-1 –
சடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சென்ற வாரம் மீண்டும் ஒரு முறை வாசித்தேன். கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.
செந்தில்நாதன் என்கிற குடும்பத் தலைவர் மனைவியையும், ஐந்து பிள்ளைகளையும், மனைவியின் தாயாரையும் பராமரிக்க வேண்டும் என்பதையே கருத்தாகக் கொண்டு கொழும்பில் இருந்து கடுமையாக உழைத்து வருகிறார். குடும்பம் மீது தீராத காதலும், மனைவி மீது அடங்காத காமமும் கொண்ட செந்தில்நாதன் தனக்குக் கிடைக்கும் பணத்தைக் குடும்பத்திடம் சேர்க்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். இது வெளியில் சொல்லும் காரணம் என்றாலும், தன் காமம் தீர்க்க ஒரு வடிகால் கிடைக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணம். (காமம் பெருகக் காரணம் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் பார்த்த ஓர் ஆங்கிலப்படத்தில் வரும் காட்சி). மாறாக தன் விடுமுறையை நீட்டித்தும் கூட அவரால் ஒரு நாள் கூட மனைவியுடன் கூட முடியவில்லை. கூட்டுக் குடும்பம், தியாகம் என்று திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எப்படி தனி மனித வாழ்வின் இயல்பு நிலையையும், சந்தோஷங்களையையும் நிராகரிக்கின்றன என்று சொல்லும் கதையூடாக அவ்வப்போது நடுத்தர வர்க்க மக்கள் பற்றிய நக்கல்களும் யாழ்ப்பாணத்து மனநிலை பற்றிய கேலிகளுமாக கதை செல்கின்றது.
வெளியில் செல்லும் செந்தில்நாதன் குடித்து விட்டு வருகிறார். செந்தில்நாதன் கொழும்பில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று குடிப்பது இல்லை. ஊரில் கூட சந்தர்ப்பமும் ஓசிச் சரக்கும் கிடைத்தால் மட்டுமே குடிப்பவர் (இதைத்தானே நடுத்தர வர்க்க மனநிலை என்பார்கள்). கூடலுக்கான எதிர்பார்ப்புடன் அவரைத் தேடிவரும் மனைவி, அவர் சத்தி எடுத்துவிட்டுப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறாள் (நடுத்தர வயதே ஆனபோதும், மற்றவர்கள் பார்த்தால் மரியாதை இல்லை என்பதற்காக செந்தில்நாதனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதில்லை). இந்த நேரத்தில் தாபத்துடன் அவர் மனைவி சுய இன்பம் செய்வதாக எழுதுகிறார் எஸ், பொ. அது போலவே கொழும்பில் செந்தில்நாதனும் சுய இன்பம் செய்வதாக வருகிறது. இந்தக் கதை எழுதப்பட்டது 60களில் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஆபாசமாக கதை எழுதினார் என்பதற்காக மு. தளையசிங்கம் அடித்துக் கொல்லப்பட்டார் என்றெல்லாம் உளறித்தள்ளும் அறம் சார்ந்த மேதாவிகள் இந்தக் கதை பற்றி என்ன சொன்னார்களோ தெரியவில்லை.
-2-
புலம் பெயர்ந்தும், சொந்த நாட்டில் வேலை நிமித்தமாகவும் குடும்பத்தையும், சொந்த மண்ணையும் பிரிந்திருந்து தம் இளமையை ஆகுதியாக்கும் எத்தனையோ பேரின் கதைகள் நிச்சயம் பதிவாக்கப்படவேண்டும். போர் தின்ற எம் சனங்களின் வாழ்வின் எத்தனையோ கதைகள் இன்னும் பதிவாக்கபடாமலேயே இருக்கின்றன. ஈழத்தில் இருந்து போர் தூக்கி எறிந்த எத்தனையோ பேர் உலகெங்கும் பதிவர்களாகப் பரவிக் கிடந்தாலும் இன்னும் பதிவாக்கப்படாமலேயே எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன என்பது நிச்சயம் வருத்தத்துக்குரியது. அண்மையில் நண்பர் அந்நியனுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது ஒரு நல்ல யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு பதிவரும் மானசீகமாக, ஒவ்வொரு தலைப்பை அல்லது விடயத்தை தன் பதிவுகளில் முன்னிலைப்படுத்தவேண்டும். அதாவது அந்தப் பதிவர் வேறு விடயங்கள் பற்றி எழுதக் கூடாது என்பதில்லை. எதைப் பற்றியும் எழுதலாம். ஆனால் தான் மானசீகமாக எடுத்துக் கொண்ட விடயம் பற்றி ஆழமான, விரிவான பதிவுகள் எழுத வேண்டும். எல்லாப் பதிவர்களும் இதைப் பின்பற்றினால் பேசப்படாத விடயங்கள் அதிகமாகப் பதியப்படும். உதாரணத்துக்கு பதிவுகளில் இதுவரை 95 ஒக்டோபரில் இடம்பெற்ற இடப்பெயர்வு பற்றி பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை. அதுபோல வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, தம்மை நாராக்கி தம்மைச் சார்ந்தவர்களை உயர்த்தியபின் ஆயிரம் கனவுகளுடன் ஊர் திரும்பி, வாழ்வின் வசந்தங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு வாழ்ந்த இளைஞர்கள் – யுவதியர் பற்றிப் பேசப்படவில்லை. இதுபற்றியெல்லாம் தொடர்ச்சியாக எழுதப்படும்போது அவை எமக்கான ஆவணங்களாகக் கூட கருதப்படலாம்.
