Wednesday, March 25, 2009

புலம்பெயர் ஊடகங்களும் குளறுபடிகளும்

எந்த விதத்திலும் அழகியலுடன் ஒன்றிக்க முடியாத அளவுக்கு குரூரத்தை எம் வாழ்வுடன் பிணைத்து எம்மை அழைத்துச் செல்லுகின்றது நாம் வாழும் தலைமுறை. ஒரு கொலை நடந்தாலும் பதைக்கின்ற மனம் போய் 10, 20 என்றாகி பின் ஐம்பது, நூறாகி இப்போது இதெல்லாம் சாதாரணம் என்று வாழப் பழகிவிட்டது எம் தலைமுறை. கொத்து கொத்தாக இன அழிப்பு நடந்தாலும், தம் தினசரி வாழ்வை அப்படியே வாழப்பழகி விட்டது ஒரு சமூகம். இத்தனை கொலையும் கண்டு, இத்தனை சதைப்பிடங்களையும், அவை சிதறிக்கிடப்பதையும் கண்டு சாவே எமக்கொரு வாழ்வாகிப்போன ஒரு சமுதாயமாக எம் சகோதரங்கள் சிக்குண்டு இருக்கின்றன. இதைப் பார்த்து எல்லாருக்கும் மனதளவான ஒரு பாதிப்புத்தன்னும் வரவேண்டும். அதை விட்டு, “அங்க சனம் எல்லாத்துக்கும் பழகீட்டுது, நாங்கள் தான் இங்க இதை பெரிசா எடுக்கிறம்” என்று அறள பேந்துகொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். (நான் படித்த பெரியாரும், தொடர்ந்த மரபுகளும் சேர்த்து குழப்பி அடித்து) கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று குழம்பிக் கொண்டிருக்கும் நான் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்வேன்; இந்த அதி புத்திசாலைகளை ஒரு வாரமேனும் முல்லை தீவில் கொண்டுபோய் இருக்க விட்டால்.

2

ஈழத்தில் பிறந்தவனாகவும், கனடாவில் வசிப்பவனாகவும் நான் எம் சமூகம் (கனேடிய தமிழ் சமூகம்) மீது தொடர்ந்து வைக்கின்ற குற்றச்சாட்டுகளில் ஒன்று, நாம் எமது பிரச்சனைகளை அதாவது சொந்த நாட்டை விட்டு துரத்தப்பட்ட அகதியாகவும், புலம்பெயர்ந்தவர்களாகவும் புலம் பெயர்ந்த நாடுகளில் எதிர் நோக்கும் இன்னல்களை பதிவு செய்யவில்லை/பதிவு செய்தது போதாது என்பது. கனடாவை எடுத்துக்கொண்டால் இங்கு இயங்கி வருகின்ற 24 மணிநேர வானொலிகள் நான்கு, பகுதிநேர பண்பலை வரிசை ஒன்று, பத்திரிகைகள் கிட்ட தட்ட 20. இதுதவிர கோயில் என்றூ சொல்லப்படுகின்ற கட்டட/வியாபார அமைப்புகளை சொல்வதென்றால்............... கனடாவில் எத்தனை தமிழ் கராஜ் இருக்குதோ அத்தனை கோயில்களும் இருக்குது. இங்கே நான் கோயில் என்கிற வியாபார / கட்டட அமைப்பு என்று சொல்ல காரணம் இவை கோயில் என்ற பெயரை தாங்கும் வியாபார அமைப்பாக இருந்துவருகின்றனவே தவிர ஆலயங்களாக இருப்பதில்லை என்பதுதான். (இது பற்றி பின்னர் விரிவாக.) இத்தனை இருந்தும் என்ன பயன், மக்களுக்காக உருவாக்கப்பட்ட இவை மக்களுக்காக என்ன செய்தன?

