Friday, July 31, 2009

மறக்க முடியவில்லை. மறக்க முடியவில்லை




தமிழ் சினிமா புதிய பாதையில் செல்கின்றது என்பதை அண்மையில் வெளியான இரண்டு படங்கள் சிறப்பாக காட்டியுள்ளன. இதில் ஒன்றின் போக்கு பயமுறுத்தி இருக்கின்ற அதே வேளை மற்றைய திரைப்படம் மனதை மயில் இறகால் தடவியது போல சுகமளித்திருக்கின்றது. ஒன்று “இது காதல் வரும் பருவம்” மற்றையது “வெயில்”. தான் இயக்கிய படங்களில் தனது நாயகனை சராசரிக்கு பெரியவனாக காட்டிய ஷங்கரின் ரசனை இன்னும் அவரது கை கூடாத கனவான “அழகிய குயிலே” ஆக தான் இருக்கின்றது என்பதை நிரூபித்திருக்கும் படம் இது. வெடுக்கென்றால் கோபமும் முணுக்கென்றால் அழுகையுமாக உணர்ச்சி பிராவகமாய் வாழும் கிராமத்து வெள்ளந்தி மனிதனை இரத்தமும் சதையுமாக காட்டியிருக்கின்றார் வசந்த பாலன். இந்த படத்தின் ஏதாவது ஒரு கட்டம் பெரும்பாலானவர்களின் வாழ்பனுபவமாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் அந்த வெயிலோட விளையாடி…. பாடல் விசா, விமானம் ஏதும் இல்லாமலேயெ என்னை அப்படியே தூக்கி யாழ்ப்பாணத்தில் , உயரப்புலத்தில் தூக்கிபோட்டது. உயரப்புலம் கொக்குவில் சந்திக்கும் குளப்பிட்டி சந்திக்கும் இடையில் உள்ள அழகிய கிராமம். அந்த கிராமத்தின் அழகெல்லாம் ஒரு வீட்டில் தான் இருந்தது. ஆனந்தம் விளையாடும் வீடு என்று கூறும்படி ஆனந்தம் மட்டுமே அங்கே ஆட்சி செய்தது. அது எனது நண்பனின் வீடு. என் உயிர்த்தோழனின் வீடு. விசாகனின் வீடு. ஈழப்போராட்டம் எனக்கு செய்த உதவிகளில் ஒன்று காரைநகரில் இருந்த அவனை இடம்பெயர்த்தி அங்கே அமர்த்தியது. நான், விசாகன், தயா, பாலன், பிரதீவன், வாசன், தெய்வீகன், சயந்தன், மயூரன் என்று ரசனையும் ரகளையும் கூடிய அணி எம்முடையது.

அப்போது எமக்கு 15 வயது இருக்கும். ஏதோ ஒரு வேகத்தில் ஒரு ஸ்டைல் என்று நினைத்து எப்போதும் வாயில் பாக்குடன் வலம் வருவது எமது வழக்கம். இதில் முண்ணனி நான், விசாகன், தயா மூவரும் தான். இந்தியாவில் இருந்து வரும் நிஜாம் பாக்கு அப்போது அங்கே பிரபலம். கொக்குவில் பள்ளத்தடியில் இருக்கும் ஒரு கடையில் ஒரு ரோலாக பாக்கை வாங்கி வைத்து கொள்ளுவோம். எமது வாய்க்குள் நாக்குக்கு உடன்பிறவாத சகோதரன் போல பாக்கு ஒட்டிக்கொண்ட காலம் அது. விசாகனின் அம்மாவை பற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும். அவவுக்கு இரண்டு பிள்ளைகள் என்றாலும் எங்கள் எல்லாரையுமே பிள்ளைகளாகத்தான் அவ பார்த்துக்கொண்டா. இப்போதும் அவவை அம்மா என்று தான் நான் அழைப்பது வழக்கம். ஒரு நாள் அவ விசாகனின் புத்தக (B)பாக்குள் இருந்த பாக்கை சாவகாசமாக போட்டிருக்கிறா. அது தலைய சுத்தி மயக்கம் வரப்பண்ணியிருக்கு. அவவுக்கு நாங்கள் ஏதோ போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாகிட்டோம் என்ட பயம். இதுக்கிடையில் அவ போன டொக்டர் வேற இது ஏதோ பாண்டு நோய் என்ற வருத்தத்தை கொண்டு வரும் என்று சொல்லியிருக்கிறார். அன்றேல்ல இருந்த்து ஸ்கூலுக்கு போக முதல் ஒரு கப் பால் குடிக்க வேணும் என்று கட்டாய சட்டம். நானும் அவன் வீட்ட போய் ஸ்கூலுக்கு போற படியால எனக்கும் ஒரு கப் கிடைக்கும். ஏனென்றா நானும் அவவுக்கு மகன் தானே. ஒன்ற இங்கே சொல்லோனும், இதக்கேட்டெல்லாம் நாங்கள் பாக்கை விடேல்ல, அதுக்கு வேற ஒரு வரலாறு இருக்கு. அது பற்றி பிறகொரு பதிவில்.

அப்ப எங்களுக்கு கிரிக்கட் என்றால் பைத்தியம். BBC தமிழோசையில் ஞாயிறு தோறும் விளையாட்டரங்கம் என்ற ஒரு பகுதி வரும். அதைக்கேட்க என்றே அதை எமது இரவு உணவுக்கான நேரமாக மாற்றிக்கொண்டோம். அப்போது தூத்துக்குடி வானொலியில் இரவு 8:45 முதல் 9:00 வரை மூன்று பாட்டு ஒலிபரப்புவார்கள் பிறகு 9 முதல் 9:15 வரை ஆல் இந்தியா ரேடியோவின் ஆங்கில செய்திகள் பிறகு 9 :15 முதல் 9:45 வரை BBC. இது தவிர இந்திய மற்றும் இலங்கை வானொலிகளில் அப்பப்போ நேரடி வர்ணணை செய்வார்கள். இதை விட்டால் இந்தியாவில் இருந்து வரும் SPORTSTAR சஞ்சிகை. இவை தான் எமது கிரிக்கெட் அறிவை வளார்த்துக்கொண்டிருந்தன. இப்படியான சமயத்தில் எமக்கு ஆபத்பாந்தவனாக அறிமுகமானவன் தான் சுஜீவன். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ஈழநாதம் பத்திரிகையில் தொடர்ந்து கிரிக்கட் விமர்சனங்களை எழுதிவந்த நண்பர் இவர். ஒரு 8 Band ரேடியோவை கையில் பிடித்தபடி சைக்கிளில் போய்வரும்போதும் வர்ணனைகளை கேட்கும் அளவு தீவிர கிரிக்கட் ரசிகன் இவர். போராட்ட பிரச்சாரங்களும் ஆட்சேர்ப்பும் முழுவேகத்தில் நடந்த 95 ன் மத்திய பகுதிகளில் எனது வீடு தேடி வந்து எனக்கு கிரிக்கட் ஸ்கோர்களை சொல்லும் இனிய நண்பர் இவர். ஒரு முறை நானும் அவரும் நானும் சாவக்காடு ஊடாக எனது வீடு நோக்கி போய்க்கொண்டிருந்தோம். அப்போது இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் அடையே டெஸ்ட் போட்டிகள் நடந்துகொண்டிருந்தன. தொடர் 1-1 என்றளவில் இருக்கையில் மூன்றாவது டெஸ்ட்டில் இலங்கையின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகி இருந்த நிலையில் வெற்றிக்கு தேவையான இறுதி இலக்கை விழுத்தி அரவிந்த டீ சில்வா வெற்றியை உறுதி செய்தார். அதை வர்ணணையில் சொன்னது தான் தாமதம், சுஜீவன் சைக்கிளை விட்டு இறங்கி “he is out, he is out, srilanka won” என்று கத்தியது இப்போதும் ஞாபகம் இருக்கின்றது. இந்திய அணி மீதான எனது ஈடுபாடும் இலங்கை அணி மீதான அவரது ஈடுபாடும் அடிக்கடி எம்மை சர்ச்சைகளில் ஈடுபடுத்தினாலும், எனது வாழ்வின் அழிக்கமுடியாத ஞாபக பக்கங்களில் அவருக்கும் ஓரிடம் உண்டு.

