Monday, August 31, 2009

பதிவுலக நண்பர்களும் அனுபவங்களும் மற்றும் புல்லட் உடனான என் மீண்ட நட்பு

-1-

து 2006ம் ஆண்டு. கனேடிய புலம்பெயர் வாழ்வு தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருந்த காலம் அது வரை கொண்டாடிய உறவுகளும், நட்புக்களும், நம்பிக்கைகளும் தம் கோரமான சுய முகத்தைக் காட்டி என்னைக் கேலிபேசிக் கொண்டிருந்த காலம். புலம்பெயர முன் ஈழத்தில் கிடைக்கப் பெற்று, உலகெல்லாம் சிதறிக் கிடந்த சில நட்புக்களும், ஓரிரு உறவுகளும், எப்போதும் நான் நேசித்த புத்தகங்களும், திரைப்படங்களும் மட்டுமே எனக்கு துணை வந்து கொண்டிருந்தன. எப்போதும் கூட இருந்த இருபதுக்கு மேற்பட்ட நட்புகளும், ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியும் மெல்ல விலகிச் செல்ல தனிமையின் குழந்தையாய் வெறுமையை உணரத் தொடங்கினேன். அதுவரை புத்தகங்களையும் இதழ்களையும் இணையத்தில் மட்டுமே வாசித்து வந்து கொண்டிருந்த எனக்கு தனது வலைப்பதிவு ஒன்றினை அவுஸ்திரேலியாவில் இருந்து நண்பன் தெய்வீகன் அறிமுகம் செய்தான். அவன் வலைப் பதிவும், அதில் இடப்படிருந்த பின்னூட்டங்களும் எனக்கு அப்போது ஆச்சர்யங்களாக இருந்தன. அந்த பிரமிப்பு தீர முன்னரே தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றையும் அறிமுகம் செய்தான்.

தமிழ் மணத்தில் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் டீசே தமிழனின் எழுத்துக்களைப் பார்த்து அதிகம் பிரமித்து ஒரு ரசிகனாகவே அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். இதே நேரத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு பதிவர் கானா பிரபா. அப்ப்போது அவர் அதிகம் நினைவுப் பதிவுகளாகவும், மலையாள மற்றும் பிறமொழி திரைப்படங்கள் பற்றியும் எழுதிக் கொண்டிருந்தார். அவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு நிறைய விடயங்கள் எனக்கிருந்தன. இயலுமானவரை பின்னூட்டங்கள் மூலம் செய்யப்பட்ட பகிர்தலின் இடையே, பகிர்தலுக்கு பின்னூட்டம் மட்டுமே வழி என்ற நிலையில் இருந்த போதாமையை நான் உணார்ந்து கொண்ட ஓர் இரவில் நான் என் கருத்துக்களை, எண்ணங்களை, கோபங்களை, பேசுவதற்கு எவருமே கிடையாத தனிமையை பதிவுகள் மூலம் வெளியிடத்தொடங்கினேன்.

பதிவுகளுக்கு சொல்வதெல்லாம் உண்மை என்று பெயர் வைத்த பின்னர் என்ன பெயரில் எழுதலாம் என்று யோசித்த போது அந்த நாட்களில் ராஜராஜசோழன் மேல் இருந்த அதீதமான காதலினால் (இதற்கு பொன்னியின் செல்வனும், பாலகுமாரன் எழுதிய ராஜராஜசோழன் பற்றிய கதைகளும் காரணமாக இருக்கலாம்) அருண்மொழிவர்மன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் நான் எழுதிய சில பதிவுகளை வாசிக்கும்போது வெட்கவே தோன்றுகிறது. வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை உலக தரத்தில் ஒரு சினிமா என்று சொல்கிற முட்டாள்தனத்தை எல்லாம் செய்திருக்கிறேன். கவிதைகள் என்கிற பெயரில் சில கொடுமைகளை (இது சாடிஸத்தின் கீழ் கூட வரும்..???) கூட பதிந்திருக்கிறேன். அண்மையில் நண்பர் மெலிஞ்சி முத்தன் சில பழைய பதிவுகளை நீக்கி விடலாமே என்றூ ஒரு வேண்டுகோளாக வைத்தபோதும் கூட அதை நான் நீக்கவில்லை. நான் எழுதிய எல்லா அபத்தங்களுக்கு இடையிலும் அப்போதைய என் மன நிலையும், பேதமையும் நிறைந்தே இருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்துதானே நான். தவிர, எத்தனை மேற்படிப்பு படித்தாலும், “அ”னா “ஆ”வன்னா எழுதிப் பழைய பழைய கடதாசிகள் மற்றவர்களுக்குத்தான் குப்பைகள். எழுதினவனுக்கு பொக்கிஷங்கள்.

பதிவுகள் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் தொழினுட்ப ரீதியாக இருந்த சில அறிவுக் குறைவுகள் காரணமாக என்னால் அவற்றை தமிழ்மணத்தில் இணைக்க்வோ, பதிவுப் பட்டையை இணைக்கவோ முடியவில்லை. அப்போது என்னுடன் உலாவந்த தாழ்வு மனப்பாண்மை காரணமாக அதற்கான முயற்சிகளைச் செய்யக்கூடவில்லை. ஒரு இன்ப அதிர்ச்சியாக “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்று நான் எழுதிய பதிவு ஒன்றிற்கு நான் அதிகம் கொண்டாடிய டிசே தமிழன் பின்னூட்டமும் இட்டு, பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கவும் கேட்டுக்கொண்டார். இதே போன்று கானாபிரபாவும் கேட்டுக்கொண்டதுடன், என்னுடன் எந்த அறிமுகமும் இல்லாதபோதும், என் வலைப்பதிவில் பதிவுப்பட்டையை இணைத்தும், வேறு சில வசதிகளைச் செய்தும் தந்தார். தனிப்பட்ட வாழ்விலும் நிறைய சிக்கல்களுல் சிக்கி உழன்று கொண்டிருந்த நாட்களில் எனக்குப் பெரும் நம்பிக்கையும், என் தனிமையை, மன உளைச்சல்களைக் கொல்ல ஒரு வெளியாக ப்திவுகளைத் தொடர உதவிய இருவர்க்கும் காலமெல்லாம் நன்றிகள்.