இங்கு இயங்கிவரும் ஒரு 24 மணிநேர தமிழ் வானொலி. அதன் முதன்மை அறிவிப்பாளர் ஊரில் ஐஸ் பழ வானுக்கு அறிவிப்பு செய்யக்கூட தகுதி இல்லாத அறிவிப்பு திறன் கொண்டவர். சில மாதங்களுக்கு முன்னர் வரை தன்னை தீவிர தமிழ் தேசிய வாதியாக அடையாளம் செய்ய முயன்றவர். இப்பொழுது வானொலியில் பகல் நேரங்களில் நடக்கும் தொலைபேசி உரையாடல்களில் நடுநிலைவாதி என்ற பெயரில் நச்சுக் கருத்துகளை அள்ளி வழங்குகிறார். நான் ஒரு போதும் மாற்றுக் கருத்துகளை மறுதலிப்பவன் கிடையாது. ஆனால் இவர் சொல்பவை மாற்றுக் கருத்துகள் கிடையாது. அது மட்டுமல்ல, தீவிர புலி எதிர்ப்பாளர்கள், புலி எதிர்ப்பை மட்டும் மையமாகக் கொண்டு சொல்லும் கருத்துகளை விட தீமை தரக்கூடிய கருத்துக்கள் அவை. இவரது கூத்துக்களில் எல்லாம் பெரிய கூத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் கனடாவில் வானொலி ஒலிபரப்பை பணம் பண்ணும் ஒரு தொழிலாக்கி வெற்றிகண்ட இன்னொருவருக்கும் மிகப்பெரிய போட்டி/துவே
ஷம் நடந்துவந்தது. இதன் உச்சக்கட்டமாக இவரால் உசுப்பப்பட்ட (அல்லது அப்படி குற்றம் சாட்டப்பட்ட) ஒருவர் மற்றைய வானொலியில் அதன் முதன்மை அறிவிப்பாளர் மீது ஏதோ பழி சுமத்த அவர் அழ தொடங்கிவிட்டார். (தமிழ்நாட்டில் ரசிகர் மன்றாங்கள் என்ற பெயரில் நடிகர்கள் அடிக்கின்ற பித்தலாட்டங்களை விட மோசமான பித்தலாட்டக்காரர் இவர்). இதைப்பார்த்து பொங்கி எழுந்த இன்னுமொரு சக அறிவிப்பாளர் “இப்படியான பொய் சேதிகளை ______________________ வானொலியில் ___________________தான் தருகிறார், எல்லா நேயர்களும் அவர்களுக்கு கண்டணம் தெரிவிக்க வேண்டும்” என்று அறிக்கைவிட்டார் (அறிக்கை விடுவதுதானே திராவிட பண்பாடு- நன்றி: கருணாநிதி). இதெல்லாம் நடந்து சில காலத்தின் பின்னர் “நடுநிலைவாத” அறிவிப்பாளர் கனேடிய தேர்தல் ஒன்றில் நின்றார். அப்போது நடந்தது பாருங்கள் ஒரு அதிசயம், வைகோ, ராமதாஸ், திருமா எல்லாம் கெட்டார் போங்கள். இருவரும் சேர்ந்து ஒரு சந்திப்பு, அதை இரண்டு வானொலிகளிலும் நேரடி ஒலிபரப்பினார்கள். இருவரும் சகோதரர்கள் என்றூ ஒருத்தர் பித்தலாட்ட, மற்றவர் தனது அம்மாவுக்கு தான் மூத்த பிள்ளை என்றாலும் மற்றவரைத்தான் அவ மூத்த பிள்ளை என்று பாசம் செலுத்துவதாக “நடுநிலையாக” சொன்னார். எனக்கு தானும் எம்ஜிஆரும் ஒரு தட்டில் உணவருந்தினவர்கள் என்று தொடங்கி அடிக்கடி கருணாநிதி சொல்லும் கதையும், கேக்கிறவன் கேனயனா இருந்தா எருமை மாடு சொல்லுமாம் ஏரோப்பிளேன் ஓட்டிக்காட்டுறன்” என்ற கதையும் ஞாபகம் வந்தது.

