க்கவில்லை. கடைசியில் தேவகாந்தனே இதை சுட்டிக்காட்டும்படி ஆகிவிட்டது. அக்கறை இன்மையால் இடம்பெற்ற மிகப்பெரும் தவறு இது. இது போன்ற தவறுகள் இனியும் இடம்பெறக்கூடாது என்று உறுதியும், எழுத்தாளர் தேவகாந்தனிடம் மன்னிப்பும் கேட்டபடி இந்த பகுதிக்குள் புகுகின்றேன்.அம்பை
அம்பை என்ற பெயர் மீது எனக்கு பாரதக் கதை தாண்டியும் மிகப்பெரும் ஈடுபாடு. தேர்ந்த பெண்ணியவாதியும், எழுத்தாளருமான அம்பையின் ஆளுமைகள் பற்றி அதிகம் அறிந்திருக்கின்றேன். அவருடைய கதைகளை நான் வாசித்தது குறைவென்றபோதும் கனடாவில் கவிஞர் திருமாவளவனின் வீட்டில் இடம்பெற்ற இருள் யாழி புத்தக அறிமுக சந்திப்பிற்கு அம்பை வந்திருந்தபோது ஈழப்பிரச்சனை சம்பந்தமான பலவிடயங்கள் தனக்கு முழுமையாக தெரியாது என்று ஒப்புக்கொண்டு, அக்கறையுடன் நிறைய விடயங்களை கேட்டறிந்துகொண்டார். இந்த நேர்மை எனக்கு அதிகம் பிடித்திருந்தது. ஈழப் பிரச்சனை பற்றி அறிந்திருந்தும் அதை பற்றிப் பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பவர்களையும், எதுவும் தெரியாமல் வெறும் தத்துவங்கள் ஊடாக மட்டுமே ஈழப் பிரச்சனை பற்றி அணுகுபவர்களையும், ஒரு சித்தாந்தத்தை உள்வாங்கி / சித்தாந்தத்தால் உள்வாங்கப்பட்டு (இரண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை கவனிக்கவும்) அந்த சித்தாந்தத்தின் வழி சப்பைக்கட்டு நியாயங்களை சொல்பவர்களையுமே பெரிதளவு கண்டுள்ள மோசமான சூழ்நிலையில் உண்மையான முகங்கள் சிலவற்றை காணும்போது பிரமிப்பு வருவது வழமை தானே?. அந்த வகையில் லக்ஷ்மி என்கிற பெண் அம்பை என்கிற பெண்ணியப் போராளியாக மாறும்போது தேர்ந்தெடுத்த ”அம்பை” என்கிற பெயர்கூட பெண்மையின் எதிர்க்குரலாக பாரதக்கதையில் முதலில் பதியப்பட்ட பெயரான சிகண்டி என்று பிற்காலத்தில் அறியப்பட்ட அம்பையின் பெயர்தான் என்பது அதிகம் பொருத்தமானதாகவே படுகின்றது.
அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று சகோதரிகளின் தந்தையான காசிராஜன் தன் பிள்ளைகளுக்கு நடத்திய சுயம்வரத்தில் அழைப்பின்றிப் போய் மூன்று பெண்களையும் கவர்ந்துவருகின்றான் பீஷ்மன். அந்த நேரம் அம்பை பிரம்மத்தன் என்ற பிறிதொரு மன்னன் மேல் தான் கொண்ட காதல் பற்றி சொல்ல பீஷ்மனும் அவளை பிரம்மத்தத்தனிடம் அனுப்பி வைக்கின்றான். பிறிதொருவனால் கவர்ந்து செல்லப்பட்ட பெண்ணை தன்னால் மணுமுடிக்க முடியாதென்று அவன் அவளை திருப்பி அனுப்ப தன் பிறந்த தேசம் செல்கிறாள் அம்பை. பீஷ்மனால் கவர்ந்து செல்லப்பட்ட அவள் இனி பீஷ்மனுடன் இருப்பதே முறை என்று அவள் தந்தை காசிராஜனும் திருப்பி அனுப்ப தன்னை ஏற்குமாறு பீஷ்மனிடம் வேண்டுகிறாள் அம்பை. ஏற்கனவே தான் தன் சிற்றன்னைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை (பிரம்மசாரிய விரதம்) சுட்டிக்காட்டி அவளை ஏற்க மறுக்கிறான் தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது. (இத்தனை அறம் காத்த பீஷ்மர் தான் பின்னர் துரியோதனின் அவையிலே திரௌபதி துகிலுரியப்பட்ட போது அமைதி காக்கிறார்.). இதன் பின் தான் இந்த நிலைக்கு வர காரணமான பீஷ்மனை வெல்வேன் என்று சபதமிட்டு வனமேகி, கடுமையான பயிற்சிகள் மூலம் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை உடலில் ஏற்றி யதுசேன மன்னனிடம் அடைக்கலம் பெற்று சிகண்டி என்ற பெயரில் உறுமீன் வரக் காத்திருகிறாள் அம்பை. சென்ற பதிவில் நான் சொன்னது போல பாரதக் கதையின் தனக்கு இழைக்கப்பட்ட் கொடுமகைகளுக்கெதிரான பலவீனமான எதிர்க்குரலாக காந்தாரி தன் கண்கள் மறைத்ததை சொன்னென். அதன் தொடர்ச்சியாக அதே கொடுமைகளுக்கெதிரான பலமான எதிர்க்குரலாக அம்பையே தெரிகிறாள். (திரௌபதியை இதில் எதிர்க்குரலாக சொல்லவே முடியாது அவள் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தன் கணவர்கள் மூலமாக பழிவாங்கிய, சராசரி தமிழ் திரைப்பட கதாநாயகி போன்றவளே). இங்கு மூலக் கதையில் அம்பை தவமிருந்து பீஷ்மனை கொல்ல வரமும், ஆணாக மாற வரமும் பெற்றதாய் சொல்ல தேவகாந்தன் ”அம்பை, தபோ கிருத்தியங்களாலும் அசுர அஸ்திர சாதகங்களாலும் தன் பெண் தன்மையையே அழித்தாள். மிருதுவான மேனி வன்மை கண்டது.......................................பெண்ணின் மாறா அவயத்துடன் ஆணாய் ஓர் அபூர்வ அடைதல் – பக் 11” என்று நடைமுறை யதார்த்தத்துடன் கூறுகிறார். அதுபோல போரிலே சிகண்டி பீஷ்மன் மீது அம்பு தொடுக்க தொடங்க அவள் அடிப்படையில் ஒரு பெண் என்பதால் அவளுடன் போரிடல் (அக்கால வழக்கப்படி) முறையில்லை என்பதால் சும்மாயிருந்த பீஷ்மர் மீது அம்பெய்து சிகண்டி கொண்டான் என்று மூலத்தில் சொல்லப்பட கதாகாலம் “சிகண்டியின் அம்புகள் காற்றைத் துளைக்கத் துவங்கின. சிகண்டிக்குள் அம்பையை கண்டிருப்பார் பீஷ்மர். நெஞ்சுக்குள் ஒரு மூலையில் இருந்த வலி மறு படி எழுந்திருக்கும்” என்று குற்ற உணர்ச்சியின் கைதியாய் பீஷ்மர் இருந்தபோதே கொல்லப்பட்டதாய் சொல்லும்.