இதன்பின் ஒரு நீண்ட இடைவெளி. மன உளைச்சல்களால், தனிப்பட்ட சிக்கல்களால், உறவுகள் தந்த ஏமாற்றங்க்ளால், இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னையால் நண்பர்கள் வட்டமே சிதறி விட ஏற்பட்ட வெறூமையினால் அதிகம் அல்லாடினேன். மீண்டும் ஒரு முறை கானாபிரபா மடல் எழுதினார். ஏன் நீண்ட காலம் பதிவுகள் எழுதவில்லை என்று கேட்டு, சுகம் விசாரித்து, மீண்டும் எழுதும்படி மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருந்த கடிதம் அது. அன்று இருந்த விரக்தியில் “என் மீதும் அக்கறைப் பட மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற நம்பிக்கையை தந்த கடிதம் அது. 2007ம் ஆண்டு பிப்ரவரியில் எழுதிய பதிவின் பின்னர் மீண்டும், 2008 மேயில் பதிவெழுதத் தொடங்கினேன். இடைப்பட்ட இந்தக் காலத்தில் சக பதிவர் விஜேசந்திரன் டொரண்டோ வந்திருந்தார். வலைப்பதிவுகளில் ஏற்பட்ட அறிமுகத்தில் அவர் டொரண்டோ வரும்போது சந்திப்பதாக உறுதி செய்திருந்தேன். உண்மையில் அதில் மிகவும் ஆவலாயும் இருந்தேன். ஆனால் அவர் இங்கு வந்திருந்த நேரம் தேவையில்லாத ஒரு வழக்கு காரணமாக அவர் பலமுறை அழைத்தும் சந்திக்க முடியாமல் இருந்தேன். இப்போதும் என்னை உறுத்திக்கொண்டிருக்கும் வேதனை அது.

எந்த நேரத்திலும் நான் மன் அழுத்த நோய்க்கு உள்ளாகிவிடலாம் என்று குடும்ப வைத்தியர் அபாயச் சைகை காட்டியிருந்த நேரத்தில் டிசே தமிழன மற்றும் நிவேதாவை ஒரு குறும்பட வெளியீட்டு விழாவில் முதன்முறையாக சந்தித்தேன். காலம் செல்வம் அறிமுகம் செய்துவைத்தார். அதன் பின்னர் அருண்மொழிவர்மன் என்று என்னை அறிமுகம் செய்து நிறையப் பேசினோம். ” வலைப்பதிவுகளுக்கு நான் புதியவனாக இருந்தாலும் உங்களின் பல பதிவுகளை படித்துவிட்டேன். எனது இலக்கிய தேடல்களுக்கும் வழிகாட்டல் இல்லாத வாழ்க்கைக்கும் உங்கள் அறிமுகம் உதவும் என்று நம்புகிறேன்.” அவரது பதிவொன்றிற்குப் பின்னூட்டமிட்டதனை அதிகம் நம்பத் தொடங்கினேன். அவர் மூலமாக நிறைய எழுத்தாளர்கள், இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அனேகமாக எல்லா இலக்கிய விழாக்களிற்கும் செல்லத் தொடங்கினேன். சராசரி, நடுத்தர புத்தகங்களை விட்டு விலகி நவீன இலக்கியங்களை வாசிக்கவேண்டும் என்ற அதீதமான ஆவலும், எதை வாசிப்பது என்ற குழப்பமும் நிறைந்திருந்த என்னை பல திசைகளில் பயணிக்க பழக்கப்படுத்தினார். அருமையான பல புத்தகங்களை பகிர்ந்துகொண்டார். மெல்ல மெல்ல என்னை மன உளைச்சல்கள், அழுத்தங்கள், அலைச்சல்களில் இருந்து மீட்க அதிகம் உதவியது அவர் அறிமுகம். கிட்டத் தட்ட இதே காலப்பகுதியில் ஊரில் என் தோழனாயிருந்த, பிரதீபனின் கனேடிய வருகையும் எனக்கு ஆதரவாக இருந்தது. தூக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு விடிய விடிய இலக்கியம், அரசியல் என்று நிறையப் பேசினோம். பேசுவதற்கு ஆட்களே இல்லை என்ற தனிமையில் இருந்து மனம் விட்டு நிறையப் பேசலாம் என்று நட்புகள் அருகிலேயே நெருங்கத் தொடங்கின. அனேகமான என் எல்லாப் பதிவுகளின் முதல் வாசகனாய் இருந்து அதிகம் ஊக்கப்படுத்திய, கடல் கடந்து இருந்தாலும் பெரும்பாலும் தினமும் கதைத்து விடுகிற, 17 ஆண்டுகால நட்பில் சண்டை பிடிப்பதற்கான உரிமையை எப்போதும் தந்துவிடுகிற கதியால் தந்த ஆதரவும் பெரும்பங்கு.

பொதுவாக நிறையப் பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டமிடுவது மிகக்குறைவு. பல பதிவுகளை வேலை நேரத்தில் வாசிப்பதாலும் (தமிழில் தட்டச்சும் வசதி கிடையாது) இயல்பாகவே எனக்கு இருக்கும் சோம்பேறித் தனத்தாலும் பின்னூட்டமிடுவதற்கான சந்தர்ப்பங்கள் தவறிப்போய்விடுகின்றன. அப்படி இருந்தும் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஆதரவு தரும் கதியால், தமிழன் கறுப்பி, துர்க்கா-தீபன், கிருஷ்ணா, வாசுகி, பாரதி போன்றவர்கள் நிச்சயம் நன்றிக்குரியவர்கள். அது போலவே எந்த அறிமுகமும் இல்லாமல் எனக்கு சுவையார்வ பதிவர் என்று கௌரவம் தந்து நல்ல அறிமுகம் தந்த கோவி. கண்ணனும். ஒரு மூத்த, பிரபல பதிவரான இவர் தந்த அறிமுகம் எனக்கெல்லாம் பெரும் ஊக்கம் தருவது.