இதே பித்தலாட்டம் செய்யும் வானொலியில்தான் ஒருமுறை பெரிசா பகிடி விடிறன் என்ற பெயரில் சமாதான காலப்பகுதியில் வந்த ஒரு ஏப்ரல் முட்டாள் தினத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்காவும் ஒரே விமானத்தில் ஜெனீவாவில் உள்ள ஐ. நா அலுவலகத்துக்கு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடுவதற்காக போய்க்கொண்டு இருக்கின்றார்கள் என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இதெல்லாம் என்ன வித தர்மம். உங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம் என்றால் வியாபாரம் செய்துவிட்டுப்போங்கள், அதை விட்டு ஏன் இந்த தேசிய வாத நாடகம். இவர்களைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பாக ஒரு குழு பிரிந்து சென்றது. கடைசியில பார்த்தா எல்லாம் ஒரே குடையில ஊறின மட்டைகள். இதில பெரிய வேடிக்கை என்னவென்றால், இதுக்கிடையில வானொலி உரையாடல்களில் தமிழக அரசியல் வாதிகள் பற்றிய கிண்டல் வேறு. ஐயா, இது மட்டும் வேண்டாம். குருத்துரோகம் கூடாது. குருவை மிஞ்சிய சிஷ்யர்களாய் நீங்கள் வளர்ந்து வருகையில் உங்கள் குருமாரை கிண்டல் செய்து குரு நிந்தனை செய்துவிடாதீர்கள்

3

இந்த நிலையில் இவர்களுக்கு மாற்றாக, எம் நம்பிக்கைகளுக்கு பாத்திரமாக வரும் என்ற நம்பிக்கைகளுடன் ஒரு பண்பலை வரிசை தொடங்கியது. சும்மா சொல்லக்கூடாது. எனக்கு தெரிந்து முதன் முதலாக ஒரு வானொலியில் சினிமா கிசு கிசுக்களை அதுவும் வாரத்தில் இரண்டு நாள் வெளியிட்ட ஒரே வானொலி இது தான். அதிலும் மிக மட்டமான குப்பைகள். உதாரணமாக, ஒரு திரைப்படத்தில் நாயகன் நாயகிக்கு உதட்டில் முத்தமிடவில்லை என்றும் அதற்கு காரணம் நாயகியின் வாயில் வீசிய துர்நாற்றம் என்றும் கிசு கிசு சொல்லும் கேவலமான மனப்பாங்கு வேறு யாரிடமும் வராது. அண்மையில் கல்மடு தாக்குதலின்போது கூட ஆதாரமில்லாத செய்திகள் பரவியபோது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வானொலியை கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆதாரமில்லாமல் பரவிய எல்லா செய்திகளையும் உறுதி செய்வதுபோல இவர்கள் அடித்த கூத்து இருக்கிறதே. ஐயா, ஊடகம் என்கிற பொறுபான இடத்தில் இருக்கின்றீர்கள். அது மட்டுமலாமல் உங்கள் ஊடகத்தை வெறும் ஊடகமாக பாராமல், ஒரு அதிகார பூர்வ ஊடகமாக மக்கள் பார்க்கின்றார்கள். இப்படியிருந்தும் பொறுப்பில்லாமல் நடக்கும் உங்களை எல்லாம் “பசித்த புலி தின்னட்டும்”.

4

வானொலி மீடியாக்கள் தான் இப்படியென்றால் தொலக்காட்சி மீடியா இதைவிட பல படி மோசம். அண்மையில் எனது பெரியம்மா வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி (தமிழ்) நிலையத்திடமிருந்து தமது சேவையை பெற்றுக்கொள்ளும்படி ஒரு அழைப்பு வந்தது. தனது கடுமையான அலுவலகப் பணிகளை சொல்லி தனக்கு அந்த தொலைக்காட்சி சேவைகளை பார்க்க நேரம் கிடையாது என்று அவர் மறுக்க, அழைப்பாளர் சொன்னார் “நானும் தான் பார்க்கிறதில்லை, அது பரவாயில்லை எடுங்கோ” என்று. இது 100% உண்மை. இந்த அணுகுமுறையை யாரையா உங்களுக்கு தந்தது?.