சகாதேவன்
பாண்டவ புத்திரர்களில் பிறவி ஞானி என்று அழைக்கப்படுபவன். பெரியன்னை குந்தியின் தூற்றல்களாலே தாய் மாத்ரி உடன் கட்டை ஏறுவதன் சாட்சியாக இருந்த சோகம் கைகூடியவன். அந்த சோகமும், குந்தி மேல் இயல்பாக ஏற்பட்ட வெறுப்பினால் ஏற்பட்ட தனிமை உணர்வுமே அவனை ஞானியாக்கிற்று என்று கதாகாலம் சொல்வதை மறுக்கமுடியவில்லை. இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால் ஞானியான சகாதேவனே ஒரு இடத்தில், ஐவருக்கும் சம உரிமையாக பங்கிடப்பட்ட திரௌபதியிடன் தனக்கான உரிமைகள் குறைவாக இருந்ததாக வருந்துகிறான். அஞ்ஞாத வாசம் முடிந்த பின்னர் திரௌபதியும் சகாதேவனும் சந்திக்கும் பகுதி ஒன்றை இலங்கையின் கிழக்குமாகாண நவீன கதை சொல்லி சொல்வதாக கூத்து வடிவிலே சொல்கிறார் தேவகாந்தன். துரியோதன் ரகசியமாக சகாதேவனை சந்தித்ததையிட்டு திரௌபதி சகாதேவன் மேல் சந்தேகம் கொல்லும்போதும் பின்னர் தன் தாயிழந்த துயரை ஒரு மகளை ஈன்றிருப்பின் அவள் வடிவிலே சிறிதேனும் மறந்திருப்பேன் என்று சகாதேவன் சொல்லும்போதும் சக மனிதர்களுக்கேயான குணவியல்புகள் நிறைந்த கதாபாத்திரங்களாகவே அவர்களை காணமுடிகின்றது.
இதைவிட முக்கியமாக விராட நாட்டிலே அஞ்ஞாத வாசம் முடியும் முன்னரே அர்ச்சுணன் வெளிப்பட்டான் என்று அறிந்தும் திரௌபதிக்காக அதை சகாதேவன் மறைக்கிறான். அதை தொடர்ந்தே இந்த சந்திப்பில் சகாதேவனை விட்டு விலகியே இருந்த திரௌபதி அவனுடன் கூடுகிறாள். இதை சகாதேவன் “அர்ச்சுணன் வெளிப்பாட்டில் காலக் குறைபாட்டை / நான் மடுத்துக் கட்டுதற்கே / தன்னை எனக்குத் தந்தாளென்று / எனக்குத் தெரியாதோ” என்கிறான். பாரதப் போர் நடந்து தன் சபதம் நிறைவேற வேண்டும் என்பதில் திரௌபதி எவ்வளவு உறுதியாக இருந்தாள் என்றும் இந்த அத்தியாயம் உறுதிப்படுத்துகின்றது.
தருமன் / யுதிஷ்டிரன்.
பாரதக் கதையை வாசிக்க தொடங்கிய நட்களில் இருந்து என்னுள்ளே அதிகளவு கேள்விகளை எழுப்பிய கதா பாத்திரம் தருமனின் கதாபாத்திரம். பாண்டவர்கள் ஐவருள்ளும் தருமன் தவிர ஏனைய நால்வரும் தமக்கேயுரிய தனித்திறன்களை கொண்டவர்கள். அர்ச்சுணன், பீமன் போன்றோர்
பலவீனங்களையும் கொண்டவர்கள். ஆனால் தர்மனைப் பொறுத்தவரை அவன் தனித்திறான் என்று எதையுமே கொண்டிருக்கவில்லை. ஆனால் அவன் பலவீனமான சூதாட்டம் குருக்ஷேத்திரப் போருக்கே காரணமானது. இங்கு முக்கியமாக காணாவேண்டிய விடயம், அர்ச்சுணனும் பீமனும் தத்தம் பலவீனங்களால் வந்த எல்லா துன்பங்களையும் தாமாகவே எதிர்கொள்ள தர்மன், தான் சூதாடி தோற்றபோது தன் தோல்வியின் பங்காளிகளாக தன் தம்பியரையும், திரௌபதியையும் ஆக்கிக்கொண்டான். பாரதப் போர் நடந்தபோது கூட போர்க்களத்தில் தர்மனின் வெற்றியாக எதையும் பதிவாக்கப்படவில்லை. ஒரு தலைவனாக அவன் போரைக் கொண்டு நடத்தக்கூட இல்லை. பாரதப் போரில் அவன் பெயர் இடம்பெறுவது அவன் சொன்ன “அஸ்வத்தாம