-2-

அண்மையில் இந்த பதிவுலகம் எனக்கு இன்னொரு உதவியும் செய்திருக்கிறது. அண்மையில் கொழும்புவில் நடந்து முடிந்த பதிவர் சந்திப்பின் படங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன. படங்களைப் பார்த்த நண்பன் விசாகன் msn messenger மூலம் தொடர்புகொண்டு “டே உனக்கு “புல்லட்” யாரென்று தெரியுமா? என்று கேட்டான். கேள்விப்பட்டிருக்கிறேன், தெரியாதென்றேன். அவன் உடனே புல்லட்டின் டம் ஒன்றை அனுப்பினான். ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனேன். அதே மூக்கு, அதே கண், அதே சில்க் தலை முடி, அவனேதான். 95ல் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குள் ஒரு பாரிய இடப்பெயர்வு நடந்தது நினைவிருக்கலாம். அப்படி இடம்பெயர்ந்து இருந்த போது நானும் அவனும் ஒரே வீட்டில்தான் தங்கி இருந்தோம். அவனுக்கு என்னை விட 6 வயது குறைவு. என் தம்பியின் வயது. வயது வித்தியாசம் தாண்டி ஒரு நட்பு உருவாகி இருந்தது. ப்கல் முழுதும் ஓயாத பேச்சு, மாலை முழுவதும் நான், என் தம்பியர் இருவர், புல்லட், அவர் தம்பி, விசாகன், தயாபரன், சயந்தன் என்ற நண்பர்கள் என்று கிரிக்கெட் இப்படியாக அந்த இருண்டகாலத்தையும், இனிப்பானதாக மனதில் பதிய வைத்ததில் புல்லட்டுக்கும் அவன் தந்தைக்கும் பங்குண்டு. அதன் பிறகு 96ல் மீண்டும் யாழ் சென்று பின்னர் நாம் 97ல் கொழும்பு வந்துவிட தொடர்புகள் அறுந்துவிட்டன. பல தடவைகள் நான் அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. பதிவர் சந்திப்பில் பார்த்த அவர் படங்களின் பின்னர் மீண்டும் தொடர்புகொண்டேன். அவனுடனான தொடர்பாடலை அவன் அனுமதியுடன் கீழே இணைத்துள்ளேன். பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்தவர்களுக்கும், படங்களை வெளியிட்டவர்களுக்கும் தனி நன்றிகள்.


கடிதம் 1
வணக்க்ம்

புல்லட்,
நினைவிருக்கிறதா? என் பெயர் சுதர்ஷன் / சுதன் அண்ணா என்றழைப்பீர்கள்

கொடிகாமத்தில் ஒரே வீட்டில் இருந்தோம்.

இன்றுதான் விசாகன் உங்கள் படத்தைப் பார்த்து நீங்கள்தான் புல்லட் என்று சொன்னான்.

உங்கள் சுகம் எப்படி. நான் சுகமே உள்ளேன். இப்போது கனடாவில் இருக்கிறேன். மிச்ச எல்லாரும் கொழும்பில்.
உங்கள் தந்தையின் செய்தி எனக்கு தாமதமாக தான் கிடைத்தது
சொரி புல்லட்
தம்பி, தங்கை என்ன செய்கிறார்கள்?

அம்மா எப்படி இருக்கிறார்?

நான் சும்மா அருண்மொழிவர்மன் என்ற பெயரில் solvathellamunmai.blogspot.com என்று எழுதுகிறேன்....

உங்களுடன் நிறைய கதைக்க வேணும் போல உள்ளது....

அந்த கொடிகாம வீட்டில் இருந்து 3 பதிவர்கள் உருவாகி விட்டோம்
(நான், நீங்கள், கதியால் என்ற பெயரில் எம் நண்பன்)

உஙகளிடன் ஃபேஸ்புக் இருந்தால் sutharshan@hotmail.com ல் என்னை இணைக்கலாம்... இல்லை நான் இணைக்க முயல்கிறேன்

வேற்ன்ன...
சந்திப்போம்

என்றென்றும் அன்புடன்
சுதர்ஷன்


கடிதம் 2

கதிரை மலைக்கந்தா! அட அநியாயமே? உங்கள் முழுப்பெயர் சுதர்சனா? நான் பெஸ் புக்கில தேடாத கொம்பினேசன் இல்லை .. சுதன் சிறிநிவாசன் , சிறிநிவாசன் சுதன் என்று .. உங்கள் ஏனைய சகோதரர்களின் பெயர் மறந்து விட்டேன்.. தீபன் என்று என்வயதில் ஒருத்தன் இருந்ததாக ஞாபகம்.. மற்றது ஒரு 3 வயது மூத்த ஒருவரும் ஒரு தங்கையும் இருக்கிறாரக்ளல்லவா? அம்மாவின் பெயர் தவனாக்கா தானே? கடவுுளே.. எவ்வளவு காலம் 15 வருடங்களாகிவிட்டது.. ம்ம்.. நான் பல்கலையில் எஞ்சினீரிங் முடித்து ஒரு அமெரிக்க கம்பனியில் வேலை செய்கிறேன்.. தம்பியார் ஓரிரு வருடங்களில் மருத்துவராகி விடுவார்.. தங்கை ஏ எல் படிக்கிறார்.. அப்பம்மா 2000 இல் இறந்து விட்டார்.. அப்பா 2006 இல் இறந்து விட்டார்.. வேறு புதினங்கள் இல்லை.. நான் மேல் படிப்புக்காக கனடா அல்லது அமெரிக்கா செல்லும் எண்ணம் உள்ளது.. 2011 இல் என்று முடிவெடுத்துள்ளேன்.... மற்றது உங்கள் வீட்டாருடன் கட்டாயம் தொடர்பை ஏற்படுத்துவேன் முகவரி தரும் பட்சத்தில்.. வேறு என்ன? உங்களின் முகம் ஞாபகம் இல்லை.. ஒரு உயரமான நெடுத்த உருவம் சறமும் டீசேட்டும் போட்டு மங்கலாக ஞாபகம் இருக்கிறது..