இது மட்டுமல்ல கனடாவில் இயங்கும் இரண்டு 24 மணிநேர தொலைக்காட்சிகளும் பெரும்பாலும் தமிழ்நாட்டின் சன், கலைஞர் தொலக்காட்சிகளையே நம்பியுள்ளன. புலம் பெயர் வாழ்வில் உள்ள எத்தனையோ அர்த்தமுள்ள சாரங்களை ஏனையா மறந்து போகின்றீர்கள். குடும்ப பிரச்சனை, கணவன் – மனைவி இடைவெளிகளால் ஏற்படும் பிரச்சனை, கணாவன், மனைவியரிடையே அவரவர் பெற்றோரால் ஏற்படும் பிரச்சனைகள், முதியோர் புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஆண்-பெண் நட்பு அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்று எத்தனையோ பிரச்சனைகள் உள்ளதையா. அது பற்றி ஏதும் பேசாமல் அதே அர்த்தமில்லாத நாடகங்களை ஏனையா இங்கும் ஒலிபரப்பி இம்சை செய்கின்றீர்கள். எமது
படைப்பாளிகள் எத்தனை பேர் உள்ளனர் இங்கு. அவர்களில் யாரையாவது ஒருவரை எப்போதாவது மனதில் நிறுத்தினீர்களா?. அண்மையில் கனேடைய வானொலி ஒன்றில் ஒருவரை (அவர் ஒரு கவிஞராம்) அவரது அறுபதாண்டு காலப்பணி என்று சொல்லி ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் என்று அவரது அனுபவ பகிர்வு நடைபெற்றது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம், என்ன அடிப்படையில் அவரை ஒரு கவிஞர் என்று சொல்கின்றீர்கள்?. அவரது இள வயதில் அவர் சற்று சமூக சிந்தனையுடன் இருந்ததாக அவருடன் நெருங்கிப்பழகிய ஒருவர் சொன்னார். இருக்கலாம். அதற்காக அவருக்கு ஏற்படுத்தப்படும் ஒளிவட்டம் அளவுக்கு மீறியது. எனக்கு தெரிந்து ஒரு மேடையில் இவரைப்போற்றி இவர் இன்னோரன்ன கவிஞர் என்று ஒருவர் போற்றிய பிற்பாடு பேசஎழுந்த இவர் சொன்னார் “முன்னர் பேசியவர் என்னை கவிஞர் என்று மட்டும் சொல்லிச் சென்றுவிட்டார். நான் ஒரு நல்ல கவிஞன், அற்புதமான நடிகன். நல்ல சிறுகதை எழுத்தாளர்”................இப்படி, எங்கும் எதிலும் இருப்பவன் ஞானே என்ற ரேஞ்சில் அவரது பில்டப். ஒரு வருடம் முழுக்க அவருடன் காலம் தள்ளியதுக்கு / சகித்துக்கொண்டதுக்கு காரணம் உங்களில் உள்ள மாறி மாறி முதுகு சொறியும் குணம் என்று எமக்கு தெரியும். அப்படி இல்லாவிட்டால், கனடாவில் உள்ள புலம் பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகளில் முக்கியமான காலம் செல்வத்தையோ (அனைத்து சிரமங்கள் மத்தியிலும் காலம் இதழையும், சில புத்தகங்களையும் தொடர்ந்து வெளியிடுவதற்காக) இளங்கோவையோ (டிசே தமிழன், அவரது சமூக கோபம், கட்டுரைகள் / ஹேமா அக்கா என்ற சிறுகதை ஒன்றுக்காகவேனும்), சேரனையோ, திருமாவளவனையோ, சுமதி ரூபனையோ (பெண்ணியத்துக்காக), திருமாவளவனையோ இல்லை தொன்றுமுளதென் தமிழ் என்று இன்னும் பாடினால் அத் தமிழில் தன் ஆளுமைகளை தொடர்ந்து காட்டிய கவிஞர் பஞ்சாட்சரத்தையோ அலது எனது பிரத்தியேக பட்டியலில் என்றும் முண்ணணியில் உள்ள வித்துவான் இராசரத்தினத்தையோ ஏன் உங்களுக்கு நினைவு வரவில்லை?

..................................மீதி அடுத்த பாகத்தில்

18 comments:

Anonymous said...

send it to ctbc and keethavani. i hope those 2 will understand how dum they are atleast even after seeing this

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் அனாமி.

ஐயா நான் பெயர் சொல்லாமல் தானே சொன்னேன். நீங்கள் ஏனையா பெயர்களை எல்லாம் இழுத்து என்னை வம்பில் மாட்டுகின்றீர்கள்

கதியால் said...

