- கனேடிய தமிழ்க் காங்கிரஸின் ரொரன்ரோவில் அமைந்திருக்கும் அலுவலகத்தினுள் சனிக்கிழமை மாலை 6 30க்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 30க்கும் இடைப்பட்ட நேரத்தில் அதன் மின்சார இணைப்பைத் துண்டித்து உள் நுழைந்தவர்களால் அங்கிருந்த குறித்த கணனி ஒன்றின் hard drive களவாடப்பட்டு இருக்கின்றது.
- இவ்வாறாக களவாடிச் செல்லப்பட்டுள்ள ஹார்ட் ட்ரைவிலேயே ஓகஸ்ட் 13ம் திகதி கப்பல் மூலம் வந்துசேர்ந்த ஈழத் தமிழர்களில் சிலரின் விபரங்களும், இன்றும் ஈழத்திலேயே வாழ்ந்துவரும் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கனேடிய தமிழ்க் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளதுடன், இந்தச் செயலை இலங்கை அரச தரப்பினரே திட்டமிட்டுச் செய்துள்ளதாயும் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.
- சன் சீ கப்பல் மூலம் வந்த 492 அகதிகளில் சிலர் இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க்காலக் குற்றங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க முன்வந்திருப்பதாயும், ஈழத்தில் இருக்கின்ற அவர்களின் குடும்பத்தினர் பற்றிய விபரங்களைத் தெரிந்து அச்சுறுத்துவதன் மூலம் போர்க்காலக் குற்றங்கள் பற்றிய இந்த சாட்சியங்களை மௌனிக்க வைக்க இலங்கை அரசு முயல்கிறது என்றும் டேவிட் பூபாலபிள்ளை குற்றம் சுமத்தி இருக்கின்றார்.
- சென்ற ஓகஸ்ட் மாதம் சன் சீ கப்பலில் அகதிகள் வந்திறங்கியது முதல் கனேடியத் தமிழ் காங்கிரஸ் முழு முனைப்புடன் தன்னை அகதிகளுக்கு உதவுவதில் ஈடுபடுத்தி வந்தது. அந்த ரீதியில் வந்திருந்த அகதிகளுக்கு ஈழத்தில் வாழும் அவர்களின் உறவினர்களுடன் இணைப்பை ஏற்படுத்தித் தருவதிலும் அதன் அக்கறை இருந்தது. அவ்வாறாக அகதிகளாக வந்தவர்களின் விபரங்களும் ஈழத்தில் வாழும் அவர்கள் உறவினர்கள் பற்றிய விபரங்களும் இப்போது முழுமையாக இந்தத் திருட்டை நிகழ்த்தியவர்களின் கையைச் சென்றடந்திருக்கின்றது.
- சென்ற ஆண்டு மே மாதத்துடன் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை ராணுவ ரீதியில் ஒடுக்குவதில் வெற்றி பெற்ற இலங்கை அரசு தற்போது அரசியல் ரீதியிலும், பிரசார ரீதியிலும் தமிழர்களின் போராட்டத்தையும் அதற்கான தேவைகளையும் முழுவதுமாய் மறுதலிக்க முயன்றுவருகின்றது; அதில் கணிசமான அளவு வெற்றி பெற்றும் வருகின்றது. அந்த வகையில் இந்தச் சம்பவம் கூட டேவிட் பூபாலபிள்ளை கூறுவது போல இலங்கை அரச தரப்பினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாயோ அல்லது சுயாதீனமாக வேறு சிலரால் வெறுப்பின் அடிப்படையில் நடத்தப்பட்டு; அதே நேரம் இலங்கை அரசுக்கு பயன் தரக்கூடியதாக மாறக் கூடியதாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன
- அலுவலகத்தில் இருந்த பிற கணணிகளையும், தொலைபேசிகளையும், flat screen தொலைக்காட்சிகளையும் விட்டுச் சென்றவர்கள் வரவேற்பு மேசையில் இருந்த கணணி ஒன்றை மாத்திரம் குறிவைத்து எடுத்திருப்பதன் மூலம் சன் சீ கப்பலில் வந்த அகதிகள் பற்றிய விபரமோ அல்லது அதே கணணியில் சேமித்து வைக்கப்படிருந்த வேறேதோ விபரங்களோதான் குறிவைத்து திருடிச்செல்லப்பட்டுள்ளன என்பது புலனாகின்றது
- அதே நேரம், கனேடிய தமிழ் காங்கிரஸினரும் இந்தப் பிரச்சனையில் ஊடகங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் சரியான தகவல்களை தெரிவிப்பது மிகமுக்கியமானது. முன்னுக்குப் பின்னர் முரணான தரப்படும் போது அந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை மற்றவர்கள் - குறிப்பாக பிற இனத்தவர்கள் - சந்தேகிக்கும் வாய்ப்புகளும் அதிகமாகிவிடும். உதாரணமாக செய்தியாளர்களிடம் முதலில் கப்பலில் வந்தவர்களில் 300 பேரளவினரின் விபரங்கள் அந்தக் கணணியில் இருந்ததாக அஞ்சுவதாக கூறிய டேவிட் பூபாலபிள்ளை இன்று அதாவது ஒரு நாள் அவகாசத்தில் சில டசின் அகதிகளின் விபரங்களே அந்தக் கணணியில் இருந்ததாக கூறுகின்றார், இதனைத் தவிர்த்து இருக்கலாம். 300 பேரின் விபரங்கள் திருடு போனால் என்ன, ஒருவரின் விபரங்கள் திருடு போனால் என்ன திருட்டு திருட்டுத்தானே என்று டேவிட் பூபாலபிள்ளை சொன்னாலும், ஒரு அமைப்பின் முதன்மைப் பேச்சாளர் என்ற வகையில் அவர் அந்தத் தகவல்களை உறுதிப்படுத்திக் கூறி இருக்கலாம். அது போலவே அனேகம் பத்திரிகைகளில் கணணி களவு போனதாகக் குறிப்பிடப்பட்டிருக்க Toronto Sun கணணியின் Hard Drive திருடப்பட்டுள்ளதாக கூறி இருக்கின்றது. இது தகவல் தந்தவர்களின் தவறா அல்லது வழமையான Toronto Sunன் கைங்கர்யமா எனத் தெரியவில்லை.
- ஞாயிற்றுக்கிழமை காலை 9 30க்கு அலுவலகத்துக்கு சென்ற தொண்டூழியரே இந்தத் திருட்டை முதலில் கண்டவர் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த முக்கியமான சம்பவம் கனேடிய தமிழ் ஊடகங்களை குறைந்த பட்சம் ஞாயிற்றுக் கிழமை மதிய நேரத்திலாவது சென்றடைந்திருக்கவேண்டும். இந்தச் செய்திக்கு உரிய முக்கியத்துவத்துடன் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருக்கவேண்டும். ஆனால், பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் இது பற்றி தொடர்ந்து சாதிக்கப்படும் கள்ள மௌனம் ஏனென்பது புரியவில்லை. நான் உட்பட பெரும்பாலானவர்கள் இன்று காலை ஆங்கிலப் பத்திரிகைகளில் பார்த்தே இது குறித்த விபரங்களை அறிந்தோம். நேற்று வியூகம் இரண்டாவது இதழ் வெளியீட்டு விழாவில் பலர் கலந்து கொண்டபோது எவருமே இது பற்றி அறிந்திருக்கவில்லை / அவ்வாறு காட்டிக் கொள்ளவில்லை. வலைப்பதிவுகளிலும் இது பற்றி பெரிதாக எவருமே எழுதவில்லை. இணையம் தருகின்ற சுதந்திரத்தை முழுவதும் அனுபவிக்கின்ற நாங்களே இது போன்ற விடயங்களை மக்களிடம் எடுத்துச் செல்லாவிட்டால், அதை எதிர்காலத்திடம் எந்த வார்த்தைகளால் நியாயப்படுத்தப் போகின்றோம்?