தில்லானா முத்து பட பாட்டு கேட்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகம் ஒரு முறை வந்து போகும்.. ஏனெனில் இந்த பாட்டு முதன்முதல் கேட்டது உங்கள் டேப்ரெக்கோடரில“தான்.. காதலன் பெடராப் பாட்டு நீங்கள் கொண்வந்தபோது கேட்கமுடியாமல் அவஸ்தைப்பட்டதும் ஏறத்தாழ 8 வருடங்களுக்கு பிறகு அந்த பாட்டை கேட்க முடிந்த போது சிரித்துதும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.. உண்மையை சொலவதானால் யாழில் இருக்கும் போதெல்லாம் உங்களயெல்லாம் நினைத்துப்பார்த்ததோ அப்பாவிடம் நீங்கள் எங்கேயென்று விசாரித்ததோ இல்லை.. இப்போது தனிமையில் கொழும்பில் இருந்து பழவையனவற்றை மீட்கையில்தான் மனது கனக்கி றது..

உங்கள் தாயார் ஒரு விசேடமாக புட்டு செய்வார்.. நான் சாகமுன்பு அதை எப்படிச் செய்வது என்று தெரிந்து விடவேண்டுமென்ற முயற்சியில்தான் உங்களை தேடும் மயற்சியில் இறங்கினேன்.. சிரிப்பாயிருக்கிறதா? அவர் ஒரு முறை செய்த சக்கரைப்புட்டு இன்னும் நாவில் நிற்கிறது.. அவர் முகமும் மற்ந்து விட்டது.. எப்படி உள்ளார்கள் எல்லாரும் ? கேட்டதாக சொல்லுங்கள்.. உங்களுக்கு திருமணமாகி விட்டிருந்தால் மனைவி குழந்தைகளை க்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்..

நீங்கள் தொடர்பு கொண்டது இன்ப அதிர்ச்சி.. விசாகன் அண்ணாவுக்கு நன்றிகளை சொல்லுங்கள்.. அவர் தற்போது சிங்கையில்தான் உள்ளாரென்று நினைக்கிறேன்.. அவர் தொட‌ர்பும் இல்லை..

பரபரப்பில் எல்லாம் உளறலாக எழுதி விட்டேன்.. தொகுத்து வாசித்துக்கொள்ளுங்கள்.. :) உங்கள் பதிவை வீடு சென்று அறுதலாக வாசிக்கிறேன்..
நான் சின்னப்பிள்ளைத்தனமாகத்தன் எழுதுவேன்.. பதிவுலகில் சந்திக்க நேர்ந்தது பாரிய மகிழ்ச்சி..

தொடர்பிலிருங்கள்..

புல்லட்..


கடிதம் 3

mmm புல்லட்.

மிகவும் சந்தோஷமாக உள்ளது இப்படியாவது தொடர்பு கிடைத்ததே என்று. நான் நிறைய உங்களைப் பற்றி யோசிப்பேன். விசாகன் சொன்னான் சிலதடவைகள் உங்களை சந்தித்துக் க்தைத்ததாக, ஆனால் தொடர்புகள் இருக்கவில்லை என்று

புல்லட் உண்மையில் அந்தக் கொடிகாம வீட்டில் நிறையப் பேர் இருந்தாலும், நாங்கள் இரண்டு குடும்பமும் நிறையப் பழகினோம் இல்லையா?. நீங்கள் ஒரு கிரிக்கெட் பட் செய்வித்தீர்கள். அதைக் கொண்டு கிரிக்கெட் எல்லாம் விளையாடி இருக்கிறோம்... அதுவும் ஐயாவுக்குத் தெரியாமல். ம்ம் அது ஒரு காலம்.

இன்று எங்கள் வீட்டாரிடம் கொழும்பில கதைப்பேன். அப்போது உங்களைப் பற்றி சொல்வேன். புல்லட்,, உங்கள் தொலைபேசி இலக்கம் என்ன?.
தந்தால் கதைப்பேன்....


வேறென்ன புல்லட், உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்வேன்.
உங்கள் படங்களை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். உங்களில் முகத்தில்ல் அதே சாயல் உள்ளது. ஆனால் வளர்ந்துவிட்டீர்கள். மூக்கும், கண்ணும் அதே மாதிரி உள்ளது...

புல்லட், நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை, (உங்கள் உண்மைப் பெயரை மறைத்து) எனது ப்ளாக்கில் போடலாமா? உங்களுடன் உறவு மீண்டது பற்றி ஒரு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்
Enrenrum Anbudan ----------------Sutharshan


கடிதம் 4

நிச்சயமாக செய்யுங்கள்.. வேண்டுமானால் உங்கள் செம்மையான தமிழ்ப்பாணியில் அதை மாற்றி போடுங்கள்.. எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.. நேற்றும் முந்தநாளும் உங்கள் பதிவுகளில் தேடியதில் கொடிகாமத்தை பற்றி எதையும் காணோம்.. சற்று கவலையாக இரந்தது.. நவாலிப்பதிவில் இடம்பெயர்ந்து சென்றதாக மட்டும் குறிபிபட்டிருந்தீர்கள்.. ஆனால் நானும் எழுதவில்லைதான் ... எனக்கு என்னத்தை எழுதுவது என்றுதான் பரபரப்பு .. எழுதவெளிக்கிட்டால் ஒரு பெரிய புராணம் போல தான் எழுத வேண்டும்..


என் தொலைபேசி இலக்கம் *********** .. தயவுசேய்து என்னை நீ என்றே அழைக்கவும் ... தொலைவாக உணர்கிறேன்.. :) நீங்கள் சற்றுக்குண்டாகி விட்டதுதான் வித்தியாசமாக உள்ளது..

நன்றி எல்லாவற்றுக்கும்...

புல்லட்



-3-

கீத் உடனான அறிமுகம் எனக்கு அண்மையிலேயே நிகழ்ந்தது. அவரது பல பதிவுகளை வாசித்துள்ளேன். அவரது சுவாரசியமான எழுத்து நடை எனக்கு அதிகம் பிடிக்கும். தவிர கலாசாரம், பண்பாடு என்று சமுதாயம் போடும் வேடங்களைக் கிழித்து நாராக்குவதில் காட்டும் வேகம் அதிகம் பிடிக்கும். ஒரு குறுகிய அறிமுகத்திலேயே “நள்ளிரவு 12 மணிக்கு அழைத்தாலும் சிரித்தபடி பேசும்..” என்று ஒரு அறிமுகத்துடன் என்னை இந்த “பதிவெழுத வந்த கதை” தொடர் பதிவிற்கு அழைத்துள்ளார். நல்ல நட்புகளை தேடுவதில் எப்போதும் ஆவலாய் உள்ள எனக்கு இவை எல்லாம் மகிழ்வூட்டுவனவே. நானும் என் பங்குக்கு 4 பேரை அழைத்து வைக்கிறேன்.