உண்மைதான். சமூகப் பொறுப்புடன் இருந்து இது சரி, இது பிழை என்று மக்களுக்கு தெரியப்படுத்துகின்ற தலையாய கடமையில் இருக்கும் ஊடகங்கள் கடமை தவறி வேறு பாதைக்குள் செல்லும் போது வருத்தமாகத்தான் இருக்கும். அவை ஏற்படுத்திய தாக்கங்கள் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. தானாக திருந்த வேண்டும். அல்லது சொல்லி திருந்த வேண்டும். அல்லாவிட்டால் என்ன செய்யலாம்.....? அவர்களை ஒதுக்குவதை தவிர வேறு எதுவும் வழி இருப்பதாக, எனக்கு படவில்லை.

அருண்மொழிவர்மன் said...

இங்கே பிற மொழி ஊடகங்களை பாராமல் இவர்களையே தமது ஒரே பொழுது போக்காக கொண்ட பல மக்கள் இருக்கின்றனர். இப்படியிருக்கும்போது இவர்கள் செய்யும் இது போன்ற தவறுகள் மக்களாஇ பெருமளாவு பாதிக்கும்

Anonymous said...

கவிஞர் பஞ்சாட்சரத்தையோ : he taught me tamil and religion in jaffna hindu college. very nice teacher and human being.

he also wrote several patriotic songs for LTTE. now he is living in Canada.

கிருஷ்ணா said...

அருண்மொழி!
புலம்பெயர் ஊடகக் குளறுபடிகளை வைத்து மிகப்பெரிய ஆராய்ச்சிக்கட்டுரையே எழுதிவிடலாம். நீங்கள் சொல்லாத எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அதை அடுத்த பதிவில் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன். அடிப்படையில் இரண்டு முக்கியமாக விடயங்களே இந்தப் பித்தலாட்டத்துக்குக் காரணமாக இருக்கின்றன. முதலாவதாக, குரங்கின் கை மாலையாக ஊடகத்தின் அடிப்படையே தெரியாதவர்கள் கையில் அது மாட்டிக்கொண்டு விழிபிதுங்குவது. இரண்டாவது, போட்டிக்கு வலுவானவர் கையில் உண்மையான ஊடகங்கள் இல்லாதது. நானே ராஜா நானே மந்திரி என்ற அளவில் இருக்கும் இந்த ஊடகங்களைவிட தமிழகத் தொலைக்காட்சிகள் எவ்வளவோ மேல் என்பது இங்குள்ள பொதுவான மக்களின் கருத்து(நான் சார்ந்திருக்கும் ஊடகத்தையும் சேர்த்தே சொல்லுகிறேன்)

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் அனாமி.

கவிஞர் பஞ்சாட்சரம் நீண்ட காலமாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆசிரியராக கடமை ஆற்றியவர். அவர் விடுதலைப் புலிகளுக்காக பல பாடல்களும் எழுதியுள்ளார். சாகத்துணிந்தவர் கூட்டம் அதில் புகழ் பெற்ற ஒரு பாடல்

அருண்மொழிவர்மன் said...

//குரங்கின் கை மாலையாக ஊடகத்தின் அடிப்படையே தெரியாதவர்கள் கையில் அது மாட்டிக்கொண்டு விழிபிதுங்குவது//

உண்மைதான். நாளொரு போட்டியும் பொழுதொரு கோஸ்டியுமாக இவர்கள் அடிக்கும் கொட்டம் தாங்கமுடியவில்லை

Anonymous said...

I figured CTBC and Keethavani? And the one with the fake news is CMR? I figure, these radios and tv shows are mostly for the older generation. The younger generation is not very attached, and listens only on availability basis. If they keep fuelling their divisions, for sure, they will all bite dust. At least, I am hoping.

As is, there is a growing gap and discomfort among older generations and younger generations. This is going to just widen in future.