- தென்னாசியாவுக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற நாடு கனடா. நிச்சயமாக நிறையத் தமிழர்கள் சராசரிக்கும் மேற்பட்ட வாழ்வை வாழ்கின்றனர். கனடாவின் பல்கலாச்சாரச் சூழலில் மிக வேகமாக முன்னேறி வருகின்ற இனங்களுல் ஒன்றாக தமிழர்களும் சுட்டிக்காட்டப்படுகின்றனர். அபப்டி இருந்தும் நம்மால் கனேடிய மைய நீரோட்டத்தில் எந்தவிதமான / போதுமான சலனத்தை ஏன் ஏற்படுத்த முடியவில்லை என்பதை நாம் இனியாவது சிந்திக்கவேண்டும். தமிழ்மக்களாகிய நாம் நமது மக்களின் பிரச்சனைகளில் ஒன்றித்து குரல் கொடுக்கும் அதே நேரம், மற்ற இனத்தவர்களின் உரிமைப் பிரச்சனைகள், புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் போன்றவற்றுக்கும் குரல் கொடுப்பதன் மூலமே, எதிர்காலம் நோக்கி மெல்ல நடை போட தொடங்கலாம். இல்லாவிட்டால் முன்பொருமுறை பாலகுமாரன் நாவல் ஒன்றில் வாசித்தது போல "தெருவெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி" ஆகவே எமது நிலை போய்விடும்
இது பற்றி மேலதிக செய்திகளுக்கு
- http://www.tamilcanadian.com/news/
- http://www.nationalpost.com/news/Police+investigate+break+Canadian+Tamil+Congress/3513819/story.html
- http://www.thestar.com/news/gta/crime/article/860072--tamil-congress-says-espionage-is-behind-break-in?bn=1
- http://www.cbc.ca/canada/toronto/story/2010/09/13/toront-tamil-congress-break-in.html
4 comments:
இந்தச் சம்பவம் குறித்து முன்னுக்குப் பின்னர் முரணான செய்திகளை வெளியிடுவதை கனேடிய தமிழ் காங்கிரஸ் தவிர்க்கவேண்டுமென ஏற்கனவே கட்டுரையில் தெரிவித்திருந்தேன். இன்று தமிழ் வின்
"களவாடப்பட்ட கணணியில் சன் சீ கப்பல் அகதிகளின் பெயர்கள் இல்லை: டேவிட் பூபாலபிள்ளை
[ செவ்வாய்க்கிழமை, 14 செப்ரெம்பர் 2010, 01:21.18 PM GMT +05:30 ]
கனேடிய தமிழ் காங்கிரஸ் காரியாலயத்தில் இருந்து திருடப்பட்ட கணணியில் சன் சீ கப்பல் அகதிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸின் காரியாலயம் கடந்த சனிக்கிழமை உடைக்கப்பட்டு சன் சீ கப்பலில் வந்த 492 அகதிகளின் ஆவணங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த கணனி களவாடப்பட்டது.
இதில் அகதிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அவ்வாறு அதில் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார் -http://tamilwin.com/view.php?2a36QVH4b4dX98q34b02IPL3e23R1GGbcd3aipD4e0dzZLukce0cg2F32cdebjoA20 " என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது போன்ற நிலைகள் தொடரும் பட்சத்தில் நிச்சயமாக அது எமக்கான மற்ற சமூகங்களில் இருந்து கிடைக்கக்கூடிய தார்மீக ஆதரவை பாதிக்கவே செய்யும். அவதானத்துடனும் பொறுப்புடனும் செயலாற்றவேண்டிய தருணம் இது
நீங்கள் மட்டும் தான் இதை எழுதிருக்குரீர்கள் மற்றவர்கள் எல்லாம் தெரியாதது போல நடிக்கின்றனர்.கனடாவில் ஒரு சிங்கள அலுவலகம் தாக்கப்பட்டிருந்தால் பொங்கியிருபார்கள்
After three days this news disappeared from all medias
எங்கள் ஊடகங்களுக்குப் பெரிய பிரச்சினையே எந்த செய்திக்கு முக்கியத்துவம் தருவது என்பது. தோனியும் அசினும் கொழும்பில் சந்தித்தனர் என்றும் ஏதும் கசமுசா நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று ஒரு செய்தி வெளியிட்டார்கள் ஒரு தமிழ் தேசிய(?) இணையத்தளம். அதுவும் முக்கியமான செய்திகள் வரும் நிரலில். எங்கே போய் தலையை உடைக்க....!! தாங்களாயும் திருந்தாதுகள். சொல்லியும் திருந்தாதுகள். அடித்தும் திருத்த முடியாது. சரியான........!! விடுங்க...!!
Post a Comment