Tuesday, March 30, 2010

தாயகக் கனவுகள் -அருண்மொழிவர்மன்

சென்ற ஆண்டின் இறுதியில் மிலன் குந்த்ரோவ் எழுதிய ignorance என்ற நாவலின் தமிழாக்கம் மாயமீட்சி என்ற பெயரில் வெளிவருகின்றது என்கிற அழைப்பிதழ்கள் என் மின் அஞ்சல் முகவரியை மொய்த்தபோது நான் இலங்கை போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். வாழும் தமிழ் பதிப்பக வெளியீடாக மணி வேலுப்பிள்ளையின் மொழி பெயர்ப்பில் எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே தென்பட்டாலும், சிறப்பான அச்சு நேர்த்தியுடன் புத்தகம் வெளியாகி இருந்தது. நாவலின் கருவும், அப்போது நான் இருந்த மன நிலையும் பெரிதளவும் ஒத்துப் போயிருந்ததால், புத்தகத்தை ஒரே மூச்சிலேயே வாசித்து முடித்தேன். செக் நாட்டில் இருந்து பிரான்ஸில் புகலிடம் பெற்றிருந்தவர்கள், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தம் சொந்த நாடான செக் செல்லும்போது அவர்கள் வாழ்ந்த செக் நாட்டிற்கும், அவர்கள் கற்பனையில் இருந்த செக் நாட்டிற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் - நிஜத்தில் அவர்கள் காணும், உணரும் செக் நாடு மற்றும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை சரியாகப் பதிந்துள்ளார் மிலன் குந்த்ரோ. மொழி பெயர்ப்பில் பயன்படுத்தப்பட்ட சொற்களும், நடையும் நாவலை அணுகுவதில் ஏற்படுத்தியிருந்த சிறு தடைகளையும் மீறி உணர்வு ரீதியாக அண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.

பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னரான இலங்கைப் பயணம். பதின்மங்களின் இறுதிப் பகுதியில் ஈழத்தை விட்டுப் புறப்பட்ட நான், முப்பதை அண்மித்த வயதில் மீண்டும் ஈழம் நுழைகிறேன். நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்ச்சியாக தொலைபேசி மூலமும், கடிதங்கள் மூலமும் தொடர்புகளைப் பேணி வந்தது ஈழத்துடனான என் உறவுகளை தொடர்ந்து உயிர்ப்புடனேயே வைத்திருந்த்து. தவிர, தாயகம் மீண்டு இயல்பான வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அதிகம் இருந்தது. புலம் பெயர்ந்து கனடா வந்த ஆரம்ப நாட்களில் எதிர்காலத்தில் ஈழம் திரும்பி வாழ வேண்டும், அதற்குரிய தகைமையுடன் இருக்கவேண்டும் என்கிற கவனத்துடனேயே கனடாவில் மேற்படிப்பு முதற்கொண்டு, நிறைய விடயங்களைத் தீர்மாணித்துக்கொண்டேன். அங்கீகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்து என்கிற நிலையைத் தாண்டி குடியுரிமை தொடர்பான எந்த ஒரு அடியையும் கூட கடந்த பன்னிரண்டு வருடங்களில் எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கனேடிய குடியுரிமை பெறுவது என்பதை ஈழத்துடனான என் எல்லா உறவுகளையும் அறுத்துக் கொள்வது என்றே அர்த்தப்படுத்தி இருந்தேன். அதுவேதான் உண்மையாகக் கூட இருந்த்து. ஈழத்தில் நான் வாழ்ந்த தெருக்களும், பழகிய மனிதர்களும், நினைவுகளும் என் கனேடிய வாழ்க்கைக்கு சமாந்தரமான ஒரு கனவுலகில் எப்போதும் என்னுடன் பயணித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் நிஜத்தின் வெம்மை ஒரு போதும் கனவில் இருப்பதில்லை என்பதை முகத்தில் அறைந்து உறுதிப்படுத்தியது எனது இலங்கைப் பயணம். எந்த ஒரு காரணத்துக்காகவும் சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அந்த நாட்டைப் பொறுத்தவரை அன்னியர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். இன்னும் சற்று அழுத்தமாகச் சொல்லப்போனால் “மாயமீட்சியில்” மிலன் குந்த்ரோவ் சொல்வது போல தாயகத்தை விட்டுப் பிரிந்து போனவர்களை தாயகத்தில் உள்ளோர் இறந்து போனவர்களாகவே பார்க்கின்றனர். அல்லது அப்படிப் பார்க்காவிட்டாலும், தாயகம் பற்றியும், தாயகத்தில் உள்ளோர் தன்னை எப்படி எப்படி எதிர்கொள்வார்கள் என்ற மிகு கற்பனைகளுடனும் தாயகம் செல்பவர்களுக்கு அப்படியே தோன்றுகிறது. இங்கே ஒன்றை தெளிவாகவே சொல்லியாக வேண்டும். தாயகத்தை விட்டு வெளியேறியது முதல் மீண்டும் ஈழம் திரும்பும் நாள்வரை என் பார்வையிலும், கருத்துகளிலும், குணவியல்புகளிலும் நிச்சயம் பெரிய மாற்றங்கள் இருக்கவே செய்கின்றன. நாட்டை விட்டுப் போனவன் அப்படியே திரும்பிவருவான் என்று அங்கிருப்போர் எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதை ஒத்த முட்டாள தனம்தானே, நான் விட்டு வந்த நாள் முதல் தாயகமும் அங்கிருக்கும் உறவுகளும் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும். மாற்றங்கள் நாளாந்தம் நடந்து கொண்டே இருக்கின்றன. நாளும் பார்ப்பவனுக்கு மாற்றங்கள் தெரிவதில்லை. இடைவெளி விட்டுப் பார்ப்பவனுக்கே மாற்றங்கள் மலை போல தெரிகின்றன. என் பதின்ம வயதில் நானும் நண்பன் குணாளனும் ஒரு முடிவெடுத்தோம். ஒரு கன்றுக் குட்டியை அது குட்டியாக இருக்கும்போதிருந்து தினமும் தூக்கிவந்தால், அது பசுவாக அல்லது மாடாக வளர்ந்த பின்னரும் இலகுவாக தூக்கலாம் என்று. அதன்படியே செய்தும் வந்தோம். பின்னர் காலம் தூக்கி எறிய அவன் கொழும்பிலும் நான் கனடாவிலுமாக தெறித்து விழுந்தோம். அந்தப் பசு எங்கேயோ இருக்கலாம். ஆனால் இப்போது அதைக் கண்டாலும் எம்மால் அதைத் தூக்க முடியாது. இடையில் விட்ட காலம் அப்படி. அது போலவேதான் நாம் விலகி இருந்த தாயகத்தை மீண்டும் சென்று பார்க்கும்போது அது ஒரு போதும் “நாம் பார்த்த தாயகமாக” இருப்பதில்லை.

