இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தமிழன் – கறுப்பிக்கு நன்றிகள்
01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தொடக்க காலத்தில் எனது கிறுக்கல்களுக்கெல்லாம் சூரிய புத்திரன் என்ற பெயரைத்தான் பயன்படுத்திவந்தேன். அப்போதைய கல்லூரிக் கால நட்பொன்றை மறக்கும் பொருட்டும், சூரிய என்று தொடங்கும் வானம்பாடித் தனமான கவிதைகள் மேல் ஏற்பட்ட ஒரு வெறுப்பினாலும் அந்த பெயரை விட்டொழித்தேன். அதன் பின்னர் ராஜ ராஜ சோழன் மேல் அந்நாட்களில் கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக அருண்மொழிவர்மன் என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்கினேன். இப்போது இதையும் தொலைத்து இன்னொரு பெயர் பூணலாம் என்ற எண்ணம் பலமாக உண்டு.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போதெல்லாம் பெரிதாக அழுகை வருவதில்லை. எல்லாம் ஒரு நாள் தொலைந்துபோகும் என்பது எப்போதும் ஒரு சாரமாக மனதில் ஓடிக்கொண்டிருப்பதால் உணர்ச்சிகளின் உச்சவடிவங்களுல் ஒன்றான அழுகை வருவதில்லையோ தெரியாது. அழுவதற்கேற்ற வெள்ளந்தி மனநிலை முன்பிருந்தாற்போல இப்போதில்லாமல் போனதுகூட காரணமாயிருக்கலாம்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நிறைய பிடிக்கும், அது எனது நண்பனின் கையெழுத்தைப் போலவே இருப்பதால். எனது கையெழுத்து உண்மையில் மிக அழகாக இருக்கும். ஆனால் அது நகல். பிரசன்னா என்ற எனது முதல் நண்பனின் கையெழுத்தின் நகலாகத்தான் எனது கையெழுத்தை வடிவமைத்துக் கொண்டேன். பின்னர் சில சில எழுத்துக்களை இன்ன உருவில்தான் எழுத்துவது என்று இருவரும் கதைத்து தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். இணைபிரியாத நண்பர்கள் என்று பாடசாலை முழுவதும் அறியப்பட்ட நாம் பிரிந்தும் 14 வருடங்களாக இன்னும் உயிர்வாழ்வது எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும் விடயம்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
எனது சாப்பாட்டு ரசனைகள் மிக நுணுக்கமானவை. பொதுவாக எனக்கு கடல் உணவுகள் பிடிக்கும். அதிலும் கணவாய் என்றால் சொல்லவே வேண்டாம். அது போல மாசிக் கருவாடு சேர்த்த சம்பலுடன் பாண். புட்டுடன் கருவாட்டுக் குழம்பு. ஒடியல் கூழ். தயிர்ச் சாதம் அல்லது புளிச் சாதமுடன் உருளைக்கிழங்கு பொரியல். இட்டலியுடன் மிளகாய்ப் பொடி மற்றும் நல்லெண்ணெய். நாட்டுக் கோழிக் குழம்புடன் நல்லெண்ணெய். கத்தரிக்காய் பொரித்த குழம்புடன் நல்லெண்ணெய். புரியாணிடன் ஈரல் கறி. ரொட்டியுடன் பீஃப் றோஸ், இப்படி பட்டியலிட்டபடியே போகலாம்.
யாழ்ப்பாணத்தில் இருந்தபோது சும்மா டீ ரூம் என்ற ஆணைக்கோட்டையில் இருந்த சாப்பாட்டுக் கடையின் அசைவ உணவுகளும், ஆனைக்கோட்டை மூத்த நாயணார் கோயில் முன்பாக இருந்த ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையின் சைவ உணவுகளும், கனடாவில் “மாப்பாணி” என்ற அடிக்கடி கடைமாறும் ஒரு சமையல் கலைஞரின் கைப்பக்குவ உணவுகளும் அதிகம் பிடிக்கும். அதேபோல வீட்டுச் சாப்பாடென்றால் அமமாவின் கைப்பக்குவமும், அக்கா ஒருவரின் கைப்பக்குவமும், ஜீவா என்ற நண்பரின் மீன் குழம்பும் அதிகம் பிடிக்கும்.