-kajan

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் கஜன்
//I figure, these radios and tv shows are mostly for the older generation. The younger generation is not very attached, and listens only on availability basis//

உண்மைதான். அதே நேரம், வயதானவர்களுடன், புதிதாக கனடாவிற்கு வந்தவர்களும் இந்த வானொலிகளை தொடர்ந்து கேட்கின்றனர். அத்துடன், வயதானவர்கள் என்று சொல்லப்படும்போதுகூட கிட்ட தட்ட 35 வயதுக்கு மேற்பட்டவர்களும் உள்ளாக்கப்படுகையால் இந்த வானொலிகளின் ஆதிக்கம், தமிழ் சூழலுடன் மட்டுமே தங்கியுள்ள புலம்பெயர் மக்கள் மீது பலமாகவே உள்ளது


//As is, there is a growing gap and discomfort among older generations and younger generations. This is going to just widen in future.
//புலம் பெயர் வாழ்வில் உ
ள்ள மிக முக்கிய பிரச்சனையே இங்கு பரவி வரும் தலைமுறை இடைவெளிதான். மற்ற தரப்பினரின் வாழ் முறை பற்றி எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு இந்த இடைவெளி விரிந்துள்ளது

K.Guruparan said...

ஊடகங்கள் தான் சார்ந்த சமூகத்தை பிரதிபலிக்க அதன் குறைபாடுகளை தட்டிக்கேட்க அல்லது நிறைகளை போற்றிப் புகழத் தவறும் போது வெறும் ஊதுகுழல்களாக மங்கிப் போகின்றன.

Vasakan said...

இவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பட்டியலிட ஏலாத அளவுக்கு பெரியவை. உடன் பணியாற்றுகின்ற பெண் ஊழியர்களுடன் இவர்கள் பழகுகின்ற முறைகள் பற்றி பல முறைப்பாடுகளை நாம் அறிந்திருக்கின்றோம் . இப்பொழுது எல்லா ஊடகங்களையும் இவர்கள் வளைத்து வைத்திருப்பதால் இதைப்பற்றி யாரும் எழுதுவதில்லை

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

அருண்மொழிவர்மன் said...

நன்றி குருபரன்

//ஊடகங்கள் தான் சார்ந்த சமூகத்தை பிரதிபலிக்க அதன் குறைபாடுகளை தட்டிக்கேட்க அல்லது நிறைகளை போற்றிப் புகழத் தவறும் போது வெறும் ஊதுகுழல்களாக மங்கிப் போகின்றன//

அதிலும் புலம்பெயர் நாடுகளில் இன்னமும் தமிழ் பேசும் மக்களிற்கு ஒரு வானொலியின் தேவை பலமாக உள்ளபோது இவர்கள் அந்த ஊடகங்கள் கையில் இருந்தும் அடிக்கும் கோமாளித்தனங்கள் மேலும் மேலும் அம்மக்களின் ரசனையை, வாழ்க்கை த்ரத்தை வீழ்த்தும்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் வாசகன்
//உடன் பணியாற்றுகின்ற பெண் ஊழியர்களுடன் இவர்கள் பழகுகின்ற முறைகள் பற்றி பல முறைப்பாடுகளை நாம் அறிந்திருக்கின்றோம்///

இது பற்றி அறிந்திருக்கின்றேன்...

Siva said...

Hi
What can we do when people are listning some of these nonsense meadia and encourage to continue. Over and over, Always a few Tamils only, are engaged in demonstration and try to show the Tamil's plights and exposing of Srilankan government's genocidal activities to foreigners. Others are just watching and participating in these type of media and fooling around. I am bowing to the younger generation's vibrant real attempt to uplift the humanity and alleviate our Tamil's plight. I hope, they will correct this anomolies of our media in future.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் சிவா
//Others are just watching and participating in these type of media and fooling around//

உண்மைதான். முன்பு புலிகள் புகழ் பாடியும், தேசியம் பற்றி கதைத்தும் தம்மை தேசியவாதிகளாக காண்பித்த இந்த ஊடகங்கள் இன்று அடிக்கும் கூத்து சகிக்கவே முடியவில்லை. இது பற்றி கேட்பாரும் யாருமில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உருவாக்கிய ஊடகங்களும் புஸ்வாணமாகிவிட்டன.

வார்த்தை ஜாலத்தாலும், கவர்ச்சியாலும் தமிழனை இன்னும் சில நூற்றாண்டுகள் பிற்பட்டவனாக (இப்போதே 19ம் நூற்றாண்டை விட்டு தமிழன் வெளியே வரவில்லை!!!) ஆக்கும் முயற்சியே இவை

Mohan said...

The same question I raised in a comment for Keith's post. Why Canadian (and other) Eelam Tamils, depend on Indian Tamil media and cinema. Why not try, your own? Is it financially not viable solution?

Post a Comment