ஹத” என்பதுவே. கதாகாலத்தில் இந்தக் கட்டத்தை சொல்லும் கதை சொல்லி “இதுவரை யுதிஷ்டிரன் என்று அழைத்தவன், தர்மம் தவறீயதின் குறியீடாக இனி அவன் தர்மன் என்றழைப்பேன்” என்கிறான். தர்மன் தர்மம் காத்து வாழ்ந்தான் என்பதைவிட, தன் பக்க பலங்களை சரியாக பாவித்து தன்னை வளாமாக்கிக் கொண்டான் என்பதே பொறுத்தமாக இருக்கும். தன் திறன் பாவித்து தான் வென்ற திரௌபதி மீது தன்னால் முழுமையான ஆளுமை செலுத்தப்படாமல் போனதே அர்ச்சுணன் கட்டுக்கடங்கா காமம் கொண்டலையக் காரணம் என்றும், குருக்ஷேத்திரப் போர் முடிவடைந்த பின்னர் பட்டத்து ராணியாக தர்மனுக்கே அதிகம் உரித்துடையவளாக திரௌபதி மாற பீமன் கூட தர்மனிடம் கோபம் கொண்டான் என்றும் கதாகாலத்தில் கட்டுடைக்கப்படும்போது மறுக்க முடியாமல்தான் இருக்கின்றது.அசுவத்தாமன்
வழி வழியாக வந்த பெரும்பாலான கதைகளில் அசுவத்தாமனை மரணமற்றவன் என்றூ சொல்வர். ஆனால் தேவகாந்தனின் கதாகலத்தில் அஸ்வத்தாமன் தீராப்பழியின் நினைவாக சொல்லப்படுகின்றான். உப பாண்டவர்களை கொன்றதிலும், இறுதியில் அர்ச்சுணன் மீது அவன் எய்த அம்பு, நதிக்கரையில் பிதிர்க்கடன் செய்துகொண்டிருந்த அபிமன்யுவின் மனைவியைத் தாக்கியதாலும், எத்தனையோ அறங்களைக் காத்தவனும், ஆற்றல் மிகுந்தவனுமாகிய அஸ்வத்தாமன், ஒரு பழியின் நினைவாகவே காலமெல்லாம் நினைக்கப்படுவான் என்கிறது கதாகாலம்.
“அஸ்வத்தாமனின் நினைவே அவன் ஜீவன், அவன் மரணமற்றிருந்த முறைமை அதுதான். அவன் தீராப் பழியின் நினைவு-பக்கம் 144”
கதாகாலத்தின் இன்னும் சில அம்சங்கள்
பாரதம் என்கிற அமானுஷ்யத்தன்மை அதிகம் பொருந்திய, நடைமுறைக்கு பெரிதும் ஒவ்வாத இதிகாசத்தை ஒரு நாவல் வடிவில் நடைமுறையுடன் ஒத்த, முன்னொரு காலத்தில் நடந்தது என்று சொல்லக்கூடியதாக கதாகாலம் அமைகின்றது. இந்த இடத்தில் திரௌபதி துகிலுருவுதல் பற்றி தேவகாந்தன் சொல்வது ஒரு பொறிமுறை சார்ந்த விளக்கமாக இருந்தாலும் மிகுந்த சுவாரஸ்யமானதாகவே இருக்கின்றது.
“”துச்சாதன் அவளாது ஆடையை இழுத்தான். நிலையில் பெயராது நின்று அவள் சுழன்றாள். அவிழ்ந்து நிலம் புரண்டு கிடந்த அவள் கூந்தல் மேலிருந்து கீழ்ப் புரியாய்ச் சுற்றி அவள் அவயங்களை மறைத்து வந்தது. அவமானத்தைச் செறிவாய் இறக்க வெறீபிடித்து நின்ற துச்சாதனன் துகிலை விட்டு அவள் கூந்தலை இழுத்தான். கீழிருந்து மேற்புரியாய் துகில் அவளது நிர்வாணம் மறையச் சுற்றியது. திரும்ப அவன் துகில் பற்றி இழுக்க கூந்தலும், கூந்தல் பற்றி இழுக்க துகிலும் அவள் செந்நிற மேனி யார் கண்ணும் காணாது மறைத்துவர, மௌனித்த சபை சலசலக்கத் துவங்கியது. அமானுஷ்யமொன்றின் செயற்பாடாய் அதைக் கணித்து அச்சமடைய ஆரம்பித்தது. ..............................................துச்சாதன் களைத்து வீழ்ந்த்தான். அனைவர் மனதிலும் துரோபதி “தெய்வமே” என்று கூவிய சொல் ஒரு உருவமாய் நின்றிருந்தது...........பக்-85.”