5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நிச்சயமாக. நான் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு கொடுக்கிறேன். எனவே என் மீது நட்புக் கொள்வது இலகுவான ஒன்று.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளியல் ஒரு தியானம் என்று பலர் சொல்வதை நான் உணர்ந்ததில்லை. குளியலை ஒரு தினசரிக் கடமையாக செய்வதே வழக்கம். மேலும், கடலில் குளிக்க நீச்சல் தெரியாது. அருவியில் குளிக்க அருவிகளின் அருகில் நான் வசித்தது கிடையாது. எனவே நான் அனுபவித்த குளியல்களில் எனக்குப் பிடித்தது கிணற்றுக் குளியல். அதிலும் மழைகாலத்தில் கிணறுகள் நிரம்பியிருக்கும் பொழுதுகளிலான குளியல்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவாக ஆண்களிடன் சிகையலங்காரம், தாடி, மீசையை அவர்கள் அமைத்திருக்கும் பாங்கு. பெண்களிடம் கண்கள்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது வாசிப்பு பழக்கம், ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றுவது.
பிடிக்காதது முற்கோபம், சோம்பல், எதையும் பிற்போடுவது.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடித்தது அக்கறை, எதையும் ஒழுங்குடன் செய்வது.
பிடிக்காதது கோபம்.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
குடும்பத்தினரும், ஈழத்தில் இருந்த நண்பர்களும் நான் இணைய அளவில் எழுதுவதைக் கூட பாராமல் செத்துப்போன பெரியம்மா-பெரியப்பாவும். ம்ம்.... எப்படியோ தொலைந்துபோன கல்லூரிக்கால நட்பொன்றும்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
நீல நிற ஷேட்டும், சாரமும்
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
தமிழ் பாடல்களை சேகரிப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கொன்று. காலவரிசைப்படி பாடியவர் பெயர், படம்/தொகுப்பு, இசையமைப்பாளார் என்று தொகுக்கும் வழக்கம் இருக்கிறது. கேட்கும் பாடல் தெரிவு அடிக்கடி மாறும். கடந்த சில நாட்களாக கேட்கும் பாடல்கள்
மாங்கல்யம் ------------- முத்திரை
பேரூந்தில் நீயெனக்கு---------பொறி
உன்னையும் என்னையும்--------கண்ணும் கண்ணும்
தென்றல் காற்றும்--------முடிவல்ல ஆரம்பம்
அன்பே அன்பேதான் -----------------கண்ணும் கண்ணும்
குத்தாலம் குத்தாலம் ------------- கண்ணும் கண்ணும்
தவமின்றி-----------அன்பு
வண்ணம் கலைந்து கிடக்கிறதே -----------------அன்பு
பூங்காத்து திரும்புமா ------------- முதல் மரியாதை
மேலும் தொடர்ச்சியான தெரிவுகளில் நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலணி), ஆனந்தம் ஆனந்தம் (பூவே உனக்காக), வெண்ணிலவே வெண்ணிலவே (காலமெல்லாம் காதல் வாழ்க), அச்சம் அச்சமில்லை (இந்திரா), சொல்லிவிடு வெள்ளி (அமைதிப்படை) போன்ற பாடல்கள் நிச்சயமாக உண்டு.
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நானும் நண்பன் பிரசன்னாவும் முன்பு ஹீரோ இன்க் இல் அரைப்பங்கு கறுப்பு மை, கால் பங்கு நீலமை, கால்ப் பங்கு சிவப்பு மை என்று கலந்து ஒரு நிறம் உருவாக்குவோம். எமக்கேயான தனித்துவமான நிறம் அது. வேறு யாருக்கும் இரவலாக கூட அந்த மை நிரப்பிய பேனாவைத் தரமாட்டோம். அந்த மையாக மாறத்தான் விரும்புவேன்.
14.பிடித்த மணம்?
வீட்டில் நறுமணத்துக்காக பூக்களின், பழங்களின் மணம் தரும் “ஏர் ஃப்ரெஷ்ணர்களை” பயன்படுத்துவதுண்டு.