-3-
கனடாவின் வன்கூவரில் நடைபெற இருக்கின்ற திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்படுவதற்காக ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட 1999 என்கிற திரைப்படம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்றறிந்து மகிழ்ந்தேன். கனடாவில் தமிழ் இனக்குழுக்களின் மோதல்கள் உச்சத்தை அடைந்திருந்த 1999 ம் ஆண்டளவில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு என்கிற தகவலையும் அறிந்தேன். புலம்பெயர் நாடுகளில், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இனங்களில் ஒன்றான ஈழத்தவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக இந்தக் குழுக்களிடையேயான மோதல்களும் இருக்கின்றன.
வேற்றினத்தவர்கள் எம் மீது அதிகாரம் செய்ய செய்ய முற்பட்டதாலேயே எம் இளைஞர்கள் குழுக்களாகி வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்று சொல்கின்ற ”ஜில்மால்” கதைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு இந்தப் பிரச்ச்னைகள் எப்படி உருவாகின்றன?, ஏன் உருவாகின்றன? என்றெல்லாம் திறந்த வெளியில் உண்மைகளைப் பேசுவதால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். (எனக்குத் தெரிந்த அளவில் தமிழ் இனக்குழுக்கள் தமிழ் இனக்குழுக்களுடன் மட்டுமே மோதுவது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன). இது போன்ற காரணங்களாலும், ஒரு முக்கிய திரைப்பட விழாவில் திரையிடப்பட தெரிவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற வகையிலும் இத்திரைப்படத்தையாவது கள்ள விசிடி வரும்வரை காத்திருக்காமல், திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டுகிறேன். மேலும் இப்படியான சில நல்ல திரைப்படங்களைப் பார்க்காமல் விடுவது கூட குருவி, ஏகன், போன்ற கொடுமைகள் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்பட ஒரு காரணமாக இருக்கின்றது. கருட புராணத்தில் இதற்கும் ஏதோ தண்டனை இருக்கிறதாம். எச்சரிக்கை.
நன்றி : ஈழநேசன் இணைய இதழ்
புகைப்படங்கள் நன்றி: ஈழநேசன்
7 comments:
1999 திரைப்படம் பற்றிய தகவலுக்கு நன்றி. கனடா தவிர்ந்த நாடுகளில் இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டுமா? டி.வி.டி. வெளியாகும் போது அறிவிக்கவும்.
பொதுவாக திரைப்பட விழாக்களில் கல்ந்து கொள்ளுஇம் திரைப்படங்கள் சில காலத்தின் பின்னால் டிவிடிக்களிலிலும் வெளியிடப்படும். இந்த வகையில் காஞ்சிவரம், டெரரிஸ்ட் போன்றவற்றையெல்லாம் இந்தியாவில் பார்க்கும் முன்னரே நாம் பார்த்தோம். இத்திரைப்படமும் அது போல வெளியாகும் என்றூ நம்புகிறேன். அப்போது நிச்சயம் அறியத்தருவேன்.
இயக்குனர் லெனின் அவர்களை கே.எஸ். பாலச்சந்திரனின் நூல் வெளியீட்டில் கண்டேன்... நான் ஆள் ஏதோ வயது போன ஆளா இருக்கும் எண்டு பாத்தா ஆள் வலு இளம் ஆளா இருக்கு... அவரின்ர last name கொஞ்சம் குழப்பீட்டுது என்னை
நன்றி கீத்.
சில காரணங்களால் பாலசந்திரனின் விழாவுக்கு வர் இயலாமல் போய்விட்டது. ஆனால் முன்னதாக காலம் விழாவில் கலந்து கொண்டேன்.
லெனின் போலவே இன்னொரு இளைஞரின் $9.50 என்கிற குறும்படம் வர உள்ளதாகவும் அறிகிறேன்.
ungaludaya indha pudhu padhivirkaaga kaathirundhen anna.. :)
ungaludaya pazhaya padhivukal silavatrai padithen.. mikavum pidithu irundhadhu..
nadigar karthikai patriya padhivu matrum ezhuthaalarkal sujatha, balakumaaran, gnani.. avarkalai patriya padhivugal ellam sirapaaga irundhadhu..
neengal kurippita padam Chennaiyil veliyaaguma endru theriyavillai... veli vandhal kandipaaga thiraiyarangathil paarppen :)
thagavalgalukku nandri anna :)
//...கூட்டுக் குடும்பம், தியாகம் என்று திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எப்படி தனி மனித வாழ்வின் இயல்பு நிலையையும், சந்தோஷங்களையையும் நிராகரிக்கின்றன ...//
காட்டமான வரிகள்...இப்படித்தான் எத்தனையோ மனிதர்களின் வாழ்வு அமிழ்ந்து போகிறது உணர்ச்சிகளின் போராட்டத்தில்...!
//..மேலும் இப்படியான சில நல்ல திரைப்படங்களைப் பார்க்காமல் விடுவது கூட குருவி, ஏகன், போன்ற கொடுமைகள் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்பட ஒரு காரணமாக இருக்கின்றது..//
வழமையான உங்கள் பாணி நையாண்டி இருந்தாலும் உண்மையே..!!
உங்களைப் பற்றிய விவரத்தின் இறுதியில் Rober Frost ன் சில வரிகளை அவர் பெயர் வெளியிடாமல் எழுதியிருக்கிறீர்கள். சரி செய்யவும்.
Post a Comment