ஈழத்தில் இருந்து கனடா திரும்பிய பின்னர் பலரும் “அங்க அப்படி இருக்குது” என்று கேட்டபோதெல்லாம், “இங்கே சொல்வது போல அங்கே இல்லை..” என்ற தொடக்கத்துடன் தொடங்கி, என்னால் இயன்றவரை அங்கே நான் கண்ட நிலையினை தெளிவாகவே சொன்னேன். “இங்கே சொல்வது போல அங்கே இல்லை” என்பதன் அர்த்தம் அங்கே எல்லாம் ஒழுங்காக இருக்கின்றது என்பதல்ல. முதலில், மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம் என்கிற ரீதியில் இப்போது அங்கே இருக்கும் நிலையை அணுகினால், ஈழத்தில், சிங்களவர்களோ, தமிழர்களோ அல்லது முஸ்லீம்களோ வாழும் எந்தப் பிரதேசத்திலும், ஏன் சிங்கள அரசாங்கத்தாலோ அல்லது தமிழ்க் குழுக்களாலோ ஆளப்பட்ட எல்லாப் பிரதேசங்களிலும் மனித உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் காலவதியாகி எனக்குத் தெரிந்து 25 ஆண்டுகளாகிவிட்டன. ஈழத்தில் இருக்கும் இன்றைய மிக முக்கிய பிரச்சனையாக அதை மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை விட்ட மிக அண்மைக் காலத்தில் உருவான கட்டுப் படுத்த முடியாத விலை உயர்வுகள் கண்மூடித்தனமாக பிரயோகிக்கப்படும் குடும்ப அதிகாரம் (ராஜபக்சே குடும்பம் – இந்த ஒரு விடயத்திலாவது ஒரு தமிழரை – கருணாநிதியை- பின்பற்றுகிறார்கள்) போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து பேசப்படவேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை அதன் தற்போதைய விலைவாசியில், வெளிநாட்டு வருமானம் எதிலும் தங்கியிராத ஒருவர் (இலங்கையில் வாழும் பெரும் பணக்கார்ர்கள் மற்றும் தொழிலதிபர்களைத் தவிர்த்து) தன் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறவேற்றுவது சிரமம் என்ற நிலையே அங்கே நிலவுகிறது. அதிலும் பெரும் பாலும் நகர்ப் புறங்களில். இலங்கையில் விலைவாசி அதிகம் உச்சத்தில் இருக்கும் இடம் என்ற பெயரை இப்போது வெள்ளவத்தை கைப்பற்றி உள்ளது. வெள்ளவத்தையில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரமே இருக்கக் கூடிய புறக்கோட்டை மற்றும் தெஹிவளை பகுதிகளில் விற்கப்படும் விலைகளை விட ஒன்றரை அல்லது இரண்டு மடங்கு விலையில் வெள்ளவத்தையில் பொருட்கள் விற்கப்படுகின்றன. அதே நேரம், வெள்ளவத்தைப் பிரதேசத்தில் இருக்கும் அதிக விலை கொடுத்தும் வாங்க்க் கூடிய ஆற்றல் காரணமாக பொருட்கள் அதிகம் தரமானதாக இருக்கின்றன.