தமிழன் கறுப்பி ரசனை பூர்வமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடைய பேரின்பநாயகியின் மயக்கம் எனக்கு இன்னும் தீரவில்லை. உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக அவர் எழுதிய ஒரு கதையைப் பார்த்துவிட்டு, நாம் எல்லாம் என்ன பிழைப்படா பிழைக்கிறோம் என்று சலித்தது தான் மிச்சம் சென்றவாரம் என் பிறந்த நாளிற்கு அமர்க்களமான ஒரு வாழ்த்தை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார்.

கதியால் – கிடுகுவேலி என்ற வலைப்பதிவில் எழுதுபவர். என் நெடுநாள் நண்பர். கடல் கடந்து இருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில் அதிகம் நான் பேசிக்கொண்டு இருந்தது இவருடனாகத் தான் இருக்கும். ஈழத்து ஆலயங்கள், கிரிக்கெட் என்று கலந்து கட்டி எழுதுபவர். இன்னும் சுவையான பல விடயங்களை எழுதக் கைவசம் வைத்துள்ளவர்.

புல்லட் வலைப்பதிவுகள் எனக்குப் புதுப்பித்து தந்த நட்பு. சிறு வயதிலேயே சூட்டிகையானவர். ஒரு முறை மாலை நேர வீதி உலாவிற்கு நானும் தயாபரனும் ஆயத்தமான போது பிராக்குப் பார்க்க போகிறீர்களா? என்று கேட்டார். நாம் ஓமென்று சொல்ல, frock என்றால் பெண்கள் போடும் சட்டை, அப்ப சைட் அடிக்க போகிறீர்கள். அப்படித்தானே என்றார். அப்போது அவருக்கு வயது 10.

இன்னும் நிறையப் பேரை அழைக்க ஆசைதான். ஆனால் எத்தனை பேரிடம் திட்டு வாங்குவது. இப்போதைக்கு இவர்கள் மூவரும் திட்டினால் போதும்.




32 comments:

தர்மா said...

உண்மையாக இருக்கிறது உங்கள் எழுத்து அருண்மொழிவர்மன் எனப்படும் சுதர்ஷன். வாழ்த்துக்கள். இந்த உண்மை உங்களை சிறப்பிக்கும்

வந்தியத்தேவன் said...

ஆஹா அருமையான பதிவு. நிச்ச‌யமாக இணையவழி மூலம் இழந்த நட்புகள் பலவற்றை மீண்டும் பெற்றிருக்கின்றோம். புல்லட் பற்றிய கதை புல்லரிக்கின்றது. 10 வயதிலையே புல்லட் யமகாதகனாக இருந்திருக்கிறர். அத்துடன் அவரின் விருப்புக்குரிய புட்டைப் பற்றிக்கூட ஒரு வரி எழுதியிருக்கிறார்.

அருண்மொழிவர்மரே எனக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் தர்மா

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் வந்தியத்தேவன்

//அருண்மொழிவர்மரே எனக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.//

ம்ம், கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளின் முன்னர் நானும், நீங்களும் இணை பிரியாத நண்பர்களாக இருந்திருக்கிறோம், உங்கள் திறனால் நான் அதிகம் பேசப்பட்டிருக்கிறேன்.

சரிதானே வல்லவரையரே

வந்தியத்தேவன் said...

//ம்ம், கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளின் முன்னர் நானும், நீங்களும் இணை பிரியாத நண்பர்களாக இருந்திருக்கிறோம், உங்கள் திறனால் நான் அதிகம் பேசப்பட்டிருக்கிறேன்.

சரிதானே வல்லவரையரே//

அதே தான் பொன்னியின் செல்வரே

வாசுகி said...

பதிவு சுவாரகசியமாக இருக்கிறது.

//1000 ஆண்டுகளின் முன்னர் நானும், நீங்களும் இணை பிரியாத நண்பர்களாக இருந்திருக்கிறோம்,//
அட அட‌

செ.பொ. கோபிநாத் said...

அருமையான பதிவு அருண்மொழிவர்மன். உங்கள் வலைப்பூவிற்கு முதல் வருகை..உங்கள் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்....

சயந்தன் said...

ம்ம், கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளின் முன்னர் நானும், நீங்களும் இணை பிரியாத நண்பர்களாக இருந்திருக்கிறோம், உங்கள் திறனால் நான் அதிகம் பேசப்பட்டிருக்கிறேன்.

சரிதானே வல்லவரையரே//

அதே தான் பொன்னியின் செல்வரே//

அட அட அட அட : )

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அ.மொழிவர்மன்.

கடந்தவாரம் எனக்கும் 92 இல் தொலைந்த ஒரு நண்பன் சிங்கபூரிலிருந்து எனது பதிவினைப்படித்து மீள இணைந்திருக்கிற அதிசயம் நடந்தது.

Kiruthikan Kumarasamy said...

அருமை அருண்மொழிவர்மரே...
அழகான நடையில் அருமையாய் பதிந்திருக்கிறீர்கள்...

அதுசரி இதுக்கிடேலை வந்தியத்தேவரும் வந்து பழைய காலத்துக்கு ரெண்டு பேரும் திரும்பீட்டியள் போல இருக்கு...lol

பதி said...

சுவாரஸ்யமான பதிவு.

அழகான நடையில் பல மலரும் நினைவுகளை தொகுத்துள்ளீர்கள்...

:-))

அருண்மொழிவர்மன் said...

//வாசுகி said...