மேலும், சுதுமலை அம்மன் கோயிலை கடக்கும்போது வரும் “மாப்பியன் மில்லின்” நெல் அவித்த மணமும், மழை பெய்த புழுதித் தரையிலெழும் மணமும் பிடிக்கும்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
காதல் பற்றிய பதிவுகள். பேரின்பநாயகி பற்றிய பதிவு. அய்யனாரின் உரையாடலினியை நினைவு படுத்திய நல்ல பதிவு அது.
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்
18.கண்ணாடி அணிபவரா?
கிட்ட தட்ட 10 ஆண்டுகளாக என்னை விட்டு நீங்காத நண்பன் என் கண்ணாடி. இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால் எனக்கும் என் நெருங்கிய நண்பன் தீபனுக்கும் 11 ஆண்டுகளாக ஒரே கண்ணாடி அளவீடுகளே உள்ளன. அடிக்கடி கண்ணாடியை தொலைத்துவிடும் நான் அவனது கண்ணாடியையே அப்பப்போது உரிமையாக்கிவிடுவதுண்டு. இப்போது அணிந்துள்ள கண்ணாடியும் அஃதே.
19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எல்லா வகைப்படங்களையும் அந்தந்த படங்களை பார்க்கும் மன நிலையுடன் அணுகுவதே வழக்கம். சரவணா பவனில் போட்டு ஆட்டுக்கால் சூப் கேட்பதில்லை. விஜய் படத்தில் விஜய் படத்துக்கான தகமைகளையும், அமீர், செல்வராகவன் படங்களில் அவர்களுக்கான தகமைகளையுமே எதிர்பார்ப்பது வழக்கம்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
DEV –D, காதல் கொண்டேன்.
21.பிடித்த பருவ காலம் எது?
கனடாவில் கோடை. இலங்கையில் மழைக்காலம். மழையில் நனைவது எப்போதும் பிடிக்கும். கொட்டும் மழையில் நண்பர்களுடன் தெய்வீகன் (அவுஸ்திரேலியா) பாடும் பாடல்களை கேட்டபடி தெருத் தெருவாக அலைந்திருக்கிறோம். ஒரு மழை நாளில் நானும் தெய்வீகனும், நண்பன் குணாளனும் தாவடி வெளியில் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது” என்று நெடுநேரமாக கத்தியபடி நின்றிருக்கின்றோம். அந்த புனிதமான மூன்று காதல்களும் கைகூடவில்லை. எல்லாப் புனிதங்களையும் உடைப்போம் என்ற என் எண்ணத்தின் முதலடி அது தானோ தெரியாது.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
எழுத்தாளர் தேவகாந்தன் அன்புப் பரிசாக தந்த அவரது கதாகாலத்தை இன்று தான் வாசிக்கத் தொடங்கினேன். அதே நேரம் அண்மையில் புத்தக கண்காட்சியில் வாங்கிய சந்திராவின் “பூனைகள் இல்லாத வீடு”, மனுஷ்ய புத்திரனின் “கடவுளுடன் பிரார்தித்தல், Roland Barthes “The Pleasure of the text” என்று பல புத்தகங்களை ஒன்றாக படித்தபடி உள்ளேன்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
சர்வகாலமும் நண்பர்களுடனேயே திரிந்த நாட்களில் சற்றே திமிருடன் நண்பர்களாக எடுத்த ஒரு குழுப் படத்தை “No More Peace Talk” என்ற rappers இடையே east side, west side மோதல்களின்போது பாவிக்கப்பட்ட சொற்களுடன் வடிவமைத்து பாவித்திருந்தேன். அதன் பின்னர் நட்புக் குழுக்கள் கால ஓட்டத்தில் gang களாக மாறுவது கண்டும், நண்பன் ஒருவனின் மரணம் தந்த வேதனையிலும் அந்த் படத்தை அழித்தபின் இன்றுவரை எந்தப் படத்தையும் போடவில்லை.
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - பிடித்த இசை, நள்ளிரவு மழையோசை.
பிடிக்காதவை – நிறைய. உரத்த குரலில் உரையாடும் மனிதர்கள் முதன்மையாக. தேவையில்லாமல் போலியாக எழுப்பப்படும் பாராட்டல்கள், சிரிப்பொலிகள் போன்றவை.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கனடாவில் இருந்து இலங்கை. இலங்கையில் இருந்து கனடா.