இலங்கையில் வெளிப்படையாக்க் கவனித்த இன்னொரு விடயம் அங்கே பரவி இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளும், அந்த முதலீடுகளின் போர்வையிலான தலையீடுகளும். அதிலும் குறிப்பாக சீனத் தலையீடுகள். தெஹிவளைக்கு அண்மையிலான மேம்பாலங்கள், அம்பாந்தோட்டையில் 100 கோடி முதலீடு, கொழும்பில் கட்டபட்டுவரும் “சீனக் கலாசார நிலையம்”, இது தவிர இலங்கைக்கு எதிராக சர்வதேச அமைப்புகளில் சுமத்தப்படும் குற்றச்சாற்றுகளில் இருந்து எப்போதும் இலங்கையைக் காக்கும் ஆதரவுக்கரம் என்று சீனத் தலையீடு நீண்டு கொண்டே செல்கின்றது. அதே நேரம் இலங்கையின் எல்லாவிதமான அராஜகங்களுக்கும் ஆதரவாக மட்டுமன்றி, ஓரளவு பங்காளியாகக்கூட இந்தியாவின் பங்களிப்பு தொடர்கிறது. மறு புறம் சீனாவின் நட்பு நாடுகளான இரானும், ரஷ்யாவும் கூட அண்மைக்காலமாக இலங்கையின் ஆதரவாளார்களாக நெருங்கி வருகின்றனர். இந்த நாடுகள் இலங்கைக்கு காட்டும் அத்தனை ஆதரவுமே இந்து சமுத்திரத்தில் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது தவிர்ந்த வேறு ஒன்றுமே இல்லை. தவிர சீனா, ரஷ்யா, இரான், இந்தியா போன்ற நாடுகளின் ஆலோசனையுடன் தனது நிகழ்ச்சி நிரலை அண்மைக்காலமாகத் தயாரித்துவரும் இலங்கை, எதிர்காலங்களில் இந்த நாடுகள் மாற்றுக் கருத்தாளர்களையும், அரசின் மீது விமர்சன்ங்களை முன்வைத்தவர்களையும் எப்படி ஒடுக்கின என்பதையும், அவர்களை எப்படி நரவேட்டை ஆடின என்பதையும் தனக்கான முன் மாதிரியாக எடுக்காது என்பது என்ன நிச்சயம். இந்த அந்நியத் தலையீடுகள் பற்றி விமர்சன்ங்களை முன்வைக்கும் தமிழ் அறிவுஜீவிகள் கூட தம் அரசியல் சார்பு நிலைகளால் தொடர்ந்து சில விடயங்களில் கள்ள மௌனம் சாதித்தே வருகின்றனர். உதாரணமாக கம்யூனிஸ்டுகள்/மார்க்ஸியவாதிகள் செய்யும் விமர்சனங்களில் எப்போதும் இந்தியத் தலையீடுகள் பற்றியும், இந்தியப் பேரினவாதம் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாற்றுகளை முன்வைத்து இறுதியில் உலகத் தொழிலாளரே ஒன்று படுவீர் என்கிற பழைய கோஷங்களுடன் முடித்துவிடுவார்கள். அது போல இந்திய அனுதாபிகளும், நலன் விரும்பிகளும், இந்தியா என்று சொன்னாலே புல்லரித்துப்போபவர்களும் சீனாவே இறுதிப் போரை நடத்தியது என்றும், ராஜீவ் காந்தி படுகொலை மட்டும் நடந்திராவிட்டால் இந்தியா தாம்பாளத் தட்டில் வைத்து தமிழீழத்தைத் தந்திருக்கும் என்றும் கவலைப் பட்டுக் கொள்வார்கள். இது போன்ற எத்து வாதங்களே எம்மை ஒரு போதும் அடுத்த கட்டம் நோக்கி சிந்தியாமல் தேக்கி வைத்திருக்கின்றன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். கொழும்பில் பல உணவகங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் சீனர்களைத் தொடர்ந்து பார்த்தபோது இலங்கையுடனான சீன உறவுகள் அதிகம் நெருங்கி வருவது வெளிப்படையாகவே தெரிந்தது. சீனா போன்ற, தனி மனித சுதந்திரம் ஒடுக்கப்பட்ட சர்வாதிகாரத் தன்மை வாய்ந்த ஒரு அரசுடன் இலங்கையின் ஆளும் கட்சி நெருக்கம் காட்டி வருவது நிச்சயம் இலங்கையில் வாழும் சிறு பான்மையினருக்கு பாதகமான ஒரு அம்சமே.