இதற்கு பின் ராணுவக் கட்டுபாட்டில் யாழ்ப்பாணம் வந்து அங்கே திரைப்படங்கள் பார்க்க சனம் தொடங்கிய நேரம். அப்போ நாங்கள் பார்த்த இரண்டரை மணி நேர படங்களை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்வோம். எமது சந்திப்புகளை மையப்படுத்தி நாமே அமைத்த ஓலைக்குடிலும் வாசலோரமாக இருந்த பெருமரமும் தான் நாம் அவை கூடும் இடங்கள். அப்போது இந்தியன் திரைப்படம் வெளியாகி யாழ்ப்பாணத்தில் படமும் அதன் பாடல்களுல் ஏகப்பிரபலமாகி இருந்தன. ஒருநாள் நண்பன் ஒருவன் டெலிபோன் மணிபோல்… பாடலை பாடும்போது “காத்திருக்கும் கமலா இவள்தானா” என்று பாடினான். உண்மையில் “ஸாகிர் ஹுசய்ன் தபேலா இவள்தானா” (படத்தில் வரும் இக்காட்சி ஏகப்பிரபலம்??) என்பது தான் சரியான வரிகள். இதைப்பற்றி நாம் கூறியதும் அவன் இல்லை என்று கூறி தான் சொன்ன வரிகளுக்கு விளக்கம் சொன்னான். நேருவின் மனைவியின் பெயர் கமலாவாம் (அது உண்மையும் கூட). சுதந்திரப்போராட்ட காலங்களில் நேரு சிறை சென்ற பொழுதுகளில் எல்லாம் எப்படி கமலா காத்திருந்தாரோ அது போல தனது கடமையில் கண்ணாக திரியும் காதலனை எண்ணி இவளும் காத்திருக்கிறாள் என்பதே அதற்கு அர்த்தமாம் உண்மையில் வைரமுத்துவுக்கு கூட தோன்றாத அற்புதமான கற்பனை இது. இக்காலங்களில் நாம் அடிக்கடி பாடசாலைக்கு மட்டம் போட்டு யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் சந்திரன் என்பவர் நடத்திய மினி சினிமாவில் படம் பார்ப்பது வழக்கம். நாயுடு ஹால் என்பது நாம் அதற்கு வைத்த செல்லப்பெயர். அங்கே மீண்டும் மீண்டும் பார்த்த இருவர், மின்சாரக்கனவு, காலமெல்லாம் காத்திருப்பேன், காலமெல்லம் காதல் வாழ்க, தர்ம சக்கரம், பூவே உனக்காக, உள்ளத்தை அள்ளித்தா பாடல்கள் இப்பொது பார்த்தாலும் அந்நாள் நினைவுகளை மீட்பதாலேயெ நன்றாக இருக்கின்றன. அப்படி ஒருநாள் வேறு ஒரு சினிமாவில் ட்யூசனை மட்டம் போட்டுவிட்டு தளபதி படம் பார்த்தோம். நாம் வெளியில் திரிவதை என் அப்பா கண்டிருக்கிறார். ஆனால் அது எனக்கு தெரியாது. நான் வீடு வந்ததும் அப்பா எப்படி இண்டைக்கு வகுப்பு என்று கேட்டார். நான் உண்மைய சொன்னேன். அவருக்கு அது நல்ல சந்தோசம். பிறகுதான் தான் என்னை கண்டதாகவும், அதற்காகதான் கேட்டதாயும் நான் உண்மைய சொன்னது தனக்கு சந்தோசம் என்றும் கூறினார். வெயில் திரைப்படம் பார்த்தபோது எனது தந்தையின் நிதானமும் பெருந்தன்மையும் தான் நினைவு வந்தது,

இப்படி வெயிலோட விளையாடி ஷெல் அடியோட உறவாடிய எத்தனையோ நினைவுகள் எம் அனைவர் நெஞ்சிலும். அத்தனைக்கும் அச்சாரமாய் விசாகன் இருந்த அந்த அழகிய உயரப்புல வீடு. இவற்றில் இருந்து விலக்கி காலத்தின் கோலம் என்னை கனடாவுக்கு அனுப்பியது. கனடா வந்த நாள் முதல் என் மனதில் இருந்த பெரும் ஆசை எப்படியும் அந்த உயரப்புல வீட்டை எமக்கு உரிமையாக்கி எமது முதுமையை அங்கே கொண்டாடவேண்டும் என்பது. ஆனால் நான் கனடா வர தயாராகி கொழும்பில் இருந்த நேரம் விசாகன் உயரப்புல வாடகை வீட்டை காலி செய்து யாழ்ப்பாணம், கஸ்தூரியார் தெருவுக்கு இடம்பெயர அந்த வீட்டை மேற்பார்வை செய்த அருணகிரி என்பவர் அதை யாருக்கோ விற்று விட்டாராம். அந்த வீட்டை நான் வாங்க நான் தயார், உரிய ஏற்பாடுகளை செய் என்று கூறியும் ஏனோ என் உயிர்த்தோழன் விசாகன் அதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அந்த அழகிய பெரு மரம் கூட தறிக்கப்பட்டு விட்டதாம். எமக்கு வாழ்வின் ஆட்டோகிராப் ஆக இருந்த அம்மரத்தையும் எவனோ ஒரு முட்டாள் மரம் என்று மட்டும் பார்த்திருக்கிறான். (இதை கேட்டவுடனேயே நினைவுகளின் பதிவெடாய் மரம் காட்டப்படும் ஏப்ரல் மாதத்தில் படத்தை வாங்கி சேமித்துவைத்துள்ளேன்.) ராமன் பிறந்து இறந்த பின்பும் கொண்டாடப்படும் அயோத்திபோல அந்த மரம் போன பின்பும் அந்த வீட்டை நான் கொண்டாடுகிறேன். அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும், மண்ணும், கல்லும், புல்லும், புழுவும், பூண்டும் கூட எம் வரலாறு சொல்லும். அதற்காகவேனும் அதனை யார் உரிமைப்படுத்தி இருந்தாலும் எம்மிடம் கொடுத்துவிடுங்கள். எனது உயிரின் ஒரு பாதி அந்த மண்ணில் தான் பரவிக்கிடக்கிறது.






பின்குறிப்பு 1


இது ஒரு மீள் பதிவு




பின் குறிப்பு 2


என் வாழ்வில் சண்டையைக் கூட உரிமையாகக் கூடப்பிடிகலாம் என்ற உரிமையுடன் நான் பழகும் நண்பர்கள் விசாகன், தெய்வீகன், தீபன் என்றா மூவரே. இதில் முன்னவர்கள் இருவரும் வலைப்பதிவர்களாக வெவ்வேறு பெயர்காளுல் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள். இந்தப் பதிவு அதிகமாக விசாகனுக்கும் எனக்குமான நட்பு பற்றி பேசுகின்றது.

Thursday, July 16, 2009

போன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்



சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்திலும் கனடாவிலுமாக கிட்ட தட்ட 20 ஆண்டுகளை அண்மித்த நட்பு. இப்படியான நெருக்கங்களை உணரும்போது தனிப்பட்ட ரசனை நோக்கி பேச்சினை திருப்புவது என் வழக்கம். மெல்ல, தற்கால தமிழ் சினிமா இசை பற்றி பேச்சு திரும்பியது. ஒரு காலத்தின் ஆதர்சமாக இருந்த இளையராஜா மெல்ல ஒதுங்கிய நிலையில் எமது தற்போதைய ரசனை தேர்வுகள் பற்றி பேசினோம். நண்பர் ரஹ்மானை வெகுவாக சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் ரஹ்மானின் இசை பிடித்தம் என்றாலும் கூட இந்நாட்காளில் ரஹ்மானின் இசை இந்தி சினிமாக்களில்தான் சிறப்பாக வெளிப்படுகின்றது என்பது எனது கருத்து. அதே நேரம் யுவன் ஷங்கர் ராஜா மாறுபட்ட பாணிகளை படத்துக்கு படம் பின்பற்றி சிறப்பான இசை அனுபவத்தை தருகின்றார் என்றேன். அப்போது நண்பர் இல்லை, யுவனின் இசையை நாம் ஆதரிக்க கூடாது என்று சில ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை பட்டியலிட்டார். ஒரு மையம் நோக்கிய விவாதமாக இல்லாமல் யுவனை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே அவரது கருத்துகள் அமைவதை இலகுவாகவே அவதானிக்க முடிந்தது. “உங்களுக்கு யுவன் மேல் அப்படி என்ன கோபம்?” என்று நேரடியாகவே கேட்டேன். ”இல்லை, யுவன் க்ளப்புக்கு எல்லாம் போறான். தலையெல்லாம் கலரடிச்சு என்ன கோலமிது? இதெல்லாம் எங்கட பண்பாடில்லை. இவங்கள பார்த்து எங்கட பிள்ளைகளும் கெட்டுப் போயிடும். ரஹ்மானைப் பார். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்” என்றார். நண்பரின் கலாசார காவலர் அவதாரமும், கலாசாரத்தை முன்வைத்து அவர் எடுக்கும் சமூக மதிப்பீடுகளும் தெளிவாகிவிட மேற்கொண்டு எதுவும் பேசாமல் திரும்பினேன்.