பதிவு சுவாரகசியமாக இருக்கிறது.//

நன்றிகள் வாசுகி.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் வந்தியத்தேவன்,

//அதே தான் பொன்னியின் செல்வரே//
எம்மைப் பற்றி ஒரு சர்ச்சை கூட உண்டு, ஒரு கொலை விவகாரத்தில், தெரியுமா ? சொல்லுங்கள் பார்ப்போம்

அருண்மொழிவர்மன் said...

//செ.பொ. கோபிநாத் said...

அருமையான பதிவு அருண்மொழிவர்மன். உங்கள் வலைப்பூவிற்கு முதல் வருகை..உங்கள் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்....//

நன்றிகள் கோபிநாத் உங்கள் தளத்தைப் பார்த்தேன். பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி நிறைவாக எழுதுகிறீர்கள். வாசித்து விட்டு கருத்து சொல்கிறேன்.

அருண்மொழிவர்மன் said...

// சயந்தன் said...
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அ.மொழிவர்மன்.

கடந்தவாரம் எனக்கும் 92 இல் தொலைந்த ஒரு நண்பன் சிங்கபூரிலிருந்து எனது பதிவினைப்படித்து மீள இணைந்திருக்கிற அதிசயம் நடந்தது.//

நன்றிகள் சயந்தன்.

வலைப்பதிவுகள் ஒரு சுவாரசியமான நினைவு மீட்டல்களாக மட்டுமல்லாமல், உறவுகளை இணைக்கும் பாலங்களாகவும் சில சந்தர்ப்பங்களில் அமைகின்றன தான்

அருண்மொழிவர்மன் said...

//Kiruthikan Kumarasamy said...

அருமை அருண்மொழிவர்மரே...
அழகான நடையில் அருமையாய் பதிந்திருக்கிறீர்கள்...//

நன்றிகள் கீத். நீங்கள் கேட்டது போல எழுத முடியாவிட்டாலும், வலைப்பதிவு சம்பந்தமான என் நினைவுகளின் இரை மீட்டலாக அமைந்தது

அருண்மொழிவர்மன் said...

//பதி said...

சுவாரஸ்யமான பதிவு.

அழகான நடையில் பல மலரும் நினைவுகளை தொகுத்துள்ளீர்கள்...//
நன்றிகள் பதி

DJ said...

அன்பின் அருண்,
நெகிழ்ச்சியான விடயங்களை எப்படி எதிர்கொள்வதென்று இன்னும் பழகவில்லை.
....
நாமெல்லோருமே மனவழுத்ததிற்கு உள்ளாகித்தான் வந்திருப்போமில்லையா? என்னுடைய பல்வேறுவிதமான நெருக்கடியான காலங்களில் பல நண்பர்கள் உதவியிருக்கின்றார்கள். இன்று எங்களுக்கிடையில் இடைவெளி விழுந்துவிட்டாலும் அந்த நண்பர்களின் நட்பு என்பது என்றும் மனதில் மிதந்தபடிதான் இருக்குமில்லையா?
....
மிகத்தனிமையும், வெறுமையும் கவிழ்ந்திருந்த வளாகக் காலங்களில் வாசிப்பதும் எழுதுவதும் எனக்கொரு நெருக்கமான நட்பாய் மாறியிருந்தது. அவ்வாறானதொரு அலைவரிசையிலிருந்து நீங்களும் வந்திருக்கின்றீர்கள்.
.....
மற்றது நினைவூட்டுவதற்கு...(இங்கே புல்லட்டும் குறிப்பிட்டிருக்கின்றார்). இடம்பெயர்ந்த காலங்களைப் பதிவு செய்யும் விருப்பம் உண்டென நீங்கள் என்னிடம் கூறியது நினைவிலுண்டு. அவற்றை நேரம் வாய்த்தால் எழுத்ததொடங்குங்கள். காலம் எவ்வளவு விரைவாக எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விடுகின்றது. நாங்கள் இன்னுமே இந்திய இராணுவக்காலத்தையே முழுதாய்ப் பதிவு செய்யாது வாளாவிருக்கின்றோம்.

கதியால் said...

வணக்கம் அருண்மொழிவர்மன், கால மேகங்கள் கலைகின்ற போது ஆங்காங்கே பெய்த மழையில் முளைத்தது நம் நட்பு. எம்மைச் சேர்த்த இறைவனுக்கு நன்றி என்றல்லாமல் உன்னை எனக்குத்தந்த இறைவனுக்கு நன்றி. பதிவுலக அனுபவம் பற்றி என்னையும் தொடர்பதிவிற்காய் அழைத்தமைக்கு இன்னுமொரு நன்றி. கடல்கள் நம்மைப் பிரித்திருந்தாலும் நவீனங்கள் நம்மை இணைக்கின்றன என்ற மகிழ்விலும்...காலம் மீண்டும் ஒருதடவை நம்மை ஒன்று சேர்க்கும் என்ற நம்பிக்கையிலும் எனது வாழ்வு செல்கிறது.

’புல்லட்’ டை பார்த்தவுடன் ஒரு சிலிர்ப்பு. நமக்குத் தெரிந்த ஒரு பையன் இன்று பிரபல பதிவர். அமைதியான 15 வருடத்திற்கு முற்பட்ட ‘புல்லட்’ எங்கே ஆர்ப்பாட்டமாய் பதிவெழுதும் நவீன ‘புல்லட்’ எங்கே....! மீண்டும் எல்லோரையும் சந்திப்பதில் மனம் உற்சாகத்தில் உலா வருகிறது.

வழமைபோல உங்களுக்கே உரிய வார்த்தைக் கோலங்களோடு நீங்கள் இந்தப்பதிவில்....!

கானா பிரபா said...

வணக்கம் அருண்மொழிவர்மன் எ சுதர்சன்

வழக்கம் போல சிறப்பானதொரு இடுகை. உங்களைப் போன்ற நண்பர்கள் கிடைத்தது வலையுலகின் வரம் என்பேன்.

சினேகிதி said...

\\97ம் ஆண்டு பிப்ரவரியில் எழுதிய பதிவின் பின்னர் மீண்டும், 98 மேயில் பதிவெழுதத் தொடங்கினேன்.\\

97 லயேவாவாவா??? அப்பவே பதிவெழுதினீங்கிளோ :))) ரைப்போ என்று நினைக்கிறன்.