இலங்கைக் குளிர்பானங்கள் என்றாலே யானை மார்க் சோடாக்கள்தானே ஞாபகம் வரும். ஆனால் இலங்கையில் நிலைமையைப் பார்த்தபோது இன்னும் கொஞ்ச நாளிலேயே யானை மார்க்குக்கும் மூடு விழா நடந்து விடும்போலத்தான் தெரிந்த்து. அனேகமாக எல்லா சில்லறை வியாபாரக் கடைகளின் பெயர்பலகைகளும் கொக்கோ கோலாவின் உபயத்தில் இருக்க, கொக்கோ கோலா என்கிற பெரிய எழுத்துக்களின் மத்தியில் இருந்து கொண்டு சங்ககாரவும், ஜெயவர்த்தனேயும் கோக் குடிக்கிறார்கள். மத்தியில் கடையின் பெயர்ப் பலகையும் இருக்கின்றது. முன்பு அனேகமாக எல்லாக் கடைகளிலும் இருந்த யானை மார்க் குளிர்பான விளம்பரங்களை இப்பொது அனேகமாகக் காணமுடிவதில்லை. கொழும்பில் இருந்த நாட்களில் மாலை நேரங்களில் அதுவும் 96 காலப் பகுதிகளில் வெள்ளவத்தை கடற்கரையோரமாக பம்பலப்பிட்ட்யில் இருந்து ராமகிருஷ்ணா வீதி வரை நடந்து வருவோம். இப்போது அது உயர்பாதுகாப்பு வலயமாம். மாலை ஆறு மணியின் பின்னர் அங்கே நடமாடமுடியாதாம். ஆனால் கடற்கரையோரமாக இரண்டு கிளைகளுடனும், அது தவிர வெள்ளவத்த, பம்பலப்பிட்டி பகுதிகளில் பல கிளைகளுடனும் MB என்ற எழுத்துக்களைத் தாங்கி “மேரி ப்ரௌன்” உணவகங்கள் வரிசையாக இருக்கின்றன. ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு வகையான உணவை சந்தைப்படுத்துகிறார்கள். எளிமையாக்வும், சுத்தம் மற்றும் சுவையாகவும் இருக்கின்றன உணவுகள். அதே நேரம் கொழும்பில் நான் இருந்த காலங்களில் அதிகம் போய் வந்த கிறீன்லாண்ட்ஸ் போன்ற உணவகங்களில் உணவை ருசிக்கவே முடியவில்லை. இன்னும் உண்மையாகச் சொல்லப்போனால் கொழும்பில் நான் இருந்த காலங்களில் நான் சாப்பிட்ட உணவுகளில் சுவையே இல்லாதது என்றால் கிறீன்லாண்ட்ஸ் சாப்பாடுதான். அதே நேரத்தில் நிறைய துரித உணவகங்கள் விற்பனையை வெகுவாகக் கைப்பற்றி இருக்கின்றன என்றே சொல்லவேண்டும். குறிப்பாக KFC. இலங்கையில் இருக்கின்ற KFCகளில் புரியாணியும், கொத்துரொட்டியும் கூட விற்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் தமது பலமான விளம்பரங்கள் மற்றும் வியாபார அணுகுமுறைகள் ஊடாக வியாபாரத்தைக் குறி வைக்கின்றபோது அவற்றிற்கு ஈடு கொடுத்து உள்ளூர் நிறுவனங்கள் செயற்பட முடியாத நிலையே தொடர்கின்றது. முன்பெல்லாம் கொழும்பில் தாராளமாகக் காணக்கிடைக்கும் elephant house ஐஸ்கிறீம் கடைகளைக் கூட இப்போது காணக் கிடைப்பதில்லை. அண்மையில் கூட ஒரு பதிவர், வடக்கு கிழக்கிற்கு இலங்கையின் மற்றைய பகுதிகளில் இருந்து குளிர் பான்ங்கள் கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்ப்ட்டிருந்தபோது பரவலாக விற்கப்பட்ட அர்ச்சயா மற்றும் புத்தூக்கி போன்ற குளிர்பான தயாரிப்புகள் பின்பு காணாமலே போய்விட்டன என்று எழுதி இருந்தார். (அதற்கு அரசியல் காரணங்கள் கூட காரணிகளாக இருக்கலாம்).