2


பொதுவாக தமிழர்கள் பற்றி எனக்கிருக்கும் முக்கிய கவலைகளில் ஒன்று அவர்காளின் ஒழுக்கம் பற்றிய ஓயாத பேச்சு. இந்த ஒழுக்கம் என்பது கூட கலாசாரம் என்பதின் அடிப்படையில்தான் கட்டி எழுப்பப்படுகின்றது. கலாசாரம் என்பது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது. கடந்த இரு நூறாண்டு தமிழர் வரலாற்றை திரும்பிப் பார்த்தாலே அதில் ஒரு காலத்தில் தவிர்க்கவே முடியாத கலாசாரமாக இருந்து இன்று காணாமலே போய்விட்ட எத்தனையோ வழக்கங்களை காணலாம். அப்படி இருக்கின்றபோது ஒரு குறித்த புள்ளியினை சுட்டி இதுதான் தமிழனின் கலாசாரம், இனி மேல் இது மாறவே கூடாது என்று வசை சொற்களும், தூற்றல்களும், அதிகாரமும், அனைத்தும் தாண்டி தமிழின துரோகி என்ற சொல்லும் கொண்டு அடக்குவது என்ன நியாயம் என்று விளங்கவில்லை. வரம்புமீறல்களை சொல்லும் இலக்கியங்களும் சினிமாக்களும் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்படுவதும், எதிர்க்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. எல்லா இலக்கியங்களும், திரைப்படங்களும் அறம் சார்ந்தவையாகத்தான் எழ வேண்டும் என்பதும், நல்லவன் வாழ்வான் என்பதையே சித்தாந்தமாக கொள்ளவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அறம் சார்ந்த இலக்கியங்கள் மூலமாகத்தான் சமுதாய ஒழுக்கம் காக்கப்படும் என்றால், நீதி நெறிக்காலம் என்றே குறிக்கப்படும்படி ஒரு கால கட்டத்தில் இலக்கிய முயற்சிகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கின்றன. திருக்குறள், ஆத்தி சூடி, கொன்றாஇவேந்தன், மூதுரை, நாலடியார் என்றெல்லாம் தமிழில் உள்ள அளவுக்கு வேறு எந்த மொழியிலாவது இலக்கியங்கள் இருக்குமா என்று தெரியாது. இதையெல்லாம் படித்து சமுதாயம் திருந்திவிட்டதா? திரைப்படங்களில் நீங்கள் சொன்னதை கேட்டு வோட்டுத்தானே போட்டார்கள், எவராவது திருந்தினார்களா? என்று சிவாஜி வேடமிட்ட ஒருவர் எம்ஜிஆர் வேடமிட்டவரிடம் கேட்பதாய் ஒரு காட்சி வரும்.


அதிலும் ஒழுக்கம் என்கிற விடயம் பெரும்பாலும் கற்பு நோக்கியும் பெண்கள் நோக்கியும் தான் அதிகம் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இங்கு நடைபெறூம் திருமண விழாக்கள். ஆண்கள் கோட்டும் சூட்டும் போட்டு களைகட்ட பெண்கள் எங்காவது சேலை கட்ட தெரிந்த ஒருவரை தேடிப் பிடித்து சேலை அணிந்து தலையில் பிளாஸ்டி பூ அணிந்து ஒரு நாற்பது பவுண் நகையை காவிக்கொண்டு வந்தால் அது தமிழ் கலாசார காப்பு. சில சமயம் இன்னும் கொஞ்சம் கூடிய தமிழ்ப் பற்றான ஆண்கள் குர்தா அணிந்து தம்மை நிரூபிப்பதும் உண்டு. தப்பி தவறி யாராவது ஒரு பெண் சேலை தவிர்த்து வேறு உடை அணிந்து வந்தால் அந்த பெண்ணின் கற்பு அன்றைய தினம் பூரணமாக விவாதிகப்படும். ஏன் பொதுவாக மாப்பிள்ளைகள் கூட மாப்பிள்ளை சூட் என்றொன்று அணிந்து பாப்பிள்ளைகளாகத்தான் (எமது ஊரில் பொம்மைகளை பாப்பிள்ளைகள் என்றும் சொல்வார்கள், சில சமயங்களில் ஆண்களின் இந்த மணக்கோலம் கம்பீரம் தொலைந்த பொம்மைகள் போன்றும் எனக்குத் தோன்றுவது உண்டு) காட்சி தருகின்றனர். முதலில் யோசித்துப் பாருங்கள். பெண்கள் சேலை அணிந்து தான் கலாசாரத்தை காக்க வேண்டும் என்றால் ஆண்களும் வேட்டிதானே அணியவேண்டும். பிறகெப்படி கோட்டும் சூட்டும் குர்தாவும் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின. தமிழ் நாட்டில் இது போன்ற கலாசார காவலர்களாக தம்மை தொடர்ந்து காண்பித்துவரும் இருவரை கவனித்திருக்கின்றேன். மைக் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் கலாசாரம் பற்றி ஓயாது பேசி, இந்த அரங்கிலே பெண்கள் சுடிதார் அணிந்தும், வேறு ஆடைகள் அணிந்தும் வந்துள்ளார்கள். சேலை அணிந்து வரவில்லை என்றும் உணர்ச்சிவசப்படுவார்கள். அரங்கில் விசிலும் கைதட்டலும் பறக்கும். ஆனால் அவர்கள் ஜீன்ஸும், டி-சர்ட்டும் அணிந்திருப்பார்கள். அப்போது கண்ட முரண் நகையை தொடர்ந்து தருகின்றன எம்மவர் திருமண விழாக்கள். ஏன் இந்த கல்யாண விழாக்களில் மந்திரம் என்று தமிழில் எழுதி வைத்த (பல சமயங்களில் ஆலயங்களில் அர்ச்சகர்கள் சம்ஸ்கிருதத்தை அறிந்திருப்பதில்லை, அவர்கள் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை தமிழிலேயே எழுதி மனனம் செய்கின்றனர், சில சமயங்களில் அவர்கள் தொடர்ச்சியாக மந்திரங்களை புத்தகங்களைப் பார்த்துச் சொல்வார்கள். அந்த புத்தகங்கள் பெரும்பாலும் தமிழிலேயே சம்ஸ்கிருத மந்திரங்களை எழுதி இருக்கின்றன) சம்ஸ்கிருதத்தை உச்சரிக்கின்றார்களே, அதன் அர்த்தத்தை யாராவது சொன்னால் தமிழர் சொல்லும் கற்பொழுக்கம் காற்றோடு போய்விடும். இந்த திருமண மந்திரங்களின் அர்த்தங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (இதன் அர்த்தங்கள் வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே வாசிக்க கூடியவை.) அதை வாசித்துப் பார்த்தால் தமிழர் சொல்லும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தயக்கத்துடன் தான் சொல்லவேண்டிவரும்.