நானும் இந்தப் படங்களில தேடினான் தெரிஞ்சாக்கள் யாரும் வரினமா என்டு ஆனால் உங்கட அதிஸ்டம் இல்ல நமக்கெல்லாம்.

ஆனால் facebook மூலம் 12 வருடமா தொடர்பில்லாம இருந்தவை எல்லாம் என்ர பெயர் கொஞ்சம் வித்தியாசம் என்டதால என்னைக் கண்டுபிடிச்சிருக்கினம். அதும் முக்கியமா "கண்டோஸ்" என்ட பெயரில ஒரு மெயில் வந்தது :) இணையத்தொடர்பின் மிகப்பெரிய நன்மையெண்டால் இதான் பிரிஞ்சிருந்த ஆக்களையெல்லாம் சேர்த்துவிடுது.

இடம்பெயர்ந்த காலங்களில் ஏற்படுகிற நட்புகளுக்கு ஒரு தனிச்க்தி இருக்கு. டிஜே சொன்னமாதிரி அதை எழுதுங்கோ.

தமிழன்-கறுப்பி... said...

அழைப்புக்கு நன்றி அருண்..
கதைதானே சொல்லியிரலாம் ஆனால் கொஞ்சம் நேரமெடுக்கும் பரவாயில்லையோ? :)

வெள்ளிக்கிழமை பதிவதற்கு முயற்சிக்கிறேன்.

நெகிழ்ச்சியான பல புதுப்பித்தல்களை சந்திப்புகளை இணையம் தந்திருக்கிறது.
மற்றுமொன்று டிஜே சொல்வது போல ஞாபகங்களை அதன் வீரியம் குறைவதற்கு முதலே பதிந்து விடுங்கள். என்னால் என்னவோ எதையுமே கோர்வையாக நினைவுக்குகொண்டு வர முடிவதில்லை காலம் சாதாரணமாய் சிலதை செய்து விடுகிறது...

அருண்மொழிவர்மன் said...

//DJ said...
மிகத்தனிமையும், வெறுமையும் கவிழ்ந்திருந்த வளாகக் காலங்களில் வாசிப்பதும் எழுதுவதும் எனக்கொரு நெருக்கமான நட்பாய் மாறியிருந்தது. //


உண்மைதான் டிஜே. இதை நன்றாக அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

நான் அதிகம் கவலைப்படும் விடயம் என்னவென்றால் நாமாவது ஓரளவு கடந்து விடுகிறோம், அல்லது மன அழுத்தம் என்று உணர்ந்து அதற்கான மாற்று வழிகளைத் தேடிவிடுகிறோம். ஆனால் எத்தனை பேர் மன அழுத்தம் பற்றிய போதிய அறிவில்லாமலேயே அதில் இக்க்குண்டு விடுகிறார்கள். இதில் சிலர் (இவர்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் கருத்து சொல்லி அதே சரியென்று வாதிடும் மோசமான பிறவிகள்) மன அழுத்தம் என்றால், “ ஊரில உப்படி ஏதாவ்து இருந்ததோ, உதெல்லாம் இவங்கள் சும்மா கண்டு பிடிக்கிறார்கள்” என்று உளறித் தொலைப்பவர்கள். தவிர, மன நல மருத்துபவரிடம் ஆலோசனை பெறுவதையே கௌரவக் குறைவாக நினைக்கும் எத்தனையோ பேரி இருக்கிறார்கள்.......


// மற்றது நினைவூட்டுவதற்கு...(இங்கே புல்லட்டும் குறிப்பிட்டிருக்கின்றார்). இடம்பெயர்ந்த காலங்களைப் பதிவு செய்யும் விருப்பம் உண்டென நீங்கள் என்னிடம் கூறியது நினைவிலுண்டு. அவற்றை நேரம் வாய்த்தால் எழுத்ததொடங்குங்கள்.//

கட்டாயமாக, அதை சிறு சிறு பதிவுகளாக இடலாம் என்றூ நினைக்கிறேன். எப்ப்படியும் வரும் வாரம் அளவில் தொடங்கிவிடுகிறேன்.

நன்றிகள் டிஜே

அருண்மொழிவர்மன் said...

//DJ said...
மிகத்தனிமையும், வெறுமையும் கவிழ்ந்திருந்த வளாகக் காலங்களில் வாசிப்பதும் எழுதுவதும் எனக்கொரு நெருக்கமான நட்பாய் மாறியிருந்தது. //


உண்மைதான் டிஜே. இதை நன்றாக அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

நான் அதிகம் கவலைப்படும் விடயம் என்னவென்றால் நாமாவது ஓரளவு கடந்து விடுகிறோம், அல்லது மன அழுத்தம் என்று உணர்ந்து அதற்கான மாற்று வழிகளைத் தேடிவிடுகிறோம். ஆனால் எத்தனை பேர் மன அழுத்தம் பற்றிய போதிய அறிவில்லாமலேயே அதில் இக்க்குண்டு விடுகிறார்கள். இதில் சிலர் (இவர்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் கருத்து சொல்லி அதே சரியென்று வாதிடும் மோசமான பிறவிகள்) மன அழுத்தம் என்றால், “ ஊரில உப்படி ஏதாவ்து இருந்ததோ, உதெல்லாம் இவங்கள் சும்மா கண்டு பிடிக்கிறார்கள்” என்று உளறித் தொலைப்பவர்கள். தவிர, மன நல மருத்துபவரிடம் ஆலோசனை பெறுவதையே கௌரவக் குறைவாக நினைக்கும் எத்தனையோ பேரி இருக்கிறார்கள்.......


// மற்றது நினைவூட்டுவதற்கு...(இங்கே புல்லட்டும் குறிப்பிட்டிருக்கின்றார்). இடம்பெயர்ந்த காலங்களைப் பதிவு செய்யும் விருப்பம் உண்டென நீங்கள் என்னிடம் கூறியது நினைவிலுண்டு. அவற்றை நேரம் வாய்த்தால் எழுத்ததொடங்குங்கள்.//

கட்டாயமாக, அதை சிறு சிறு பதிவுகளாக இடலாம் என்றூ நினைக்கிறேன். எப்ப்படியும் வரும் வாரம் அளவில் தொடங்கிவிடுகிறேன்.