26.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
நடந்த சம்பவங்களை அச்சொட்டாக நினைவில் வைத்திருத்தல்
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மற்றவர் கருத்தை மதியாமை, பெண்கள் மீது செய்யப்படும் அடக்கல்கள். சிறு பான்மையினர் மீது செய்யப்படும் அடக்குமுறைகள். மற்றவர்களின் இருப்பை மதியாமல் செய்யப்படும் எல்லாம். கடவுளின் பெயரால் பரப்பப்படும் மூட நம்பிக்கைகள். புத்தகங்களின் ஒரங்களை மடக்குதல்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம். சோம்பல்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
வாழ்ந்த இடமென்பதில் யாழ்ப்பாணம். கனடாவில் thousand island
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்போதும் நான் நானாக.
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
மன்னிக்கவும். இன்னும் திருமணமாகவில்லை.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
எப்போதும் தொடரும் ஏமாற்றங்களும், எப்போதாவது நிறைவேறும் எதிர்ப்பார்ப்புகளும்.
Monday, June 15, 2009
32 கேள்விகளும் திணறிப்போன நிமிடங்களும்
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
பல பதில்கள் சுவராஸ்யமென்றால் சில பதில்கள் நெகிழவைக்கும்படி இருந்தது.குறிப்பிட்டு சொல்வதற்கில்லை அனைத்து பதில்களுமே அழகாகச் சொல்லியிருக்கீங்க.
(இது போலி பாராட்டல்ல)
:)
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
அப்ப இது தான் அந்த 32 மேட்டரா??
என்னடா.. பெரும்பாலான பதிவு எல்லாம் "32 கேள்விகள் "என சுத்தியடிக்கையில் யோசிச்சனான்....ம்..ம்ம் தொடர்பதிவில்ல...
அருண் உங்கட பதில் எல்லாம் interesting... நீங்க வாசிச்சீன்களோ தெரியாது...நேரமிருந்தா "tuesday with mories" வாசிக்கவும்.
//31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
மன்னிக்கவும். இன்னும் திருமணமாகவில்லை.//
இருக்கட்டும் இருக்கட்டும்...
Hai Arun
"பிடித்தது வாசிப்பு பழக்கம்"
how dare you say it in public??????????
Just Kiddin
தமிழினி
நன்றி . இணைத்துவிட்டேன்
நாடோடி இலக்கியன்....
பாராட்டுகளுக்கு நன்றிகள். பிரிவுகளும் அது சார்ந்த ஏக்கங்களுமாகவே இதை இப்போது வாசிக்கின்றபோது எனக்கும்படுகின்றது
பாரதி,
அருண் உங்கட பதில் எல்லாம் interesting... நீங்க வாசிச்சீன்களோ தெரியாது...நேரமிருந்தா "tuesday with mories" வாசிக்கவும்.''
இதனை முன்னர் திரையில் பார்த்திருக்கின்றேன். நிச்சயமாக வாசிக்க முயல்கின்றேன். அது போன்ற அனுபவப் பகிர்வுகள் எனக்கும் நிறைய பிடிக்கும்
வணக்கம் சுகந்தன்
//Hai Arun
"பிடித்தது வாசிப்பு பழக்கம்"
how dare you say it in public??????????
Just Kiddin
//
அந்த வாசிப்புப் பழக்கம் அல்ல இது. இது ரெகுலர் வாசிப்புப் பழக்கம்........
கிருஷ்ணா
///31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
மன்னிக்கவும். இன்னும் திருமணமாகவில்லை.//
இருக்கட்டும் இருக்கட்டும்...//
ஏன் இந்த வயித்தெரிச்சல்
தாமதமாக தெரிவிக்கிற நன்றிகளுக்கு குறை கொள்ள வேண்டாம்...
எதிர்பார்த்த அத்தனை சுவாரஸ்யங்களும் கிடைத்திருக்கிறது நன்றி அண்ணன்..நிறைய நன்றி...!
மறுபடியும் வருவேன்!
:)
அந்த "வாசிப்பு" என்கிற கதை உங்கடை பக்கமிருந்துதான் பெரும்பாலும் கேட்டிருக்கிறன்...