3


அது போல மது அருந்தும் பழக்கம். எனக்கு தெரிந்து ஆண்களில் சிறுபான்மையானோர் பிறர் தெரிய குடிப்போர். மீதிப்பேர் பிறர் அறியாமல் ரகசியமாக குடிப்போர். (மிக குறைந்த பங்கானோர் குடிப்பழக்கம் அறவே இல்லாதார்) ஆனால் எல்லாரும் குடியை பற்றி கேவலமான செயல் என்ற மனோநிலையுடனேயே இருக்கின்றனர். குடியினால் வரும் தீங்குகளுக்கு நான் எதிர்காரணம் சொல்லவில்லை. அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் குடிப்பழக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமுதாய பழக்கம் என்ற வகையில் அதனை ஏற்றுப் போவது முறையான தீர்வாக இருக்கும். எனக்கு தெரிந்த வட்டத்தில் நான் பார்த்தபோது மது அருந்தும் பழக்கத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தின் இளையோரைவிட மது அருந்துவதை முற்றாக மறுக்கும் குடும்பத்தின் இளையோரே அதிகளவு மதுவுக்கு அடிமையாகின்றனர். வீட்டில் மது அருந்தும் பழக்கம் மறுக்கப்படும்போது அவர்க்அள் நண்பர்களுடன் சேர்ந்து காருக்குள் வைத்து மது அருந்துகின்றனர். ஓட்டுனரும் மது அருந்துபவராகவே பெருமளவு இருக்க குடி போதையில் வாகனம் செலுத்தி பாதிப்புக்குள்ளாகின்றனர். அதுபோல கோடை காலம் தொடங்கிவிட்டால் மக்கள் இளைப்பாறவும், மன அமைதி பெறவும் என்று பராமரிக்கப்படும் பூங்காக்களில் நாண்பர்களுடன் கூட்டமாக மது அருந்தி அந்த பியர் போத்தல்களை அதே பூங்காவிலேயே எறிந்து உடைத்து, அவ்வப்போது அனுமதி இல்லாத பொது இடத்தில் மது அருந்தியதற்காக காவல் துறையால் தண்டிக்கபட்டு தடுமாறுகின்றனர். கனடாவில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் உள்ள எந்த ஒரு பூங்காவுக்கு சென்றாலும் கூட்டமாய் நின்று மது அருந்தும் தமிழ் இளையோரையும், ஆங்காங்கே உடைந்து கிடைக்கும் பியர் போத்தல்களையும் காணலாம். இளையோர் என்று மட்டும் சொல்லி கடந்து விடாமல் திருமணமாகி பிள்ளை பெற்றோர் கூட இப்படியே நடந்துகொள்ளுகின்றனர். இதே நேரம் மற்றைய சமூகத்தினரும் தமிழர்களில் சிலரும் தமது பிள்ளைகளுக்கான சுதந்திரத்தை வீட்டில் தருவதன் மூலம் தம் பிள்ளைகள் தம் கண்காணிப்பின் கீழேயே அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் வெளியை உருவாக்கித் தருகின்றனர். என் சொந்த அனுபவத்தில் கடந்த ஆண்டு நத்தார் காலப்பகுதியில் எனக்கு தெரிந்த ஒரு இளைஞன் ஒரு விருந்தொன்றில் தன் சக பணியாளர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளான். பல்கலைக் கழகம் முடித்து கௌரவமான சம்பளத்துடன் நல்ல உத்தியோகத்தில் இருப்பவன் அவன். அவனது தாயார் செல் பேசியில் அழைக்க அவன் தான் சற்று மது அருந்தியுள்ளதாயும், தனது அலுவலகம் ஏற்பாடு செய்த இடத்திலேயே தங்கவுள்ளதாயும் சொல்லியுள்ளான். இதனை ஏற்காத அவனது தாய் “நீ உடனே வராவிட்டால் நான் மருந்து குடிச்சு சாவன்” என்றூ சொல்ல த்னது காரை எடுத்து போனவன் இன்னொரு வாகன ஓட்டுனரின் தவறால் ஏற்பட்ட விபத்தில் சிக்குண்டு கடுமையாக காயப்பட்டு, போலிசாராலும் கடுமையாக தண்டிக்கப்பட்டு தன் வசந்தங்கள் அத்தனையும் தீய்க்கப்பட்ட நிலையில் உள்ளான். இந்த நிலைக்கு அவனது தாயின் அணுமுறை தான முக்கிய பொறுப்பேற்கவேண்டும்.


4


இதுபோல பெண்களை அடிமைப்படுத்துவதன் மூலமாயே தம் ஆண்மையை நிறுவும் மனப்பாங்கும் பரவலாக உள்ளது. இந்த மன நிலையின் ஒரு வெளிப்பாடாகவே புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை அல்லது இந்தியா சென்று பெண்பார்த்து மணம் செய்துவருவதும் இருக்கின்றது. புலம் பெயர் வாழ்வில் எனக்கு நெருக்கமான நண்பன் ஒருவன் அண்மையில் இந்தியா சென்று மணம் புரிந்துவந்தான். அவனிடம் “கனடாவில் 15 ஆண்டுகள் இருக்கும் உனக்கும் புதிதாக நீ கனடாவிற்கு அழைத்து வரப்போகும் பெண்ணிற்கும் கலாசார வித்தியாசம் இருக்காதா” என்றேன். “இனி அவ இங்கே தானே இருக்கப் போறா, அதனால் எனது வாழ்க்கை முறைக்கு அவரும் தன்னை தயாராக்கிவிடவேண்டும்” என்றான். “அந்த பெண்ணிற்கு எந்த உறவினரும் நண்பர்களும் இங்கில்லாதபோது அவரது தனிமை எவ்வளவு கொடூரமாயிருக்கும்” என்றேன். “இல்லை உனது காதலி, (வேறு சில நண்பர்களின் பெயரை சொல்லி) யின் மனைவியர்/காதலியரை அறிமுகம் செய்வேன் அவர்களுடன் அவர் பழகலாம் தானே, எனது உறவினர்கள் நிறையப்பேர் உள்ளனர். அவர்களுடனும் பழகலாம் தானே” என்றான். நண்பன் என்ற வகையில் மிகப்பெரிய நம்பிக்கைகளை உருவாக்கிய அவன் சக மனிதன் என்றளவில் மிகப் பெரிய அவநம்பிக்கைகளை உருவாக்கினான். இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் உட்கார்ந்திருந்தது. அதை உணார்ந்தவனாக “பொம்பிளைகளுக்கு சம உரிமை என்று யோசிச்சா நாங்கள் சந்தோஷமா இருக்கேலாதடா, சில நேரங்களில் இப்படித்தான் நாங்கள் மூளையை பாவிக்கோனும்” என்றான். என்னால் எதையுமே சொல்ல முடியவில்லை.


ஒழுக்கத்தின் மற்றும் கலாசாரத்தின் பேரால் எம் சமூகத்தில் ஆணாதிக்கம்தான் தொடர்ந்து நிறுவப்படுகின்றது. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி..., எந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவி..., யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்...., என்றெல்லாம் பாரதி பாடியதை நினைவு கொள்பவர்கள் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைய்யை கொளுத்துவோம் என்று பாடியதை மட்டும் வசதியாக மறந்துவிட்டார்கள். இதனால் தமிழர்கள் ஒரு அதிகாரம் செலுத்துபவனுக்கும் ஒரு அடிமைக்குமாகவே பிறக்கின்றார்கள். வளர்ந்து நாளாக ஒரு ஆதிக்க வம்சமாக அல்லது ஒரு அடிமை மனத்தவனாக உருவெடுக்கின்றனர். ஒவ்வொரு தமிழனும் தன்னளவில் விடுதலை பெறும்வரை அல்லது அப்படி பெறும் வெளியை நாம் உருவாக்காதவரை தமிழின விடுதலை என்பது ஊமைகள் கூடி வைத்த கவியரங்கமாகவே இருக்கும்


நன்றி - தலையங்கத்தில் வரும் போன நூற்றாண்டில் செத்த மூளை என்பது சாரு நிவேதிதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து பெறப்பட்டது

Wednesday, July 8, 2009

நவாலி தேவாலயப் படுகொலைகள் - 14 ஆண்டு நினைவுகள்

நன்றி - கோடை இணைய இலக்கிய இதழ்

பிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவு சொல்லை ஞாபகப்படுத்த கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்த காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை.

அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில் இருந்துவிட்டு வந்திருந்ததால் எனது பேச்சு தமிழ் கூட அவர்கள் பேசிய தமிழுடன் வேறுபட்டு இருந்திருக்கலாம். இதனால் பள்ளிக்கூடம் போவதே ஏதோ சிறைக்கு போவதை போன்று இருந்தது. இந்த நாட்களில் தான் பிரதீஸ் அறிமுகம் ஆனான். ஏதோ அவனுடனும் துளசி(1) என்ற இன்னொருவனிடமும் தான் கொஞ்சம் பழக ஆரம்பித்தேன்.

எப்போதும் அந்த பள்ளிக்கூட நண்பர்களை விட்டு விலகியே இருந்த என்னை அவன் மெல்ல மெல்ல பூமிக்கு இழுத்துவந்தான். ஒரு மழை நாளில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் வராமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு கற்களை எப்படி காந்தம் ஆக்குவது(2) என்ற ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லி தந்தான். அந்த வயதிலேயே அவனுக்கு நிறைய விடயங்கள் தெரிந்திருந்தன. பூக்களை அவற்றின் காம்பை பிடித்து கிள்ளும்போது அவை விழும் விதத்தில் இருந்து ஆண் பூவா பெண் பூவா என்று கண்டறியும் வித்தையை(2) ஒரு முறை எனக்கு பள்ளிக்கூடம் விட்டு வரும்போது பொறுமையாக சொல்லி தந்தான்.