நன்றிகள் டிஜே

அருண்மொழிவர்மன் said...

// கதியால் said...
வழமைபோல உங்களுக்கே உரிய வார்த்தைக் கோலங்களோடு நீங்கள் இந்தப்பதிவில்....!//

நன்றிகள். இதில் சொல்லப்பட்டது வாழ்க்கை. அதில் வலியும் கலந்தே இருக்கிறது.

அருண்மொழிவர்மன் said...

//கானா பிரபா said...

வணக்கம் அருண்மொழிவர்மன் எ சுதர்சன்

வழக்கம் போல சிறப்பானதொரு இடுகை. உங்களைப் போன்ற நண்பர்கள் கிடைத்தது வலையுலகின் வரம் என்பேன்.//

நன்றிகள் பிரபா, என்னதான் வாசித்தாலும், அனுபவப்பட்டாலும் உள் மனதிற்குள் ஒரு சிறு அங்கீகாரம் தன்னும் கிடையாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிற ஒரு குழந்தை இருக்கிறான் அல்லவா? இது போன்ற பாராட்டுதல்களே அவனை உறசாகப்படுத்துகின்றன

அருண்மொழிவர்மன் said...

//சினேகிதி said...

97 லயேவாவாவா??? அப்பவே பதிவெழுதினீங்கிளோ :))) //

நன்றிகள் சினேகிதி. அதை மாற்றிவிட்டேன்.

// ஆனால் facebook மூலம் 12 வருடமா தொடர்பில்லாம இருந்தவை எல்லாம் என்ர பெயர் கொஞ்சம் வித்தியாசம் என்டதால என்னைக் கண்டுபிடிச்சிருக்கினம். //

இது போன்ற இறு வயது நட்புகள், தொலைந்து போன உறவுகள் புதுப்பிக்கப்படுவது ஒரு தனி உகம். நான் ஓரளாவு பாக்கியசாலி. புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் என் நெருங்கிய எல்லா நண்பர்க்ளுடனும் கடிதம் / தொலைபேசித் தொடர்பை பேணியேஎ வந்திருக்கிறேன். இதனால் எனக்கு தொலைந்து போன நண்பர்கள் மிகக் குறைவு..


// இடம்பெயர்ந்த காலங்களில் ஏற்படுகிற நட்புகளுக்கு ஒரு தனிச்க்தி இருக்கு. டிஜே சொன்னமாதிரி அதை எழுதுங்கோ.//
அந்த இடம்பெயர்வுக் காலம் என்னை நிறையப் பாதித்தது. அது பற்றி விரைவில் எழுதுவேன்.
நன்றிகள் ஆதரவிற்கு

அருண்மொழிவர்மன் said...

//தமிழன்-கறுப்பி... said...

அழைப்புக்கு நன்றி அருண்..
கதைதானே சொல்லியிரலாம் ஆனால் கொஞ்சம் நேரமெடுக்கும் பரவாயில்லையோ? :)
//

அதற்கென்ன தமிழன் கறுப்பி, தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் விவரமாக எழுதுங்கள்

புல்லட் said...

அண்ணா ! எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் சந்தோசத்தையும் கடிதங்களிலேயே கண்டிருப்பீர்கள்.. தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி .. விரைவில் எழுதுவேன்..

சதீஸ் said...

அனுபவங்களின் தொகுப்புத்தானே வாழ்க்கை, அந்த அனுபவங்களை அழாகாக தொகுத்து உள்ளீர்கள். காயங்களுக்கான ஆறுதலும், எழுத்துக்கான வாழ்த்துக்களும்.
சதீஸ்

பாரதி.சு said...

வணக்கம் சுதன் அண்ணா!!
உங்களைப் போலவே எனக்கும் சிதறிய நட்புகளினை இணையமே மீளவும் கோர்த்து தந்திருக்கிறது....அத்துடன் நில்லாது உங்களைப் போன்ற நண்பர்கள் அறிமுகத்தையும் உருவாக்கித்தந்துள்ளது.

சுவாரசியமான அனுபவப்பகிர்வு...மறந்திடாமல் கொடிகாம அனுபவங்களையும் எழுதுங்கள்...பக்கத்து ஊர்.. உங்களின் மூலமாகவாவது மீண்டும் நினைவுகளினை கிளறுவம். உங்கள் அறிமுகம் கிடைத்தும்...
துரதிட்டவசமாக என்னால் இங்கு நடைபெறும் புத்தக வெளியீடுகளுக்கு வரமுடிவதில்லை...நாமே எம்மேல் திணித்துக்கொண்ட "டபிள்" அடிக்கிற நடைமுறைதான் இதற்கு காரணம்..

//// இடம்பெயர்ந்த காலங்களில் ஏற்படுகிற நட்புகளுக்கு ஒரு தனிச்க்தி இருக்கு. டிஜே சொன்னமாதிரி அதை எழுதுங்கோ.//
அந்த இடம்பெயர்வுக் காலம் என்னை நிறையப் பாதித்தது. அது பற்றி விரைவில் எழுதுவேன்.////

எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக உள்ளோம்.

நான் இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு புத்தகம்..
"The First and Last Freedom"
by:Jiddu Krishnamurti
The foreword was written by Aldous Huxley.

எம்மை சுற்றி நாமே எழுப்பியுள்ள சுவர்களை இடித்து மாற்றத்தை விதைக்கும் ஒரு புத்தகம்...
என்ன...என் நண்பன் எனக்கு விசர் என்கிறான்.
நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

நாடோடி said...

புல்லட்டுடனான உங்கள் நட்பின் கடிதம் படித்ததும் மனதை ஏதோ செய்கிறது நண்பரே.

Thevesh said...

காலம் தாழ்த்தி இப்பின்னூட்டம் இடுகிறேன்.உங்கள் பதிவு அருமையான
பதிவு.என்வாழ்வில் நட்புக்கு முதல்
இடங்கொடுப்பதால் உங்களின் நட்பு
இறுக்கம் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சி
யைக்கொடுக்கிறது.நீங்கள் எல்லா
வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

Post a Comment