக்கு திறந்துவிடுவதிலும், இரண்டாம் கட்டப் பணிகளை இவ்வாண்டின் இறுதியிலேயே ஆரம்பித்தவிடுவதிலும் சீனா குறியாக இருக்கின்றதுசென்ற ஆண்டு மியான்மரின் அராகன் கரையோரமாகத் தொடங்கப்பட்ட க்யாக்ப்யூ (Kyakpyu) துறைமுகக் நிர்மாணப் பணிகளையும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நேரத்திலேயே நிறைவுசெய்துவிடவேண்டும் என்பதே சீனாவின் தற்போதைய கவனமாக இருக்கின்றதுசிட்டாகாங் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் பற்றிய அக்கறை இருந்த போதும் அம்பாந்தோட்டை, க்வாடோர், க்யாக்ப்யூ துறைமுகங்கள் அளவுக்கு சிட்டாகாங் தமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இராது என்றே சீனா கருதுகிறதுமேற்காசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சீனாவுக்கு நடைபெறும் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெற இத்துறைமுகங்களின் இருப்பும் அவற்றில் சீன அதிகாரமும் முக்கியமாக இருப்பதால், சிட்டாகாங் துறைமுகம் மேற்சொன்ன துறைமுகங்கள் போல சீனாவின் உடனடி நிகழ்ச்சி நிரலில் இடம்பிடிக்கவில்லை.


6.  இதுவரை சீனா அம்பாந்தோட்டை, க்யாக்ப்யூ, சிட்டாகாங் போன்ற இடங்களில் கடற்தளங்கள் அமைப்பது தொடர்பான எதுவித விழைவுகளையும் காட்டாத போதும் க்வாடோரில் கடற்தளம் ஒன்றை அமைப்பதில் சீனா அக்கறை காட்டியே வருகின்றதுஇந்து சமுத்திரத்திலும், ஏடன் வளைகுடாவிலும் இருக்கும் சீனக்கப்பல்கள் எரிபொருள் நிரப்பவும், பழுது பார்க்கவும், ஓய்வெடுக்கவும், இதர பொருட்களை களஞ்சியப்படுத்தவும் ஒரு தளம் அவசியம் என்று ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகள் சீன அரசை தொடர்ந்து வலியுறுத்திவருகையில்  க்வாடொர் இதற்கு எல்லா விதத்திலும் ஏற்ற ஒரு தளமாகவே அமைகின்றதுஅதே நேரம் க்வாடோர் துறைமுகம் அமைந்திருக்கின்ற 'பாலோகிஸ்டானில்' பிரிவினை கோரி போராட்டம் நடப்பதால் பாதுகாப்பு நிலவரங்கள் திருப்திகரமாக இல்லாமல் போகும் இடத்து அம்பாந்தோட்டை எல்லாவிதத்திலும் சீனாவின் இரண்டாவது தேர்வாக அமையும்.
http://www.southasiaanalysis.org என்ற தளத்தில் பி. ராமன் எழுதியதன் தமிழாக்கம்


எனது குறிப்புகள்:

உன்னதம் ஜூன் இதழுக்காக இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்திருந்தேன்.  இந்தக் கட்டுரையை எழுதிய பி. ராமனின் இந்திய சார்புத் தன்மையும், அவர் அரசியலும் விமர்சனத்துக்குரியவையே.  அதைத்தான் இந்தக் கட்டுரையிலும் அவர் செய்திருக்கிறார்.  இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட, இந்தியாவைச் சூழ இருக்கின்ற முக்கிய துறைமுகங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம் இந்தியாவை தொடர்ச்சியான ஒரு மென்-முற்றுகையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதும், அதன் மூலம் பிராந்திய வல்லரசுப் போட்டியில் இந்தியாவை தொடர்ச்சியாக பின் தள்ளிவிடவேண்டும் என்பதும் சீனாவின் திட்டம்.  அதற்கான சீனாவின் நிகழ்ச்சி நிரல் எந்த இடையூறும் இல்லாமல் நடந்தேறி வருகின்றது.  

ஆனால் இதற்கான எந்த பதில் நடவடிக்கையும் எடுக்காமல் இந்தியா அப்பாவியாக இல்லை.  சீனா அளவிற்கு வலுவானதாகவோ அல்லது அத்தனை தூரம் செயற்திறன் கொண்டதாயோ இல்லாது விட்டாலும் கூட இந்தியாவும் தன் பங்குக்கு சில நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருக்கின்றது.  கட்டுரையாளார் சொல்லிச் செல்வது போல, சீனாவின் மேலாதிக்கம் இலங்கையில் அதிகரித்துச் செல்கின்ற உண்மை, அதே நேரம் இந்தியத் தலையீடும் இலங்கையில் அதிகரித்துச் செல்வதும் உண்மையே.  இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், வட இந்தியச் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  

நவீன பாஞ்சாலி சபதம் போல, சோனியா நடத்திய பழிவாங்கும் படலம் இந்தப் போர் என்றோ, அல்லது இந்தியாவின் பிராந்திய வல்லரசு என்கிற கனவை நிர்மூலமாக்க சீனா நடத்திய யுத்தம் என்றோ அவரவர் அவரவர் அரசியல் சார்புக்கு ஏற்ப சொல்லிக் கொள்ள, நடந்த முடிந்த யுத்தத்தில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கைக்கிருந்த கேந்திய முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி ராஜபக்சே இந்தியா, சீனா என்று இரு தரப்பையும் தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டதே முக்கிய பங்காற்றி இருக்கின்றது.  ஆனால் எந்த யுத்தத்தின் தாக்கங்கள் ஒரு போதும் முடிவதில்லை.  தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கியதுடன் ஈழத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடங்குகிறது. அப்படித் தொடங்கும் ஆதிக்கம் இந்தியாவின் வல்லரசுக் கனவுகளை வேரறுப்பதை தன் நோக்காகக் கொண்டிருக்கிறது


5 comments:

Unknown said...

தகவலுக்கு நன்றி

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் மகாதேவன்

கிடுகுவேலி said...

சொல்ல ஏதுமில்லை....நாம் செய்யவும் ஏதுமில்லை...நடப்பதெல்லாம் நன்மைக்கே....!!

வானேறி said...

நடந்து முடிந்த போரை "பாஞ்சாலி சபதம்" என ஒப்பிடுவது எவ்வளவு முட்டள்தனமோ, அதேயளவு ராஜீவ் காந்தி கொலையே இந்த கருவறுப்புக்கு காரணம் சப்பைக்கட்டு கட்டுவது.

மொழிபெயர்ப்புக்கு நன்றி

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அருண்..


மகிந்தவின் அரசியல் ;)
இலங்கையில் சீன ஆதிக்கம் குறித்து நண்பன் ஒருவனோடு கதைச்சபொழுது சொன்ன வசனம்தான் சிரிப்புக்கு காரணம். :)

Post a Comment