அப்போதெல்லாம் அவன் ஒரு சிறிய அளவிலான சூட் கேசில்தான் பள்ளிக்கூடத்துக்கு புத்தகம் கொண்டு வருவான். நானும் எனது அப்பாவிடம் அடம் பிடித்து அது மாதிரி ஒரு சூட்கேஸ் வாங்கிக்கொண்டேன். அவனது சொந்தக்காரை யாரோ அவனுக்கு கொடுத்த ஒரு தோடம் (orange) பழத்தின் அரைவாசிய அவன் எனக்கு தந்தான். அதை ஒரு பேப்பரால் சுற்றி அந்த சூட்கேசில் வைத்திருந்தேன். சனி, ஞாயிறுகளில் வீட்டில் எடுத்து உண்டால் யர் தந்தது என்று கேட்பார்களோ என்று பயந்து அதை ஒளித்தே வைத்திருந்ததில் எனது புத்தகம் எல்லாம் தோடை வாசம் அடிக்க தொடங்கியது. இந்த நேரம் பார்த்து காந்தம், விளையாட்டு பொருட்களில் வரும் மோட்டார், சைக்கில் பாகங்கள் என்று சேர்க்கும் ஆசையும் வந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்ட போற வழியில் அரசடி சந்தி கடந்தவுடன் வரதனின் சைக்கில் கடை வரும். கடைக்கு முன்னால இருந்த நிலத்தில் பழைய சைக்கில் போல்ஸ், நட்டுகள் எல்லாம் எறிந்திருகும். நாங்கள் அதை பொறுக்கி சேர்ப்போம். என்னிலும் நிறைய உற்சாகமான பிரதீஸ் நிறைய சேர்த்து எனக்கும் பாதி தருவான். ஒரு முறை ஒரு பழைய விளையாட்டு ஹெலிகொப்டரை உடைத்து அதில் இருந்த காந்தத்தை இருவரும் பகிர்ந்து எடுத்தோம். எம்மிடம் இருந்த எல்லா இரும்பு உதிரிபாகங்களுக்கும் காந்தத்தை ஏற்றவேண்டும் என்பது எமது திட்டம்.

அப்போது நான் ஒரு மோதிரம் போட்டிருந்தேன். அடிக்கடி பிரதீஸ் அதை வாங்கி அணிந்து பார்ப்பான். ஒரு நாள் நான் அவனையே அதை வைத்திருக்க சொல்லிவிட்டேன். பிறகு இருவரும் வரதன் கடையை தாண்டி, ரோட்டோரத்தில் காயப்போட்டிருக்கிற எள்ளை(3) எல்லாம் எடுத்து சாப்பிட்டபடி வீட்ட போனோம். கொஞ்ச நேரத்தால எங்கட வீட்ட பிரதீஸ் அவன்ட அம்மாவோட வந்தி நிற்கிறான். ஏனோ தெரியேல்லை, அந்த மோதிரத்தை அவன் என்ட அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிட்டான். அதை பற்றி அவனிடம் அடுத்த நாள் கேட்கோணும் என்றிருந்தேன்.

இதற்குபிறகு சிறிது நாளில் அந்த ஆண்டும் முடிய நான் மிக சாதாரணமான புள்ளிகளையே பெற்றதால் என்னை சுதுமலையில் இருந்த எனது அப்பம்மாவீட்டிற்கு அனுப்பி அங்கு இருந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள் இப்படியே மெல்ல மெல்ல பிரதீஸ்டனான உறவு அப்போதைக்கு முடிவடைந்தது.


இதற்கு பிறகு அவனுடன் மீண்டும் பழக தொடங்கியது 10 வருடம் கழித்து, நானும் அவனும் ஒரே டியூஷனில் படிக்கும்போது. அவன் நிறைய வளர்ந்திருந்தான். பெரிதாக மீசை கூட வந்திருந்தது. நிறைய சதை போட்டிருந்தான். முன்பிருந்த நெருக்கம் தொலைந்துபோயிருந்தாலும் அன்பாக கதைத்தான். டியூஷன் முடிய அடிக்கடி ஒன்றாக வருவோம். நவாலியில் எம் இருவர் வீட்டிற்கும் நடுவில் இருந்த எனது கல்லூரி தோழனும்(4) அவனும் மிக நெருக்கமாகியிருந்தார்கள். சந்தோஷமாக நாட்கள் போய் கொண்டிருக்கும்போது, அந்த எனது கல்லூரி தோழனுக்கும் எனது தோழன் ஒருவனுக்கும் ஏதோ சில சிறுபிள்ளை கோபங்கள் வர நட்பு இரண்டு அணியாக பிரிந்தது. எனது நண்பன் பக்க நியாயங்களை ஏற்று நான் பிரதீஸுடனும் மற்ற நண்பனுடனும் கதைப்பதை தவிர்த்தேன். ஒரு நாள் டியூஷன்(5) முடிய நவாலி அரசடி சந்தியில் நாகேஸ் கடையில் பொறித்த வேர்கடலை வாங்கி கொறித்தபடி வீடு செல்லும்போது பிரதீஸும் மற்றைய நண்பனும் அருகில் வந்து “எமக்கும் உனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை, ஏன் நீ எம்மோட கதைக்கிறதில்லை” என்று கேட்டனர். ஒன்றுமில்லை என்றுவிட்டு நான் என் பாட்டில் போவிட்டேன். ஆனால் ஏனோ சின்ன வயது பிரதீஸின் ஞாபகங்கள் நிறைய வந்தன.


இதற்கு பிறகு பிரதீஸை நான் சந்தித்தது ஜூலை 9, 95ல். முதல் நாள் யாழ் இந்துக் கல்லூரி விளையாட்டு போட்டியை பார்த்து அதில் சாம்பியன் கிண்ணத்தை தவற விட்ட நண்பன் அனுஷனுக்கு(6) நானும் தயா என்ற நண்பனும் ஆறுதல் சொல்லிவிட்டு வீட்ட வர நேரமாகிவிட்டது. விடிய டியூஷனுக்கு போய்ட்டு வாறன். ஆமி முன்னேற அராலி பக்கத்தால முன்னேறுகிறான் என்று சனமு இடம்பெயர வெளிக்கிட்டுது. ரேடியோ எல்லாம் எதோ முன்னேறிபாய்ச்சல் என்று அலறுது. டியூஷன் முடிஞ்சு போனா உயரப்புலம் பிள்ளையார் கோயில், மூத்த நாயனார் கோயில், சிதம்பர பிள்ளையார் கோயில் என்று எல்லா இடமும் இடம்பெயர்ந்த சனம். நவாலி சர்ச் முன்னால் பெரிய கூட்டம். முன்னுக்கு இருந்த இந்து கோயிலிலும் நிறைய சனம். ஊரில் எனக்கு நன்கு தெரிந்த சனம் வேற நின்று உதவிசெய்து கொண்டிருந்தது. சர்ச்சுக்கு முன்னால் பிரதீஸ் அவன் ஒன்று விட்ட தமக்கையுடன் நின்றான். அவ அப்ப ஊர் விதானை. அதால இடம்பெயர்ந்த சனத்தின் விபரங்களை திரட்டி அவர்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர். நிறைய நாட்களின் பின்னர் அவனுடன் மனம் விட்டு கதைத்தேன். தூரத்தில் ஷெல் விழுந்து வெடிக்கும் ஓசைகள் கேட்க கேட்க அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சம்பந்தமேயில்லாமல் சின்ன வயசில் நான் கொடுத்த மோதிரம் பற்றி சொன்னேன். இதை இப்ப சொன்னால் பெடியள் பகிடி பண்ணுவாங்களடா என்று சிரித்தான். சில நாட்களின் முன்னர்தான் தனது தகப்பன் சவூதியில் இருந்து நீண்ட நாட்களின் பின்ன்ர் ஊர் வந்திருப்பதாக சொன்னான். குண்டுகள் வெடிக்கும் சத்தம் நெருங்குவதுபோல கேட்க, என்ன நடக்கும் என்று கேட்டேன். விட மாட்டங்களடா. ஏதாவது செய்வாங்கள் பாரன் என்றான். சிறிது நேரத்தில் விடைபெற்று வீட்ட வந்துவிட்டேன்.