இலங்கை செல்லவேண்டும் என்ற கனவுகள் இலங்கை சென்று திரும்பியபின்னரும் கூட கனவாகவே தொடர்கின்றன. இலங்கை சென்றேன். நிறைய இடங்கள் பார்த்தேன். நிறைய அனுபவங்களைப் பெற்றேன். ஆனால் எதுவும் நான் நினைத்த இலங்கையாக இல்லவே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், ஈழத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதில் முக்கியமான ஒரு பார்வையை அனேகமாக எல்லாரும் தவற விட்டே இருந்தார்கள். பட்த்தில் வரும் அந்தக் குழந்தை தன் தாயிடம் போகவேண்டும், தாயிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்கிற பெரும் ஏக்கத்துடனேயே தாயகம் செல்கின்றது. தடைகளைத் தாண்டி தாயையும் சந்திக்கிறது. ஆனால் அப்படி சந்திக்கிறபோது தாயாலும் குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது, குழந்தை தாயிடம் கேட்கின்ற கேள்விகளுக்குக் கூட தாயிடம் விடை இல்லாமல் இருக்கின்றது, கடைசியில், தனது அடையாளம் தெரிந்த்து முதல் தன்னால் இயல்பாக ஏற்றுக் கொள்ளவே முடியாமல் இருந்த வளர்ப்புப் பெர்ற்றோரிடமே குழந்தை திரும்பும்படி ஆகி விடுகின்ற்து. தாயகம் பற்றிய அதீத கற்பனைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் தாயகம் செல்பவர்கள் கூட கடைசியில் இப்படித்தான் தாயகத்துடன் ஒட்ட முடியாமல் புகலிடத்துக்கே தூக்கி எறியப்படுகிறார்கள் போலும்.

வைகறை மார்ச் 2010க்காக எழுதப்பட்டது



7 comments:

வானேறி said...

அண்மையில்வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கூட புலம் பெயர் சோழ சமுகம் தாயகம் பற்றிய அதீத கற்பனைகளில் வாழ்ந்து வருவதாக சித்தரிக்கப் பட்டிருந்தது.

Anonymous said...

அனுபவித்து எழுதி இருக்கின்றீர்கள். அதனால் உண்மையாகவும் எழுதி இருக்கின்றீர்கள்

கணன்

Anonymous said...

"அண்மையில்வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கூட புலம் பெயர் சோழ சமுகம் தாயகம் பற்றிய அதீத கற்பனைகளில் வாழ்ந்து வருவதாக சித்தரிக்கப் பட்டிருந்தது"

(ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இறுதிகட்டம் கூட ஒரு முள்ளி வாய்க்கானல ஞாபகபடுத்துகின்றது).

அருண்மொழிவர்மன் said...

வானேறி

ஆயிரத்தில் ஒருவனில் எங்கே அப்படி சித்திகரிக்கப்பட்டிருந்தது?

அதில் சோழ சமூகமே புலம்பெயர்ந்து இருப்பதாகத்தானே காட்டப்பட்டிருந்தது?

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் கணன்

அனாமி,
இதற்கும் இந்தப் பதிவிற்கும் என்ன சம்பந்தம்????

வானேறி said...

தமிழகத்தில் நெசவாளர்கள் எல்லாம் பஞ்சம் காரணமாக எலிக்கறி உண்டு பிழைத்து காவிரி தண்ணீருக்காக ஏங்கி வயல்கள் எல்லாம் காய்ந்து கருக வாழ்கின்றனர், ஆனால் சோழ மன்னனோ புலிக் கொடி மற்றும் தாயகத்தின் செழுமை பற்றிய கனவுகளில் மூழ்கி இருக்கின்றான்

Anonymous said...

எப்போதும் இந்தியத் தலையீடுகள் பற்றியும், இந்தியப் பேரினவாதம் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாற்றுகளை முன்வைத்து இறுதியில் உலகத் தொழிலாளரே ஒன்று படுவீர் என்கிற பழைய கோஷங்களுடன் முடித்துவிடுவார்கள். அது போல இந்திய அனுதாபிகளும், நலன் விரும்பிகளும், இந்தியா என்று சொன்னாலே புல்லரித்துப்போபவர்களும் சீனாவே இறுதிப் போரை நடத்தியது என்றும், ராஜீவ் காந்தி படுகொலை மட்டும் நடந்திராவிட்டால் இந்தியா தாம்பாளத் தட்டில் வைத்து தமிழீழத்தைத் தந்திருக்கும் என்றும் கவலைப் பட்டுக் கொள்வார்கள்>>
:))

Post a Comment