-2-
உண்மையில் தேவகாந்தனின் கதாகாலம் தவிர்த்து உபபாண்டவம் என்ற எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகமும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் மகாபாரதத்தின் மறுவாசிப்பாக வெளியானது. ஆனால் உபபாண்டவம் பெற்ற கவனிப்பு அளவு கதாகாலம் கவனிக்கப்படவேயில்லை. இத்தனைக்கும் உபபாண்டவத்துக்கு எந்த அளவிலும் குறைவில்லாதது கதாகாலம். ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளார்களில் ஒருவராக அடையாளம் காணப்படவேண்டிய தேவகாந்தனின் எத்தனையோ புத்தகங்களை ஈழத்தமிழ் வாசகர்களே வாசித்தது கிடையாது என்றறியும்போது ஈழத் தமிழினம் என்றொன்று இருந்தது என்பதே வரலாற்றில் மறக்கப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகின்றது. எம்மவர் எழுத்துக்களை நாமே படிக்காததால்தான் ஜெயமோகன் போன்ற சிலர், ஈழத்தமிழ் எழுத்துக்களே தட்டையானவை, ஒரு வட்டத்துள் உழல்பவை என்றெல்லாம் உதறித் தள்ள, புலம்பெயர் நாடுகளில் உள்ள அவர் ரசிகர்கள் சொல்லும் சில நியாயங்களையும் கேட்டுக்கொண்டு அதை சகிக்குமாறு நாமும் சபிக்கப்பட்டிருக்கின்றோம்.
சென்ற வார இறுதியில் நானும் சிறிய காலத்திலேயே எனக்கு மிக மிக நெருக்கமான நண்பர் ஒருவரும் “தோழர் சிவத்தின்” நினைவு விழாவுக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரு அருமையான பாடலைக் கேட்டேன். ஒரு முறை கேட்டால் அன்று முழுவதும் ஹம் பண்ண தோன்றுமே அப்படி ஒரு பாடல். கவிஞர் சேரன் எழுதி சின்மயி பாட, ஒரு மலையாள இசையமைப்பாளர் (பெயர் நினைவில் இல்லை; - இந்த இசைத்தட்டில் ஒரு பாடலுக்கு மட்டும் ராஜ் ராஜரத்தினம் இசையமைத்துள்ளார்) இசையமைத்த . காற்றோடு.... என்று தொடங்கும். (அன்று இந்தப் பாடாலைக் கேட்டபோது யார் எழுதிய பாடல் என்று நானும் நண்பரும் யோசித்தபோது
–ஜெயபாலனா/சேரனா – “முற்றாத காதலோடு முழுமையைத் தேடுகின்றேன்” என்ற வரிகளைக் கேட்டது இது சேரன் பாடல் என்று ஒரே நேரத்தில் சொன்னது தனிகதை) இதே இசைத்தட்டில் தான் ”பூமியின் அழகே...” என்ற வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதிய பாடலும் உள்ளது. சேரன் ஒரு நாடகத்துக்காக எழுதி (சாதிகளை மறைமுகமாக சொல்லிக்காட்டும் பாடல் என்று வாசித்தேன்) பின் இந்த இசைத்தட்டில் இடம்பெற்ற “எவடம் எவடம்...” பாடலும் உள்ளன. இந்த இசைத் தட்டை எம்மவர்களில் எத்தனை பேர் கேட்டிருப்போம். இந்த இசைத் தட்டில் வரும் மேற் சொன்ன மூன்று பாடல்களையும் கீழே இணைத்துள்ளேன். ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.Evidam.wma -
Bhoomiyin.wma -
இதுபோல எம்மவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் தான் எம்மவர் படைப்புகளை நாம் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை மாறவேண்டும். தேவகாந்தனின் கதாகாலம் நூலகம் என்ற வலைத் தளத்தில் மின் நூலாக இணைக்கப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பினைப் பெற இங்கே அழுத்தவும்.
தேவகாந்தனின் வலைத்தள முகவரி பெற இங்கே அழுத்தவும்