நவாலிக்கு அருகில் குண்டுகள் விழ தொடங்க நாமும் சுதுமலை நோக்கி சென்றுவிட்டோம். பின்னேரம் ஒரு நான்கரை மணி அப்படி இருக்கும் தொடர்ச்சியான சத்தம். புக்காராவில்(7) வந்து ராணுவம் குண்டு போட்டு நிறைய சனம் செத்துவிட்டது(7) என்று ரோட்டால சனம் குளறிக்கொண்டு ஓடி திரியிது. எதுவுமே செய்யமுடியாத நிலை. இரண்டு நாட்களின் பின்னர் செத்தவர்கள் பேர் பேப்பரில் வருகிது. அதில் அவனது அக்காவின் பெயருடன் அவனது பெயரும். என் நினைவுகள் எல்லாம் ஒரு வெட்ட வெளியில் குவிக்கப்பட்டு ஒரு கணம் செயலிழந்தேன். கிட்ட தட்ட நான் யாழ்ப்பாணம் வந்த நாள் முதல் அறிமுகமான நண்பன். மற்றவர்கள் முன்னர் உணர்ச்சிகளை காட்டாமல் கழிவறை சென்றேன். என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அழு அழு என்று அழுதேன். இனிய நண்பன் ஒருவன் இறந்துவிட்டன் என்று, வீணாக கதையாமல் விட்டு விட்டோமே என்று, அவன் சாவதற்கு கொஞ்ச நேரம் முன்னர் கூட கதைத்துள்ளோமே என்று எத்தனையோ எண்ணி எண்ணி அழுதேன். கிட்ட தட்ட 150 க்கு மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்கள். நிறைய பேரின் உடல்களை எடுக்க முடியாமல் கட்டட இடிபாடுகளின் இடையேயே மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்தி எரித்தார்கள். அவனது உடலை எடுக்க முடிந்ததாம். ஆனால் தலை வெடித்து பிளந்திருந்த அவனது உடலை பார்த்து அவனது தந்தை கதறி கதறி அழுதாராம்.

இதற்கு பிறகு எத்தனையோ நடந்துவிட்டது. எமது ஊரில் இருந்து நிறைய பேர் விடுதலை போராட்டத்தில் குதித்தார்கள். அந்த பகுதியில் கிட்ட தட்ட எல்லா வீட்டிலும் ஒரு சாவு விழுந்திருந்தது. பாலகுமார் என்ற உதைபந்தாட்ட வீரன் தன் கால்களை இழந்தான். ரெக்ஸன் என்கிற நண்பனின் தங்கை கொல்லப்பட்டாள். நிறைய இழப்புகள். ரத்தங்கள்.


இப்போதும் கையில் ஒரு மோதிரம் அணிந்துள்ளேன். எப்போதும் பேசாமல் இருக்கும் மோதிரம் திடீரென்று கையை உறுத்துவதுபோல தோன்றும்போது பிரதீஸுடன் கடைசியாக கதைத்த ஞாபகம் வரும்.


(1) துளசி – இவன் மானிப்பாயை சேர்ந்தவன்। விடுதலை போராட்டத்தில் குதித்து அண்மையில் வீரமரணம் அடைந்தவன்
(2) புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடும் என்பதுபோல எமது பால்யகால நம்பிக்கைகள்।

(3) நவாலி, ஆனைக்கோட்டை பகுதிகள் நல்லெண்ணெய், அதாவது எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் செய்வதில் பேர்போனவை। அதனால் பல வீடுகளின் வாசலில் காய் விடப்பட்ட எள்ளும், காதுகளில் விழும் செக்கிழுக்கபடும் ஓசையும் எப்போதும் நிறைந்திருக்கும்

(4) இப்போதும் இவனுடன் அடிக்கடி கதைப்பதுண்டு। திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் நவாலியில் வசித்து வருகிறான்.

(5) இந்த டியூஷன் கால நினைவுகள் பற்றி முன்பு ஒரு முறை எழுதியுள்ளேன். அதன் சுட்டியை பெற இங்கே அழுத்தவும்।

(6) அன்று அவன் பிறந்த தினம் வேறு, இதனால் அவன் சகஜ நிலைக்கு வரும்வரை காத்திருந்தோம்।

(7) புக்காரா (Pucara) இவை ஆர்ஜெந்தீன தயாரிப்பு யுத்த விமானங்கள்। 90களின் மத்திய பகுதிகளில் பெருமளவு இன அழிப்பில் பயன்பட்டவை. பின்னர் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தவகை யுத்த விமானத்துடன் அப்போது குண்டுகளை வீசிய விமானியும் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

(8) கிட்ட தட்ட 150 பேர் செத்தனர். இது பற்றிய பதிவுகள்
http://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing
http://www.tamilnation.org/indictment/genocide95/gen95012.htm
http://www.ltteps.org/?view=1750&folder=25






அத்தினாபுரத்துப் பெண்கள் - பாகம் 2

அத்தினாபுரத்துப் பெண்களும், பாரதம் பேசும் கதைகளும் என்று தேவகாந்தனின் கதாகாலத்தை முன்வைத்து சென்ற வாரம் எழுதிய பதிவிலே என்னை அறியாமலே பெருந்தவறொன்றை செய்துவிட்டேன். கதாகாலம் என்பதற்குப் பதிலாக அசிரத்தையால் மூன்று இடங்களில் கதாவிலாசம் என்று இடம்பெற்றுவிட்டது. வாசித்தவர்கள் கூட இதுபற்றி தெரிவிக்கவில்லை. கடைசியில் தேவகாந்தனே இதை சுட்டிக்காட்டும்படி ஆகிவிட்டது. அக்கறை இன்மையால் இடம்பெற்ற மிகப்பெரும் தவறு இது. இது போன்ற தவறுகள் இனியும் இடம்பெறக்கூடாது என்று உறுதியும், எழுத்தாளர் தேவகாந்தனிடம் மன்னிப்பும் கேட்டபடி இந்த பகுதிக்குள் புகுகின்றேன்.


அம்பை
அம்பை என்ற பெயர் மீது எனக்கு பாரதக் கதை தாண்டியும் மிகப்பெரும் ஈடுபாடு. தேர்ந்த பெண்ணியவாதியும், எழுத்தாளருமான அம்பையின் ஆளுமைகள் பற்றி அதிகம் அறிந்திருக்கின்றேன். அவருடைய கதைகளை நான் வாசித்தது குறைவென்றபோதும் கனடாவில் கவிஞர் திருமாவளவனின் வீட்டில் இடம்பெற்ற இருள் யாழி புத்தக அறிமுக சந்திப்பிற்கு அம்பை வந்திருந்தபோது ஈழப்பிரச்சனை சம்பந்தமான பலவிடயங்கள் தனக்கு முழுமையாக தெரியாது என்று ஒப்புக்கொண்டு, அக்கறையுடன் நிறைய விடயங்களை கேட்டறிந்துகொண்டார். இந்த நேர்மை எனக்கு அதிகம் பிடித்திருந்தது. ஈழப் பிரச்சனை பற்றி அறிந்திருந்தும் அதை பற்றிப் பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பவர்களையும், எதுவும் தெரியாமல் வெறும் தத்துவங்கள் ஊடாக மட்டுமே ஈழப் பிரச்சனை பற்றி அணுகுபவர்களையும், ஒரு சித்தாந்தத்தை உள்வாங்கி / சித்தாந்தத்தால் உள்வாங்கப்பட்டு (இரண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை கவனிக்கவும்) அந்த சித்தாந்தத்தின் வழி சப்பைக்கட்டு நியாயங்களை சொல்பவர்களையுமே பெரிதளவு கண்டுள்ள மோசமான சூழ்நிலையில் உண்மையான முகங்கள் சிலவற்றை காணும்போது பிரமிப்பு வருவது வழமை தானே?. அந்த வகையில் லக்ஷ்மி என்கிற பெண் அம்பை என்கிற பெண்ணியப் போராளியாக மாறும்போது தேர்ந்தெடுத்த ”அம்பை” என்கிற பெயர்கூட பெண்மையின் எதிர்க்குரலாக பாரதக்கதையில் முதலில் பதியப்பட்ட பெயரான சிகண்டி என்று பிற்காலத்தில் அறியப்பட்ட அம்பையின் பெயர்தான் என்பது அதிகம் பொருத்தமானதாகவே படுகின்றது.


அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று சகோதரிகளின் தந்தையான காசிராஜன் தன் பிள்ளைகளுக்கு நடத்திய சுயம்வரத்தில் அழைப்பின்றிப் போய் மூன்று பெண்களையும் கவர்ந்துவருகின்றான் பீஷ்மன். அந்த நேரம் அம்பை பிரம்மத்தன் என்ற பிறிதொரு மன்னன் மேல் தான் கொண்ட காதல் பற்றி சொல்ல பீஷ்மனும் அவளை பிரம்மத்தத்தனிடம் அனுப்பி வைக்கின்றான். பிறிதொருவனால் கவர்ந்து செல்லப்பட்ட பெண்ணை தன்னால் மணுமுடிக்க முடியாதென்று அவன் அவளை திருப்பி அனுப்ப தன் பிறந்த தேசம் செல்கிறாள் அம்பை. பீஷ்மனால் கவர்ந்து செல்லப்பட்ட அவள் இனி பீஷ்மனுடன் இருப்பதே முறை என்று அவள் தந்தை காசிராஜனும் திருப்பி அனுப்ப தன்னை ஏற்குமாறு பீஷ்மனிடம் வேண்டுகிறாள் அம்பை. ஏற்கனவே தான் தன் சிற்றன்னைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை (பிரம்மசாரிய விரதம்) சுட்டிக்காட்டி அவளை ஏற்க மறுக்கிறான் தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது. (இத்தனை அறம் காத்த பீஷ்மர் தான் பின்னர் துரியோதனின் அவையிலே திரௌபதி துகிலுரியப்பட்ட போது அமைதி காக்கிறார்.). இதன் பின் தான் இந்த நிலைக்கு வர காரணமான பீஷ்மனை வெல்வேன் என்று சபதமிட்டு வனமேகி, கடுமையான பயிற்சிகள் மூலம் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை உடலில் ஏற்றி யதுசேன மன்னனிடம் அடைக்கலம் பெற்று சிகண்டி என்ற பெயரில் உறுமீன் வரக் காத்திருகிறாள் அம்பை. சென்ற பதிவில் நான் சொன்னது போல பாரதக் கதையின் தனக்கு இழைக்கப்பட்ட் கொடுமகைகளுக்கெதிரான பலவீனமான எதிர்க்குரலாக காந்தாரி தன் கண்கள் மறைத்ததை சொன்னென். அதன் தொடர்ச்சியாக அதே கொடுமைகளுக்கெதிரான பலமான எதிர்க்குரலாக அம்பையே தெரிகிறாள். (திரௌபதியை இதில் எதிர்க்குரலாக சொல்லவே முடியாது அவள் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தன் கணவர்கள் மூலமாக பழிவாங்கிய, சராசரி தமிழ் திரைப்பட கதாநாயகி போன்றவளே). இங்கு மூலக் கதையில் அம்பை தவமிருந்து பீஷ்மனை கொல்ல வரமும், ஆணாக மாற வரமும் பெற்றதாய் சொல்ல தேவகாந்தன் ”அம்பை, தபோ கிருத்தியங்களாலும் அசுர அஸ்திர சாதகங்களாலும் தன் பெண் தன்மையையே அழித்தாள். மிருதுவான மேனி வன்மை கண்டது.......................................பெண்ணின் மாறா அவயத்துடன் ஆணாய் ஓர் அபூர்வ அடைதல் – பக் 11” என்று நடைமுறை யதார்த்தத்துடன் கூறுகிறார். அதுபோல போரிலே சிகண்டி பீஷ்மன் மீது அம்பு தொடுக்க தொடங்க அவள் அடிப்படையில் ஒரு பெண் என்பதால் அவளுடன் போரிடல் (அக்கால வழக்கப்படி) முறையில்லை என்பதால் சும்மாயிருந்த பீஷ்மர் மீது அம்பெய்து சிகண்டி கொண்டான் என்று மூலத்தில் சொல்லப்பட கதாகாலம் “சிகண்டியின் அம்புகள் காற்றைத் துளைக்கத் துவங்கின. சிகண்டிக்குள் அம்பையை கண்டிருப்பார் பீஷ்மர். நெஞ்சுக்குள் ஒரு மூலையில் இருந்த வலி மறு படி எழுந்திருக்கும்” என்று குற்ற உணர்ச்சியின் கைதியாய் பீஷ்மர் இருந்தபோதே கொல்லப்பட்டதாய் சொல்லும்.


சகாதேவன்
பாண்டவ புத்திரர்களில் பிறவி ஞானி என்று அழைக்கப்படுபவன். பெரியன்னை குந்தியின் தூற்றல்களாலே தாய் மாத்ரி உடன் கட்டை ஏறுவதன் சாட்சியாக இருந்த சோகம் கைகூடியவன். அந்த சோகமும், குந்தி மேல் இயல்பாக ஏற்பட்ட வெறுப்பினால் ஏற்பட்ட தனிமை உணர்வுமே அவனை ஞானியாக்கிற்று என்று கதாகாலம் சொல்வதை மறுக்கமுடியவில்லை. இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால் ஞானியான சகாதேவனே ஒரு இடத்தில், ஐவருக்கும் சம உரிமையாக பங்கிடப்பட்ட திரௌபதியிடன் தனக்கான உரிமைகள் குறைவாக இருந்ததாக வருந்துகிறான். அஞ்ஞாத வாசம் முடிந்த பின்னர் திரௌபதியும் சகாதேவனும் சந்திக்கும் பகுதி ஒன்றை இலங்கையின் கிழக்குமாகாண நவீன கதை சொல்லி சொல்வதாக கூத்து வடிவிலே சொல்கிறார் தேவகாந்தன். துரியோதன் ரகசியமாக சகாதேவனை சந்தித்ததையிட்டு திரௌபதி சகாதேவன் மேல் சந்தேகம் கொல்லும்போதும் பின்னர் தன் தாயிழந்த துயரை ஒரு மகளை ஈன்றிருப்பின் அவள் வடிவிலே சிறிதேனும் மறந்திருப்பேன் என்று சகாதேவன் சொல்லும்போதும் சக மனிதர்களுக்கேயான குணவியல்புகள் நிறைந்த கதாபாத்திரங்களாகவே அவர்களை காணமுடிகின்றது.

இதைவிட முக்கியமாக விராட நாட்டிலே அஞ்ஞாத வாசம் முடியும் முன்னரே அர்ச்சுணன் வெளிப்பட்டான் என்று அறிந்தும் திரௌபதிக்காக அதை சகாதேவன் மறைக்கிறான். அதை தொடர்ந்தே இந்த சந்திப்பில் சகாதேவனை விட்டு விலகியே இருந்த திரௌபதி அவனுடன் கூடுகிறாள். இதை சகாதேவன் “அர்ச்சுணன் வெளிப்பாட்டில் காலக் குறைபாட்டை / நான் மடுத்துக் கட்டுதற்கே / தன்னை எனக்குத் தந்தாளென்று / எனக்குத் தெரியாதோ” என்கிறான். பாரதப் போர் நடந்து தன் சபதம் நிறைவேற வேண்டும் என்பதில் திரௌபதி எவ்வளவு உறுதியாக இருந்தாள் என்றும் இந்த அத்தியாயம் உறுதிப்படுத்துகின்றது.


தருமன் / யுதிஷ்டிரன்.
பாரதக் கதையை வாசிக்க தொடங்கிய நட்களில் இருந்து என்னுள்ளே அதிகளவு கேள்விகளை எழுப்பிய கதா பாத்திரம் தருமனின் கதாபாத்திரம். பாண்டவர்கள் ஐவருள்ளும் தருமன் தவிர ஏனைய நால்வரும் தமக்கேயுரிய தனித்திறன்களை கொண்டவர்கள். அர்ச்சுணன், பீமன் போன்றோர் பலவீனங்களையும் கொண்டவர்கள். ஆனால் தர்மனைப் பொறுத்தவரை அவன் தனித்திறான் என்று எதையுமே கொண்டிருக்கவில்லை. ஆனால் அவன் பலவீனமான சூதாட்டம் குருக்ஷேத்திரப் போருக்கே காரணமானது. இங்கு முக்கியமாக காணாவேண்டிய விடயம், அர்ச்சுணனும் பீமனும் தத்தம் பலவீனங்களால் வந்த எல்லா துன்பங்களையும் தாமாகவே எதிர்கொள்ள தர்மன், தான் சூதாடி தோற்றபோது தன் தோல்வியின் பங்காளிகளாக தன் தம்பியரையும், திரௌபதியையும் ஆக்கிக்கொண்டான். பாரதப் போர் நடந்தபோது கூட போர்க்களத்தில் தர்மனின் வெற்றியாக எதையும் பதிவாக்கப்படவில்லை. ஒரு தலைவனாக அவன் போரைக் கொண்டு நடத்தக்கூட இல்லை. பாரதப் போரில் அவன் பெயர் இடம்பெறுவது அவன் சொன்ன “அஸ்வத்தாம ஹத” என்பதுவே. கதாகாலத்தில் இந்தக் கட்டத்தை சொல்லும் கதை சொல்லி “இதுவரை யுதிஷ்டிரன் என்று அழைத்தவன், தர்மம் தவறீயதின் குறியீடாக இனி அவன் தர்மன் என்றழைப்பேன்” என்கிறான். தர்மன் தர்மம் காத்து வாழ்ந்தான் என்பதைவிட, தன் பக்க பலங்களை சரியாக பாவித்து தன்னை வளாமாக்கிக் கொண்டான் என்பதே பொறுத்தமாக இருக்கும். தன் திறன் பாவித்து தான் வென்ற திரௌபதி மீது தன்னால் முழுமையான ஆளுமை செலுத்தப்படாமல் போனதே அர்ச்சுணன் கட்டுக்கடங்கா காமம் கொண்டலையக் காரணம் என்றும், குருக்ஷேத்திரப் போர் முடிவடைந்த பின்னர் பட்டத்து ராணியாக தர்மனுக்கே அதிகம் உரித்துடையவளாக திரௌபதி மாற பீமன் கூட தர்மனிடம் கோபம் கொண்டான் என்றும் கதாகாலத்தில் கட்டுடைக்கப்படும்போது மறுக்க முடியாமல்தான் இருக்கின்றது.