:)
\\
சர்வகாலமும் நண்பர்களுடனேயே திரிந்த நாட்களில் சற்றே திமிருடன் நண்பர்களாக எடுத்த ஒரு குழுப் படத்தை
\\
அப்ப கனடாவுல கடும் ஆக்கள்தான் நீங்கள்...
\\
பொதுவாக எனக்கு கடல் உணவுகள் பிடிக்கும். அதிலும் கணவாய் என்றால் சொல்லவே வேண்டாம். அது போல மாசிக் கருவாடு சேர்த்த சம்பலுடன் பாண். புட்டுடன் கருவாட்டுக் குழம்பு.
\\
ம்ம்ம் எனக்கும் பிடிச்ச் சாப்பாடுகள்...
வணக்கம் தமிழன் கறுப்பி
//அந்த "வாசிப்பு" என்கிற கதை உங்கடை பக்கமிருந்துதான் பெரும்பாலும் கேட்டிருக்கிறன்...//
வாசிப்பு என்கிற சொல்லிற்கு மது அருந்துவது என்றும் ஒரு பொருள் உண்டு என்று நான் கொழும்பு வந்தபின்னர் தான் கேள்விப்பட்டேன். எனக்கு தெரிந்து யாழ்ப்பாந்த்தில் அந்த சொல் பாவனையில் இருக்கவில்லை
வணக்கம் கறுப்பி
//சர்வகாலமும் நண்பர்களுடனேயே திரிந்த நாட்களில் சற்றே திமிருடன் நண்பர்களாக எடுத்த ஒரு குழுப் படத்தை
\\
அப்ப கனடாவுல கடும் ஆக்கள்தான் நீங்கள்...//
அப்பசி இல்லை. நான் முன்னரே சொன்னது போல நண்பர்களுடன் கூட்டமாக உள்ளபோது ஒரு அசாத்தியத் துணிவுவரும். அது தரும் லீலைகள் தான் இதுவெல்லாம்.
//ம்ம்ம் எனக்கும் பிடிச்ச் சாப்பாடுகள்...//
எனக்கு கொண்டாட்டமென்றாலே கடல் உணவுகள் உண்பதுதான்.
அதிலும் ஒடியல் கூழும் சுட்ட கருவாடும் என்றால்..........
தெய்வீகன் (அவுஸ்திரேலியா) //
எல்லா ரோட்டுக்களும் ரோமிற்கே..
இவர் அவுஸ்ரேலியாவில் எனது நண்பராயுமிருந்தார்.
காலம் அடித்து சென்ற நினைவுகளை தங்களுக்கேயுரிய மண்வாசனையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.உங்களின் எண்ணக் கிடக்கையை கொட்டித்தீர்ப்பதற்கு 32 கேள்விகள் போதாது. நேற்அறைய நினைவுகளுடன் நாளைய கனவுகளுடனும் வாழ்பவரல்லா நீங்கள்....! தொடரட்டும் உங்களின் தேடல்....!!
வணக்கம் சயந்தன்
//எல்லா ரோட்டுக்களும் ரோமிற்கே..
இவர் அவுஸ்ரேலியாவில் எனது நண்பராயுமிருந்தார்//
தெய்வீகன் எனது ஆகச்சிறந்த நண்பர்களுல் ஒருவர். எனக்கும் ஆருக்குமான நட்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேறி வருகின்றது.
இவருக்கும் எனக்கும் இடையிலான நட்பு பற்றி “http://solvathellamunmai.blogspot.com/2008/08/blog-post.html என்ற பெயரில் எழுதியுள்ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிக்கவும்
பெரும்பாலான "தமிழ் வாசகருக்கு" பரிச்சியமான கீறல் என்ற குழுக்குறியும் வாசிப்பு குறித்து ரசனையானது இல்லையா?..
வழமைக்கு மாறான பதிவு எனினும் வழமை போலவே சிறப்பாக உள்ளது பகிர்தல்கள்.
இன்று தான் இந்தப் பதிவைக் கவனித்தேன், கேள்விகளுக்குள்ளே உங்கள் வாழ்க்கையை அடக்கிவிட்டீர்கள் :)
Post a Comment