அசுவத்தாமன்
வழி வழியாக வந்த பெரும்பாலான கதைகளில் அசுவத்தாமனை மரணமற்றவன் என்றூ சொல்வர். ஆனால் தேவகாந்தனின் கதாகலத்தில் அஸ்வத்தாமன் தீராப்பழியின் நினைவாக சொல்லப்படுகின்றான். உப பாண்டவர்களை கொன்றதிலும், இறுதியில் அர்ச்சுணன் மீது அவன் எய்த அம்பு, நதிக்கரையில் பிதிர்க்கடன் செய்துகொண்டிருந்த அபிமன்யுவின் மனைவியைத் தாக்கியதாலும், எத்தனையோ அறங்களைக் காத்தவனும், ஆற்றல் மிகுந்தவனுமாகிய அஸ்வத்தாமன், ஒரு பழியின் நினைவாகவே காலமெல்லாம் நினைக்கப்படுவான் என்கிறது கதாகாலம்.
“அஸ்வத்தாமனின் நினைவே அவன் ஜீவன், அவன் மரணமற்றிருந்த முறைமை அதுதான். அவன் தீராப் பழியின் நினைவு-பக்கம் 144”


கதாகாலத்தின் இன்னும் சில அம்சங்கள்
பாரதம் என்கிற அமானுஷ்யத்தன்மை அதிகம் பொருந்திய, நடைமுறைக்கு பெரிதும் ஒவ்வாத இதிகாசத்தை ஒரு நாவல் வடிவில் நடைமுறையுடன் ஒத்த, முன்னொரு காலத்தில் நடந்தது என்று சொல்லக்கூடியதாக கதாகாலம் அமைகின்றது. இந்த இடத்தில் திரௌபதி துகிலுருவுதல் பற்றி தேவகாந்தன் சொல்வது ஒரு பொறிமுறை சார்ந்த விளக்கமாக இருந்தாலும் மிகுந்த சுவாரஸ்யமானதாகவே இருக்கின்றது.

“”துச்சாதன் அவளாது ஆடையை இழுத்தான். நிலையில் பெயராது நின்று அவள் சுழன்றாள். அவிழ்ந்து நிலம் புரண்டு கிடந்த அவள் கூந்தல் மேலிருந்து கீழ்ப் புரியாய்ச் சுற்றி அவள் அவயங்களை மறைத்து வந்தது. அவமானத்தைச் செறிவாய் இறக்க வெறீபிடித்து நின்ற துச்சாதனன் துகிலை விட்டு அவள் கூந்தலை இழுத்தான். கீழிருந்து மேற்புரியாய் துகில் அவளது நிர்வாணம் மறையச் சுற்றியது. திரும்ப அவன் துகில் பற்றி இழுக்க கூந்தலும், கூந்தல் பற்றி இழுக்க துகிலும் அவள் செந்நிற மேனி யார் கண்ணும் காணாது மறைத்துவர, மௌனித்த சபை சலசலக்கத் துவங்கியது. அமானுஷ்யமொன்றின் செயற்பாடாய் அதைக் கணித்து அச்சமடைய ஆரம்பித்தது. ..............................................துச்சாதன் களைத்து வீழ்ந்த்தான். அனைவர் மனதிலும் துரோபதி “தெய்வமே” என்று கூவிய சொல் ஒரு உருவமாய் நின்றிருந்தது...........பக்-85.”


-2-

உண்மையில் தேவகாந்தனின் கதாகாலம் தவிர்த்து உபபாண்டவம் என்ற எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகமும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் மகாபாரதத்தின் மறுவாசிப்பாக வெளியானது. ஆனால் உபபாண்டவம் பெற்ற கவனிப்பு அளவு கதாகாலம் கவனிக்கப்படவேயில்லை. இத்தனைக்கும் உபபாண்டவத்துக்கு எந்த அளவிலும் குறைவில்லாதது கதாகாலம். ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளார்களில் ஒருவராக அடையாளம் காணப்படவேண்டிய தேவகாந்தனின் எத்தனையோ புத்தகங்களை ஈழத்தமிழ் வாசகர்களே வாசித்தது கிடையாது என்றறியும்போது ஈழத் தமிழினம் என்றொன்று இருந்தது என்பதே வரலாற்றில் மறக்கப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகின்றது. எம்மவர் எழுத்துக்களை நாமே படிக்காததால்தான் ஜெயமோகன் போன்ற சிலர், ஈழத்தமிழ் எழுத்துக்களே தட்டையானவை, ஒரு வட்டத்துள் உழல்பவை என்றெல்லாம் உதறித் தள்ள, புலம்பெயர் நாடுகளில் உள்ள அவர் ரசிகர்கள் சொல்லும் சில நியாயங்களையும் கேட்டுக்கொண்டு அதை சகிக்குமாறு நாமும் சபிக்கப்பட்டிருக்கின்றோம்.

சென்ற வார இறுதியில் நானும் சிறிய காலத்திலேயே எனக்கு மிக மிக நெருக்கமான நண்பர் ஒருவரும் “தோழர் சிவத்தின்” நினைவு விழாவுக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரு அருமையான பாடலைக் கேட்டேன். ஒரு முறை கேட்டால் அன்று முழுவதும் ஹம் பண்ண தோன்றுமே அப்படி ஒரு பாடல். கவிஞர் சேரன் எழுதி சின்மயி பாட, ஒரு மலையாள இசையமைப்பாளர் (பெயர் நினைவில் இல்லை; - இந்த இசைத்தட்டில் ஒரு பாடலுக்கு மட்டும் ராஜ் ராஜரத்தினம் இசையமைத்துள்ளார்) இசையமைத்த . காற்றோடு.... என்று தொடங்கும். (அன்று இந்தப் பாடாலைக் கேட்டபோது யார் எழுதிய பாடல் என்று நானும் நண்பரும் யோசித்தபோது –ஜெயபாலனா/சேரனா – “முற்றாத காதலோடு முழுமையைத் தேடுகின்றேன்” என்ற வரிகளைக் கேட்டது இது சேரன் பாடல் என்று ஒரே நேரத்தில் சொன்னது தனிகதை) இதே இசைத்தட்டில் தான் ”பூமியின் அழகே...” என்ற வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதிய பாடலும் உள்ளது. சேரன் ஒரு நாடகத்துக்காக எழுதி (சாதிகளை மறைமுகமாக சொல்லிக்காட்டும் பாடல் என்று வாசித்தேன்) பின் இந்த இசைத்தட்டில் இடம்பெற்ற “எவடம் எவடம்...” பாடலும் உள்ளன. இந்த இசைத் தட்டை எம்மவர்களில் எத்தனை பேர் கேட்டிருப்போம். இந்த இசைத் தட்டில் வரும் மேற் சொன்ன மூன்று பாடல்களையும் கீழே இணைத்துள்ளேன். ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.








Evidam.wma -



Bhoomiyin.wma -

இதுபோல எம்மவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் தான் எம்மவர் படைப்புகளை நாம் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை மாறவேண்டும். தேவகாந்தனின் கதாகாலம் நூலகம் என்ற வலைத் தளத்தில் மின் நூலாக இணைக்கப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பினைப் பெற இங்கே அழுத்தவும்.

தேவகாந்தனின் வலைத்தள முகவரி பெற இங்கே அழுத்தவும்